Saturday, July 11, 2026

 

திருவள்ளுவர் திருவுருவப் படவிளக்கம்

 

மனிதன் நிறைவுள்ள மனிதத் தன்மையை எப்தும்வழி?

 

மனிதன் தன் வாழ்வில் தோன்றும் குற்றங் குறைகட்கு இடமளிக்காது நன்னெறியில் நின்று நிறைமனிதனாக உயரும் வழியை வகுத்துத் தந்த பெருந்தகைதான் திருவள்ளுவர்.

 

மனிதன் மனம், வாக்கு, காயம் இவைகளாற்றான்

நன்மையோ, தீமையோ இபற்ற முடியும். இவைகளின் மூலம் செய்யும் நற்காரியங்களை உலகம் ஒப்ப வேண்டும். அப்போது அதுமனிதத் தன்மையெனப் போற்றப்படும். இம் மனிதத் தன்மையை ஒவ்வொருவரும் பெறுவதற்குக்

தெய்வப் புலவர் திருவள்ளுவரால் ஒரு நந்நெறி வகுக்கப்பட்டுள்ளது. இதற்குப் பெயர் திருக்குறள்.

 

உலகியல் முறை, உள்ளொளி (ஆன்மீக) நெறி

ஆகிய பல துறைகளிலும் ஒரு திட்டத்தோடு கடமையை ஆற்றி மனநிறைவு பெற்று வாழும் வகையை ஒழுங்குப்படுத்தித் தந்த நூல், உலகில், திருக்குறள் ஒன்றே என்றால் மிகையில்லை.

 

எனவே இப்பெரும் நூலை இயற்றும் திறன் பெற்ற பெரியார் தம் வாழ்நாளின் எந்த வினாடியையும் வீணாக்கியிருக்க முடியாது.

 

'உலகியலுக்கு அடிமையாகிவிடாமலும், எளிய

இன்ப நுகர்விலே கட்டுண்டு விடாமலும், தனித்து நின்று தமது அறிவையும், முயற்சியையும் ஆட்கொண்டாலன்றி மனித குலத்தை உய்விப்பதற்கென்று தாம் மேற்கொண்டுள்ள அரும் பணியை நிறைவேற்றுவதற்குக்

தம்மால் ஈடு கொடுக்கவியலாது போகும் என்பதைஉணர்ந்தவராகக் கருதப்பட்டதால் நிலைப்பெற்ற (தெய்வீக ஒளி படைத்த) அருள் உருவினராகத் திருவள்ளுவரின் திருக்கோலம் அமைக்கப்பெற்றது.

 

கூடாவொழுக்கம் என்னும் அதிகாரத்தில்

''மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்

பழித்தது ஒழித்து விடின்"

என்று கூறியுள்ளதைக் காணின், தலை மழுங்க

மொட்டையடித்துக் கொள்வதால் தெய்விக (அருள்) ஒளி பெறுதலோ, தாடியும் சடாமுடியும் வளர்த்தலால் முனிவராக ஆதலோ ஒருக்காலும் இல்லை என்பதுடன், உலகத்து நன்மக்களால் தவறானவை என்று கடியப்பெற்றவற்றை நீக்குதல் ஒன்றே தவமாகும்'' என்னும்

கருத்து விளக்கமாகும்.

 

இதை இவ்வளவு வற்புறுத்த வேண்டியதேனெனில், தலையை மழித்து துறவறம் பூணுவதாலோ, முடியை நீட்டித் தவம் செய்வதாலோ பெறப்படும் நன்மையை உலகத்துப் பெருமக்களால் தீயவை என்று

கருதப்படுபவைகளை நாம் ஒழித்துக் கட்டுவதாலேயே நாம்பெற்று விடுகிறோம். இதை உலகம் பெரிதும் மதிப்பது கண்கூடு. இப்படி மதிக்கப்பட வேண்டுமானால் அது தவத்தினால்தாள் கிடைக்கும். எனவே தவம் என்பது தீயவைகளை அழித்துக் கட்டுதல் என்க.

 

இத்தகு விளக்கங் கண்ட திருவள்ளுவருக்குத் திருமுடி எவ்வாறு அமைந்திருக்கக் கூடும்! சிறிதே முன்வழித்துப் பின்வளர்த்தப் பெருங் குடுமியா ? நாகரீகஒப்பனையுடன் வெட்டப் பெற்ற சிகையா? இவையனைத்தும் தனித் தனிக் குழுவாரின் அடையாளமாக ஆகிவிட்டமையின், திருவள்ளுவரின் கருத்துக்குப் பொருந்துவன ஆகாவாதலின், திருவள்ளுவருக்குத் திருமுடியும்

நீவப்படாத தாடியும் இருத்தல் நன்று என்று கருதப்பட்டது.

 

ஓவிய இலக்கண முறைப்படி உயர்ந்த மதி படைத்தோருக்கு நெற்றி பரந்தும், உயர்ந்தும் இருக்க வேண்டுமென்பதோடு, அவர்கள் நாசியின் நீளத்திற்கொப்பாகவோ, அல்லது சற்று அதிகமாகவோ அது இருத்தல் வேண்டுமென்பதால், அதற்கொப்ப திருவள்ளுவரின் நெற்றி அமைக்கப்பட்டது.

 

அதே முறைப்படி நாசி ஓணான் முதுகில் எவ்வளவு நுண்ணிய வளைவு தென்படுகிறதோ அவ்வளவு வளைந்திருக்க வேண்டுமென்பதோடு, நாசியின் நுனி மழுங்கியிராமல், அதன்பருமனுக்கேற்ற கூர்மையுடனிருந்தால்

புத்திக் கூர்மையும், உண்மையை உய்த்துணரும்

ஆற்றலும் உண்டு என்பதோடு, நாசித் துவாரத்தின் இரு பக்கத்து மேல் மூடிகளும் சற்று மேல்நோக்கி அகன்றிருக்க வேண்டும். அப்படி இருந்தால் நல்வவைகளைத் தேர்நதெடுக்கும் ஆற்றல் உண்டாகிறதுஎன்பதால்

திருவள்ளுவரின் நாசி அதற்கொப்ப அமைக்கப்பட்டது.

 

வாய் அகன்றிருக்கக் கூடாது. குறுகியும் இருக்கக்

கூடாது, மெல்லியதாய் இருத்தலும் கூடாது; அப்படி இருந்தால் வாய்மைத் திறன் வாய்க்காது. ஆகையால் தமக்கென்று ஏற்படுத்திக் கொண்ட பெரும் பணியை நிறைவேற்றுவதற்கான உறுதியைத் தெளிவாகக் காட்டுமாறு திருவள்ளுவரின் உதடுகள் அமைக்கப்பட்டன.

 

உலகின் மீதுள்ள பெருங் கருணையால்தான் திருவள்ளுவர் திருக்குறள் இயற்றித் தந்தார் என்று கருதப்பட்டதால், ஆழ்ந்த சிந்தனை, கருணை, ஒளி, பொதுநோக்கு இவை நிரம்பிய கண்கள் படைக்கப்பட்டன.

சிந்தனையிலுள்ளபோது திருவள்ளுவரின் வலது புருவம் சற்றே உயர்ந்து, உள்ளம் செயல்பட்டுக் கொண்டிருப்பதைக் குறிக்கிறது.

 

அவரது நீண்டகன்ற காதுகள் பலப் பல ஆண்டு

காலமாக அவர் பெற்ற கல்வியினாலும் உலகியல் பயிற்சியினாலும் அவர் எய்திய அறிவுத் திறனையும், தேர்ந்தசெவிச் செல்வத்தையும் காட்டுவனவாக உள்ளன.

 

உண்பதை அளவறிந்து உண்டால் நோய் வராமல்

தடுக்கலாம் என்றும், மருந்தே தேவையில்லை என்றும்,

"குறைவாக உண்பவனிடத்து இன்பம் போல்

நிறைவாக உண்பவனிடத்துத் துன்பமிருக்கும்'

என்பது போன்ற நல் வரிகனக் கூறிய திருவள்ளுவர், தானும் அவற்றைக் கடைப்பிடித்திருக்க வேண்டும். அதனால் அவருக்கு உடல் நலக்குறைவு நேர்ந்திருக்காது.

அக்காரணத்தால், உடல் தன் ஊட்டத்தினின்றும்

இளைத்திருக்காது என்பதாலும், திருவள்ளுவர்

பகையை வென்ற பேராண்மை மிக்கவர் என்பதாலும் அவரது திருமேனி நல்ல ரத்தத்துடனும். கட்டுக்கோப்புடனும். பண்பட்டிருத்தலை அமைத்துக் காட்ட தூண்டுதலாயிற்று.

உலகப் பற்று. சமயப் பற்று இவைகனிலிருந்து

திருவள்ளுவர் விலகித்தான் இருந்திருக்க வேண்டும் என்பதேனெனில், ஏதாவது மதத்தைடோ தழுவிய நன்மொழிகள் திருக்குறளில் எங்கும் தென்படவில்ல.

