Thursday, December 1, 2022

இந்தி படித்தால் தமிழ் அழியுமா ?

 இந்தி படித்தால் தமிழ் அழியுமா என்ற கேள்வியுடன் தமிழ் ஒன்றும் வலிவு குன்றியதில்லை அதனை அழிக்க முடியாது. வட மொழி வந்ததே அதனால் என்ன கெட்டுப் போயிற்று என்றும் கூட கேட்கிறார்கள். வடமொழி சமசுகிருதத்தால் வாடாத தமிழ், பின்னர் உருது தெலுங்கு என்று மாறி ஆங்கிலம் வந்தும் தமிழ் அழியவில்லையே ! இந்தியால்  அழிந்துவிடும் அளவு  ஆற்றல் குன்றிய மொழியா தமிழ் என்று கேட்பவர்களும் உண்டு.

தொல்காப்பியம் தொடங்கி திருக்குறள் தொடர்ந்து ஐம்பெரும் காப்பியங்கள் சங்க இலக்கியங்கள் எல்லாம் அழிந்து விடவில்லையே என்பவர்களும் உண்டு. சமாசுகிருதத்தால் தமிழ் அழியவில்லை என்போர் எண்ணிப் பார்க்கட்டும். ஆட்சியாளர் செல்வாக்கால் வடமொழி வளர்ந்து வடமொழியாளர் ஏற்றம் பெற்றனரா  இல்லையா ?  தமிழில் வளர வேண்டிய மெய்யியல் கோட்பாடுகள்  தத்துவங்கள் ஆட்சியாளர் செல்வாக்கால்  வடமொழியில் இயற்றப்பட்டதா இல்லையா?  இதை தமிழ்நாட்டில் வாழ்ந்தவர்களே செய்தார்களா இல்லையா ?  தமிழர்களின் அறிவு வேற்றார் மொழியில் எழுதப்பட்டக் காரணத்தால் தமிழின் பெருமை குன்றியதா இல்லையா ?

இந்நாளில் இந்திக்கு வால் பிடிக்கும் இழிக்குணத்தார் இருப்பது போல் அன்றைக்கும் இருந்துள்ளனரே.  . குயக்கோடனார் என்னும் குணக்கேடன் கதை ஒன்று உண்டு. நக்கீரர் காலத்து புலவர்.  அவர் நக்கீரர் முன்பு “ஆரியம் நன்று தமிழ் தீது “ என்று உரைத்தாராம். நக்கீரர் கோபமடைந்து குயக்கோடனாரை மந்திரச் செய்யுளால் உயிரிழக்கச் செய்து பின்னர் மன்னித்து உயிர்ப்பித்தார் என்ற கதையின் கருத்து சிந்திக்கத் தக்கது .

தமிழில் எழுதி தமிழால் பிழைத்தவர்கள்  பிழைப்பவர்கள் கூட இந்தித் திணிப்பை ஆதரிக்கும் போக்கு இன்றைக்குப் புதிதல்ல. அவர்களை அறம்பாடி அழிக்கவல்ல நக்கீரர்கள் இல்லாமல் இருப்பது நம் நாட்டுக்கு கேடாக விளைந்தது.  அன்றைக்கு  நக்கீரர் தமிழைப் பழித்தவனை தண்டித்து,  பின் மன்னித்து விட்டது மாபெரும் தவறாகி விட்டதோ என எண்ணத் தோன்றுகிறதா இல்லையா ?

இறை வாழ்த்தும் வணக்கமும் வழிபாடும் அர்ச்சனையும் தமிழில் இல்லாமல் போனதே ஏன்? ஆட்சியாளர் சமாசுகிருதத்திற்கு சாமரம் வீசியதால்தானே ? தமிழ் - ஆரிய மொழித் துறைப் போராட்டம் புதிதல்ல. அது இந்தியின் மூலமாகத் தொடர்கிறது

முகமதியர் ஆட்சிக் காலத்தில் உருது மொழி வந்த போது ஆட்சி முறைகளும் அவற்றுக்கான சொற்களும் உருது மொழியில் வழங்கப்பட்டது. தமிழில் போதிய அளவு ஆட்சி சொற்கள் இல்லாமல் போனது. தமிழால் முடியாதா? தமிழால் முடியும் என்று தான் தமிழ் ஆட்சிச் சொற்களஞ்சியம் ஒன்றை தனியாக உருவாக்க வேண்டிய நிலை இப்போது வந்தது.

