Thursday, December 23, 2021

மண்ணும் மானமும் மாண்பே

 







அன்பார்ந்த நண்பர்களே ஆன்றவிந்தடங்கிய சான்றோர் பெருமக்கள் கூடிய இந்த இணைய வழி கூடலில் உங்களையெல்லாம் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அனைவருக்கும் அன்பார்ந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்படியான இணைய வழி கூடலுக்கு ஏற்பாடு செய்து அதனை திறம்பட நடத்தி வரும் தேடல் அறக்கட்டலையின் அறங்காவலர் குழுவிற்கு குறிப்பாக என் அருமை தோழர் திரு சம்பத் குமார் அவர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டையும் நன்றியும் தெரிவித்துக் கொள்ள கடமை பட்டு உள்ளேன் .

இன்றைக்கு இந்த நிகழ்வில் பத்து தலைப்புகளில் பல அறிஞர்கள் கல்வியாளர்கள் முனைவர்கள் மிக சிறப்பாக உரை ஆற்ற இருக்கிறார்கள். . இந்த டிசம்பர் மாதத்தின் சிறப்பாக மூன்று நாட்கள் நினைவு கூறத்தக்கன.என்ற கண்ணோட்டத்துடன்  அவற்றை நினைவுறுத்தி உரை ஆஎர்ற இருக்கிறார்கள்...பாராட்டத்தக்கது.

டிசம்பர் மாத சிறப்புகளில் குறிப்பிடத்தக்க அந்த மூன்று  நாட்கள் என்று இங்கு குறிப்பிடப்படுபவை:

டிசம்பர் 6 அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள்

டிசம்பர் 1௦ மனித உரிமைகள் நாள்

டிசம்பர் 23 விவசாயிகள் நாள்

இம்மூன்றினுள் இடைப்பட்ட நாளாக இணைக்கும் நாளாக அமைந்து இருப்பது மனித உரிமைகள் நாள் ஆகும்.

உலகளாவிய மனித உரிமை அறிவிக்கை  Universal Declaration of Human Rights சுருக்கமாக UDHR என்று சொல்கிற பன்னாட்டு மனித உரிமை பிரகடனம் என்கிற பன்னாட்டு சட்டத்தை ஐக்கிய நாட்டு  அவையில்  டிசம்பர் 10ஆம் தேதி 1948 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது.

அதில் முப்பது வகையான மனித உரிமைகள் பட்டியலிடப்பட்டு அவைகளை யாரும் மீறக் கூடாது என்று ஐ.நா அவையின் உறுப்பு நாடுகள் ஏற்றுக் கொண்டு அறிவித்த நாள்தான் டிசம்பர் பத்து. . ...

 

இப்போது எழுபத்து இரண்டு ஆண்டுகள் ஆகி விட்டன ஆயினும் இன்னும் நாம் அந்த உரிமைகளை நிலைநாட்டி  இருக்கின்றோமா இல்லையா என்பதை ஆண்டுதோறும் எண்ணிப் பார்க்க வேண்டிய நாளாக இந்த நாளை விழாவாக கொண்டாடிக் கொண்டு வருகிறோம்.

உண்மையில் சொல்வதென்றால் இது ஒரு மரபாக சம்ப்ராயதமாக தான் கடைப் பிடிக்கப் படுகிறது என்று நான் கருதுகிறேன். இந்த வகையில் நாம் கடந்து செல்ல வேண்டிய தொலைவு பயணம் மிக நீண்டு இருப்பதை யாரும் மறுத்து விட முடியாது.

 

உரிமைகள் காக்கப்படுகின்றனவா இல்லை மீறப்படுகின்றனவா அப்படி மீறுபவர்கள் மீது என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்பதைப் பற்றி எல்லாம் சிந்திக்கக் கூடிய நாளாகவும்  இன்று இருக்கிறது.

 

அந்த சிந்தனையின் வெளிப்பாடாக அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய நினைவு நாளையும் சேர்த்து நிகழ்த்தும் இந்த நிகழ்ச்சியில் அவருடைய தனி மனித வாழ்வும் அரசியல் வாழ்வையும் நினைத்து அவர் இந்திய மக்களுக்கு மனித உரிமை விவகாரத்தில் செய்த தொண்டை குறிப்பிட்டு ஆக வேண்டும்.

அவர் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தில் பிறந்ததின் விளைவாக சிறு வயதில் அனுபவித்த துன்பங்கள் பின்னாளில் அவர் அவர்சார்ந்த சமுதாயத்திற்கு மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்காகவும் பெண்களுக்காகவும் உரிமைக் குரல் எழுப்பியதையும் அதற்கான ஆக்க பூர்வமான சட்டங்களை இயற்ற வழி வகை செய்தததையும் எண்ணிப்பார்க்க வேண்டும்.

 

அவருடைய சிறு வயதில் அவருக்கு தலித் என்கிற காரணத்தால் தாகத்தால்  தவித்த வாய்க்கு தண்ணீர் தர மறுத்த நாடு. இது. பாரிஸ்டர் பட்டம் பெற்று அரசாங்க வேலையில் அமர்ந்த போதும் அலுவலகத்தில்

பொதுப் பயன்பாட்டுக்கென வைக்கப்பட்டிருந்த பானையில் இருந்து நீரெடுத்துக் குடிக்க முடியாமல் தடுக்கப்பட்டவர் அவர்.

 

இப்படியான  நிலைமை தமிழ் நாட்டிலும் இருந்து இருக்கிறது. இங்கே பிராமணர்களுக்கு தனியாக குடிநீர் பானை  இருந்திருக்கிறது. மற்றவர்கள் பிராமணர் அல்லாதார் அதிலிருந்து நீரை பருக கூடாது. .இதை மறைந்த இனமான பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள் படித்த காலத்தில் பள்ளியில் நடைமுறையில் இருந்ததாக தன்னுடைய உரையில் பல தடவை குறிப்பிட்டு இருக்கிறார். திராவிட இயக்கம் தமிழ் நாட்டில் தோன்றியதன் காரணத்தை அவர் சொல்ல வரும் போது இதனைக் குறிப்பிடுகின்றார். 1922 ஆம் ஆண்டு பிறந்த அவருடைய பிறந்த நாளும் இதே டிசம்பர் மாதம்தான். தேதி பத்தொன்பது. என்பதையும் நான் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

 

இத்தகைய மனித உரிமை மீறல்கள் இந்தியத்திரு நாட்டில் சாதியின் பெயரால் மதத்தின் பெயரால் சாத்திர சம்பிராயுதங்களின் பெயரால் மனு நீதியின் பெயரால் ஒடுக்கப்பட்டவர்கள் புறக்கணிக்கப்பட்டவர்கள் வரிசையில் பெண்களும் அடங்குவர்.

சாதி மத சம்பிராயுதங்கள் ஒருவருடைய கல்வி  கற்கும் உரிமையில் தலை  இட முடியாது தடுத்து விட இயலாது என்பதை நிரூபித்தவர். அண்ணல் அம்பேத்கர்.

தமிழ் நாட்டில் அத்தகைய கருத்துகளை கடுமையாக எடுத்து சொல்லி ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மற்றும் பெண்களுக்காக குரல் கொடுத்து போராட்டம் செய்து நம்மிடையே தன்மான உணர்வைத் தூண்டி விழிப்படைய செய்தவர் ஒருவர் உண்டு.

அவர் தமிழர் தந்தை என்றும் எல்லோருக்கும் பெரியார் என்றும் போற்றப்படும்  தலைவராக இன்றும் மதிக்கப்படுகிறார்.. அவருடைய நினைவு நாளும் இதே டிசம்பர் மாதம் இருபத்தைந்தாம் நாள் தான் என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.

அண்ணல் அம்பேத்கர் சிறந்த கல்விமான்.பொருளாதார மேதை தத்துவ வாதி வரலாற்று ஆய்வாளர், இந்திய அரசியல் நிர்ணய சபையின் தலைவர் அரசியல்வாதி ஒன்றிய அரசின் அமைச்சர் என்கிற பல்வேறு தளங்களில் அவர் ஆற்றிய பணிகள் ஒவ்வொன்றும் மனித  உரிமைகள் சார்ந்தவை. இந்திய மக்கள் ஒவ்வொருவரின் வாழ்விலும் தாக்கத்தை ஏற்படுத்துபவை.

-    வயது வந்தோர் அனைவருக்கும் இன்றுள்ள வாக்குரிமை

-    நிர்வாகத்தில் அனைவருக்குமான உரிமை  வேண்டும் என்பதால் பட்டியல் இன மக்களுக்கு அவர் கோரிய பிரதிநிதித்துவம்

-    அதுவே பின்னாளில் பிற்படுத்தப்பட்டோரும் பெண்களும் அத்தகைய பிரதிநிதித்துவத்தைப் பெறவும் வழிகோலியது.

-    அரசுப் பணியாளர் தேர்வாணையங்களும் வேலைவாய்ப்புப் பதிவு அலுவலகங்களும். உருவாக காரணம் அவர் அரசியல் நிர்ணய சபையில் முன்மொழிந்ததின் விளைவாகவே.

-    தொழிலாளர் துறை அமைச்சர் என்கிற முறையில் 1942 நவம்பர் 27 ஆம் நாள் அவர் கூட்டிய ஏழாவது இந்திய தொழிலாளர் மாநாட்டில்தான் வேலைநாள் என்பது எட்டுமணி நேரம் என்கிற முடிவினை அறிவித்தவர் அண்ணல் அம்பேத்கர்.

பெரியாரும் அம்பேத்கரும் வெவ்வேறு முனைகளில் ஒரே கொள்கையை தத்துவத்தை சமகாலத்தில் முன்மொழியவும் பரப்பிடவும் போராடவும் செயல்படுத்தவும் செய்தனர் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அம்பேத்கருடைய உரைகளை எழுத்துகளை தமிழகத்தில் முதன் முதலாக அதிக அளவில் பரப்பியதில் முன்னிலை வகிப்பவர் பெரியார். அம்பேத்கர் எழுதிய சாதி ஒழிப்பு என்னும் ஆவணம் அவர் பெரியாருக்கு அனுப்பி வைத்தது. அதை  தமிழில் முதல் முதலாக மொழி பெயர்க்க செய்து வெளியிட்டவர் பெரியார்.

இந்திய சூழலில் சமூக ஏற்றத் தாழ்வு பொருளாதார ஏற்றத் தாழ்வு இவற்றில் பொருளாதார ஏற்றத்தாழ்வை முதலில் களைந்தால் சமூக ஏற்றத் தாழ்வு தானே சரியாகும். பொருளாதாரம் என்கிற அடிக்கட்டுமானத்தை மாற்றினால் சாதி என்கிற மேற்கட்டுமானம் தானாக மாறிவிடும் என்கின்ற சிலரின் வாதத்தை பெரியார் அம்பேத்கர் இருவருமே ஏற்றுக் கொள்ளவில்லை. அதே போன்று இருவரும் இந்துத்துவ மேலாண்மைக்கு எதிராக முழக்கம் இட்டவர்கள் போராடியவர்கள் என்பதையும் இக்கால இளைஞர்கள் அறிந்து கொள்ள வேண்டியது என்று நான் கருதுகிறேன்.

அடுத்ததாக தேசிய விவசாயிகள் நாள் என்று டிசம்பர் இருபத்து மூன்றாம் நாளை 2001 ஆம் ஆண்டு இந்திய அரசு அறிவித்தது. இந்தியப் பிரதமராக மிக குறைந்த காலம் பதவி வகித்த திரு சரண் சிங் அவர்களுடைய பிறந்த நாளை விவசாயிகளின் நாளாக இந்திய அரசு அறிவித்தது. வடநாட்டில் உ,பி அரியானா  பஞ்சாப் போன்ற மாநிலங்களில் விவசாயிகளின் பாது காப்பாளராக அவர்களின் உரிமைக்கு பாடுபட்ட விவசாயிகளின் தலைவராக விளங்கியவர் சவுத்ரி சரண் சிங் அவர்கள். அவர் உ.பி யில்1952 ஆண்டு வேளாண்மை துறை அமைச்சராக இருந்த போது கொண்டு வந்த ஜமீன்தாரி ஒழிப்பு சட்டம் விவசாயிகளின் எதிர்காலத்திற்கு ஏற்றி வைத்த தீபம் என்று சொல்கிறார்கள். அந்த தீப ஒளியில் தான் பல்வேறு திட்டங்களும் சட்டங்களும் பிற்காலத்தில் இயற்றப்பட்டதாக சொல்லப்படுகிறது. . அதனாலேயே அவரை மதிக்கும் பொருட்டு அவருடைய பிறந்தநாளை விவசாயிகள் நாளாக பிஜேபி ஆட்சியில் வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது அறிவிக்கப்பட்டதாக தெரிகிறது. திரு சரண்சிங் அவர்கள் சுதந்திரபோராட்ட்ட காலகட்டத்தில் காங்கிரசில் இருந்த போது 1939 ஆம் ஆண்டு LAND UTILISATION BILL என்கிற ஆவணத்தை தயாரித்து அளித்தார் என்று அவருடைய வரலாற்று பதிவுகள் சொல்கின்றன.

இந்த சமயத்தில் நாம் இன்னொன்றையும் கருத்தில் கொள்ள வேண்டியவர்களாக இருக்கின்றோம். ஜமீன்தாரி முறை ஒழிப்பிற்கு முதல் முதலாக எழுந்த குரல் தமிழ் நாட்டில்தான் என்பதும் அதுவும் கூட தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தால்தான் என்பதும் வரலாற்று உண்மையாக கிடக்கிறது.

 

1933 ஆம் ஆண்டு சேலம் மாவட்டம் இராசிபுரத்தில், சுயமரியாதை இயக்கத்தின் சார்பில் ஜமீன்தாரல்லாதார் மாநாடுஒன்று நடைபெற்றது.. அதில் பெரியார் பேசிய உரை 27.08.1933 ஆம் நாளிட்ட குடி அரசு ஏட்டில் முழுமையாக வெளியாகி உள்ளது.

அந்த மாநாட்டில் இயற்றப் பட்ட தீர்மானம்:

  உலக செல்வத்தை ஒரே பக்கம் சேர்க்கும் முறையை ஒழிப்பதற்கும், உலகப் பொருளதார, சமத்துவத்துக்கும் பாடுபடுகிற மக்கள் அதன் பயனை சரிவர அடையவேண்டும் என்பதற்கும், ஜமீன்தார் முறையானது பெருத்த கெடுதியாகவும், தடையாகவும் இருந்துவருவதால் ஜமீன்தார் தன்மையை அடியோடு ஒழிக்கப் பகுத்தறிவுக்கு ஏற்றவழியிலும், பொருளாதார சமத்துவ நியாய வழியிலும் சுயமரியாதை இயக்கம் பாடுபடவேண்டுமென்று இம் மகாநாடு தீர்மானிக்கிறது.”

இவ்வாறு ஜமீன்தார்களுக்கு எதிராக ஒரு மாபெரும் மாநாட்டைக் கூட்டி, அவர்களுக்கு எதிராக ஒரு எதிர்ப்புணர்ச்சியைக் கட்டி எழுப்பியவர் பெரியார். 

அவரால்தான் தமிழ் நாட்டில் பல்வேறு ஆட்சியில் மக்கள் ஆதரவுடன் நில சீர்திருத்த சட்டங்கள் வந்து நடைமுறை படுத்தப்பட்டன. அந்த அடிப்படையில் பிற்காலத்தில்  நிறை வேற்றப்பட்ட விவசாயிகளின் முன்னேற்றத்திற்கான திட்டங்கள்

-    நில உச்ச வரம்பை 15 ஸ்டாண்டர்டு ஏக்கர் வரையறை.  கொண்டுவந்தார் கலைஞர்.

-    பெரும் நிலச் சீர்திருத்த நடவடிக்கை இது.

-    விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் அளிக்கப்பட்டது.

-    விவசாயிகளின் உற்பத்தி விளைபொருட்கள் நேரடி விற்பனைக்கு உழவர் சந்தைகள் திறக்கப்பட்டன.

-    விவசாயிகளின் நலன் பேண ஒரே நேரத்தில் 40,433 விவசாயிகள் பயனடையும் வகையில் ரூ. 7,000 கோடி கூட்டுறவு விவசாயக் கடன் தள்ளுபடிசெய்யப்பட்டது.

-    விவசாயத் தொழில் நலவாரியம் உட்பட 34 அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்கள்

1971 ம் ஆண்டு 15 ஸ்டாண்டர்டு ஏக்கர் என்று உச்ச வரம்புச் சட்டம் இயற்றப்பட்ட போது கைப்பற்றப்பட்ட உபரி நிலம்  1 லட்சத்து 78 ஆயிரத்து 880 ஏக்கர்..  தகுதியுள்ள 1 லட்சத்து 37 ஆயிரத்து 236 நிலமற்ற ஏழைகளுக்கு அவை  வழங்கப்பட்டது. அதிலே 61 ஆயிரத்து 985 பேர் பட்டியலின மக்கள் ஆவர். அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய என்னத்தை ஈடேற்றிய மண் தமிழ்நாடு.

இப்படிப்பட்ட பல்வேறு சீர்திருத்த சட்டங்கள் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் நாட்டு விடுதலைக்குப் பிறகு அவரவர் கருத்துகளுக்கு ஏற்ப கொள்கைகளுக்கு ஏற்ப கொண்டு வரப்பட்டன. அந்த சட்டங்களுக்கு எதிராக யாரும் எந்த ஒரு விவசாயியும் போராடிய வரலாறு இல்லை.

ஆனால் 2020 ஆண்டு செப்டம்பர் மாதம் இந்திய ஒன்றிய அரசால் கொண்டு வரப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் தொடர்ந்து கடுமையான போராட்டத்தை தலை  நகர் டெல்லியில் நடத்தியதைக் கண்டோம்.  நவம்பர் 19, 2021 அன்று ஒரு தொலைக்காட்சி உரையில், இந்தியப் பிரதம அமைச்சர் நரேந்திர மோடி, டிசம்பரில் வரவிருக்கும் குளிர்கால நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் தனது அரசாங்கம் மூன்று சட்டங்களை ரத்து செய்யும் என்று கூறி அவ்விதமாகவே அந்த மூன்று சட்டங்களும் திரும்பப் பெறப் பட்டுள்ளன. இது விவசாயிகளின் உரிமைப் பிரச்சனை .அதில் அவர்கள் வெற்றி கண்டார்கள். அதற்கு அவர்கள் கொடுத்த விலை 7௦௦ உயிர்கள். ஆம் அந்த போராட்டத்தின் விளைவாக எழுநூறு விவசாயிகள் மரணம் அடைந்தார்கள் என்பது மாபெரும் சரித்திர சோகம்.

இந்திய மக்கள் தொகையில் சுமார் நாற்பது முதல் ஐம்பது விழுக்காடு மக்கள் விவசாயத்தில் ஈடு படுவதாக சொல்லப்படுகிறது. புள்ளிவிவர தகவல் படி அவர்களுடைய பொருளாதார பங்களிப்பு ௨௦ விழுக்காடாக இருக்கிறது. இது பயிர் தொழில்  காடு  மற்றும் கடல் சார்ந்த மீன்பிடி  தொழில்களையும் சேர்த்த கணக்கீடு.  

இந்த நிலையில் விவசாயிகள் தற்கொலை மகாராட்டியம், தெலுங்கானா ஆந்திரா கர்நாடக போன்ற மாநிலங்களில் நிகழ்வது பற்றியும் நாம் சிந்திக்க வேண்டி இருக்கிறது. இதற்க்கான காரணம் இது வரை துல்லியமாக அறியப்பட்டு எந்த அரசும் அதை களைய வில்லை என்பது கவலை அளிக்கும் விவகாரம் ஆகும். இதற்க்கு பெரும்பான்மையான அறிஞர்கள் கூறுவது விவசாய உற்பத்திக்கு தகுந்த விலை கிடைப்பதில்லை என்பதாகும். இதை களைய குறைந்த பக்க விலை நிர்ணயம் விவசாய பொருள்களுக்கு வேண்டும் என்பதாகும். விவசாயம் ஒரு தொழிலாகவும் அதன் உற்பத்திப் பொருளை விலை நிர்ணயம் செய்யும் உரிமை விவசாயிக்கு இருக்கும் நிலை வந்தால் மட்டும் இவர்கள் பிரச்சனையில் தீர்வு  கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. இடைத் தரகர்களும் கடன் தரும் லேவாதேவி ஆட்களும் இந்த துறையில் ஆதிக்கம் செலுத்தி விவசாயிகளின் வாழ்க்கையை பாழடிக்கின்றதாக சொல்லப்படுகிறது. இதை எல்லாம் கவனத்தில் கொண்டு அதற்கான தீர்வு காணும்  நடவடிக்கைகளை விவசாயிகளின் ஒப்புதலுடன் செய்ய வேண்டியது அரசின் கடமையாகும்.

ஒரு காலத்தில் கூட்டுறவு துறையின் மூலமாக விவசாய தொழில் மேலான்மைசெய்யப்பட்டது. அது ஏனோ இப்போது சுருங்கி விட்டது. கூட்டுறவு முறையில்  அரசின் கண்காணிப்பு இருக்கும். அதில் நிர்வாகத்தில்  ஊழல் இருந்தாலும் உறுப்பினர்களால் சுட்டிக் காட்டப்படும். உறுப்பினர்கள் தங்கள் அனுபவங்களை பரிமாறிக்கொள்ள வசதி இருக்கும்.

ஆனால் இப்போது புதிய தாராளமயமாக்கல் என்கிற முறை வந்த பின்னால் அரசாங்கத்தின் கடமைகள் தட்டிக் கழிக்கப்படுகின்றன. முதலாளி வர்கம் என்று ஒரு கூட்டம் இருப்பதாக பேசிக் கொண்ட காலம் போய் ஓரிரு முதலாளிகள் மட்டும் உருவாகும் நிலை வந்து விட்டது.

உழைத்து முன்னேறி முதலாளி ஆகலாம் என்ற நிலை இருந்தது இப்போது மாறி விட்டது. பெரும்பான்மையான மக்கள் சேவைத் துறையில் மட்டும் ஈடுபடும்படியும் வெகு சிலரே முதலாளிகளாக மாறும் சூழ்நிலை உருவாக்கப்பட்டு வருவதை காண்கிறோம். விவசாயமும் கூட பெரும் முதலாளிகள் கைக்கு போகும் நிலை உருவாக்கப்படுகிறது.    இவைகள் எல்லாம் எத்தகைய தாக்கத்தை எதிர்காலத்தில் உருவாக்கும் இவற்றில் மனித உரிமை பிரச்சனைகள் என்ன என்பதை எல்லாம் நாம் சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

மக்கள் சக்தியை விட மகா சக்தி ஒரு ஜனநாயக நாட்டில் இருக்க முடியாது. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்றார் அறிஞர் அண்ணா. மக்களிடம் கல்வியும் அறிவும் விழிப்புணர்வும் ஏற்பட்டால் மட்டுமே  அவர்களுடைய தீர்ப்பில் நீதி இருக்கும். நேர்மையான ஆட்சி கிடைக்கும். அதற்காக நம்மைப் போன்றவர்கள் சமுதாயப்பணியில் ஈடுபடுவது அவசியம்.

இப்படியான் கலந்துரையாடல் கருத்துரைகள் மூலமாக மக்களிடம் விழிப்புணர்வை உருவாக்க முடியும். அந்த வகையில் செயல் படும் தேடல் அறக்கட்டளை நிர்வாகத்தினர் அனைவருக்கும்  இந்த நிகழ்வில் உரை ஆற்ற பங்கெடுத்துக் கொள்ளும் அறிஞர் பெருமக்களுக்கும்

 மீண்டும் நன்றியும் பாராட்டையும் தெரிவித்துக் கொண்டு விடை பெறுகிறேன். நன்றி வணக்கம்.

 

 

 

Saturday, December 18, 2021

திராவிட இயக்க வரலாற்று நாயகன் - பேராசிரியர் க. அன்பழகன்

 

திராவிட இயக்க வரலாற்று நாயகன்

திராவிட இயக்க வரலாற்று நாயகர்களில் ஒருவர்,  கடமை, கண்ணியம் கட்டுப்பாடு என்னும் அறிஞர் அண்ணாவின் தாரக  மந்திரத்தின் தனிப்பொருளாக விளங்கியவர் பேராசிரியர் பெருந்தகை             க. அன்பழகனார் அவர்கள்.

அந்த மாபெரும் மனிதரின் புகழைப் பாடி போற்ற எனக்குத் தெரிந்த அவரைப் பற்றிய செய்திகளைப் பதிவு செய்ய எனக்குக் கிடைத்த வாய்ப்புதான் இக்கட்டுரை.

தமிழர்களின் பொற்காலமாகத் திகழ்ந்த சங்ககாலத்திற்குப் பிறகு ஆரிய கலப்பால் அதன் ஆதிக்கத்தால் தமிழின் சிறப்பும் தமிழர் வாழ்வின் மேன்மையும் மங்கிற்று. இருண்ட காலத்தில் இன்னலுற்றான் தமிழன். இருந்தாலும் வள்ளுவர் தொடங்கி வள்ளளார் வரை எத்தனையோ சான்றோர் சரிபடுத்த முயன்றனர். ஆரியமாயையில் சிக்கிய தமிழன் சீரிய வழியில் செல்லுதல் வேண்டி அவ்வப்போது பலர் போராடிய வரலாறு உண்டு.

ஆனாலும் 20ஆம் நூற்றாண்டுத் துவக்கத்தில் தோன்றிய திராவிடர் இயக்கம்தான் இந்த முயற்சியில் ஓரளவேனும் வெற்றியடைந்தது எனலாம். தமிழரின் தன்மான உணர்ச்சியைத் தட்டி எழுப்பிய இயக்கம் திராவிடர் இயக்கம்.

தந்தை பெரியார் தலைமையில் மக்கள் இயக்கமாக உருவாகி அறிஞர் அண்ணாவின் தலைமையில் அரசியல் இயக்கமாக வடிவெடுத்து , அண்ணா- கலைஞர் இருவரின் தலைமையில் பொற்கால ஆட்சியைத் தந்தது திராவிடர்இயக்கம்.

திராவிடத்தின் பெயரால் எத்தனை அரசியல் கட்சிகள் உருவாக்கப்பட்டாலும் தமிழர் நலனில் அக்கறை உடைய கட்சி உண்மையான திராவிட இயக்க அரசியல்அணிதிமுகழகம்மட்டும்தான்.

அந்த இயக்கத்தின் ஆரம்ப நாள் தொட்டு அதன் வளர்ச்சிக்கு உழைத்த
  உன்னத மனிதர் நம்முடைய  பேராசிரியர் அவர்கள்.

ஏறத்தாழ 75 ஆண்டுகள் கொண்ட கொள்கையில் கொஞ்சமும் மாறாமல் ஒரே கொள்கை ஒரே அணி என்ற நிலையேற்று எத்தனை இடர் வந்தாலும் எதிர்கொண்டு துன்பங்களையும் துயர்களையும் தூளாக்கும் சூளுரையேற்று தலைவர் கலைஞரின் தோளோடு தோள் நின்று செயல் பட்ட பெருந்தகையார் நம் பேராசிரியர் அவர்கள்.

கலைஞர் இல்லாத காலகட்டத்தில் கழகத் தலைவராக விளங்கும் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு துணை நின்ற தூய உள்ளம் கொண்ட பண்பாளர் பேராசிரியர்.

தொண்டர்களாம் நமக்கு சுயமரியாதைச் சுடரொளி வீசி வழிகாட்டிய கலங்கரை விளக்கம், பெரியாரின் தொண்டர், அண்ணாவின் தம்பி, கலைஞரின் நண்பர், தளபதியின் வழிகாட்டி என திராவிட இயக்கத்தின் நான்கு தலைமுறைகளுககும் காலத்திற்கு ஏற்ற வகையில் கருத்துடன் பணியாற்றிய செம்மல் பேராசிரியர்.

நேர்மையான சிந்தனையும் நியாயமான போக்கும் ஆழமான அமைதியும் இன எதிரிகளை நினைத்தால் கொதிக்கும் உள்ளமும் கொண்ட  கொள்கை குன்றம் பேராசிரியர்.  அதனால் தான்  அவரை  இனமான பேராசிரியர் என்கின்றோம்.

"நன்றாண்ட மூவேந்தர் நாகரிகமே மாற்றி
வென்றாண்ட ஆரியத்தை வென்றாளத் தோன்றியவன்
குன்றா மறவக் குறிசிலார் அன்பழகர்
என்றோழர் என்னல் எனக்குப் பெருமையதே"


என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் 1945 ஆண்டு நடைபெற்ற பேராசிரியர் வெற்றிச்செல்வி திருமணவிழாவில் வழங்கிய வாழ்த்து கவிதையில் குறிப்பிட்டது போல்  ஆரியத்தை வெல்லும் போரில் தன் வாழ்நாளெல்லாம் செலவிட்டவர் பேராசிரியர்.

இவருக்கு திராவிட இயக்க வரலாற்றில் நிலையான பெயரும் புகழும் உண்டு.

திராவிட முன்னேற்றக் கழக வரலாற்றில் அண்ணா  முடிவுகள் பல எடுத்த இடம்  பேராசிரியர் இல்லம். ஒரு முறை கலைஞர் சொன்னார்
"அண்ணா அவர்கள் எங்கே என்று நாங்கள் தேடினால், அண்ணா அவர்கள் அன்பழகன் வீட்டை நாடிச் சென்றிருப்பார். அங்கேயே உணவருந்தி, உறங்கிக் கழகத் தோழர்களோடு உரையாடி, அண்ணா கழக முடிவுகள் பலவற்றை எடுத்திருக்கிறார்."  

ஆம் நம்  அண்ணா ஆட்சிப் பொறுப்புக்கு வந்த போது திராவிட இயக்கத்தின் முதல் அமைச்சரவைப் பட்டியலை பேராசிரியர் வீட்டில் இருந்துதான் தயாரித்தார்.  அண்ணாவின் அமைச்சரவையில் பேராசிரியர்  இல்லை என்றாலும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்த  நிகழ்ச்சியின் வெளிப்பாடு என்ன என்றால் அண்ணா அவர் மீது வைத்திருந்த அன்பு மதிப்பு நம்பிக்கை.  இது அடுத்தடுத்து கலைஞர் காலத்திலும் தொடர்ந்தது. தளபதி காலத்திலும் இருக்கிறது.  அது மட்டுமல்ல  தளபதி அவர்களுக்கு கழகத்தில்  தக்க பொறுப்புகளை அவ்வப்போது தருவதில் கழகத்தின் பொதுச் செயலாளர் என்ற முறையில் பெருமிதம் கொண்டார். 

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் 1943 ஆண்டில் திராவிட இன எழுச்சிக்கு மாணவப் பருவத்தில்  ஓங்கி ஒலிக்கத் துவங்கிய அவர் குரல் வாழ்நாள் முழுவதும் 2019 ஆண்டு அவர் மறையும் வரை  மங்காமல் ஒலித்துக் கொண்டே இருந்தது

பேராசிரியருடைய பொது வாழ்வு புது வாழ்வாக அவருடைய மாணவப் பருவத்திலேயே துவங்கி விட்டது.  அதற்கு காரணம்  அவர்  வளர்ந்த குடும்பச் சூழலும் அரசியல் பாரம்பரியமும் தான். 

அவருடைய தந்தையார் திரு கல்யாணசுந்தரம் அந்த காலத்தில் மாயூரம் என்று சொல்லப்பட்ட மயிலாடுதுறை பகுதியில் நாட்டு விடுதலைப் போராட்டத்தில் இயங்கிய காங்கிரசு பேரியக்கத்தில் ஈடுபாடு கொண்டவராக இருந்தார்.  1921 ஆண்டில் தமிழ்நாடு  காங்கிரசு தலைவராக தந்தைப் பெரியார் இருந்த காலத்தில் தீவிர காங்கிரசு தொண்டராக செயல் பட்டார்.  கதர் மூட்டையைத் தோளில்  சுமந்து காந்தி அடிகளாரின் கதர் இயக்கத்தை தமிழ் நாட்டில் ஊர் ஊராக பெரியார்   பரப்புரை செய்த காலத்தில் மயிலாடுதுறை வட்டாரத்தில் இயக்கத்தைப் பரப்பியவர் கல்யாணசுந்தரம். கதர் துணிகள் விற்பதற்கு என்று தனியாக கடை நடத்தியவர். கதர் கல்யாணசுந்தரம் என்று பெயர் பெற்றவர். 

1925 ஆம் ஆண்டு
   காஞ்சிபுரம் காங்கிரசு மாநாட்டில் வகுப்புவாத பிரதிநிதித்துவத் தீர்மானம் தோற்கடிக்கப் பட்டதை எதிர்த்து பெரியார் காங்கிரசு கட்சியை விட்டு வெளியேறிய போது அவரை ஆதரித்து  காங்கிரசை விட்டு  வெளியேறினார். பெரியாரின் சுயமரியாதை இயக்கத் தொண்டர் ஆனார். மாயூரம் நடராசன் போன்றவர்களுடன் சேர்ந்து மாயவரத்தில் சுயமரியாதை சங்கத்தை ஆரம்பித்து பல பரப்புரை கூட்டங்களை நடத்தி வந்தார். 

1934 வரை கதர் கடையை நடத்தி
   பெரும் நட்டம் அடைந்தார். தீண்டாமைக் கொடுமை தலைவிரித்து ஆடிய அந்த காலகட்டத்தில் தந்தை பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கைகளை ஏற்று பெரியாரின் சமதர்ம சித்தாந்தங்களை ஏற்று பெரியாரின் முற்போக்கு எண்ணங்களை ஏற்று தன்னுடைய கடையில் ஆதிதிராவிடர் ஒருவரை விற்பனையாளர் பணிக்கு அமர்த்திக் கொண்டார்..

அந்த ஒரு காரணத்தினாலேயே அப்போதைய சூழ்நிலையில் அவருடைய கடைக்கு அவருடைய வாடிக்கையாளர்கள் தெரிந்தவர்கள் கூட வருவது குறைந்து வணிகத்தில் நட்டம் ஏற்பட்டு பொருளாதார ரீதியாக அவர் பல இன்னல்களுக்கு ஆளானார்.

பெரியாரின் குடியரசு, திருவிக அவர்களின் நவசக்தி, வரதராஜுலு நாயுடு அவர்களின் இந்தியா போன்ற இதழ்களின் முகவராக இருந்து விற்பனை செய்து
  வந்தார். தனித்தமிழ் இயக்கம் வந்தபோது தன்னை மணவழகர் என்று சொல்லிக் கொள்வதிலே பெருமை கொண்டவர் கல்யாணசுந்தரம்.

பேராசிரியருக்கு 16 வயது இருக்கும் போது பிள்ளைகள்  படிப்புக்கு  வசதியாக இருக்கும் என்று சிதம்பரம் நகருக்கு குடிபெயர்ந்து வசித்து வந்த காலத்தில் பெரியார், அண்ணா பொன்னம்பலனார், சி.பி.சிற்றரசு போன்ற திராவிட இயக்கத் தலைவர்களை அழைத்து பொதுக்கூட்டங்கள் நடத்தியவர் மணவழகர். சிதம்பரம் மாரியம்மன் கோயில் தெருவில் இருந்த அவர்கள் வீட்டுக்கு வந்து தங்காத திராவிட  இயக்கத் தலைவர்களே இல்லை என்று சொல்லலாம். அத்தகைய பாரம்பரியத்தில் பிறந்து வளர்ந்த இராமையா என்ற தன் இயற்பெயரை அன்பழகன் என்று மாற்றிக்கொண்டு இன்றைக்கு தமிழகத்தில் மட்டும் அல்லாமல்  உலகளாவிய தமிழர்கள் அனைவருக்கும் பேராசிரியராக விளங்குகினார்.

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில்
  கலையியல் முதுநிலை MA தமிழ் பட்டங்கள் இரண்டைப்  பெற்ற அன்பழகனார்  சென்னை பச்சையப்பன் கல்லூரியில் 1944 ஆம் ஆண்டு  விரிவுரையாளராக சேர்ந்தார். அப்போது பச்சையப்பன் கல்லுரி தமிழ்த் துறைத் தலைவராக இருந்தவர் திரு மோசூர் கந்தசாமி முதலியார் .அவர் ஆங்கிலத்திலும் மிகச் சிறந்த புலமைப் பெரற்றவர்.. தமிழையே அவர் ஆங்கிலத்தில் தான் நடுத்துவார். அவர் வகுப்பில் அவருடைய ஆங்கில மொழிப் பேச்சைக் கேட்பதற்கு ஆங்கிலப் பேராசிரியர்களே விரும்பினார்கள் என்று சொல்வார்கள்.

அப்படிப்பட்டவரின் கீழ் நம் அன்பழகனார் விரிவுரையாளராக பணி செய்தார். தெள்ளுத் தமிழில் பாடம் எடுத்து தமிழ் அமுதம் படைத்தார். மாணாக்கர்களின் அன்பையும் மற்ற பேராசிரியர்களின் மதிப்பையும் பெற்று சிறந்த கல்விமானாக ஆசானாக விளங்கினார். பேராசிரியர் மோசூர் கந்தசாமி முதலியார் ஓய்வுப் பெற்றப் பிறகு பேராசிரியர் மு.வரதராசன் (டாக்டர் மு.வ) தமிழ்த் துறைத் தலைவராக ஆனார். ஆசிரியப் பணியில் மு.வ அவர்களை வழி காட்டியாகக் கொண்டு பணியாற்றி பேராசிரியர் .நிலைக்கு உயர்ந்தார். ஆசிரியர் பணி ஆற்றினாலும் அரசியல் ஈடுபாடும்  கொண்டு தந்தை பெரியார் அறிஞர் அண்ணா அவர்களோடு இணைந்து அரசியல் பணியும் மேற்கொண்டார்.

மாணவர் பருவத்திலேயே அரசியல் ஈடுபாடு கொண்டிருந்தவர் 1942 ஆம் ஆண்டு சிதம்பரத்தில் நடைப்பெற்ற நீதிக் கட்சி மாநாட்டில் அவர் பேசி இருக்கிறார். அந்த மாநாட்டின் வரவேற்புக் குழு செயலாளர்களாக அவருடைய தந்தையார் கல்யாணசுந்தரம் அவர்களும் திரு எஸ்.வி.லிங்கம் அவர்களும் பொறுப்பேற்று இருந்தனர்.

1944 ஆண்டு ஈரோட்டில் நடைப் பற்ற திராவிடர் மாணவர் மாநாட்டின் திறப்பாளர். திராவிடர் கழகம் பெயர் மாற்றம் கொண்டு வந்த சேலம் மாட்டில் பங்கெடுத்துக் கொண்டார்.  1945 ஆண்டு துத்துக்குடி திராவிடர் இளைஞர் மாநாட்டுக்குத் தலைவர். அதே ஆண்டில்  திருச்சியில் நடந்த திராவிடர் கழக மாநாட்டிலும் பங்கேடுத்தார். 1946 ஆம் ஆண்டு திருவண்ணாமலையில் நடைபெற்ற மாநாட்டிலும் பிறகு மதுரையில் கறுப்புச் சட்டை மாநாடத்திலும் பேசினார். 1947 ஆண்டு திருநெல்வேலியில் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டில் திராவிட நாடு படத்தைத் திறந்து வைத்துப் பேசினார். அதற்க்கு அடுத்து கடலூரில் நடைபெற்ற திராவிட நாடு பிரிவினை மாநாட்டில் கலந்து கொண்டார். இந்த மாநாட்டில்தான் தமிழ்த் தென்றல் திரு.வி.க அவர்களும் கலந்து கொண்டு உரை ஆற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. 1948 ஆம் ஆண்டு ஈரோட்டில் தந்தை பெரியார் முன்னின்று நடத்திய மாநில மாநாட்டிலும் அதற்கு அடுத்து கோவையில் நடைபெற்ற முத்தமிழ் மாநாட்டிலும் கலந்து கொண்டு உரை ஆற்றினார். இப்படி அவர் திராவிடர் கழகம் நடத்திய அனைத்து மாநாடுகளிலும் கலந்து கொண்டு முன்னணிப் பேச்சாளராகத் திகழ்ந்தார்.

திராவிடர் கழகத்தில் இருந்து அண்ணாவும் அவர் தம் தம்பியரும் தந்தையுடன் முரண்பட்டு வெளியேறி தனிக்கழக்கம் திராவிட முன்னேற்றக் கழகம் 1949 ஆண்டு செப்டம்பர் 17 ஆம் நாள்  கண்ட பொது அண்ணாவுடன் இணைந்து திமுகழகம்  தொடங்குவதில் பெரும் பங்கு ஆற்றினார். திராவிட முன்னேற்றக் கழகம் நடத்திய அனைத்து மாநாடுகளிலும் பங்கெடுத்துக் கொண்டார்.

திமுகழகத்தை பார்ப்பன துவேசக் கட்சி என்று இப்போது நாம் தேர்தல் அரசியலில் ஈடுபட்டு ஆட்சி அதிகாரங்களைப் பெற்ற பின்னர் மாற்றார் கூறும் கூற்று அல்ல. திமுக அரசியலில் தேர்தல் களத்தில் குதிக்கும் முன்பும் இப்படி சொன்னவர்கள் உண்டு. அவர்களுக்கு பேராசிரியர் விளக்கத்தைப் படித்துப் பார்த்தால் புரியும் கழகத்தின் கருத்தும் அந்த கருத்தினை பேராசிரியர் எடுத்து இயம்பும் திறனும்.  