அப்படியிருந்தால் மது தேச வேறுபாடுகளின்றி

எல்லோரும் அதைத் தத்தம் மொழியில் மொழி பெயர்த்து வருவதும் நிகழாது. மேலும்

அந்நாட்களில் வாழ்ந்திருக்கக்கூடிய மத, சமய வெறியர்களிடமாவது கருத்து மாறுபாட்டினையும் கண்டனங்களையும் எழுப்பத் தவறியிருக்காது என்பதில் ஐயமில்லை. மொத்தத்தில் மனிதன்

உலகில் ஒப்புற வாழ்ந்து உயரும் விதியை மாத்திரம் திருக்குறள் உணர்த்துவதால் திருவள்ளுவருக்குச் சமயக் குறிகள், மதச் சின்னங்கள் முதலியவை இல்லா மல் ஆயின.

 

மார்பிலும், முன்கையிலும் அமைந்துள்ள ரோமவரிசைகள், தாம் ஏற்ற பணியை நிறைவேற்றிக் கொள்ளும் ஆண்மையைக் குறிப்பன.

 

தூய்மை நிறைந்த த உள்ளம்,

தூய்மை நிறைந்த நோக்கு,

தூய்மை நிறைந்த வாக்கு,

தூய்மை பெற்ற உடல்,

தூய்மையான குறிக்கோள்

 

இவையிருப்பதால், திருவள்ளுவர் தூய்மையான வெண்ணிற ஆடை புனைந்திருத்தல் நன்று என்று கருதப்பட்டது.

 

 

வலக்கையில் எழுத்தாணியை பிடித்துள்ள அழுத்தம் மனித குலத்தின் உயர்வுக்காகத் தன் அறிவாற்றலால் தளராது உழைத்துத் தம் குறிக்கோளை நிறைவேற்றிக் கொள்ளும் வலிய ஊக்கத்தையும் நெஞ்சறுதியையும் காட்டுவதாகும்.

 

 

கலை நலம் நிரம்பப்பெற்று காண்போரின்

அழகுணர்ச்சிக்கு விருந்தாகப் பொலியும் இடது கை, உலகப் பொதுப் பணியை ஈடேற்றி வைக்கும் பொறுப்புடன் ஓலையைத் தாங்கி நிற்பதாக அமைக்கப்பட்டது.

 

வலதுகால் பெருவிரல் மட்டும் சற்று முன் வளைந்து இருப்பது ஏனெனில், கால் பெருவிரல் அற்ப ஆசைகளைக் குறிப்பது. அந்த ஆசை வெளியில் தூக்கி எறியப்பட்டு விட்டது என்பதை வற்புறுத்த--  என்றால், நிராசையோடு உலகத்தினிடம் பயனேதும் கருதாது பணி செய்து கிடப்பதே தன் கடனென்று நினைத்தார் என்க.

 

 

அல்லாமலும், எல்லோருக்குமே சிந்தனை தீவிரமாக இருக்கும்பொழுது கால் பெருவிரல் அடுத்த விரலுடன் நெண்டிக கொண்டேயிருக்கும். சிந்தனை சீர்பெற முடிந்ததும் ஒரு நிலையில் நின்று விடும். ஆகையால், அதற்கு ஒப்ப அமைக்கப்பட்டது.

 

ஏற்கனவே எழுதப்பட்ட திருக்குறளின் பல அதிகாரங்கள் அவருக்கு வலப்புறம் குவிக்கப்பட்டிருக்கின்றன. அவற்றைத் தொடர்ந்து அப்பாலும் பல

அதிகாரங்கள் குவிந்திருக்கின்றன என்று ஊகித்துக் கொள்ளும் பொருட்டு,சில சுவடிகளின் சில பகுதிகள் மட்டுமே தெரிவதாக வரையப் பட்டுள்ளது.

 

கையில் பிடித்துள்ள ஓலையில் ஒன்றும் எழுதாதற்குக் காரணம் தமிழில் இலக்கிய வரம்பிற்குட்பட்டு நயம் பெற மிகச் சுருக்கமாக எப்படி எழுத வேண்டுமென்ற சிந்தனை

திருவள்ளுவருக்கு இருந்திருக்க முடியாது.

அப்படி சிந்தித்திருந்தால் திருக்குறளில் அவ்வளவு நீரோட்டமும், தெளிவும் இருக்க முடியாது. ஆகவே குறள்களை எழுத அவர்தம் விரல்களுக்கே தெரியும். ஓலையில் எழுத்தணியை ஊன்றிட்டால், குறள்

முடிந்துதான் எழுத்தாணி இடம் விட்டுப்பெயறும். இந்நிலையிஸ் மக்களுக்கு அடுத்து சொல்லப்பட வேண்டியது யாது என்னும் சிந்தனையிலிருக்கும் நிலையாக உருவகம் செய்து, கண்களை சிந்தனையில் ஆழ்த்திருக்கச் செய்திருப்பதால், இந்த ஓலயில் ஒன்றும் எழுதாமல் விடப்பட்டது.

 

திருவள்ளுவர் தமக்கென வாழாதவர் என ஊகிக்கப்பட்டதால், அவர் ஆசையற்று இருந்திருக்க முடியும்.

ஆசையற்ற இடத்தில் துக்கம் இருக்க முடியாது. அவர் தூய கருத்துலகில், சிந்தனை வானில் வாழ்ந்தவராதலால்,  அவரது சூழ்நிலையும் தூய்மை என்பதைக் குறிக்கவே பின்புறம் இருபக்கங்கள்—இவற்றில் மரம், செடி,

கொடிகளோடு- வீடு வாசலோ எவற்றையும்

அமைக்காமல், அவரது உருவத்திலிருந்து வெளிப்பட்டுப் பரவி  நிற்கும் அறிவுச் சுடர் ஒன்று மட்டுமே இடம் பெறலாயிற்று.

 

அநேகமாக மனித சக்திக்கு அப்பாற்பட்ட சக்தி உள்ளவர்களுக்கு சிரத்தைச் சுற்றிலும் 'ஒளி வட்டம் ' ஒன்று சித்திரத்தில் அமைப்பது மரபாக இருந்து வருகிறது. ஏனெனில் அவர்களிடத்தில் பேரறிவின் ஒளி வீசுகிறது என்பதைக் காண்பிக்க. ஆனால், திருவள்ளுவருக்கு அந்த ஒளியை வட்டமாக அமைக்காமல் தலையைச் சுற்றிலும் தூய நிறம் ஆரம்பித்து, அது எங்குபோய் முடிகிறது என்பதைக் காட்டாமல், சுற்றிலுமுள்ள மங்கலான இடங்களில் சென்று பாய்ந்து முடிவு தெரியாமல் விடப்பட்டிருப்பதற்குக் காரணம். வள்ளுவரின் ஒளி மற்றையோர்போல வட்டமாகத் தனக்குமட்டும் நின்று விடாமல் வெளி உலகிற்கு ஊடுருவிப்பாய்கிறதைக் காட்ட.

 

மண் தரையில் மரப்பலகையின் மீது வள்ளுவர் அமர்ந்திருத்தல் ஏனெனில், எதையும் உயராது இழுக்கும் பூமியின் ஆற்றலும் அவரது சிந்தனை உயர்வதைத் தடுப்பதற்கில்லை. அத்துடன் உலகத்தோடு ஒட்ட ஒழுகியும். உலகியலுக்குத் தாம் அடிமையாகாமல் தனித்து நின்று தனிப்பெரும் அற நெறியை வகுத்துத்

தந்த தனிப் பெருந்தகையான அவர் தம் தூய்மையுற்ற உணர்வு செயல், ஆடை முதலியனவற்றை எந்த வகையிலும் அழுக்குத் தீண்ட இடந் தருவது இழுக்காகுமமெனக் கருதியதாகும்.

 

நம் நாட்டின் ஒப்பற்ற அறிவுச் செல்வமாகிய பெருந்தகை திருவள்ளுவரின் ஒளி வடிவம் இந்த ஓவியன் உள்ளத்தில் உருக்கொண்ட வகையிலேயே நீர்க்கலவை வண்ணக் குழம்பு கலந்து தீட்டிய இந்த வடிவிலும் நிலை

பெற்று அமைவதாகும்.

 

வாழ்க வள்ளுவரின் அறிவுப் பேரொளி!

கே.ஆர்.வேணுகோபால் சர்மா

Friday, December 16, 2022

திருவள்ளுவர் திரு உருவப்பட வெளியீட்டு விழா சிறப்பு மலர் கட்டுரை - கலைஞர் மு . கருணாநிதி

 திருவள்ளுவர் திரு உருவப்பட வெளியீட்டு விழா சிறப்பு மலர் 5 பிப்ரவரி 1960 ஆண்டு வெளியானது.

அதில் முதமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் அப்போது எழுதிய கட்டுரை :

 

அன்புள்ள நண்பர்களே ! இன்று காலையில் என்னை வந்து அழைத்த நண்பர்கள் திரு வேணுகோபாலர் அவர்களுடைய இல்லத்திற்கு செல்லலாம் என்று தான் அழைத்தார்கள். ஆனால் என்னை அவர்கள் அழைத்து வந்த இடமோ வேணுகோபாலர் அவர்களுடைய இல்லம் அல்ல. வள்ளுவருடைய இல்லம். நான் வள்ளுவருடைய வீட்டிற்கு வந்ததாகவே உணர்கிறேன்.

 

இனி மீண்டும் சந்திக்க இயலுமா என்று கருதி நாளெல்லாம் ஏங்கி ஏங்கி நாம் நம்முடைய கண்களை மூடுவதற்கு முன்பு ஒரு முறை வள்ளுவரை கண்டு விட்டு கண்களை மூட மாட்டோமா என்கின்ற தமிழக பெருமக்களுடைய ஏக்கத்தை எல்லாம் துடைத்திடும் வகையில்  நம்முடைய அருமை நண்பரும் ஓவியப் பெருந்தகையாருமாகிய  திரு வேணுகோபாலர் அவர்கள் திருவள்ளுவர் பெருமானுடைய ஓவியத்தை தமிழகத்திற்கு - இல்லை உலகத்திற்கு தந்திருக்கிறார்கள்.

 

அத்தகைய ஒரு பெரும் முயற்சியை பாராட்டுகிற பட்டியலிலே நானும் ஒருவன் என்று எண்ணி இறும்பூதெய்கிறேன்.  பெருமை அடைகிறேன்.  ஏன் இறுமாப்புக் கொள்கிறேன் என்று கூட சொல்லுவேன்.

 

வள்ளுவருடைய உருவம் எத்தகையது என்கின்ற குழப்பம் தமிழகத்தில் பல நாட்களாக இருந்து வருகிறது.  சொல்லப் போனால் பல்லாண்டு காலமாக இருந்து வருகின்ற பெரும் போராட்டமாகவும் இருந்து வருகிறது தமிழகத்தில் புலவர்களுடைய உருவம் மட்டும் அல்ல தமிழகத்தினுடைய வரலாறு தமிழகத்துப் பெருமக்களுடைய சரித்திரம் தமிழகத்து முடி வேந்தர்களுடைய வரலாறு இவைகள்  குழப்பத்திற்கு ஆளாகியுள்ள வரலாறு தான், சரித்திரம் தான்,  ஓவியம் தான் என்பதை நாம் அறியாத ஒன்று அல்ல.  

சேரன் செங்குட்டுவனுடைய காலம் எது? பாண்டிய நெடுஞ்செழியினுடைய காலத்திலே வாழ்ந்த வேறு நாட்டு மன்னர்கள் யார்?  என்கின்ற பல்வகையிலே பல பல குழப்பங்கள் நாட்டிலே உண்டு.  அத்தகைய சரித்திரங்கள் இன்று நாட்டிலே குழப்பமிக்க நிலைமையிலே தான் இருந்த வருகின்றன.  

 

இந்த சரித்திரங்களிலே உள்ள குழப்பம் தவிர்க்கப்பட்டு வரலாற்றிலேயே உள்ள சிக்கல்கள் தவிர்க்கப்பட்டு ஒரு நிர்ணயமான வரலாறு அது போலவே ஒரு நிர்ணயமான உருவம் புலவர்களுக்கும் அது போலவே மன்னர்களுக்கும் தரப்பட வேண்டும் என்கின்ற கருத்து உடையவர்களிலேயே நானும் ஒருவன்.  

 

அப்படி தரப்படுகின்ற உருவம் எல்லோராலும் ஒப்புக்கொள்ளக்கூடிய நல்ல உருவமாக நல்ல வரலாறாக அமைய வேண்டும் என்கிற கருத்தை நான் பலமுறை பல மேடைகளிலேயே எடுத்துச் சொல்லி இருக்கிறேன்.  அதுபோலவே பல ஏடுகளிலே எடுத்து எழுதியிருக்கிறேன்.  அந்த நிலைமையிலே தான் இன்றைய தினம் நான் மிக மிக மகிழ்ச்சி அடையக் கூடிய விதத்தில் திருவள்ளுவர் பெருமானுடைய உருவத்தை நமது ஓவிய நண்பர் வேணுகோபால் அவர்கள் தீட்டி இருப்பது கண்டு பெரு மகிழ்வு அடைகின்றேன்.  

 

வள்ளுவருடைய திருக்குறள் தான் அவருடைய ஓவியம், அவர் இயற்றி தந்த 1330 அருங்குறள் பாக்கள்  தான் வள்ளுவருடைய உருவத்தை நமக்கு காட்டக்கூடியவை என்கின்ற எண்ணத்தை தான் இதுவரை நாம் கொண்டிருந்தோம்.  இனி இவர்தான் வள்ளுவர் என்று அகிலத்திற்கு நாம் அறிவிக்கக்கூடிய வகையிலே அழகான ஒரு ஓவியத்தை நமக்கு வேணுகோபால் அவர்கள் தந்திருக்கின்றார்கள்.  

 

நான் வள்ளுவருடைய உருவத்தை காணுகின்றேன்.  நம் எதிரே அமர்ந்திருக்கின்ற அந்த வள்ளுவர் பெருமானுடைய ஓவியத்தை நான் காண்கின்றேன், காணுகின்ற நேரத்திலே அவருடைய கண்கள் உமிழ்கின்ற  அந்த ஒளியை என்னால் காண முடிகிறது.  சுவைக்க முடிகிறது.

“அமிழ்தினு ம் ஆற்ற இனிதே தம்மக்கள்  

சிறுகை அளாவிய கூழ்”

என்கின்ற குழந்தைக்காக அவர் பாடிய குழந்தைக்காக அவர் எழுதிய அந்த அருமையான குறளை  நான் எண்ணிப் பார்க்கிற நேரத்தில் எதிரே தவழ்ந்து வருகிற குழந்தையை வள்ளுவர் பார்த்து ரசித்து அந்த பாடலை எழுதுவது போலவே அவருடைய கண்ணொளி அமைந்திருப்பதை நான் காண முடிகின்றது.  

“கைவேல் காளிற்றோடு  போக்கி வருபவன்

மெய்வேல்  பறியா நாகும்”  

என்ற அந்த வீர உரைகள்  அந்த வீர உரைகளை சிந்திய  அந்த வேல்கள்தான்  வள்ளுவருடைய இதழ்கள்.  அதை ஓவியர் வேணுகோபால் அவர்கள் அழகாக சித்தரித்திருக்கின்றார்கள்.

 

வள்ளுவருடைய கையிலே பிடித்து இருக்கின்ற எழுத்தாணியும் , இன்னொரு கரத்திலே இருக்கின்ற சுவடியையும் காணுகின்ற நேரத்தில், சுவடியை அணைத்து இருக்கிற கரத்திலே புடைத்து இருக்கின்ற நரம்புகளையும்,  அதுபோல எழுத்தாணி வைத்திருக்கின்ற கரத்திலே புடைத்து இருக்கின்ற நரம்புகளையும்  காணுகிற நேரத்தில் ஓவியர் எவ்வளவு சிந்தித்து சிந்தித்து எந்த அளவிற்கு நெஞ்சத்திலே வள்ளுவருக்காக இடம் அமைத்து  அந்த ஓவியத்தை எழுதியிருக்கிறார் என்பதை நான் எண்ணுந்தோறும் எண்ணுந்தோறும்  அவரை பாராட்டுவதற்கு கடமைப்பட்டிருக்கிறோம்.

 

இப்படிப்பட்ட ஒரு நல்ல காரியத்தை தமிழகத்திற்கு செய்கின்ற ஓவியர் வேணுகோபால் அவர்களை அறிஞர்கள் பலரோடும் சேர்ந்து நான் பாராட்டுவதற்கு கடமைப்பட்டிருக்கிறேன்.  

“இனிய உளவாக இன்னாத கூறல்

கனியிருப்ப காய் கவர்ந்தற்று”

 

 

என்கின்ற வள்ளுவருடைய குறளையே  இன்று வள்ளுவருடைய ஓவியத்தை பற்றி யாராவது கூறுவார்களேயானால் அவர்களுக்கு நான் சமர்ப்பிப்பதற்கு கடமை பட்டிருக்கிறேன்.  

“பல்லார் முனியப் பயனில சொல்லுவர்

எல்லாரும் எள்ளப் படும்”

என்கிற கூறலாய்த்தான்  நான் அவர்களுக்கு எடுத்துக் காட்டுவதற்கு விரும்புகிறேன்.

இந்த வள்ளுவருடைய உருவம் தமிழ் நாட்டாரால், அகில உலகத்தாரால் பாராட்டப்பட வேண்டிய போற்றி ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய ஒரு உருவம் என்று நான் எடுத்துச் செல்ல விரும்புகிறேன்.  

 

இனி உலகத்தில் வள்ளுவருடைய பெயரோடு இன்னும் இரண்டு பெயர்கள் இதுவரை நினைத்தது போலவே நிலைக்கும்.  திருவள்ளுவர் திருக்குறள் ஓவியர் வேணுகோபாலர் என்னும் மூன்று பெயர்களும் தமிழகத்து மக்களால் மறக்க முடியாத பெயர்கள்

வாழ்க  வள்ளுவர் வாழ்க வேணுகோபாலர்

 

திராவிடத்தின் தியாகத் திருமகன்

தியாகம்.எனப்படும் ஈகம் தமிழர்களின் வாழ்வில் ஒரு அங்கமாக பாவித்து வாழ்ந்த வரலாறு தமிழ்நாட்டுக்கு உரியது. தியாகத்தையும், தியாகிகளையும் மறவாமல் மதித்துப் போற்றும்.அன்பின் அடையாளமாக நடுகல் வழிபாடு உருவானது. இக்காலத்தில் நினைவுச் சின்னங்கள் வைக்கப்படுகின்றன தங்கள் .உறவின் முறையில்.மதிக்கப்படும் பெரியாரைப் போற்றும் விதமாக அவர்கள் புதைக்கப்பட்ட அல்லது எரியூட்டப்பட்ட மயான வளாகத்தில் அவர்களுடைய குடும்பத்தினர் இக்காலத்திலும் நடுகல் போன்று நினைவுச்சின்னங்கள் வைக்கின்றார்கள்.

 

திராவிட முன்னேற்றக் கழகம் அறிஞர் அண்ணா அவர்களுடைய தலைமையில் ஆட்சி பொறுப்பு ஏற்ற பிறகு முதல் முதலாக இரண்டாவது உலகத் தமிழ் மாநாடு சென்னையில் நடைபெற்றபோது தமிழறிஞர்கள் 10 பேருக்கு.சென்னை கடற்கரை சாலையில் நினைவுச் சின்னங்களாக சிலைகள் வைக்கப்பட்டன. அண்ணாவின் மறைவுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த கலைஞர் அவர்கள், தமிழ்நாட்டில் பல்வேறு தலைவர்களுக்கு தமிழ் அறிஞர்களுக்கு சான்றோர்களுக்கு நினைவுச் சின்னங்கள், மணிமண்டபங்கள், சிலைகள் என்று நிறுவியதை  யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது. ஆனாலும், சிலர்        தி மு கழகத்தின் மீது சேற்றை வாரி வீசும் விதமாக பேசும் தன்மை இருக்கிறது. 

 

மறைந்த தியாகிகளைக் குறிப்பாக இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களை மதிப்பதில்லை என்று உண்மைக்கு மாறான கருத்தை பரப்புவதில் இன்பம் காணும் ஈனப்பிறவிகள் இருக்கிறார்கள். 09-01-1972.அன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற சுதந்திர போராட்ட வீரர்களின் நான்காவது மாநில மாநாட்டில் அன்றைய தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அந்த மாநாட்டில்.கலந்து கொண்டவர்கள்     .தி மு கழகத்தை, அறிஞர் அண்ணாவை, கலைஞரை வெகுவாக பாராட்டி பேசினார்கள். அந்த மாநாட்டில்.கலந்து கொண்ட சுதந்திர போராட்ட வீரர்களில் முக்கியமானவர்கள் திரு நா.சோமையாஜுலு, திரு.கிருஷ்ணசாமி பாரதி, காங்கிரஸ் முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திரு.டி,ஜி. கிருஷ்ணமூர்த்தி. திரு சுத்தானந்த பாரதி போன்றவர்கள் ஆவர். 

 

மாற்றுக் கட்சியாக இருந்தாலும் சுதந்திர போராட்ட வீரர்களைப்  பற்றி அக்கறையோடு கவனப்படுத்தி தம்முடைய ஆட்சிக் காலத்தில் அவர்களுக்கு உதவிகளைச் செய்தவர் அறிஞர் அண்ணா. எதிர்க் கட்சியாக இருந்த போதே சீனப் போரின் போது நிபந்தனையின்றி ஒன்றிய அரசுக்கு ஒத்துழைத்து நிதி சேர்த்துக் கொடுத்தவர் அண்ணா. அவருடைய ஆட்சிக்காலத்தில்தான் வாஞ்சிநாதய்யரின்  மனைவியாருடைய கோரிக்கையை ஏற்று விடுதலை போராட்ட வீரர் என்று அங்கீகரிக்கப்பட்டு அந்த அம்மையாருக்கு தியாகிகள் பென்ஷன் எனப்படும் உதவித்தொகை வழங்கப்பட்டது.. அதுவரை காமராசர் தலைமையிலான காங்கிரசார் ஆட்சி காலத்திலேயும் வாஞ்சிநாத அய்யருடைய  மனைவியின் கோரிக்கை ஏற்கப்படாமல் கிடந்தது. வாஞ்சிநாதன் அவருடைய செயல்பாடுகள் சுதந்திர போராட்ட.த்தின் பங்கு அல்ல என்று காரணம் காட்டி உதவித்தொகை மறுக்கப்பட்டது என்றாலும் கருணையின் அடிப்படையில் காங்கிரஸ் ஆட்சியில் செய்யாததை ஆட்சிக்கு வந்தவுடன் அண்ணா செய்தார்.

 

கலைஞருடைய ஆட்சிக்காலத்தில்.அப்போது 1972 ஆம் ஆண்டிலேயே 7200 க்கு மேற்பட்டவர்களுக்கு  உதவிப் பணம் வழங்கப்பட்டது என்பதை இந்த மாநாட்டில் பேசியவர்கள் குறிப்பிட்டுப் பாராட்டினார்கள். திமுகழக ஆட்சியில்தான் ஆகஸ்ட் 15 விடுதலை நாள் கோட்டை கொத்தளத்தில்.கொடி மரத்தின் கீழே அனைத்து கட்சியினரும் பங்கேற்கும் பொது விழா ஆனது.  காந்தியடிகளின் பிறந்தநாளும்  பண்டிதர் நேருவின் பிறந்த நாளும் பொது விழாவாக கொண்டாட உத்தரவிட்ட அரசு கலைஞர் அரசு. காமராஜர் பிறந்தநாளை கல்விநாள் என்று அறிவித்து எல்லோரும் கொண்டாடும்படி செய்தவர் கலைஞர். ஆனால் சில நன்றி கெட்ட  நயவஞ்சகக் கூட்டம் இன்னும் கலைஞரை ஏதோ காமராசருக்கு எதிரி போன்று சித்தரிக்க முயல்கிறது. காமராஜருக்கு முதல் முதலாக சிலை வைத்தது திமுகழக நிர்வாகத்தில் இருந்த சென்னை மாநகராட்சிதான். பிரதமராக இருந்த நேருவை அழைத்து சிலைத் திறப்பு விழாவை மிகச் சிறப்பாகச் செய்தது திமுக.

 

வீரபாண்டிய கட்டபொம்மன் வாரிசுகளுக்கு வழங்கப்பட்ட.உதவித்தொகை 1952 ஆம் ஆண்டு முதல் நிறுத்தப்பட்டு கிடந்தது. ஆனால் அது கலைஞர் முதலமைச்சர் ஆன  பிறகு அறிவிக்கப்பட்டு 18-2-1969 முதல் உதவித்தொகை கொடுக்கப்பட்டது. 

 

‘முன்பு நடந்த சுதந்திர போராட்டத்தில் நீ கலந்து கொண்டாயா?’  என்று கேட்பவர்களுக்கு கலைஞர் சுதந்திர போராட்ட.வீரர்களின் மாநாட்டில் அப்போது பதில் சொன்னார். 

 

சமுதாய ஆதிக்கக்காரர்களை, பொருளாதார ஆதிக்க சக்திகளை, வறுமையை கல்லாமையை  இல்லாமையை எதிர்த்துப்  போராடும் விடுதலைப் போராட்டத்தில் நாங்கள் பங்குப் பெற்று வருகிறோம்என்று பதில் சொல்லி மேலும்கூறுகிறார்எங்கள் பாரம்பரியம் கூட விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட.பாரம்பரியம்தான்.  சுதந்திர போராட்டத்தின் அங்கமான வைக்கம் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டவர் எங்கள் பெரியார். அந்த பெரியார் கூட ஆகஸ்ட் 15 ல் வெள்ளையன் வெளியேறியபோது அது துக்க நாள் என்று அறிவித்தார். அது தூக்க நாள் அல்ல இன்ப நாள் என்று எழுதி பெரியாருடன் கருத்து மாறுபாடு கொண்டு.வெளியே வந்த பேரறிஞர் அண்ணாவின் தம்பிகள் நாங்கள். ஆகவே எங்கள் பரம்பரையில் பழுது இல்லை பாவம் இல்லைஎன்று முத்தாய்ப்பாக அந்த மாநாட்டில் முழங்கியவர் கலைஞர். 

 

தியாகத்தை மறவாத திராவிடத் திருமகன் கலைஞர் என்பது வரலாறு காட்டும் உண்மை என்பதை உள்ளத்தில் நல்ல உள்ளங்கள் உணர்ந்தே இருக்கும். 

 


Thursday, December 1, 2022

இந்தி படித்தால் தமிழ் அழியுமா ?

 இந்தி படித்தால் தமிழ் அழியுமா என்ற கேள்வியுடன் தமிழ் ஒன்றும் வலிவு குன்றியதில்லை அதனை அழிக்க முடியாது. வட மொழி வந்ததே அதனால் என்ன கெட்டுப் போயிற்று என்றும் கூட கேட்கிறார்கள். வடமொழி சமசுகிருதத்தால் வாடாத தமிழ், பின்னர் உருது தெலுங்கு என்று மாறி ஆங்கிலம் வந்தும் தமிழ் அழியவில்லையே ! இந்தியால்  அழிந்துவிடும் அளவு  ஆற்றல் குன்றிய மொழியா தமிழ் என்று கேட்பவர்களும் உண்டு.

தொல்காப்பியம் தொடங்கி திருக்குறள் தொடர்ந்து ஐம்பெரும் காப்பியங்கள் சங்க இலக்கியங்கள் எல்லாம் அழிந்து விடவில்லையே என்பவர்களும் உண்டு. சமாசுகிருதத்தால் தமிழ் அழியவில்லை என்போர் எண்ணிப் பார்க்கட்டும். ஆட்சியாளர் செல்வாக்கால் வடமொழி வளர்ந்து வடமொழியாளர் ஏற்றம் பெற்றனரா  இல்லையா ?  தமிழில் வளர வேண்டிய மெய்யியல் கோட்பாடுகள்  தத்துவங்கள் ஆட்சியாளர் செல்வாக்கால்  வடமொழியில் இயற்றப்பட்டதா இல்லையா?  இதை தமிழ்நாட்டில் வாழ்ந்தவர்களே செய்தார்களா இல்லையா ?  தமிழர்களின் அறிவு வேற்றார் மொழியில் எழுதப்பட்டக் காரணத்தால் தமிழின் பெருமை குன்றியதா இல்லையா ?

இந்நாளில் இந்திக்கு வால் பிடிக்கும் இழிக்குணத்தார் இருப்பது போல் அன்றைக்கும் இருந்துள்ளனரே.  . குயக்கோடனார் என்னும் குணக்கேடன் கதை ஒன்று உண்டு. நக்கீரர் காலத்து புலவர்.  அவர் நக்கீரர் முன்பு “ஆரியம் நன்று தமிழ் தீது “ என்று உரைத்தாராம். நக்கீரர் கோபமடைந்து குயக்கோடனாரை மந்திரச் செய்யுளால் உயிரிழக்கச் செய்து பின்னர் மன்னித்து உயிர்ப்பித்தார் என்ற கதையின் கருத்து சிந்திக்கத் தக்கது .

தமிழில் எழுதி தமிழால் பிழைத்தவர்கள்  பிழைப்பவர்கள் கூட இந்தித் திணிப்பை ஆதரிக்கும் போக்கு இன்றைக்குப் புதிதல்ல. அவர்களை அறம்பாடி அழிக்கவல்ல நக்கீரர்கள் இல்லாமல் இருப்பது நம் நாட்டுக்கு கேடாக விளைந்தது.  அன்றைக்கு  நக்கீரர் தமிழைப் பழித்தவனை தண்டித்து,  பின் மன்னித்து விட்டது மாபெரும் தவறாகி விட்டதோ என எண்ணத் தோன்றுகிறதா இல்லையா ?

இறை வாழ்த்தும் வணக்கமும் வழிபாடும் அர்ச்சனையும் தமிழில் இல்லாமல் போனதே ஏன்? ஆட்சியாளர் சமாசுகிருதத்திற்கு சாமரம் வீசியதால்தானே ? தமிழ் - ஆரிய மொழித் துறைப் போராட்டம் புதிதல்ல. அது இந்தியின் மூலமாகத் தொடர்கிறது

முகமதியர் ஆட்சிக் காலத்தில் உருது மொழி வந்த போது ஆட்சி முறைகளும் அவற்றுக்கான சொற்களும் உருது மொழியில் வழங்கப்பட்டது. தமிழில் போதிய அளவு ஆட்சி சொற்கள் இல்லாமல் போனது. தமிழால் முடியாதா? தமிழால் முடியும் என்று தான் தமிழ் ஆட்சிச் சொற்களஞ்சியம் ஒன்றை தனியாக உருவாக்க வேண்டிய நிலை இப்போது வந்தது.

அதேபோன்று விஜயநகர தெலுங்கர்களின்  ஆட்சி காலத்தில் தமிழில் வளர்ந்திருக்க வேண்டிய இசை தெலுங்கில் வளர்ந்தது. அது மட்டும்அல்ல.  தமிழ் சங்கீதத்திற்கு ஏற்ற பாஷை அன்று என தமிழர்களே சொல்லும் நிலை உருவானதே எங்ஙனம்? தமிழிலே  பாடச் சொல்லி தமிழர்களையே வேண்டிக் கொள்வதற்கு தமிழிசை இயக்கமே உருவாகும் நிலை எப்படி வந்தது?

ஆங்கிலேயர் ஆட்சியில் ஆங்கிலம் என்ன செய்தது? அறிவியல், வரலாறு, ஆட்சித்துறை கல்வித்துறை அனைத்திலும் செழித்து வளர்ந்தது. தமிழுக்கு இத்துறைகளில் ஆளுமை  இல்லை என்று பேசும்படி  நேர்ந்தது. சிலர் கருதுகிறார்கள் தமிழில் கதையும் கவிதையும் ஏராளம் இருப்பதால் தமிழ் அழியாவில்லை என்று. தமிழ் ஆட்சி மொழியாக இல்லாததால் தமிழின் வளர்ச்சி தடையுற்றது. நல்ல வேளையாக ஆங்கிலம் உலக அறிவை நமக்கு உணர்த்தியது. கொஞ்சம் விழிப்படைந்தோம் ஆட்சி அரசு அதிகாரத்தின் மூலமாக தமிழர்கள் மீது ஆதிக்கம் செலுத்தப்பட்டு வந்ததை சிறிது உணர்ந்தோம்.

தமிழின் வளர்ச்சித் தடைபட காரணம் என்ன என்பதை சிந்திக்கும் வேளையில் ஆங்கிலேயரிடம் இருந்து அரசியல் விடுதலைப் பெற்றால் நமக்கான மொழி நாகரீக உலகில் நயம்பட வளரும் என்று எண்ணிய நேரத்தில் இந்திய தேசியம் 1937-38 ஆண்டில்  இந்தி மொழியை திணித்தது. இந்தித் திணிப்புக்கு எதிரான முதல் போராட்டம் வெடித்தது. அப்போது அடங்கி பதுங்கி பின்பு அடிக்கடி வெளிவரும்  அந்த நச்சு அரவத்தை ஒரேயடியாக அடித்து வீழ்த்த முடியவில்லை. இந்திய அரசு ஏதோ ஒரு வகையில் திட்டமிட்டு இந்தியைத் திணித்து வருகிறது. அவர்களின்  ஓரவஞ்சனை செயல்களால் அந்த பாம்பு ஒளிந்து கொண்டுவிடும்.  அப்போதைக்கு அப்போது தலைக்காட்டும் போதெல்லாம் தமிழர்களின் எதிர்ப்பு என்னும் தடியடிபட்டு ஓடிவிடும்.

இருபதாம் நூற்றாண்டு தொடக்கத்தில் தமிழின் பெருமையும் திராவிடத்தின் அருமையும் உணர தொடங்கியதால் தமிழ் மொழி மற்றும் இன உணர்ச்சியை ஓரளவு பெற்றோம். அதனால் இந்தித் திணிப்பை  எதிர்த்தோம் எதிர்க்கிறோம்  எதிர்த்துக் கொண்டேயிருப்போம்.

தமிழர் மட்டுமே எதிர்க்கிறார்கள் என்று ஒரு வாதம் உண்டு. அந்த நிலை மாறிவிட்டது. தமிழுக்கும் வடமொழிக்குமானப் போராட்டம் பலநூறு ஆண்டுகளாக நடைபெறுவது. அந்த போராட்டத்தில் தோற்றபோது விளைந்தவை மற்ற மொழிகள். அம்மொழிகள் சமசுகிருத மறுபதிப்பான இந்தியை ஏற்பதில் ஒருகாலத்தில் தயக்கம் இல்லை. ஆனால் இப்போது அவர்களும் மொழிவழி தேசியஇனமாகத் தங்களைக் கருதத் தொடங்கிவிட்டார்கள். சோறுமட்டும் பெரிதல்ல  தன்மானமும் தேவை என்பதைத் தெரிந்து கொண்டார்கள். இப்படியேவிட்டால் இந்தி தாய்மொழி அல்லாதவர்கள் இரண்டாம்தர  மக்களாகிவிடுவார்கள் என்பதை அறிந்து இந்திக்கு எதிராக கொடிபிடிக்க தயாராகி வருகிறார்கள்.

இதுதான் இன்றைய நிலை. இந்தி எவ்வளவுக்கு எவ்வளவு தீவிரமாக திணிக்கப்படுமோ அவ்வளவுக்கு அவ்வளவு இந்திய தேசியத்திற்கு எதிரான கருத்து வலு பெறும் என்பதை ஒன்றிய அரசு உணரவேண்டும்.


Saturday, November 26, 2022

யாகம் -வேள்வி – வேட்டல் என்பதின் உண்மை விளக்கம்

 

அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று

உயிர்பலியிட்டு நெய் போன்ற பொருள்களோடு அதனை நெருப்பில் இட்டு ஆயிரக் கணக்கில் யாகங்களைகளைச் செய்து அவற்றை அவிர்ப்பாகமாக உண்பதால்  கிடைக்கும் நன்மையைக் காட்டிலும் ஒரு உயிரையும் கொன்று உண்ணாமல் இருந்தாலே நல்லதாகும்.

யாகம் என்ற பெயரால் உயிர்பலி இட்டவர்களை கண்டிக்கும் தன்மையில் எழுதப்பட்ட குறள்       இது. தமிழர் மரபில் யாகமும் வேள்வியும் அக்காலத்தில் இல்லை என்பதால் அவ்வித புதுப் பழக்கம் அயலவர் பண்பாட்டுப் படையெடுப்பால் வந்ததென இக்குறள்  உணர்த்துவதாகக் கருதலாம்.

இதைக் குறிப்பிடும் போது சிலர் பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி என்ற  பாண்டிய மன்னன் பற்றியும் அவன் செய்த யாகங்கள் பற்றியும் குறிப்பிடுவர். ஆயிரம் வேள்விகளைச் செய்தவனாகக் கருதப்படும் இம்மன்னனைப் பற்றி சின்னமனூர் செப்பேடு "பாண்டியன் ஒருவன் கடல்வற்ற வேல் எறிந்தான். பிரளயத்தில் உலகம் அழிந்தது. எங்கும் நீர் சூழ்ந்தது. பூமியில் நிலப்பரப்பு இல்லை. சூரியன் கதிர்கள் பட்டு நிலபரப்பு உருவாகி மனிதவர்க்கம் உருவாக ஆரம்பித்தது. அது, ஒரு பாண்டிய மன்னரான சத்தியவிரத பாண்டியன் மற்றும் சப்தரிஷிகள் மூலிகைகள் என காக்கப்பட்டு பகவான் மச்ச அவதாரம் இன்று இருந்துவரும் இந்து மகா சமுத்திரத்தில் நிகழ்ந்தது. அந்த ஒரு பாண்டியனின் பெயர் சத்யவிரத பாண்டியன். இவனே,பிரளயம் முடிந்து பின்னாளில், 7- வது மநுவாக நியமிக்கப்பட்டார்.” என்றும் வேள்விக்குடிச் “செப்பேட்டில் கொல்யானை பலஓட்டிக் கூடாமன்னர் குழாந்தவிர்த்தபல்யாக முதுகுடுமிப் பெருவழுதி” என்றும் குறிப்பிட்டு உள்ளதாகச் சொல்வார் உண்டு.

மதுரைக் காஞ்சியைப் பாடிய மாங்குடி மருதனார் இவனது சிறப்பினைப் பற்றிப் பாடுகையில “பல்சாலை முதுகுடுமித் தொல்ஆணை நல்லாசிரியர் புணர்கூட்டுண்ட புகழ்சால் சிறப்பின்” —(759,61,62) என்றும் இன்னும் சிலப் புறநானூற்றுப் பாடல்களில் இப்பெயர்க் குறிப்புகள் உண்டு என்பதும் கவனிக்கத்தக்கதே.

அதைப் போலவே இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி என்னும் சோழ மன்னன் ராஜயசூய யாகம் செய்தான் என்றெல்லாம் பாடல் பதிவுகள் உள்ளன. இவற்றைக் கொண்டு சிலர் யாகம் தமிழரின் சடங்கியல் சார்ந்தது என்று நம்புகின்றனர். வீரன்,  தீரன், கேசரி, பராங்குசன், பராந்தகன் என்றெல்லாம் வீரத்தின் அடையாளங்களைப் பெயருடன் ஒட்டிக் கொண்டவர்கள் போரில் கிடைத்த வெற்றி அவ்வரசர்கள் செய்த யாகங்களால் என்று நம்பவைக்கப்பட்டுள்ளது.  

யாகத்தை வேள்வி என்றும் வேட்டல் என்றும் குறிக்கப்படுகிறது. வள்ளுவர் வேட்டல் என்ற சொல்லைக் குறிக்கின்றார். வேட்டல் என்றால் வேண்டியதைக் கோரி யாகம் செய்வது. யாகத்தீயில் அவி என்றும் ஆகுதி  என்றும் கூறப்படும் யாகப் பொருள்களை பொசுக்குவது ஆகும். அப்படிப் பொசுக்கும் பொருள்களில் முக்கியமானது பிராணிகள் ஆகும். குதிரை, மாடு, ஆடு போன்ற விலங்குகள் மட்டுமின்றி மனிதர்களும்  பலியிடப்பட்டு யாகநெருப்பிலிட்டு   நெய்யுடன் சேர்த்து வாட்டி வதக்கி உண்டதாகத் தெரிகிறது. இது ஆரியரின் பழக்கமாக இருந்திருக்கின்றது. அப்பழக்கம் அவர்கள் ஓரிடம் தங்கி வாழா நாடோடி வாழ்க்கையின் எச்சமாகவும் அடையாளமாகவும் பின்பற்றி வந்திருப்பதாகக் கொள்ளலாம். நாடோடி வாழ்க்கையில் உணவை சுட்டு சமைத்து தின்பதற்கு தீயை அணையாமல் ஓம்பும் கட்டாயம் இருந்ததால் அவர்கள் செல்லும் இடமெல்லாம் தீயை சுமந்து அங்கே சென்று பற்றவைத்து அதில் உணவைப் பொசுக்கி உண்டிருக்கக் கூடும். அது அவர்களுக்கு யாகம்.

இத்தகையப் பழக்கம் பழங்காலத்தில் எல்லா இனக்குழுக்களிடமும் உலகம் முழுதும் இருந்திருக்கிறது. அதனை ஆங்கிலத்தில் Campfire என்று சொல்வார்கள்.  இக்காலத்தில் இது  நெருப்புக்களியாட்டம் என்று பொருள்படுகிறது. இது திறந்தவெளியில் இரவில் நெருப்புமூட்டி இறைச்சியை பொசுக்கி உண்பதும் மதுக்குடியுடன் ஆட்டம்பாட்டம் போடுவதும் முதன்மையாக இருப்பதை அறிகிறோம். வீட்டினுள் உணவை சுட்டுத் தின்னும் புது முறைக்கு Barbeque என்கிறோம்.  அதற்கான துணைக்கருவிகள் பலவித தினுசுகளில் இப்போது காண்கிறோம். இவையெல்லாம் ஆதிமனித வரலாற்று செயல்பாடுகளின் வெளிப்பாடு.

ஸ்வரடிக்கரன்ஸ் (Swartkrans - fossil-bearing cave  - South African National Heritage Site) என்னும் இடத்தில் நெருப்பில் சுடப்பட்ட மான்களின் எலும்புகள் கிடைத்தன. அவைகள் 15 இலச்சம் ஆண்டுகளுக்கு முன்னர் நெருப்புக்களியாட்டத்தில்  மானிறைச்சியைச் சுட்டுத்தின்ற மிச்சஎலும்புகள் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். வரலாற்றில் முதல் நெருப்புக்களியாட்டம் அது என்றும்  குறிப்பிடுகின்றனர்.

தென் அமெரிக்காவில் ஓண்டர்வேற்க்  (Wonderwork) என்னும் குகைக்குள் 10 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் சுட்டெரித்த எலும்புத் துண்டுகள் கிடைத்திருக்கின்றன. இவைகள் அக்காலத்தில் ஆதிமனிதர்கள் கட்டுப்படுத்தப்பட்ட நெருப்பினைக் கையாளும் திறன் கொண்டவர்களாக இருந்ததற்கு சான்றுகள் என்று கூறப்படுகிறது.

இந்த முறைதான் நாகரீகமற்ற நாடோடிவாழ்க்கை நடத்திய இனக்குழுக்களிடம் இருந்தது. அத்தகைய வாழ்க்கை நிலையைக் கொண்டவர்கள் ஆரியர்கள். அவர்கள் இன்றைக்கு இந்தியா எனப்படும் நிலபாகத்தில் வந்தபோது இங்கு நாகரீகம் மிக்க இதுபோன்ற தகவல் பழக்கங்களை விட்டொழித்து, நகர வாழ்க்கை வாழ்ந்த மக்களுடன் வன்மையாகவும் மென்மையாகவும் பழகி கலந்தாலும் தங்களுடைய சில பழக்கங்களை விடாமல் தொடர்ந்தனர். அவற்றில் முக்கியமானது யாகம். யாகத்தில் உயிர்வதை செய்யப்படுகிறது. விலங்குகள் பலியிடப்படுகின்றன. அதனை விடாமல் இருப்பதன் காரணத்தை கூறும்போது  யாகம் லோக ஷேமதிற்கு செய்வது என்று சொல்லி யாகம் செய்வதை பெரிய நற்காரியமாகச் சித்தரிகக்கப்பட்டதை இன்றளவும் நம்பிக் கொண்டிருக்கிறோம் .

இதிகாசங்களிலும் புராணங்களிலும் யாகத்தை அழித்தவர்களை அரக்கர்கள் என்று சொல்லப்படுகிறார்கள். தங்களின் பயிர்த் தொழிலான வேளாண்மைக்கு உற்றவுதவி புரியும் விலங்குகளான மாடுகளையும் ஆடுகளையும் பெருமளவில் பலியிடுவதால் அவ்வுயிரினங்கள் அழிந்துவிடும் என்ற அச்சத்தில் அவைகளை  அழியாமல் காக்க யாகங்களை தடுத்தவர்கள் அரக்கர்கள் என்று பழிக்கப்பட்டனர்.

இராமாயணத்தில் தாடகை என்ற பெண்மணி இராமனால் கொல்லப்படுகிறாள். அதற்குக் காரணம் அவள் யாகத்தைத் தடுத்தாள் என்பதால். குதிரையைக் கொல்லும் அசுவமேத யாகம், மாடுகளைக் கொல்லும் பசுமேத யாகம், ஆடுகளைக் கொல்லும் அஜமேத யாகம், மனிதர்களைக் கொல்லும் நரமேத யாகம் என்றெல்லாம் யாகங்கள் இருந்திருப்பதை புராணங்கள் வாயிலாக அறியமுடிகிறது.

இன்றைக்கு உயிர்ப்பலி இல்லாமல்  பயிர்வகைகள், பழம், காய், பூக்கள் மற்றும் துணிமணிகளை நெருப்பிலிட்டு நெய் ஊற்றி தீவளர்ப்பதை யாகம் என்று காண்கிறோம். கருதுகிறோம். இந்தமுறையானது இக்காலத்தில் யாகத்திற்கு எதிராக எழுந்த தீவிர எதிர்ப்புகளினால் உருவானது என்றுதான் சொல்ல வேண்டும்.

கடந்த இருபதாம் நூற்றாண்டில் 1935 ஆம் ஆண்டிலும் கூட பலியிடப்பட்ட யாகங்கள் நடந்திருக்கின்றன. அப்போது அத்தகைய யாகங்கள் நடக்கும் இடங்களில் எல்லாம் மகாவீரரைப் பின்பற்றும் சமண மதத்தவர்களும், வள்ளலார் அன்பார்களான சீவகாருண்யம் பேசியவர்களும், புலால் மறுத்த சைவர்களும் சென்று எதிர்த்து போராடவும் அன்றைக்கு இருந்த ஆங்கில அரசினரிடம் இத்தகைய யாகங்களைத் தடை செய்யவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

தேவக்கோட்டையில் 1935 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைப்பெற்ற யாகத்திற்கு இத்தகைய எதிர்ப்பு கிளம்பியது என்பது நாம் அறிய வேண்டிய வரலாற்றுச் செய்தி. இதுபற்றியக் குறிப்பு பகுத்தறிவு 01-07-1935 தேதியிட்ட மாத  இதழில் ‘ராம-ராவண ஆராய்ச்சி’ என்னும் கட்டுரையில் உள்ளது. 

அது மட்டும் அல்லாமல் ‘ஆர்ய தர்மத்தினின்று தொகுக்கப்பெற்றது’ என்ற குறிப்புடன்  தேவக்கோட்டை அட்வகேட் எஸ். சுப்ரமண்ய அய்யர் B.A., B.L., என்பவர் “யாகமும் வைதிக மாதமும்” என்னும் நூலில்  மிகத்தெளிவாக உயிர் வதை செய்யப்படும் யாகங்களுக்கு ஆதரவாக எழுதி வாதம் செய்வதைப் பார்க்கும் போது நாம் ராமாயாணக் காலத்திலிருந்து எதிர்த்து வந்த யாகங்கள் ஒரு குறிப்பிட்ட சமுதாய மக்களால் எப்படியெல்லாம் சமாதானம் கூறி சரிகட்டப்பட்டு மாற்றங்களை அடைந்து இன்னும் அழியாமல் வேறுவேறு உருவங்களில் நிலைபெற்று வருகின்றது என்பதை உணர முடியும். 

‘ஆனந்தபோதினி’ என்ற இதழில் சித்தூர் பண்டிதர் திரு பூ. சீநிவாசன் என்பவர் ‘யாகமா ? மாமிச மோகமா ?’ என்ற கட்டுரைக்கு மறுப்பு சொல்வதற்காக    “அஹிம்ஸாவாதிகளின் துர்வாதத்திற்குப் பதில்” என்று இந்நூல் இயற்றப்பட்டது. அந்நூலில் ‘அவச்ய ஹிம்ஸை’ என்னும் தலைப்பில் கூறப்படுவதைப் பாருங்கள்:

“இப்படி அஹிம்ஸையை வற்புறுத்திய மதமானது அஹிம்ஸைக்கும் ஓர் வரையறை உண்டு என்பதைக் காட்டி யுத்தாதிகளாகிய அவச்ய ஹிம்ஸையை அது அனுமதித்திருப்பதையும் நாம் கவனிக்கத் தவறாக கூடாது. கீதையானது மிகக் குரூரமான ஹிம்ஸையாகிற யுத்தத்தைச் செய்யும்படி அர்ஜுனனைத் தூண்டுகிறது. கீதை யவதரித்த ஸந்தர்ப்பத்தை யோஜித்தால் இது நான்கு விளங்கும் . அர்ஜுனன் ஆசாரியர்களையும் பந்துக்களையும் மற்றவரையும் கொல்வது அதர்மம் என்று பயந்து மனங்கலங்கி  யுத்தம் செய்ய மறுக்கவே பகவான் அவனது கலக்கத்தைத் தெளிய வைக்க விரும்பி யுத்தம் ஸ்வதர்மமென்றும், யுத்ததில் கொல்லுவது பாபமாகாதென்றும் உபதேசித்து அவனை யுத்தம் செய்யும்படி தூண்டுவதற்குத் தானே கீதையைப் பிறப்பித்தார். இதிலிருந்து அஹிம்ஸா தர்மத்தைப் போல் அவச்ய ஹிம்ஸையும் தர்மமென்று காட்டுவதறக்காகவே கீதை வெளியாகியதென்பது மறுக்க முடியாதது. ஆகவே கீதையானது அஹிம்ஸையும் ஹிம்ஸையும் போதிப்பது முரண்பட்டதென்று நினைக்கலாகாது.

நமது வைதிக மதத்தில் அஹிம்ஸா தர்மம் உயரந்ததென்றாலும் அஹிம்ஸை விதியானது யாகம், யுத்தம்  ஆகிய இரண்டு விலக்கு விதியால் பாதிக்கப்பட்டு விடுகிறதாக நமது மதம் ஒப்புக் கொண்டுவிட்டது. யாகம் யுத்தம்  இரண்டிலும் ஹிம்ஸை கட்டாயமாக விதிக்கப்பட்டிருப்பதாலும் அது தர்மமென்று வேதாதி பிராமணங்கள் கண்டிப்பாகச் சொல்லிவிட்டதாலும் அஹிம்ஸா விதிக்கு விலக்கு விதியுண்டென்பதை நாம் அறிய வேணும்”

இப்படி அகிம்சைக்கு விலக்கு உண்டு என்ற வாதத்தை, யுத்தத்தில்  கொல்வதையும் குற்றவாளிகளுக்கு மரணத் தண்டனை விதிப்பதையும் குறிப்பிட்டு, இவையெல்லாம் இம்சையில் சேராதா என்று கேட்டு, சேராது என்ற பதிலையும் தந்து; அப்படியிருக்க யாகங்களை அதில் இயற்றப்படும் இம்சைகளை வைத்து மாத்திரம் எதிர்ப்பது நியாயமா என்று இந்த நூலில் கேட்கப்படுகிறது.  ‘அகிம்சாவாதிகள் எவ்வித வரையில்லாமல் விலக்கு விதியில்லாமல் எவ்விசயத்திலும் ஒரே மாதிரியாக அகிம்சைக் கொள்கையை அனுஷ்ட்டிக்கிறார்களா’ என்று கேட்கிறது இந்நூல்.

அதுமட்டுமல்ல ‘பூவுலகில் சகல செளகிரியங்களுடன் வாழ உரிமை பெற்றவனாகவும் மற்ற சராசர பிராணிகள் யாவற்றும் மனிதனுடைய சுகாதிகளை விருத்தி செய்ய ஏற்பட்டவைகளாகவுமே நினைக்கப்படுகிறது. பசு, பட்சி, செடி, கொடி, எல்லாம் மனிதனுக்காகவே ஏற்பட்டனவென்று பாத்தியம் கொண்டாடப்படுகிறது. ஆகவே மனிதனுடைய சுகத்திற்கு இடையூறு விளைவிக்கும் பிராணிகள் இருந்தால் அவைகளைக் கொன்று தீர்க்க வேண்டும் என்கிற கொள்கையானது நீரோஷேபமாக எங்கும் பரவி இருக்கிறது. இதை மனிதனுடைய தலையில் இருக்கும் பேன் பூச்சி முதல் காடுகளில் இருக்கும் சிம்மம் முதலிய துஷ்ட ஜந்துக்கள் வரை உதாரணம் கொண்டு சிந்தித்துப் பார்க்கலாம்’ என்ற வாதங்களையும் முன்வைத்து வைதிகமதத் தத்வம் வகுத்தவழி என்றும் இந்நூல் விளம்புகிறது.  

மேலும் இந்நூல் கூறுவதைக் காண்க:

“இம்மதத்தில் யாக ஹிம்ஸை யுத்த ஹிம்ஸை ஆகிய இரண்டும் மிகப் புனிதமானதென்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிராமஹணாதிகளுக்குக் கட்டாயமாக விதிக்கப்பட்ட யாகங்களில் பிராணி ஹிம்ஸை செய்யும்படி சகல வேதங்களும் விதிப்பதுடன் அந்த ஹிம்ஸையானது அந்த பிராணிக்கு உயர்ந்த கதியைக் கொடுப்பதால் இதை ஹிம்ஸை என்று நினைக்கவோ சொல்லவோ கூடாதென்று பிரதியஷ வேதங்களில் ஸ்பஷ்டமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த யாக நியாயத்தைக் கொண்டு, யுத்த ஹிம்ஸையும் தர்மமாக நிர்ணயிக்கப்பட்டது. சாஸ்திரங்களில் ஒரு பிராணியையும் ஹிம்ஸிக்கக் கூடாது என்று பொதுவாக ஒரு விதியிருந்தாலும் இது, யாகயுத்த  ஹிம்ஸைகளைத் தவிற மற்ற ஹிம்சைகளையே தடுக்குமென்று விலக்கு விதியும் வேதாதி சாஸ்திரங்களிலேயே விதிக்கப்பட்டுள்ளது. இப்படி ஸித்தாந்தமிருப்பதால் பகவான் கீதையில் யுத்த ஹிம்ஸையைத் தர்மமாக உபதேசித்தார்”.

இது மட்டுமில்லாமல் கீதையின் கருத்து என்று  மேலும் இந்நூலில் “யுத்தத்தில் கொல்லுவது தர்மமென்றும் அது மோஷாதி ஸாதனமென்றும் ஆகவே அதைச் செய்யாமல் விட்டால்தான் பாபமென்றும் சொல்லி ஷத்திரியனுக்கு தர்மயுத்தத்தைத் தவிர வேறு சிரேயஸ்கரமான தர்மமே கிடையாது” என்று கூறப்படுகிறது. அதாவது யாகத்திலும் யுத்ததிலும் கொல்லப்பட்டால் சொர்கம் கிடைக்கும் என்று நம்ப வைக்கப்படுகிறது.

இதற்கு ஆதரவாக ஸ்ரீராமானுஜ பாஷியத்திலிருந்தும் பிரம்ஹ சூத்திரத்திலிருந்தும் ஸ்ரீசங்கரபகவத்பாத பாஷியத்திலிருந்தும் யாகஹிம்சையில் பாபம் இல்லை என்பதற்கு ஆதாரங்களை அடுக்குகிறது அந்நூல். யாகத்தில் கொல்லப்படுவது ஹிம்ஸையே அல்ல அது ரஷணை என்றும் வாதிடப்படுகிறது.

மேலும் ‘பசுக்கள் பிரம்ஹாவினால் யாகத்திற்காகவே ஸிரிஷ்டிக்கப்பட்டன. யாகமானது இவ்வுலகிற்கு ஷேமத்தின் பொறுத்தே யாகும். ஆதலால் யாகத்தில் வதம் செய்வது வதமேயல்ல (5-33)”. என்றும் “வேத தத்துவத்தை அறிந்த த்விஜன் மேற்கண்ட காரியங்களில் பசு ஹிம்ஸையை செய்து தனையும் மேற்படி பசுக்களையும் உத்தம கதி அடையச் செய்கிறான். (5-41) என்றும் மனுஸ்மிருதியில் சொல்லப்பத்திருப்பதையும் இந்நூல் பதிவு செய்கிறது. த்விஜன் என்றால் இருபிறப்பாளராகிய பிராமணர்கள் என்று பொருள்.   

இப்படி யுத்தத்தில் கொல்லுவதும் யாகத்தில் கொல்லுவதும் ஒன்று எனக் கூறும் வைதிகமதம் எப்படிப்பட்டது என்பதை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும். கீதை சத்திரிய தர்மம் என்று சொல்லி அதனை சிலாகித்து கடைப் பிடிக்கச் சொல்வது,  வர்ணாசரம தர்மத்தை உயர்த்தி அதனை நடைமுறைப் படுத்தும் நோக்கத்தில்தான் என்பதை இங்கு நாம் புரிந்து கொள்ள வேண்டும். அப்படியென்றால் சூத்திர தர்மம் ஒன்றிருக்குமே!. அது என்ன என்றெல்லாம் நாம் நோக்கினால் அதிலுள்ள சூட்சமமும் சூழ்ச்சியும் புரியும். இந்த வைதிக மதம்  பெரும்பான்மை மக்களை சூத்திரர் என்ற அடைப்புக்குள் புகுத்தி அடிமைகளாக ஆக்கிவைத்து அதனையும் அவர்களே பெருமை பேசும்படியாக வைத்திருப்பதை அறியலாம். அதன் வீரியத்தையும் விபரீதத்தையும் உணர்ந்தவர்கள் காலந்தோறும் எதிர்த்து  வந்ததைக் காணமுடிகிறது.

இதைத்தான் வள்ளுவர் முன் சொன்ன குறளில் எதிர்த்திருக்கிறார். தமிழில் வேட்டல் என்ற சொல் யாகத்தையும் யக்ஞத்தையும் குறிக்க தமிழில் கூறப்படுகிறது. ஒருக்காரியம் நிறைவேற வேண்டிக் கொள்வதற்காக செய்யப்படும் செய்கை என்றாலும் அதில் உயிரினங்கள் வேட்டையாடுவதைப் போன்று வெட்டப்பட்டு இறப்பதையும் குறிப்பதாக நாம் கருதலாம். அகராதியில் வேட்டல் என்ற சொல்  விரும்புகை என்னும் பொருளுடைய வேள் என்னும் சொல்லிலிருந்து பிறந்ததாக சுட்டப்படுகிறது.

அதே போன்று வேள்வி என்னும் தமிழ்ச் சொல்லும் வேளாண்மை என்னும் சொல்லிண் அடிப்படையில் உருவாயிற்று எனலாம். வேளாண்மை என்பது உழவுத் தொழிலைக் குறிப்பது என்று அறிவோம். அது மட்டும் அல்லாமல் மற்றவர்களை விருப்பதுடன் பேணுவதும் அவர்களுக்கு உதவுவதும்  வேளாண்மை என்பதை  வள்ளுவர்     

இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு.
 (குறள் 81) என்ற குறளில் தெளிவுறுத்துகிறார்.

அத்தகைய உயர்ந்த பொருளில் வேள்வி எனப்படும் யாகமும் குறிக்கப்பட வேண்டும் என்ற கபட எண்ணத்தில் உயிர்க் கொலைபுரியும் யாகத்தை வேள்வி என்னும் தமிழ் சொல்லால் குறிப்பிட்டு மயக்கமடையச் செய்துள்ளனர் என்று கருதுகிறேன். உழவுத்தொழிலில் நிலத்தைக் கீறி உழவு செய்யும் போதும் பயிரிட்டு பாதுகாக்கும் போதும் சில புழு பூச்சிகளைக் கொல்ல நேர்வதைக் காட்டி அது போன்றுதான் உலக நன்மைக்கு யாகம் செய்யப்படுகிறது அதில் ஆடுமாடு குதிரை இவைகள் மட்டுமல்லாமல் மனிதர்களைக் கூட கொல்லலாம் என்று சமாதானம் கூறி யாகத்திற்கும் வேள்வி எனப் பெயரிட்டு ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்று கருத இடம் உண்டு.

ஆதலின் எவ்வகையான தீ வளர்த்து யாகம் செய்யும் முறையும்  தமிழர் சடங்கில் இருப்பது சரியல்ல என்ற கருத்தை வலியுறுத்தி இக்கட்டுரை இத்துடன் நிறைகிறது.