அதேபோன்று விஜயநகர தெலுங்கர்களின்  ஆட்சி காலத்தில் தமிழில் வளர்ந்திருக்க வேண்டிய இசை தெலுங்கில் வளர்ந்தது. அது மட்டும்அல்ல.  தமிழ் சங்கீதத்திற்கு ஏற்ற பாஷை அன்று என தமிழர்களே சொல்லும் நிலை உருவானதே எங்ஙனம்? தமிழிலே  பாடச் சொல்லி தமிழர்களையே வேண்டிக் கொள்வதற்கு தமிழிசை இயக்கமே உருவாகும் நிலை எப்படி வந்தது?

ஆங்கிலேயர் ஆட்சியில் ஆங்கிலம் என்ன செய்தது? அறிவியல், வரலாறு, ஆட்சித்துறை கல்வித்துறை அனைத்திலும் செழித்து வளர்ந்தது. தமிழுக்கு இத்துறைகளில் ஆளுமை  இல்லை என்று பேசும்படி  நேர்ந்தது. சிலர் கருதுகிறார்கள் தமிழில் கதையும் கவிதையும் ஏராளம் இருப்பதால் தமிழ் அழியாவில்லை என்று. தமிழ் ஆட்சி மொழியாக இல்லாததால் தமிழின் வளர்ச்சி தடையுற்றது. நல்ல வேளையாக ஆங்கிலம் உலக அறிவை நமக்கு உணர்த்தியது. கொஞ்சம் விழிப்படைந்தோம் ஆட்சி அரசு அதிகாரத்தின் மூலமாக தமிழர்கள் மீது ஆதிக்கம் செலுத்தப்பட்டு வந்ததை சிறிது உணர்ந்தோம்.

தமிழின் வளர்ச்சித் தடைபட காரணம் என்ன என்பதை சிந்திக்கும் வேளையில் ஆங்கிலேயரிடம் இருந்து அரசியல் விடுதலைப் பெற்றால் நமக்கான மொழி நாகரீக உலகில் நயம்பட வளரும் என்று எண்ணிய நேரத்தில் இந்திய தேசியம் 1937-38 ஆண்டில்  இந்தி மொழியை திணித்தது. இந்தித் திணிப்புக்கு எதிரான முதல் போராட்டம் வெடித்தது. அப்போது அடங்கி பதுங்கி பின்பு அடிக்கடி வெளிவரும்  அந்த நச்சு அரவத்தை ஒரேயடியாக அடித்து வீழ்த்த முடியவில்லை. இந்திய அரசு ஏதோ ஒரு வகையில் திட்டமிட்டு இந்தியைத் திணித்து வருகிறது. அவர்களின்  ஓரவஞ்சனை செயல்களால் அந்த பாம்பு ஒளிந்து கொண்டுவிடும்.  அப்போதைக்கு அப்போது தலைக்காட்டும் போதெல்லாம் தமிழர்களின் எதிர்ப்பு என்னும் தடியடிபட்டு ஓடிவிடும்.

இருபதாம் நூற்றாண்டு தொடக்கத்தில் தமிழின் பெருமையும் திராவிடத்தின் அருமையும் உணர தொடங்கியதால் தமிழ் மொழி மற்றும் இன உணர்ச்சியை ஓரளவு பெற்றோம். அதனால் இந்தித் திணிப்பை  எதிர்த்தோம் எதிர்க்கிறோம்  எதிர்த்துக் கொண்டேயிருப்போம்.

தமிழர் மட்டுமே எதிர்க்கிறார்கள் என்று ஒரு வாதம் உண்டு. அந்த நிலை மாறிவிட்டது. தமிழுக்கும் வடமொழிக்குமானப் போராட்டம் பலநூறு ஆண்டுகளாக நடைபெறுவது. அந்த போராட்டத்தில் தோற்றபோது விளைந்தவை மற்ற மொழிகள். அம்மொழிகள் சமசுகிருத மறுபதிப்பான இந்தியை ஏற்பதில் ஒருகாலத்தில் தயக்கம் இல்லை. ஆனால் இப்போது அவர்களும் மொழிவழி தேசியஇனமாகத் தங்களைக் கருதத் தொடங்கிவிட்டார்கள். சோறுமட்டும் பெரிதல்ல  தன்மானமும் தேவை என்பதைத் தெரிந்து கொண்டார்கள். இப்படியேவிட்டால் இந்தி தாய்மொழி அல்லாதவர்கள் இரண்டாம்தர  மக்களாகிவிடுவார்கள் என்பதை அறிந்து இந்திக்கு எதிராக கொடிபிடிக்க தயாராகி வருகிறார்கள்.

இதுதான் இன்றைய நிலை. இந்தி எவ்வளவுக்கு எவ்வளவு தீவிரமாக திணிக்கப்படுமோ அவ்வளவுக்கு அவ்வளவு இந்திய தேசியத்திற்கு எதிரான கருத்து வலு பெறும் என்பதை ஒன்றிய அரசு உணரவேண்டும்.


No comments: