Sunday, April 22, 2018

காவரி நீர் சிக்கல் - வரலாற்றுக் குறிப்புகள்- தெரிந்ததும் தெரியாததும்




மன்னர் காலத்தில் காவிரி

காவிரி- காவேரி – பொன்னி என்று பலவாறு அழைக்கப்படும் காவிரி நதி தமிழகத்தின் உயிர்நாடியாக விளங்கி தமிழ்மண்ணை செழிப்புடன் வளர்த்த பெருமைக்கு உரியது. பழம்பெரும் தமிழ் இலக்கியங்களில் சங்க கால பாடல்களில் புராண கதைகளில் எல்லாம் காவிரி பெண்ணாக தாயாக  தெய்வமாக போற்றி புகழ்ந்து வணங்கப் படுகிறது. சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் புகார் காண்ட மங்களவாழ்த்துப் பாடலில்
“ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்
காவிரிநாடன் திரிகிரி போல் பொற்கோட்டு
மேருவலம் திரிதலால் “ என்கிறார்.

அப்பாடலில் சோழனை காவிரி நாடன் என்றே குறிப்பிடுகிறார். சோழர்களுக்கும் காவிரிக்குமான தொடர்பு உறவு கரிகாலன் காலம்தொட்டு அதாவது முதலாம் நூற்றாண்டு முதலே சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தொடர்கிறது. காவிரியின் குறுக்கே கல்லணை கட்டி வெள்ளத் தடுப்புக்கும் வேளாண்மைக்கும் அப்போதே வசதி செய்தவன் கரிகாலன்.

ஆங்கிலேயர் காலத்தில் காவிரி

காவிரி நீர்பாசன வேளாண்மை மன்னர் காலத்தில் இருந்து தொடர்ந்தாலும் ஆங்கிலேயர் காலத்தில்தான் தீவிரமான திட்டங்கள் வகுத்து செயல்படுத்தப்பட்டது என்பது மறுக்க முடியாத உண்மை.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் கடும் வறட்சியும் பஞ்சமும் அடிக்கடி நேர்ந்தன. உணவுப் பற்றாக் குறையை தீர்க்க பர்மாவில் இருந்து அரிசி இறக்குமதி செய்யப்பட்டது. கிழக்குக் கடற்கரை ஓரத்தில் தூத்துக்குடியில் இருந்து வங்கத்தின் டாக்கா  வரை பல்வேறு துறைமுகங்களில் அரிசி மூட்டைகள் வந்து இறங்கிய வண்ணம் இருந்ததாக அக்கால அரசு இதழ்கள் மூலம் அறிய முடிகிறது.

1860-61, 1865,1866 ஆண்டுகளில் பஞ்சம் தலை  விரித்தாடி இருக்கிறது. மீண்டும் 1877-78 ல் ஏற்பட்ட கடுமையான பஞ்சத்தை சமாளிக்க பெரும்பாடுபட்டிருக்கிறார்கள்.. அப்போதுதான் முதல் Famine Commission அமைக்கப்பட்டது. அந்த கமிஷனின் பரிந்துரையில் விவசாயத்திற்கு நீர்பாசன திட்டங்கள் உருவாக்க 1892 காவிரி நீர் பங்கீட்டு ஒப்பந்தம்முதல் முதல் உருவானது.

அதன் பிறகு 1901 ல் உருவாக்கப்பட்ட Irrigation Commission தான் காவிரி மேட்டூர் அணை திட்டத்தை வடிவமைத்தது. காவிரி நீர்பாசனத்திட்டம் இதற்கு முன்பே ஆங்கிலேயர் காலத்தில் தலைமைப் பொறியாளராக இருந்த சர் ஆர்தர் காட்டன் என்பவர் ஆந்திராவில் தவலேசுவரம் அணைக்கட்டை கட்டி ஆந்திர மக்களின் அபிமானத்தை இன்றளவும் பெறுபவர். இப்போதும் காட்டன்துரை கிழக்கு / மேற்கு கோதாவரி மாவட்டங்களில் தெய்வமாக போற்றப்படுபவர்.

அவர்தான் தமிழ்நாட்டிலும் கரிகாலன் கல்லணையை கண்டு வியந்தவர். கல்லணையின் கட்டமைப்பை அது கட்டப்பட்ட விதம் எல்லாம் இன்றைக்கு படிக்கிறோமே அதை கண்டறிந்து சொன்னவர். அவருடைய பரிந்துரையில்தான்  கீழணை மற்றும் மேலணை இரண்டும் 1836  தொடங்கி  1840 க்குள்ளாக கட்டப்பட்டது. அதே போல் 120 கி.மீ நீளம் கொண்ட கட்டளைக் கால்வாய் 1857 ல் தொடங்கப்பட்டு 1859 ல் முடிக்கப்பட்டது. கல்லணையை பலப்படுத்தி அதில் மதகு அமைத்து கீழணை யும் முக்கொம்புவில் மதகு அமைத்து மேலணையும் கட்டப்பட்டதால் காவிரி படுகையில் அப்போதே பாசன வசதி பெற்ற நிலப்பரப்பு பெருகியது.

இந்த நிலையில்தான் மேட்டூர் அணைக்கட்டு திட்டம் தேவை என உணர்ந்து நீர்வரத்துக்கு குந்தகம் விளையாமல் இருக்க மைசூருடன் 1924 ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்டது.

நதிநீர் பிரச்சனை துவக்கம்:
கர்நாடகத்திற்கும் தமிழகத்திற்குமான காவிரி நதிநீர் சிக்கல் மைசூர் மகாராஜவிற்கும் மதாராஸ் மாகாண ஆங்கில அரசுக்கும் இடையில் ஏற்படும் முன்னரே பனிரெண்டாம் நூற்றாண்டிலேயே  சோழ நாட்டை ஆண்ட இரண்டாம் குலோத்துங்கன் மகன் இரண்டாம் இராசராசன்ஆட்சிக் காலத்தில் (1143-1163)மைசூர் பகுதியை ஆண்ட போசள மன்னனுடன் ஏற்பட்டது. போசள மன்னன் முதலாம் நரசிம்மன் காவிரியின் குறுக்கே செயற்கை மலைகள் உருவாக்கி காவிரியின் போக்கைத் தடுத்தான். தமிழகத்திற்கு நீர்வரத்து குறைந்ததை கண்டு சோழமன்னன் இரண்டாம் ராஜராஜன் படை எடுத்துச் சென்று போசள மன்னனை தோற்கடித்து மலைகளை அழித்து காவிரியை மீட்டான் என்பது வரலாறு.

அதற்கடுத்து 17 ஆம் நூற்றாண்டில் தஞ்சையை மராட்டிய மன்னன் சகசி என்பவர் ஆண்ட போது மைசூர் பகுதியை சிக்கதேவ மகாராயர் என்பவர் ஆண்டுவந்தார்,. அவர் அங்கே காவிரியின் குறுக்கே அணைகட்டி நீரை தடுத்த போது தஞ்சை மன்னன் அப்போது மதுரையை ஆண்ட ராணி மங்கம்மாளின் படை உதவியுடன் போர்தொடுக்க புறப்பட்டான். அதற்குள் பெருமழை காரணமாக மைசூர் அருகில் கட்டிய அணை உடைந்து அழிந்து விட்டது. காவிரியில் தண்ணீர் வரதுவங்கியது.
இப்படியாக காவிரி நீருக்கான போரும் போராட்டமும் சுமார் 9௦௦ ஆண்டுகளாக தொடர்வதை காணமுடிகிறது.

