.விடுதலைப் பற்றி
ஒரு
சொற்பொழிவாளர்
விடுதலையைப்
பற்றி
கேட்கவும் அவர்
சொன்னார்:
”நகர வாயிலில் நெஞ்சக்கனலின் அருகே
தெண்டனிட்டு
தொழுது பிரார்த்திக்கும்
உங்களை நான்
பார்த்தேன்.
அடிமைகளும்கூட
அப்படித்தான்
சர்வாதிகாரிகள்
சாட்டை கொண்டு அடித்தாலும்
வாழ்த்தி
வணங்குவர்
தாழ்ந்து
தலைகுனிவர்
உங்களில் மிக்க
சுதந்திரன்
கோயில்
பிரகாரத்தில் கோட்டை நிழலில்
கழுத்தில்
நுகத்தடியும்
கைகளில்
விலங்கையும்
பூட்டிக்கொண்டு
பூரிக்கிறான்.”
விடுதலைக்கான
விழைவு
கால்கட்டாக
மாறும் பொழுது
விடுதலை
நோக்கமும் விடுதலை விளைவும்
பேசப்படாத பொழுது
எனக்குள்ளே
இதயத்தில் இரத்தம் கசிகிறது
பகலில் கவலையும்
இரவில் தேவையும்
நாளெல்லாம்
வருத்தமும் - உங்கள்
வாழ்வை வளைத்துக்
கொண்டாலும்
உங்களுக்கான
விடுதலை - இவைகளை மீறி
கட்டற்று
அம்மணமாக உயர்ந்து நிற்கும்
வைகறையில் உண்டாகும்
உங்கள் புரிதல்
நண்பகலில்
பூட்டிய விலங்கை அறுக்காமல்
இரவையும்
பகலையும் கடந்து எப்படி எழுவீர்?
உண்மையில்
நீங்கள் சொல்லும் விடுதலை
விழிகள்
கூச்சிடும் பளபளப்பான
சங்கிலிக்
கோர்வையின் வலிமையில் உள்ளது
உங்களின்
குப்பைகளை கழிக்காமால்
உங்களுக்கு
விடுதலை எப்படி சித்திக்கும்?
அநீதிச்சட்டம்
என்று அகற்றலாம் எனில்
உங்கள் கைகளால்
உங்கள் நெற்றியில்
நீங்களே
எழுதியதாயிற்றே – அதை
அழிக்க
முடியுமா உங்களால்
சட்டநூல்களை
எரித்து அழிக்கவோ
நீதியரசர்களின்
நெற்றியில் கடலளவு நீர் ஊற்றிக் கழுவவோ
முடியாது
உங்களால்.
சர்வாதிகாரியை
சிம்மாசனதிலிருந்து இறக்க எண்ணினால்
முதலில்
உங்களுக்குள் அவனுக்குப் போட்ட
நாற்காலியை
அப்புறப்படுத்துங்கள்.
தன் விடுதலையை
அடக்குபவரைத் தவிர
தன் பெருமையை
அவமதிப்பவரை அன்றி
விடுதலை உணர்வும்
பெருமையும் கொண்டவரை
அடக்கி ஆளுதல்
எப்படி முடியும்?
விடுதலை என்பது
பாதுகாப்பு என்றால் ஒதுக்காதீர்
அந்த பாதுகாப்பு
நீங்கள் தேர்ந்தெடுத்தது
உங்கள் மீது
சுமத்தப்பட்டது அல்ல
விடுதலை என்பது
அச்சம் என்றால் தள்ளிடுவீர்
அச்சத்தின்
இருக்கை இதயத்தில் இருக்கிறது
உங்கள் கைகளில்
இல்லை
விருப்பப்பட்டவை
அச்சப்பட்டவை முரண்பட்டவை நேசித்தவை
பின்பற்றினவை
தப்பித்தவை எல்லாமும் உண்மையில்
நிலையான இலேசான
அரவணைப்பில் ஒளியும் நிழலைப்போல்
இணையாக
கைகோர்த்து உங்களுக்குள் அசைகின்றன
நிழல் வெளுத்து
இல்லாமல் போகும் போது
ஒளி இன்னொரு
ஒளிக்கு நிழலாகி நிற்கிறது
உங்கள் விடுதலை -
தளைகளை தொலைத்து
மாபெரும்
விடுதலைக்கு அடிமை விலங்காகிறது.
No comments:
Post a Comment