இதோ பேராசிரியர் பேசுகிறார் கேளுங்கள்:

 

"நாம் (திமுக) எப்படிப் பார்ப்பன துவேஷி ஆவோம். ? என்ன சான்று காட்ட முடியும்? ...... மதத்தரகர்களாகவும், புரோகித எத்தர்களாகவும் பார்ப்பனர் இருப்பதாலேயே மத ஏமாற்றங்களையும் சடங்குப் பித்தலாட்டங்களையும் கண்டிக்கும்போது நாம் பார்ப்பனரைத் துவேஷிப்பதாகக் கூறுகிறார்கள். ஆனால் நாமோ பார்ப்பனரில் மற்றும் பல தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்களை அவர்களது தொழிலைக் கண்டிப்பதில்லை. .....  பலதுறைகளில் சுயசாதிவெறியை அவர்கள் காட்டும் போது அப்படிப்பட்டவர்களை மட்டும் தொழில் எதுவானாலும் குலபுத்தி மாறவில்லையே என்று அவர்கள் குணக் கேட்டைக் கண்டிக்கிறோமே தவிர அவர்களது தொழிலைக் கண்டிப்பதில்லை......

மதத்துறை என்றாலே அது வைதிக ஆதிபத்தியமாக பிராமணியத்தைக் காக்கும் கோட்டையாக இருப்பதால்தான் அதை எதிர்ப்பவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக வேறு வேறு துறையில் உள்ள பார்ப்பனர்களும் கூட நம்மை நிந்திக்கிறார்கள், அரசியல்வாதிகளில் காங்கிரசு பார்ப்பனர்கள் மட்டுமல்ல முற்போக்குவாதிகள் என்று தம்மைத்தாமே முரசறையும் கம்யுனிஸ்ட் பார்ப்பனர் கூடக் கண்ணை மூடிக் கொண்டு நம்மை பார்ப்பன துவேஷிகள் என்று குற்றம் சாட்டுகிறார்கள்.......

 

பார்ப்பனரைத் துவேஷிப்பது என்றால் பார்ப்பனராகப் பிறந்து விட்டவர்களை அப்படிப் பிறந்து விட்டதற்காகவே நாம் வெறுப்பது, கண்டிப்பது, ஒழிப்பது என்பதுதான் பொருள்.. அது ஆளை மனிதனை வெறுப்பதாகும். நாம் மனிதர்களை வெறுப்பவர்களல்ல. மாறாக மனிதன் கையாளும் சில முறைகளை கொள்கைகளை தத்துவங்களை அவற்றின் தீய தன்மையையும் கொடுமையையும் அறிந்ததால் வெறுப்பவர்கள்....

 

பார்ப்பனியத்தைக் கண்டிப்பது பார்ப்பனத் துவேஷத்தால் அல்ல என்பதே உண்மை....

 

நாம் கடவுளைப் பற்றி அதிகம் கவலைப்படுபவர்கள் அல்ல.. நமது பணியை செய்யத் தவறியவர்களும் அல்ல.. அவரவர் கடமையை அவரவர் செய்தால்தான் கடவுளும்கூடத் தமது கடமையை செய்வார் கருணையும் காட்டுவார் என்ற தத்துவத்தினை மறுப்பவர்களும் அல்ல. மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்னும் மகத்தான குறிக்கோளை மதிப்பவர்கள்.

 

"இலங்கும் உயிரனைத்தும் ஈசன்கோயில்" என்னும் மெய்மொழியும்

"அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்" என்னும் திருமந்திரமும்

"கோயிலாவ தேதடா குலங்களாவ தேதடா" என்னும் சித்தர் கேள்வியும்

"நட்டக்கல்லைத் தெய்வமென்று நாலுபுட்பம் சாத்தியே

சுற்றிவந்து மொணமொணன்று சொல்லும் மந்திரமேதடா

நட்டக்கல்லும் பேசுமோ நாதனுள் இருக்கையில்

சுட்ட சட்டிச் சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?"

என்னும் சித்தர் பாட்டும் உணர்த்தும் வழியில் நாம் செய்வதே உண்மையான தொண்டாகும்..."

 

1953 ஆம்ஆண்டு ஜுலை 4 ஆம் நாள் திமுகழகம் துவங்கி நான்காண்டுகளுக்குப் பிறகு தேர்தல் அரசியலில் நுழைவதற்கு நான்காண்டுகளுக்கு முன்பு சிதம்பரத்தில் தென்னாற்காடு மாவட்ட திமுக சமூக சீர்திருத்த மாநாட்டில் அவர்  பேசிய இக்கருத்தினை

மாற்று கருத்து கொண்டவர்கள் சிந்தித்துப் பார்த்தால் புரியும்.. இந்த பேச்சு ஓட்டுக்காக பேசியது அல்ல. இன்றளவும் எந்த காலத்திலும் திமுகவும் இந்த நிலைபாட்டில் தான் இருக்கிறது என்பதை நாம் எல்லோரும் கூட உணர வேண்டும்.

 

இப்படியாக அவருடைய மேடைப் பேச்சை  அவர் பச்சையப்பன் கல்லூரிப் பேராசிரியராக இருந்த போதும் தொடர்ந்து வந்தார்.

1957 ஆம் ஆண்டு முதல் முதல் திமுகழகம் தேர்தலில் போட்டியிட்டப் போது பேராசிரியர் பதவியிலிருந்து விலகி எழும்பூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.

1962 வரை சட்டமன்ற பேரவையின் திமுகழகத் துணைத் தலைவராக பணியாற்றினார். 1962 முதல் 1967 வரை சட்டமன்ற மேலவை உறுப்பினராக இருந்தார்.

1967 முதல் 1971 வரை நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தார். 1971 முதன்முதல் கலைஞர் அமைச்சரவையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக பொறுப்பு ஏற்று அத்துறையில் பல சிறப்பு மிக்க செயல்களை செய்து சாதனைப் படைத்தார். அடுத்தடுத்து கலைஞர் அமைச்சரவையில் கல்வி அமைச்சராகவும் நிதி அமைச்சராகவும் திறம்பட செயலாற்றினார்.   

அனைத்திற்கும் மேலாக திராவிட இயக்க கொள்கைகளான சமூக நீதி, இந்தி ஆதிக்க எதிர்ப்பு, இட ஒதுக்கீடு போன்ற தலைப்புகளில்அவர் ஆற்றும் உரைகளை கேட்கும் போது கல்லூரிகளில் அறிவார்ந்த பேராசிரியர் எடுக்கும் வகுப்பில் பங்கெடுத்த உணர்வை பெறலாம். அதனால் தான், அவர் திராவிட இயக்கக் கொள்கைகளுக்கான இனமானப் பேராசிரியர் என்று அழைக்கிறோம்.

அவர்தம் இருந்த கொள்கை உறுதி , கழகத்தின் மீது அவருக்கு இருந்த பற்று இவை இரண்டும்தான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் ஆக தொடர்ந்து  ஒன்பது முறை தேர்ந்தெடுக்க வைத்தது. பேராசிரியரைக்  கலந்து ஆலோசிக்காமல், கலைஞர் எந்த முக்கிய முடிவையும் எடுக்க மாட்டார். அந்த அளவிற்கு இருவரிடமும் ஒருவருக்கு ஒருவர் மீதான மதிப்பும் மரியாதையையும் இருந்தன. பேராசிரியரும் விருப்பு வெறுப்பு இல்லாமல் பிரச்சினையின் காரண காரியங்களைக் கருதி கருத்து சொல்வார்

 

1983 ஆம் ஆண்டு, இலங்கையில் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து, தலைவர் கலைஞர் அவர்களும், பேராசிரியர் அவர்களும் சேர்ந்து தங்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவியைத் தூக்கி எறிந்தனர்.

இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து, அரசியல் சட்டத்தை எரித்ததற்காக, எம்.ஜி.ஆர் தலைமையிலான அதிமுக ஆட்சியில் பேராசிரியர் அவர்களை சட்டப் பேரவை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கிய வரலாறும் உண்டு. பதவி விலகலுக்கும்  பதவிப் பறிப்புக்கும் அஞ்சாத கொள்கை சிங்கமாகத் திகழ்ந்தவர் பேராசிரியர்.

 

196௦ ஆண்டு ஆகஸ்ட் 19 அன்று பேராசிரியர் சட்டமன்றத்தில் பேசிய உரை காலத்திற்கும் மாற்றாருக்கு பதில் சொல்லும். இந்த மாநிலத்திற்கு சென்னை மாகாணம் என்பதை மாற்றி தமிழ்நாடு என்று பெயர் வைக்க வேண்டும் என்பதற்கு கொண்டு வரப்பட்டத் தீர்மானத்தை ஆதரித்துப் பேசியப்  பேச்சு இன்றைக்கு தமிழ் நாடு என்று சொல்லாமல் தமிழகம் என்று சொல்வோம் என்றும் தக்ஷனப் பிரதேசம் என்று அழைப்போம் என்றும் அல்லது தமிழ்நாட்டைக் கூறுபோட்டு பிரிப்போம் என்றும் கூக்குரல் இடும் கெடு மதியாளர்களுக்கு தி.மு.க. சட்டமன்ற உறுப்பினராக அன்றைக்கு  பேராசிரியர் க.அன்பழகனார் ஆற்றிய  உரை காலத்திற்கும் பதிலளிக்கும் வகையில் அமைந்திருந்தது.

 

அந்த உரையில்,

தமிழ்நாடு என பெயர் வைப்பதற்கு இவ்வளவு மறுப்புச் சொல்கிறவர்கள், தமிழ்நாடுஎனச் சொன்னால் என்ன இழுக்கு என்று சொல்லட்டும். தமிழன் மூச்சோடு வாழ்கிற வரையில், தமிழ்நாட்டில் தமிழ் இனம் இருக்கிற வரையில்,  ‘தமிழர் என்று ஓர் இனம் உண்டு, தனியே அவருக்கொரு குணம் உண்டுஎன்று நாமக்கல் கவிஞர் பெருமையாகப் பாடியிருக்கிற மக்கள் உள்ள வரையில் அவர்களுக்கு அடையாளமாக என்ன தரப் போகிறீர்கள் என்று கேட்கிறேன்.

 

தமிழ்நாடு என்று பெயர் வைப்பதால் பிரிவினை நின்றுவிடாது. நாட்டிற்கு பெருமை எனக் கருதுவதால்தான் தமிழ்நாடு என பெயர் வைக்கக்கோரி கேட்கிறோம். அதேபோல, சங்ககால இலக்கியங்களில் தமிழ்நாடு என்ற பெயர் இல்லையென சொல்வது சரியல்ல. இரண்டு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்ட சங்க இலக்கியப் பாடல்களில், சேர, சோழ, பாண்டிய நாடுகள் தனித்தனியாக இருந்த காலத்தில் தமிழ்நாடு என்ற பெயர் இருந்திருக்கிறது.

சங்க இலக்கியங்களான எட்டுத்தொகை, பத்துப்பாட்டு பாடல்களில் தமிழ்நாடு என்ற பெயர் இடம்பெற்றிருந்ததை அதை படித்துப் பார்த்தாலே நன்றாகத் தெரிய வரும்.

 

தண்டமிழ் வேலி தமிழ்நாட்டுக்கு அகமெல்லாம்என பரிபாடலிலும், ‘இமிழ் கடல்வேலி தமிழகம்என பதிற்றுப் பத்து ஏட்டிலும், ‘தென் தமிழ்நாடு ஆளும் வேந்தர்என சிலப்பதிகாரத்திலும் ஒலிக்கிறது.

பழங்காலத்திலிருந்தே தமிழ்நாட்டை ஆண்டு வந்த வேந்தர்கள் இப்பெயரை ஏற்றிருந்திருக்கிறார்கள்.

 

இந்த தமிழ்நாடுஎன்ற பெயர் மாற்றம் செய்யக் கோருவது திராவிட முன்னேற்றக் கழகத்தினர் மட்டுமே சொல்லியிருந்தாலாவது ஏற்கமாட்டேன் என நீங்கள் சொல்லலாம். தமிழ்நாடு என்ற பெயரை வைக்க வேண்டுமென்று தமிழ்ப் பெரியார் திரு.வி.க சொல்லி இருக்கிறார்.

 

விருதுநகரைச் சேர்ந்த விடுதலைப் போராட்ட வீரர் சங்கரலிங்கனார் இதற்காக உண்ணாவிரதமிருந்து இன்னுயிர் நீத்தார்.

தமிழ்நாடு என பெயர் வைக்கப்பட்டு அதனை காதாரக் கேட்க வேண்டும் என நாடகப் பேராசிரியர் பம்மல் சம்பந்த முதலியார் கேட்டுக்கொண்டார்.

தமிழ்நாடு எனும் பெயரை வைத்துத் தமிழ்நாட்டைக் காப்பாற்ற வேண்டும். பெருமைப்படுத்த வேண்டும். அப்பெயரைக் கொண்டே இந்நாட்டுக்கு புகழ்முடிசூட்டவேண்டும்என வேண்டிக்கேட்ட தமிழறிஞர்கள் பற்பலர்.

அப்படி இருக்கையில் இங்குள்ளவர்களுக்கு மட்டும் ஏன் மனம் வரவில்லை? முன்னாள் காங்கிரசு தலைவர்கள் சொல்லியும் ஏன் இந்த மறுப்பு?

 

என சரமாரியான கேள்விக் கணைகளுடன் பேராசிரியர் பெருந்தகை சட்டமன்றத்தில் வைத்த வாதம் இன்றைக்கும்  ஏகடியம் பேசுவோரின் வாய்களை அடைக்கும் ஆற்றல் கொண்டது.

 

எந்த மேடையிலும் எங்கே பேசினாலும்  எல்லோரையும் கட்டிப் போடும் ஆற்றல் அவருடைய பேச்சுக்கு உண்டு. 

 

இப்படி அவர் அரசியல் கல்வி இலக்கியம் அமைச்சு பணி என்று பலத்துறைகளிலும் ஈடுபட்டு தன் முத்திரையைப் பத்தித்தார். அவர் புது வாழ்வு  என்னும் மாத இதழையும் 1948 ஆண்டு  தொடங்கி  ஆசிரியராக இருந்து நடத்தினார். புகழ் பெற்ற எழுத்தாளர் திரு இராதாமணாளன் துணை ஆசிரியராக இருந்தார். அதில் இலக்கியம் அரசியல் பற்றிய கட்டுரைகள் சிறப்புவாய்ந்தன. அவருடைய எழுத்தும் பேச்சு நயமும் நனிநாகரிகமும் மிக்கதாக இருக்கும். அவருடைய மேடைப் பேச்சினைக் கேட்போர் தேன் உண்ட வண்டாக தன்னை மறந்து போவர்.

அமைச்சராக இருந்த போது ஒருமுறை  திருச்சி REC என்று சொல்லப்படும் Regional Engineering college இல் மாணவர் மன்ற விழா ஒன்றில் சிறப்பு விருந்தினராக  கலந்து கொண்டார். அவர் தமிழில் அங்கே பேசத் துவங்கியதும் மாணவர்கள் பெரும் கூச்சல் இட்டு இருக்கின்றனர். அந்த கல்லூரியில் வேறு மாநிலத்தில் இருந்தும் பல மாணவர்கள் வந்து தங்கி படிப்பார்கள். தமிழ் தெரியாத அவர்கள் அமைச்சருக்கு ஆங்கிலம் தெரியாது என்று கருதியோ என்னவோ சிரித்தும்  கேலியுமாக கூச்சலிட்டு குழப்பம் விளைவித்தனர். உடனே பேராசிரியர் நிலைமையை உணர்ந்து  அங்கே ஆங்கிலத்தில் அமைதியாக இருங்கள் என்று சொல்லிவிட்டு தன்னுடைய உரையை ஆங்கிலத்தில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பேசிய போது சபையில் நிலவிய அமைதியும் இடையில் ஆதரவு கைதட்டல்களும் இறுதியில் பலத்த நீண்ட கைத்தட்டல்களும் அவருடைய  மதிப்பை அங்கு உயர்த்திக் காட்டியது. விழா முடிந்ததும் மாணவர்கள் தங்கள் செயலுக்கு அவரிடம் வருத்தம் தெரிவித்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியை அங்கு அப்போது படித்த என் மலையாள நண்பர் ஒருவர்  சொல்லி வியந்ததை குறிப்பிட்டு ஆக வேண்டும்.

பேராசிரியர் பணியில் இருந்த போது போராட்டக் களத்தில் பங்கு எடுக்கவில்லை என்றாலும் பின்னர் திமுக நடத்திய அனைத்துப் போராட்டங்களிலும் பங்கு கொண்டு சிறைப் பட்டு இருக்கிறார். நேருவிற்கு கறுப்புக் கோடி, விலைவாசிப் போராட்டம், இந்தி எதிர்ப்புப் போராட்டம் 1978 ஆண்டு இந்திரா காந்திக்குக் கறுப்புக் கொடி  என்று அனைத்து போராட்டங்களிலும் கலந்து கொண்டவர்.

பேராசிரியர் அவர்களுடைய தந்தையார் கல்யாணசுந்தரனார் தொடங்கி அவருடைய சகோதரர்கள் நால்வரும் மற்றும் அவருடைய இல்வாழ்க்கைத் துணைவியார் வெற்றிச்செல்வி இப்போது அவருடைய பெயரன்  வெற்றியழகன் வரை அனைவரும் திராவிட இயக்கப் பாரம்பரியக் குடும்பமாகத் திகழ்கின்றனர். பேராசிரியரின் துணைவியார் வெற்றிச்செல்வி அவர்கள் நினைவைப் போற்றும் விதமாக திமுகழக தலைமை கழகத்தில் அண்ணா அறிவாலயத்தில் வெற்றிச்செல்வி கண் மருத்துவமனையை கலைஞர் அமைத்து இருக்கிறார். இந்த மருத்துவமனையை பெரிய அளவில் விரிவுப் படுத்தி இன்னும் மிகச் சிறப்பாக கழகம்  நடத்த வேண்டும் என்பதை என் விருப்பமாகவும் கழகத்தின் தலைமைக்கு இதன் மூலம் வேண்டுகோளாகவும் வைக்க விழைகிறேன்.

மாணவப் பருவத்தில் இருந்தே காஞ்சிபுரத்தில்  அவருடைய பொதுக் கூட்ட உரைகளைக் பலமுறை கேட்டு இருக்கிறேன். அவரிடம் அப்போது ஆட்டோகிராப் கூட வாங்கி இருக்கிறேன். அவருடைய பிறந்தநாளன்று சென்னையில் இருக்கும் காலங்களில் தவறாமல் சென்று வணங்கியவன். என் அப்பாவிடம் (மே.சு.சண்முகசுந்தரம் – மதுராந்தகம் வட்ட திமுகழக முதல் அவைத் தலைவர்) அளவு கடந்த அன்பு கொண்டவர். ஒருமுறை நானும் அப்பாவும் அவருடைய வீட்டில் சந்தித்தபோது அப்பாவுக்கு கையெழுத்திட்டு நூல் ஒன்றை பரிசாகத் தந்தார். யார் அவரைத் தனிப்பட்ட முறையில் சந்திக்கும் போதும் குடும்பத்தைப் பற்றி விசாரிப்பார். தொழில் உத்தியோகம் முதலியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பார். குடும்பம் மகிழ்ச்சியாக இருந்தால்தான் பொது வாழ்க்கையில் சரியானபடி இயங்க முடியும் என்பார். 

1976 ஆண்டு நான் கோவையில் பீளமேட்டில்  பணி செய்த காலத்தில்  நம் கலைஞர் ஆட்சி கலைக்கப்பட்டப் பிறகு திமுகழகத்தினர் எல்லாம் சிதறுண்டு போவார்கள் என மாற்றார் கனவு கண்ட நேரத்தில் கோவையில் சிங்காநல்லூரில் ஒரு அரிசி ஆலைக் கிடங்கில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்று இருக்கிறேன். அப்போது எல்லாம் பொதுக் கூட்டங்களுக்கு அனுமதி கிடையாது. இது போல் அரிசி கிடங்கு சினிமா கொட்டைகைகளில் கூட்டங்கள் நடந்தன. அன்று அவர்  ஆற்றிய உரையும் அப்போது கழகத்தொண்டர்களிடம் எழுந்த உணர்ச்சிப் பெருக்கும் உள்ளக் கிளர்ச்சியும் நேரில் கண்ட நான் இன்றும் எண்ணிப் பார்க்கிறேன். எப்படி இந்த இயக்கம் இத்தனை சோதனைகளை வேதனைகளை தாண்டி இன்றும் எழுச்சியுடன் இருக்கிறது என்பதற்கு அது போன்ற நிகழ்ச்சிகளும் கலைஞர் பேராசிரியர் போன்றவர்களின் உழைப்பும் ஈகமும்தான் தான் உரமாகி நம்மை உயர்த்தி இருக்கிறது என்பதை நாம் காலமெல்லாம் அவர்களுக்கு நன்றி பாராட்டக் கடமைப் பட்டுள்ளோம். 

மாயவரம் அருகில் கொண்டத்தூர் என்னும் சிற்றூரில் 1922 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19 ஆம் தேதி கல்யாணசுந்தரம் சொர்ணாம்பாள் இணையருக்கு பிறந்து 2௦2௦ ஆண்டு  மார்ச் மாதம் 7 ஆம் தேதி இன்னுயிர் நீத்த பேராசிரியர் தன்னைப் பற்றி சொல்லும் போது

முதலில் நான் மனிதன். இரண்டாவதாக நான் அன்பழகன். மூன்றாவது நான் சுயமரியாதைக்காரன். நான்காவது நான் அண்ணாவின் தம்பி. ஐந்தாவது கலைஞரின் தோழன். இந்த உணர்வுகள் இறுதிவரை என்னோடு இருக்கும். இடையில் என் வாழ்வில் புகுவதற்கு மாற்றான் எவனுக்கும் இடம் இருக்காது. என்னுடைய வாழ்நாள் ஏதாவதொரு இலட்சியத்துக்குப் பயன்பட வேண்டுமானால், அகில இந்தியாவில் தமிழன் எவருக்கும் தாழ்ந்தவனல்லன் என்பதை நிலை நாட்டுவதற்குப் பயன்பட்டால் அதுவே எனக்குப் போதும். தமிழ்மக்கள் மறந்துவிட்ட அந்த உணர்வுகளை அவர்களுக்கு நினைவூட்டுவதையே என் வாழ்க்கையின் இலட்சியமாகக் கருதுகிறேன்

 

இந்த இலட்சியத்தை அவர் தன் வாழ்நாள் கடைசி மூச்சிருக்கும்வரை கடைபிடித்தார் என்பதே  ஒரு மனிதரின் சிறந்த பண்புக்கும் புகழுக்கும் உரிய நற்செயலாகும்.

“இளம்பருவத்தில் தன் நெஞ்சில் ஏந்திய திராவிடக் கொள்கையை முதுமையிலும் வைரம் பாய்ந்த மரம் போல உறுதியாகப் பற்றி நின்று, தலைவர் கலைஞர் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகத்தைக் காப்பது ஒன்றே தன் கடமை எனக் கருதி, கழகத்தில் தன்னைவிட இளையோர் அனைவருக்கும் திராவிட வகுப்பெடுத்துக் கொள்கை உணர்வினை ஊட்டியவர் நம் இனமானப் பேராசிரியர்.

குடும்பப் பாசம் மிகுந்த இயக்கமான தி.மு.கழகத்தில் தலைவர் கலைஞரிடம் எந்தளவுக்கு இயக்கப் பயிற்சி பெற்றேனோ அதே அளவுக்கு, ‘பெரியப்பாபேராசிரியரிடமும் பயிற்சியினைப் பெற்றேன். அந்தப் பயிற்சிதான் இன்று தி.மு.க. எனும் பேரியக்கத்தின் தலைவர் எனும் பெரும் பொறுப்பைச் சுமந்து பயணிப்பதற்கு உரமாகவும் ஊக்கமாகவும் இருக்கிறது.

 

தந்தை பெரியாரின் பகுத்தறிவுப் பள்ளி மாணவராக - பேரறிஞர் அண்ணாவின் இதயம் நிறைந்த அன்புத் தம்பியாக - தலைவர் கலைஞருக்குத் தோள் கொடுத்து நின்ற கொள்கைத் தோழராக - இயக்கக் கருத்தியலின் தலைவராகத் தன் வாழ்நாள் முழுவதும் திராவிடம் பரப்பிய - பாடுபட்ட இனமானப் பேராசிரியர் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாளில், அவர் கற்றுத் தந்த தத்துவப் பாடங்களை நெஞ்சில் ஏந்தி, மதவாத - பிற்போக்கு - அடிமை சக்திகளை முறியடித்து, மதநல்லிணக்க - சுயமரியாதைமிக்க - சமூகநீதி இயக்கங்களின் மகத்தான வெற்றிக்கு அயராது பாடுபட உறுதியேற்போம்!

 

2௦21 ஆண்டு மார்ச்  ஏழாம் தேதி நம் அன்பிற்கினிய கழகத் தலைவர் தளபதி மு.க ஸ்டாலின் அவர்கள் பேராசிரியர் நினைவு நாள் அன்று “திராவிடக் கருத்தியல் பாதையில் நம்மை வழிநடத்தும் இனமானப் பேராசிரியர் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவேந்தல்”

என்ற தலைப்பில் வெளியிட்ட மேற்கண்ட செய்தியில் காணக்கிடைக்கும் கருத்துகளை என்றென்றும் மறவாமல் மனதில் இருத்தி நாம் நம் வெற்றிப் பயணத்தை தொடர்வோம்.

 

வெல்க திராவிடம்.!     வாழ்க தமிழ் !