1892 ஆம் ஆண்டு ஒப்பந்தம்
மைசூர் பகுதியை திப்பு சுல்தான் ஆண்ட போது ஆங்கிலேயருக்கும் திப்புவுக்கும் போர் மூண்டது. போரில் மைசூர் ராஜ்ஜியத்தை திப்புவுக்கு முன் ஆண்ட உடையார் ராஜா ஆங்கிலேயருடன் சேர்ந்து திப்புவை தோற்கடிக்க உதவியதால் மைசூர் மீண்டும் உடையார் ஆளுகைக்கு உட்படுத்தினர் ஆங்கிலேயர்கள். பல ஆண்டுகள் போரில் இடுபட்டு சின்னாபின்னம் ஆகிப்போன நாட்டை சீர்படுத்தும் விதமாக மைசூர் மகாராஜா காவிரிக் கரை ஓரம் பல நீர் நிலைகள் குளங்கள் காலவாய்கள் அமைத்து விவசாயத்தை மேம்படுத்த திட்டமிட்டார். செயல்படுத்தினர்.  அதனால் காவிரியில் தமிழகத்திற்கு வரும் நீரின் அளவு குறைந்து விட்டதை அறிந்ததும்  அப்போது மதராஸ் மாகாணம் சார்பாக ஆட்சியில் இருந்த ஆங்கிலேயர்கள் மைசூரின் நீர் திட்டங்களுக்கு ஆட்சேபனை தெரிவித்தனர். ஆங்கில அரசும் மைசூர் மன்னரும் காவிரி நீர் பங்கீடு சம்பந்தமாக முதன் முதல் 1892 ல் ஒரு ஒப்பந்தம் வகுத்தார்கள். அதன் பிரகாரம் தமிழகத்தில் அப்போது அனுபவ பாத்தியதையாக அனுபவித்து வரும் ஆயக்கட்டுகளுக்கு பாதகம் ஏற்படாமல் மைசூர் அவர்கள் எல்லையில் எந்த திட்டத்தையும் செயல் படுத்தலாம். ஆனால் அதற்கு முன் மதராஸ் மாகாணத்தின் ஒப்புதல் பெறவேண்டும். தங்களுடைய அனுபவ  பாத்தியதை ஆயக்கட்டுகளுக்கு பாதகம் உண்டாகாது எனத் தெரிந்தால் அந்த  திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். இதுதான் 1892 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின் மையக் கருத்து. சரத்து. முக்கிய புள்ளி.

1924 ஆம் ஆண்டு ஒப்பந்தம்:
இருபதாம் நூற்றாண்டு தொடக்கத்தில் மைசூர் அரசு கிருஷ்ணராஜ சாகர் அணையை கண்ணம்பாடி என்னும் இடத்தில் கட்டுவற்கு திட்டம் தீட்டியது. 1892 ஆம் ஆண்டு ஒப்பந்தப்படி அப்போதைய ஆங்கில அரசாட்சிக்கு உட்பட்ட சென்னை மாகாணத்திடம் ஒப்புதலுக்கு அணுகியது. ஆனால் சென்னை மாகாண அரசு அந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் அந்த திட்டத்தினால் தங்கள் பகுதி ஆயக்கட்டு எந்த அளவு பாதிக்கும் என்பதை அறிய நடுவர் மன்றம் ஒன்று அமைத்து ஆய்ந்து இந்த விவகாரத்தில் மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறியது. நடுவர் மன்ற தீர்ப்பாளர் ஒரு ஆங்கில அதிகாரி. அவர் தந்த தீர்ப்பு சென்னை மாகாணத்திற்கு திருப்தி அளிக்காததால் அது அவர்களை பாதிக்கிறது என்று சொல்லி அப்போதைய இந்திய அரசிடம் அவர்களும் ஆங்கிலேயர்கள்தான் முறையிட்டார்கள். இந்திய அரசும் நடுவர் மன்ற தீர்ப்பு சரி என்று ஏற்றுக் கொண்டது. ஆனால் சென்னை மாகான அரசு அதை ஒத்துக் கொள்ளாமல் லண்டனில் இருக்கும் இந்திய அரசுத் துறை அமைச்சரிடம் முறையிட்டு நீதி கேட்டது. அவரும் இந்தியரல்ல. அந்த இந்தியாவின் மந்திரி மூன்று திட்டங்களை அறிவித்தார். ஒன்று இன்னொரு நடுவர் மன்றம் அமைப்பது. இரண்டு லண்டனில் இருக்கும் இந்திய மந்திரி அதாவது அவரே எடுக்கும் முடிவுக்குக் கட்டுப் படுவது மூன்றாவதாக சம்பந்தப்பட்ட இரண்டு கட்சிக்காரரும் அதாவது மைசூர் மகாராஜாவும் மதராஸ் மாகாண  அரசும் கூடி கலந்து பேச்சு வார்த்தை நடத்தி  அவர்களாகவே பிரச்சனையைத் தீர்த்துக் கொள்வது.
இதில் மூன்றாவது திட்டத்தை ஏற்று மைசூரும் மதராசும் 1921 ஆண்டு பேசத் தொடங்கி மூன்று ஆண்டுகள் பல்வேறு கட்ட கலந்தாலோசனைக்குப் பிறகு 1924 ல் இன்னொரு ஒப்பந்தம் போடப்பட்டது.
அந்த ஒப்பந்தத்தின் சாரமும் 1892 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தை ஒட்டியதாகவே அதாவது தமிழக ஆயக்கட்டுக்கு ஊறு நேரா வண்ணம் அவர்களுக்கு சேர வேண்டிய நீரை தடை செய்யாமல்  அணை கட்டிக் கொள்ளலாம். அடுத்து இந்த ஒப்பந்தம் 1974 ல் ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு எஞ்சிய நீரை எப்படி பகிர்ந்து கொள்வது என்று பேசி முடிவெடுத்து ஒப்பந்தத்தை புதிப்பித்துக் கொள்ள வேண்டும். இவை இரண்டும்தான் இந்த ஒப்பந்தத்தின் முக்கிய சரத்துகளாகும்.
அது மட்டும் அல்லாமல் அந்த ஒப்பந்தத்தின் துணைப் பிரிவு  11 ன் படி ஐம்பது ஆண்டுகள் கழித்து முடிவாகும்  உபரி நீர் பங்கீட்டுக்கு பாதகம் ஏற்படா வண்ணம் தான் நீரை அணைகளில் சேமிக்க வேண்டும். இரு அரசுகளுக்கும் கருத்து வேற்றுமை உருவானால் அதனை தீர்த்து வைக்க நடுவர் தீர்பாயம் அமைத்து அதன் தீர்ப்புக்குக் கட்டுப்படுவது என்றும்  அல்லது இந்திய அரசே தீர்ப்பு சொல்லலாம் என்றும் இரு சாராரும் சம்மத்தித்து உருவாக்கிய ஒப்பந்தம் இந்த 1924 ஆம் ஆண்டு ஒப்பந்தம்.
இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் காவிரியின் குறுக்கே கிருஷ்ணராஜ சாகர் எனப்படும் கண்ணம்பாடி ஆணை கட்டப்பட்டது கர்நாடகப் பகுதியில். மேட்டூர் அணை தமிழகப் பகுதியில் கட்டப்பட்டது.

1924ஆம் ஆண்டு ஒப்பந்தம் 1974 ஆண்டு முடிவடைகிறதா?
Both Governments agree that the limitations and arrangements embodied in Clause IV and V i.e., in respect of extension of irrigation by both Governments set out shall after the expiry of 50 years be opened to reconsideration in the light of the experience, gained and for an examination of the possibilities of further extension of irrigation within the territories of the respective Government and to such modifications andadditions as may be mutually agreed upon as a result of such reconsideration.
இது ஒப்பந்தத்தின் ஒரு சரத்து. இதில்1974 என்ற ஆண்டு கூட குறிப்பிடப்படவில்லை. ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு அனுபவங்கள் அடிப்படையில் மேலும் பாசனப் பரப்பை விரிவாக்க இரு மாநிலமும் கூடி பேசி சுமூகமாக முடிவெடுத்துக் கொள்ளவேண்டும் என்பதுதான். இதைதான் கர்நாடகம் காலாவாதி ஆனது என்றது. ஹேமாவதி கட்ட தொடங்கியதை அறிந்து தமிழகத்தில் அப்போதிருந்த திமுக ஆட்சியில் தடுத்து நிறுத்தும்படி மத்திய அரசையும் நீதி மன்றத்தையும் அணுகியது. பேச்சுவார்த்தையில் இந்த ஒப்பந்தம் செல்லுபடி ஆகாது என்று வாதிட்டது. அது செல்லுபடியாகும் ஒப்பந்தம் என்றென்றும் இருக்கக் கூடியது என்பதே திமுக அரசின் வாதமாக இருந்தது. காவிரி வழக்கின் மைய இழையே இதுதான். அதை இப்போது இறுதி தீர்ப்பில் உச்ச நீதி மன்றம் உறுதி செய்திருக்கிறது. மீண்டும் 15 ஆண்டுகளுக்குப் பிறகுபரிசீலனை செய்து புதிய சரத்துகளுடன் புதிப்பித்துக் கொள்ளவேண்டும் என்று சொல்லி இருப்பது குறிப்பிடத் தக்கது.
இந்திய சுதந்திரத்திற்கு பின் ஏற்பட்ட நிகழ்வுகள் நிலைகள்:
1947 ல் இந்தியா ஆங்கில அரசிடம் இருந்து நாட்டு விடுதலைப் பெற்றவுடன் அவர்களுடன் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தம் செல்லாது என்று ஒரு வல்லடி வாதத்தை முன்வைத்து ஒப்பந்த சரத்துகளுக்கு மாறாக கர்நாடகம் அவர்கள் பகுதியில் நீரை சேமிக்கும் பல திட்டங்களைத் தீட்டினர். காவிரியின் துணை நதிகளில் அணைகள் கட்டுவதற்கு தயாராயினர். முதல் ஐந்தாண்டு (1951-1956) திட்டத்தில் நீர்பாசன திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டது. அந்த சமயத்தில் தமிழ்நாட்டில் சில அணைக்கட்டுகள் கட்டப்பட்டன. அதே போல கர்நாடகாவில் கட்ட வேண்டும் என்றால் சென்னை மாகாணத்தின் அனுமதி பெற வேண்டும். ஆனால் கர்நாடகா அனுமதி தேவை இல்லை ஆங்கிலேயர் போனதும்  ஒப்பந்தம் செயலிழந்து விட்டது என்று சொல்லி காவிரியின் துணை ஆறுகளில் அணைகள் கட்ட தொடங்கினார்கள்.
மத்திய அரசின் அனுமதி இன்றி மத்திய அரசின் நிதி உதவி இன்றி மெல்ல மெல்ல கர்நாடகம் பல அணைகளை கட்டியது. அப்போது சென்னை மாகாணத்திலும் மத்தியிலும் மைசூர் மாநிலத்திலும் ஆட்சியில் இருந்தது பெருந்தலைவர் காமராஜரின் தலைமையிலான காங்கிரஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
1956 நதிநீர் தகராறு சட்டம்
சுதந்திரம் அடைந்த பிறகு மாநிலங்களுக்கு இடையே நதிநீர் பிரச்சினை வந்தால் அதைத் தீர்த்துக் கொள்ள வழி காட்டும் சட்டம் Inter-State Water Disputes Act of 1956. இதன் பிரகாரம் இரு மாநிலங்களுக்கு இடையில் உருவாகும் நதிநீர் பிரச்சனை சுமூகமாக தீராத பட்சத்தில் Tribunal என்னும் தீர்ப்பாயம் அமைத்து அதன் மூலம் தீர்வு காண வழி செய்கிறது.
கர்நாடகம் கட்டிய அணைகள்
இந்திய சுதந்திரத்திற்கு பிறகு காவிரியின் துணை நதிகளில்  கர்நாடகம் கட்டிய அணைகள்
கபினி அணை 1959
யகாச்சி நீர்த்தேக்கம் –1964
எறங்கி நீர்த்தேக்கம் –1964
சுவர்ணவதி நீர்த்தேக்கம் 1965

இவைகள் எல்லாமே திமுகழகம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு கர்நாடகாவில் கட்டப்பட்ட அணைகள். இதில் பெரும் பாதிப்பு கபினி அணையால் ஏற்பட்டது. மேற்குத் தொடர் மலையில் கேரளாவில் உற்பத்தியாகி கர்நாடக பகுதியில் காவிரியுடன் கலக்கும் கபினி ஆற்றில் அணை கட்டியதால் மேட்டுருக்கு வரும் நீர் அளவு குறைந்து போனது. அதற்கு முன்பு மேற்கு தொடர்சி மலையில் பொழியும் அதீத மழை நீர் இந்த நதியின் வழியாக ல் ஓடி கண்ணம்பாடியில்  கலந்து மேட்டூருக்கு வந்து கொண்டிருந்தது.

திமுகழக ஆட்சியில் (1967-1976) காவிரி

  • 1967 ல் தமிழ்நாட்டின் ஆட்சிப் பொறுப்புக்கு அறிஞர் அண்ணா தலைமையிலான திமுகழகம் வருகிறது. அண்ணாவின் அமைச்சரவையில் கலைஞர் இந்த விவகாரம் சம்பந்தப்பட்டத் துறையான  பொதுப்பணித் துறை அமைச்சர்.. கர்நாடகாவில் ஹேமாவதி அணை கட்டிக் கொண்டு இருந்தார்கள். அதை நிறுத்த வேண்டும் என்று மத்திய அரசு மூலம் தமிழ்நாடு கோரிக்கை வைத்தது. கர்நாடகம் இணங்க வில்லை. ஐந்து முறை பேச்சு வார்த்தை  நடந்தது. மத்திய நீர்வளத்துறை அமைச்சர்கள் திரு கே.எல். ராவ் மற்றும் திரு ஜகஜிவன்ராம் போன்றவர்கள் தலைமையில்தான்  நடைபெற்றன.
  • 1956 ஆம் ஆண்டு நதிநீர் தகராறு சட்டத்தின் படி Tribunal தீர்ப்பாயம் அமைக்க பிப்ரவரி 197௦ லேயே கலைஞர் கோரிக்கை வைக்கிறார்.
  •  1971 ல் பேச்சு வார்த்தை தோல்வியில் முடிவதாலும், கர்நாடகம் ஒப்பந்தத்தை மீறி அணைகள் கட்டுவதாலும், ஹேமாவதி அணை மற்றும் புதிய கபினி கட்டுவதை தடை கோரியும் கலைஞர் தலைமையில் ஆன அரசு உச்ச நீதி மன்றத்தில் ஆகஸ்ட் 1971 ல் வழக்கு தொடர்கிறது. தீர்ப்பாயம் அமைக்க மத்திய அரசுக்கு ஆணை பிறப்பிக்க வேண்டும் என்றும் வழக்கில் குறிப்பிடப்பட்டிருந்தது.
  • இந்த சமயத்தில் கேரளா அரசும் கோர்டுக்கு செல்கிறது. தமிழ்நாடு கர்நாடகம் இரு மாநிலமும் தங்கள் புதிய திட்டங்களை நிறுத்த வேண்டும். தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என்பது அவர்கள் கோரிக்கை.  
  • உச்ச நீதி மன்றம் அணை கட்டுவதற்கு தடை ஆணை பிறப்பிக்க முடியாதென்று கூறுகிறது. கர்நாடகம் 1924 ஒப்பந்தம் செல்லுபடி ஆகாது என சொன்னது. நீதி மன்றம் வழக்கை தள்ளி வைக்கிறது.
  • தமிழகத்தின் நிலைபாடு என்ன என்றால் ஒப்பந்தத்தை மீறி கர்நாடகம் தமிழகத்தின் அனுமதி இல்லாமல் அணைகள் கட்டக் கூடாது. ஒப்பந்தத்தில் குறித்தபடி தமிழகம் நீரை பெறவேண்டும். இதில் மாற்றம் கூடாது. உபரி நீர்  பங்கீடு குறித்து பேசி முடிவெடுத்து ஒப்பந்தத்தை புதுப்பிக்கலாம் என்பதுதான்.
  • கர்நாடகத்தின் வாதம் ஒப்பந்தம் முதலில் செல்லுபடி ஆகாது என்பதாகும்.  ஆங்கிலேயர்கள் மைசூர் மகாராஜாவுடன் போட்ட ஒப்பந்தம் நாட்டு விடுதலைக்குப் பின் செல்லுபடி ஆகாது. அணைகள் கட்ட அனுமதி தேவை இல்லை. ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட பாசனப் பரப்பளவைவிட தமிழகம் கூடுதலாக மேம்படுத்தி இருக்கிறார்கள். அதற்கெல்லாம் இப்போது நீர் தர இயலாது என்பதாக இருந்தது.
  • 1970க்குப் பிறகு கர்நாடகாவின் நீர் தேவை அதிகமானது. அவர்கள் பாசனப் பரப்பளவை அதிகப்படுத்திக் கொண்டனர். மேலும் அணைகள் நீர்தேக்கங்கள் கட்டி நீரை மேட்டூர் வராமல் தடுத்து வைத்தனர். அதே சமயம் நம்முடைய தேவைகளும் அதிகமாயின. நீருக்கு அவர்களிடம் கையேந்தும் நிலை ஏற்பட்டது. பேச்சு வார்தைகள் பலன் தர வில்லை. நீதி மன்றம் இழுத்தடிகிறது .
  • இந்த நிலையில் பிரதமர் இந்திரா காந்தி முதல்வர் கலைஞருக்கு    19-06-1971 ல் கடிதம் ஒன்று எழுதுகிறார். இப்போது தீர்ப்பாயம் அமைக்க இயலாது. கர்நாடகாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் இல்லை. கவர்னர் ஆட்சி நடக்கிறது. Popular Govt அமைந்த பிறகு நான் தமிழகத்தின் நலம் கருதி சுமூக தீர்வை அடைய நடவடிக்கை எடுக்கிறேன். கோர்ட்டுக்கு போக வேண்டாம் என்று சொல்கிறார்.
  • 1972 ல் மே மாதம் 29 ஆம் தேதி   இந்திரா அம்மையார் மூன்று மாநில முதல்வர்களையும் அழைத்து கூட்டம் ஒன்று நடத்துகிறார். பிரதமர் தலையிட்டு நடத்தப்படும் முதல் கூட்டம் அதுதான். கலைஞர், தேவராஜ் அர்ஸ், அச்சுத மேனன் மூவரும் அந்த கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள். பிரதமர்  வழக்கை வாபஸ் பெற வேண்டும்  என்று வற்புறுத்துகிறார். அபோதுதான் தன்னால் பேச்சு வார்த்தை  மூலம் சுமூக தீர்வு ஏற்படுத்தித் தர முடியும் என்கிறார்.
  • கோர்ட் அணை கட்ட தடை ஆணை விதிக்காத சூழலில் நீதி மன்ற நடவடிக்கைகள் காலம் தாழ்த்தி இழுத்துக் கொண்டு செல்லும் என்பதாலும் கலைஞர் வழக்கை வாபஸ் பெற சம்மதிக்கிறார். ஆனால் 1974 ல் தான் வழக்கு வாபஸ் பெறப்படுகிறது.  மீண்டும் தேவையானால்  கோர்ட்டுக்கு போக உரிமை உண்டு என்ற நிபந்தனையுடன்தான் வழக்கு திரும்ப பெறப்பட்டது.  அதே போல் கேரளா அரசும் வழக்கை அப்போது திரும்ப பெற்றது.
  • தமிழக அரசு சார்பில் 1971 ல் வழக்கு தொடுத்த போதும், 1972 ல் வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்ற பிரதமர் இந்திராவின் கோரிக்கையை பரிசீலிக்க அனைத்து கட்சிக் கூட்டம் நடத்தி வழக்கை திரும்ப பெற முடிவெடுத்த போதும் எம்ஜிஆர் திமுகவில் இருந்தார். கர்ம வீரர் காமராஜர் முதறிஞர் ராஜாஜி அவர்களும் உயிரோடுதான் இருந்தனர். வழக்கை வாபஸ் பெற முடிவெடுத்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அவர்களுடைய கட்சிகளும் பங்கெடுத்தன
  • இதற்கிடையில் ஒரு பக்கம் வழக்கு வாபஸ் என்று சொல்லிவிட்டு பேச்சு வார்த்தைக்கு அரசு  தயாரானாலும் திரு முரசொலி மாறன்  திரு மன்னை  நாராயணசாமி இருவரும்  காவிரி விவசாயிகள் சார்பாக உச்சநீதி மன்றத்தில் வழக்கு போடுகிறார்கள். அவர்கள் இருவரும் யார் எந்த கட்சிக்காரர்கள் யார் சொல்லி வழக்கைத் தொடுத்து இருப்பார்கள் என்பதை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இதுதான்  கலைஞரின் அரசியல் தந்திரம். 1974 ல் அரசு வழக்கை வாபஸ் பெற்றாலும் இவர்களின் வழக்கு நிலுவையில் இருந்தது.
  • உண்மை கண்டறியும் குழு CAUVERY FACT FINDING COMITEE என்று ஒன்றை மத்திய அரசு ஜூன் மாதம் 1972 ல் அமைத்தது. டிசம்பர் 1972 அறிக்கையை சமர்ப்பித்தது. P.R. Ahuja (engineer), Jatindra Singh (engineer), J.S. Patel (Retired Agricultural Commissioner) and B.D. Pal (Judge) ஆகியோர் அந்த கமிட்டியில் அங்கம் வகித்தவர்கள்.
  • இந்த நடவடிக்கை பிரதமர் இந்திராவின் நேரடி ஈடுபாடு செயல்பாடுகள் எல்லோருக்கும் ஒரு நம்பிக்கையை தந்தது.  
  • மத்திய அரசு 29-11-1974 ல் ஒரு வரைவு திட்டத்தை முன்வைத்தது. அதில் தமிழகத்தின் நீர் பங்கு குறைவாக  காணப்பட்டதால் தமிழக அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. மீண்டும் 1975 ல் ஒருமுறை இது குறித்து பேச்சு வார்த்தை நடந்தது.
  • 1975 ல் மத்திய அரசின் நீர்பாசன துறை அமைச்சரின் தலைமையில் கூடிய கூட்டத்தில் தமிழகம் இனி பேசி பயனில்லை தீர்ப்பாயம் அமைப்பதே தீர்வாகும் என்று சொல்லி மத்திய அரசிடம் முறையிட்டது. சட்டரீதியான தீர்வுதான் சரியானது. அரசியல் ரீதியில் பேசி  தீர்வை அடைவது சாத்திய மில்லாமல் போய்விட்டது என்று தன் நிலையை தீர்மானமாக பதிவு செய்தது.    
  • 1975 வரை திமுகழக ஆட்சியில் பலமுறை பேச்சு வார்த்தை நடத்தி ஒரு இறுதிக் கட்டத்தை அடைந்த தருவாயில் திமுகழக ஆட்சி நெருக்கடி காலக்கட்டத்தில் கலைக்கப்பட்டது. ஒருவேளை கலைஞர் ஆட்சி அப்போது தொடர்ந்து இருக்குமானால் நிச்சயமாக அப்போதே இரு மாநிலங்களுக்கு இடையே நல்ல சுமூகமான முடிவை எட்டி இருக்கக் கூடும்.
1976 கவர்னர் ஆட்சிக் காலத்தில் காவிரி
  • தமிழகத்தின் தலைவிதி வேறுமாதிரி ஆகிவிட்டது. 1976 ல் கவர்னர் ஆட்சி.. அப்போது மத்திய அரசு வேறு ஒரு திட்டத்தை முன் வைக்கிறது. அதை கவர்னர் சுகாதியா ஏற்றுக் கொள்ளவில்லை. திமுக அரசு கலைக்கப்பட்டு மிசா காலத்தில் கவர்னர் ஆட்சியில் மத்திய அரசின் proposal மத்திய அரசால் நியமிக்கப்பட்ட கவர்னரால் நிராகரிக்கப் படுகிறது.
  • தமிழகத்தின் நிலை கலைஞர் ஆட்சிகாலத்தில் எடுத்த முடிவு 1924 ஒப்பந்தம் பிரகாரம் நீர் தரப்பட வேண்டும் என்பதே
 அதிமுக எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில்:
  • ஜூன் மாதம் 1977 முதல் 1988 ஜனவரி வரை (இடையில் 1980 ல் நான்கு மாதம் கவர்னர் ஆட்சி காலம் தவிர்த்து)  எம்ஜிஆர் – ன் அதிமுக ஆட்சி தொடர்ந்து இருந்தது. அந்த சமயத்தில் அவரது ஆட்சிக் காலத்தில் காவிரி நதிநீர் பங்கீடு தீர்வு காண்பதில் தீர்ப்பாயம் அமைக்க வலியுறுத்தாமல் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தி கால விரையம் செய்தததுதான் மிச்சம்.
  • கர்நாடகா பேசலாம் பேசலாம் என்று காலம் கடத்தி தன்னுடைய எல்லா நதிநீர் திட்டங்களையும் தடையில்லாமல் முடித்துக் கொண்டது இந்த காலக்கட்டத்தில்தான். .
  • ஆகஸ்ட் 1978 ல் முதல் அமைச்சர்கள் கூட்டத்தில் 1976 ஆம் ஆண்டு மத்திய அரசின் வரைவு திட்டப் பரிந்துரையை எம்ஜிஆர் நிராகரிக்கிறார். கவர்னர் நிராகரித்த அதே திட்டத்தை எம்ஜிஆரும் நிராகரிக்கிறார். அப்போது அவர் சொன்ன காரணமும் அதுதான் .கவர்னர் நிராகரித்ததை நான் எப்படி ஏற்பது என்றார்.
  • 1978 லிருந்து 1980 வரை இரண்டு ஆண்டுகளில் ஐந்து  முறை எம்ஜிஆரும் கர்நாடக முதல்வர் குண்டுராவ் அவர்களும் பேச்சு வார்த்தை நடத்தி இருக்கிறார்கள்.
  • 1981 ல் இருமாநில முதல்வர்கள் சந்தித்து தனித்தனியாக இரு வேறு வரைவு திட்டப் பரிந்துரைகளை சமர்ப்பித்தார்கள். தமிழகத்தின் நிலை 1924 ஒப்பந்தத்தை அடிப்படையாகக் கொண்டது.. கர்நாடகத்தின் நிலை அதற்கு நேர் எதிரானது. இப்படியே ஒவ்வொரு ஆண்டும் பேசுவதும் கலைவதுமாக இருந்தனர்.
  • கடைசியில் 1986 ல் தமிழகம் தீர்ப்பாயம் வேண்டுவது தவிர வேறு வழி இல்லை என்று சொல்லி ஏற்கனவே நிலுவையில் இருந்த உச்சநீதிமன்ற வழக்கில் அபோதுதான் அரசையும் இணைத்துக் கொள்கிறார். 
  • 1987 ல் மத்திய அரசு மீண்டும் பேச்சு வார்த்தைக்கு அழைக்கிறது. எம்ஜிஆர் வர முடியாது பேசினது போதும் என்று பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ஞானம் வந்து அறிவிக்கிறார்.
  • அப்போது முரசொலியில் வந்த ஒரு கருத்துப்படம்
  • அதற்குப் பிறகு அவர் மறைந்ததும் ஒரு ஆண்டு கவர்னர் ஆட்சியின் போது உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டதன் பேரில் இருதரப்பு பேச்சு வார்த்தையில் தமிழகம் தீர்ப்பாயம் வேண்டும் என்றது.     
  • கவர்னர் ஆட்சிக்குப்பிறகு கலைஞர் 1989 ஜனவரி 27 ல் மீண்டும் முதல்வராகிறார்.
கலைஞர் ஆட்சி  (1989 -1991) காலத்தில்:
  • மாநிலத்தில் கலைஞர் முதல்வராகவும் மத்தியில் திரு வி.பி.சிங் பிரதமராகவும் இருக்கிறார்கள்.
  • உச்ச நீதி மன்றத்தில் நிலுவையில் இருந்த தஞ்சை விவசாயிகள் சார்பில் போடப்பட்ட வழக்கை தமிழகம் துரிதப்படுத்துகிறது.
  • 24- 04-1990 ல் தமிழகம் பேச்சு வார்த்தைக்கு நாங்கள் தயாரில்லை. தீர்ப்பாயம்தான் வேண்டும் என்று தீர்மானமாக சொன்னது.
  • 02-06-1990 ல் மத்திய அரசு தீர்ப்பாயம் அமைக்கிறது. Justice Chittatosh Mookerjee, Chief Justice of the Bombay High Court, as Chairman and Justice S.D. Agarwala  of the  Allahabad High Court as member to settle the Cauvery water dispute.  
  • 1990 - வி.பி.சிங் தலைமையிலான தேசிய முன்னணி ஆட்சியில் காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. 1989ல் வி.பி.சிங் தலைமையிலான தேசிய முன்னணி ஆட்சிக்கு வந்த போது அதில் திமுகவும் அங்கம் வகித்தது. , 1990ஆம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது.
  • இதில் ஒரு விசித்திரம் என்னவென்றால் தமிழ்நாடு முதல்வராக கலைஞரும்  கர்நாடகம் முதல்வராக விரேந்திரபட்டிலும்தான் முதல் முதலாக காவிரி பிரச்சனையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய முதல்வர்கள். அவர்கள் மீண்டும் முதல்வராக வந்த பின் தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என்று தமிழக முதல்வராக கலைஞர் இருபது ஆண்டுகளுக்கு முன் வைத்த கோரிக்கை நிறைவேறுகிறது.   
  • 1991 – ஜூன் 25 ல் மேட்டூர் அணைக்கு 205 டி எம் சி தண்ணீரை திறந்துவிட கர்நாடக அரசுக்கு இடைக்கால உத்தரவு பிறப்பித்தது நடுவர் மன்றம். மேட்டூர் அணைக்கு 205 டிஎம்சி திறந்துவிட வேண்டும் என ஒரே ஆண்டில்  நடுவர் மன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க பெரிதும் காரணமானது அதற்கு முன்பு ஆட்சியில் இருந்த திமுகழகம். அப்போது மட்டும் 1 9 9 1 ஜனவரி 3௦ ல் கழக ஆட்சி கலைக்கப்படாமல் தொடர்ந்திருக்குமானால் காவிரி பிரச்சனை அப்போதே தீர்க்கப்பட்டிருக்கும்.
  • நடுவர் மன்ற இடைக்கால தீர்ப்பு வந்த முன் நாள் அதாவது 24-06-1991 அதிமுக ஆட்சி ஜெயாவின் தலைமையில் பொறுப்பேற்கிறது. அதற்கு முன் திமுக ஆட்சிகாலத்தில் இடைக்கால உத்திரவுக்கு  கோரிக்கை வைத்து அழுத்தம் கொடுத்து வந்ததின் பலனை ஜெயா தனதாக்கிக் கொண்டார்.  
  • இந்த உத்தரவை அடுத்து கர்நாடகத்தில் பெரும் போராட்டம் வெடித்து  தமிழர்கள் பலர் கொல்லப்பட்டனர். பாதிப்புக்கு உள்ளாயினர்.
  • அடுத்து 1998 - ஆணையத்தின் உத்தரவை செயல்படுத்துவதற்கு காவிரி நதிநீர் ஆணையம் அமைக்கப்பட்டது. அப்போது தமிழகத்தில் முதல்வராக இருந்தவர் கலைஞர்தான். அந்த ஆணையத்திற்குதான் பல்லில்லை வாலில்லை என்று எகத்தாளம் பேசியவர் அதிமுக அரசின் முதல்வர் ஜெயா. ஆனால் அதற்குப் பிறகு தான் முதல்வராக ஆனதும் அந்த ஆணையத்தை கூட்ட வேண்டும் என்று கோரிக்கையும் உச்ச நீதி மன்றத்தில் வழக்கும் போட்டது அதே ஜெயா அதிமுகழக ஆட்சியி காலத்தில்ரசுதான். அப்போது கலைஞர் அதனை வரவேற்று அறிக்கை கொடுத்தார்.
  • 1989 ல் ஆட்சிக்கு வந்ததும் காவிரி நடுவர் மன்றம் என்னும் தீர்ப்பாயம் அமைக்கப்பட்டது.1991 ல் கலைஞர் ஆட்சி கலைக்கப்பட்டதால் நல்ல முன்னேற்றம் தடை பட்டது. மீண்டும் 1996 ல் திமுக ஆட்சியில் வந்த பிறகுதான் காவிரி நதிநீர் ஆணையம் அதற்கு துணை நிற்க காவிரி கண்காணிப்புக் குழு என்று சில முன்னேற்றங்கள் உண்டாயின. அதன்பிறகு ஐந்தாண்டு இடைவெளிக்குப் பிறகு 2006 ல் ஆட்சிக்கு வந்த பிறகுதான் 2007 ல் நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு கிடைத்தது. 2013 ல் தான் அரசிதழில் வெளியிட முடிந்தது. அப்போதும் தமிழகத்தில் ஆட்சியில் இல்லை என்றாலும் மத்தியில் ஆட்சியில் இருந்து சாதித்தது திமுகவே என்று சொல்ல முடியும். தமிழக மக்கள் தொடர்ந்து திமுகவை ஆட்சியில் இருக்க தேர்ந்து எடுத்து இருப்பார்களேயானால் காவிரி உள்ளிட்ட ப பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு கிட்டி இருக்கும். அப்படி ஆகாமல் போக காரணம் மக்கள் திமுகவிற்கு எதிராக பின்னப்பட்ட சதி வலையில் விழுந்து திமுகழகத்தின் வெற்றியை தடுத்ததே என்றால் அது மிகை அல்ல.  
  • ஜெயா ஆட்சியில் மாற்றக் கட்சியினரை மதிக்காமல் அனைத்து கட்சிகளும் ஒருமித்து குரல் கொடுக்க வாய்ப்பு அளிக்காமல் தன்  இச்சையாக நடந்தாலும் தமிழகத்தின் முக்கிய கட்சியான திமுக அரசின் செயல்களுக்கு ஆதரவாகவே இருந்தது. எப்போதும் அதில் அரசியல் ஆதாயம் தேட முனைந்ததில்லை.
  • 2007 - தமிழகத்திற்கு 192 டி எம் சி தண்ணீரை கர்நாடகம் திறந்து விட வேண்டும் என காவிரி நடுவர் மன்றம் இறுதித் தீர்ப்பு.
  • 2013- மத்தியில் இருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டது. நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு வெளி வந்த நாள் பிப்ரவரி 5, 2007. அது கெசட்டில் வெளியிடப்பட்ட நாள் பிப்ரவரி 19, 2013 ஆகும். அப்போதும் மத்திய அரசில் கூட்டணி ஆட்சியில் இருந்தது திமுகழகம். அப்போது மாநிலத்தில் அதிமுக ஆட்சி நடைபெற்றதால் தம்மால்தான் இது நடந்தது என ஜெயா சொல்லிக் கொண்டார். .
  • இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமிதவராய், ஏ.எம்.கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு  16 பிப்ரவரி 2018  அன்று  காவிரி வழக்கில் இறுதித்  தீர்ப்பு வழங்கியது. 
உச்ச நீதி மன்ற தீர்ப்பின் விவரம் :
  • மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டாலும் காவிரியை எந்த மாநிலமும் உரிமை கொண்டாட முடியாது
  • காவிரி நடுவர் மன்றம் வழங்கியதிலிருந்து கர்நாடகாவுக்கு 14.75 டிஎம்சி நீர் கூடுதலாக வழங்க வேண்டும்
  •  கேரளா மற்றும் புதுச்சேரிக்கு நதிநீர் பங்கீட்டில் மாற்றம் இல்ல
  •  காவிரி நடுவர் மன்றம் வழங்கியதிலிருந்து, தமிழகத்திற்கு தண்ணீர் குறைப்பு (192 டிஎம்சி-யிலிருந்து 177.25 டிஎம்சி-யாக குறைப்பு)
  • தமிழகத்தில் நிலத்தடி நீர் இருப்பு உள்ளது, கர்நாடகாவில் குடிநீர் தேவை அதிகம்
  • தீர்ப்பாயம் கூறியபடி எந்த தாமதமும் இன்றி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு
  • காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதல் தேவையில்லை
  • காவிரி வழக்கு தொடர்பான தீர்ப்பு எதிர்வரும் 15 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும்
  • புதுச்சேரிக்கு வழங்கப்படவேண்டிய 7 டிஎம்சி நீரில் எந்த மாற்றமும் இல்லை
  • கேரள மாநிலத்திற்கு வழங்கப்பட வேண்டிய 30 டி.எம்.சி நீரில் எந்த மாற்றமும் இல்லை
  • பெங்களூரு மக்களின் குடிநீர் தேவை, ஆலைகளின் தேவைக்காக கர்நாடகாவுக்கு கூடுதல் நீர் ஒதுக்கீடு
  • 1892, 1924 ஆம் ஆண்டில் போடப்பட்ட ஒப்பந்தங்கள் செல்லுபடியாகும். தமிழகத்தின் அனுமதியின்றி கர்நாடகா புதிய அணை கட்ட முடியாது என ஒப்பந்தத்தில் உள்ளது
  • காவிரி தொடர்பான அனைத்து வழக்குகளும் முடித்து வைக்கப்படுகின்றன.இறுதி தீர்ப்பை எதிர்த்து யாரும் மேல்முறையீடு செய்ய முடியாது என உச்சநீதிமன்றம் திட்டவட்டம். 
உண்மையில் சொல்ல வேண்டுமானால் தமிழகம் இந்த இறுதி தீர்ப்பால்பெரிதாக மகிழ்ச்சிப் பொங்கவும் கொண்டாடவும் வேண்டிய நிலை இல்லை எனலாம். இத்தனை ஆண்டு கால சட்டப் போராட்டத்தில் நாம் கண்ட பலன் தஞ்சை சீமை கடந்த ஆறு ஆண்டுகளாக மேட்டூர் நீர் வரத்து இல்லாமல் காலத்தே பயிர் செய்ய இயலாமல் மண்தரம் கெட்டு தரிசாக போனதுதான் மிச்சம்

தமிழகத்தின் சார்பில் திறம்பட வாதிட வல்லமை கொண்ட வழக்கறிஞர்களை வைத்து வாதிடாமல் விட்டது அதிமுக அரசு என்று குற்றம் சாட்ட முடியும். கர்நாடகம் திரு பாலி நாரிமன் போன்ற சட்டமேதைகளை வைத்து வாதாடும் போது தமிழக அரசு கடந்த ஐந்து ஆண்டுகளில் தொடர்ச்சியாக ஒருவரை வைத்தே வாதிடவில்லை. தமிழக அரசு தரப்பில் மூத்த வக்கீல் சேகர் நாப்டே, வக்கீல்கள் ஜி.உமாபதி, சி.பரமசிவம் ஆகியோர் கடைசியாக ஆஜராகி வாதிட்டவர்கள். அதற்கு முன்பு தமிழக அரசின் சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சுப்பிரமணிய பிரசாத், வக்கீல்கள் சி.பரமசிவம், பி.பாலாஜி ஆகியோர் ஆஜர் ஆனார்கள்..
இது மட்டுமல்லாமல் ஒருமுறை ஜெயலலிதா 1994 ல் சட்டசபையில் கலைஞரை குறை சொல்ல வேண்டும் திமுக மீது அபாண்ட குற்றம் சுமத்த வேண்டும் என்ற நோக்கில் அதன் பலாபலன் என்னவாகும் பிற்காலத்தில் என்ற முன் யோசனை இல்லாமல் ஒரு பொய்யை சொன்னார். அது கலைஞர் காவிரி ஒப்பந்தம் காலாவாதி ஆகிவிட்டது என்று 1974 சட்டமன்றத்தில் அறிவித்ததாக சொன்னார், அது என்ன ஆயிற்று என்றால் உச்ச நீதி மன்றத்தில் கர்நாடக வழக்கறிஞர் பாலி  நாரிமன் இப்படி ஒரு அறிக்கையை முன்னாள் முதல்வர் வெளியிட்டு ஒப்புக் கொண்டதாக இந்நாள் முதல்வர் ஜெயலலிதா ஒருமுறை குறிப்பிட்டு இருக்கிறார், அந்த அறிக்கையை நீதி மன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று சொல்கிறார். அதற்கு தமிழக அரசு சொன்ன பதில் என்ன தெரியுமா? அந்த அறிக்கை கிடைக்கவில்லை என்பதாகும். இருந்தால்தானே கிடைப்பதற்கு. நாரிமன் அப்போது இந்த விவகாரத்தில் இரு கட்சிகளுக்கு இடையில் அரசியல் செய்ய விரும்ப வில்லை என்று குறிப்பிட்டு கடந்து போகிறார்.

இதுபோல் எப்போதும் திமுகழகம் சில்லறைத்தனமாக அரசியல் செய்தது கிடையாது. எதிர் கட்சிகளையும் அனைத்துக் கட்சிகளையும் கலந்து முடிவெடுங்கள் தன்னிச்சையாக எதுவும் செய்ய வேண்டாம் என்றுதான் எடுத்து சொல்வார்கள். ஆனால் ஜெயா காலத்தில் எல்லாப் புகழும் எனக்கே உரியது எவருடைய புகழையும் நானே சூட்டிக் கொள்வேன் என்ற தோரணையில் அரசியல் செய்து பொன்னியின் செல்வி என்றும் காவிரி தந்த கலைச்செல்வி என்றும்  பட்டங்கள் பெற முனைந்ததால் வந்த வினைதான் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின் முழுப்பயனும்  உச்ச நீதி மன்ற இறுதித் தீர்ப்பில் நமக்குக் கிடைக்காமல் போனது.

1993, ஜூலை மாதம் அன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதா, சென்னை மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர் சமாதி அருகே உண்ணாவிரதம் இருந்தார். அந்த நிகழ்வுக்குப் பிறகு கர்நாடகம் மிக கடுமையாக நடந்து கொள்ள ஆரம்பித்தது. யாருடைய சொல்லுக்கும் ஆணைக்கும் கட்டுப்பட மறுத்தது.
இந்த புண்ணியவதி ஆட்சியில் காவிரியில் நீர் வரத்து அரிதாகி போனது . ஆனால் கலைஞர் ஆட்சியில் எப்போதுமே எப்படியாவது ஜூன் மாதம் 1௦ அல்லது 12 தேதிகளில் மேட்டூர் அணை திறக்கப்படும். இது எப்படி சாத்தியமானது? வழக்கு நடந்தாலும் நாம் நடந்து கொள்கிற முறையில்தான் இருக்கிறது. வீம்பு வீராப்புகளை விட்டுவிட்டு வழக்கை ஒருபுறம் நடத்திக் கொண்டு மறுபுறம் பேச்சுப் வார்த்தை நடத்தி நீரைக் கொண்டுவரும் திறமை ஆற்றல் கலைஞருக்கு இருந்தது.

பொன்னியின் செல்வி பட்டம் பெற்ற நாளில் இருந்து இதுவரை ஐந்தாண்டு காலத்திலும் அதற்கு முன் ஆண்டிலிருந்து ஒருமுறைகூட மேட்டூர் அணை ஜூன் மாதம் 1௦ ந்தேதி திறக்கப்படவில்லை. ஆறாண்டு  காலம்  தொடர்ந்து ஆற்றில் நீரோட்டம் இல்லாத நிலையில் நிலத்தடி நீர்ப்பாசன முறையால் நிலத்தடி நீரும் உறிஞ்சப்பட இன்றைக்கு தஞ்சை பகுதி குடிநீருக்கும் அல்லல் படும் நிலைக்கு ஆளாகி இருக்கிறது. இதற்கு முழ பொறுப்பும் அதிமுக அரசின் கையாலாகத்தனம் என்றுதான் சொல்லவேண்டும்.     
இன்னொரு தகவல் முக்கியமானது. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின்போது நீதிபதி தீபக் மிஸ்ரா, “தமிழ்நாட்டில் தண்ணீரை சேமிக்க நடவடிக்கை எடுக்காதது ஏன்? நீங்கள் மேட்டூர் அணையை தவிர வேறு அணை எதுவும் கட்டிக்கொள்ள முடியாதா?” என்று கேள்விகள் எழுப்பினார்.
அதற்கு சேகர் நாப்டே, கர்நாடகம் மேடான பகுதியில் அமைந்துள்ளதால் அங்கு அதிக அளவில் தண்ணீரை எளிதாக சேமித்து வைக்க முடியும் என்றும், தமிழ்நாடு சமதளத்தில் இருப்பதால் தண்ணீரை தேக்கி வைக்க முடியாது என்றும் கூறினார்.
தமிழ்நாட்டில் தண்ணீரை தேக்கி வைக்க வேறு வழியை நீங்கள் முயற்சிக்கவில்லையா?” என்று நீதிபதி கேட்டார்.
அதற்கு சேகர் நாப்டே, “ஏற்கனவே கூறியது போல தமிழ்நாட்டின் நிலப்பரப்பு தட்டையானது என்பதால் தண்ணீரை நிறுத்தி தேக்கி வைப்பது கடினம் என்றும், மேட்டூரில் அளவுடன்தான் தேக்கி வைக்கமுடியும்என்றும் தெரிவித்தார்.
ஒருமுறை நீதிபதிகள், “இந்த வழக்கில் நாங்கள் தீர்ப்பு வழங்கும் போது தண்ணீர் பங்கீட்டை அமல்படுத்தும் வகையில் ஒழுங்காற்று அமைப்பு ஒன்றை ஏற்படுத்துவோம். இல்லையென்றால் நீங்கள் இரு மாநிலங்களும் நீர்ப்பங்கீட்டுக்காக சண்டையிட்டுக்கொண்டே இருப்பீர்கள்என்று கூறினார்கள்.
அந்த ஒழுங்காற்று அமைப்புதான் காவிரி மேலாண்மை வாரியம் என்பது. இது இறுதி தீர்ப்பில் உறுதியாக தெரிவித்து இருந்தும் இன்னும் அமைக்கபடாமல் மேலும் நீதி மன்றங்களின் வாயில்படியில் தவம் கிடக்க வேண்டிய துர்பாக்கிய நிலைமைக்கு யார் காரணம் என்பதை மக்கள் நன்கு உணர்ந்து இருக்கிறார்கள்.
இப்போது உள்ள அரசியல் சூழலில் அடுத்து ஆட்சிக்கு வரும் அருகதையும் ஆற்றலும் உள்ள ஒரே கட்சியாக திமுகழகம் திகழ்கிறது. அதன் செயல் தலைவர் தளபதி ஸ்டாலின் அவர்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டிகிறார். போராட்டம் செய்கிறார். தமிழக அரசிற்கு உறுதுணையாக நிற்பேன் எல்லோரும் சேர்ந்து போராடுவோம் என்கிறார். அனைத்து கட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்டு ஆலோசனை தருகிறார். காவிரி உரிமை மீட்புப் பயணம் - போராட்டம் நடத்துகிறார்.
காவிரி உரிமை மீட்புப் பயணம் - போராட்டம் திமுகழகத்தால் இன்று நேற்று தொடங்கப்பட்டதல்ல. இந்தப் போராட்டத்தின் ஒரு கட்டம்தான் 1971 ஜூன் மாதத்தில் கலைஞர் ஆட்சிக் காலத்தில் மத்திய அரசுக்கு தந்தி கொடுத்து ஹேமாவதி போன்ற அணைகள் கட்டுவதைத் தடுக்கும்படி கோரிக்கை விடுக்கப்பட்டது.
கர்நாடகாவில் காவிரியின் துணை நதிகளில் அணைகள் கட்டுவதை கலைஞர் ஆட்சியில் தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்று சொல்லித் திரியும் சோமாரிகள் அறியட்டும். இதோ முரசொலியில் 11, 12 ஜூன் மாதம் 1971 ல் வெளியான பெட்டி செய்திகளையும் கருத்துப் படத்தையும் பாருங்கள்.
கலைஞரையும் கழகத்தையும் கரித்துக் கொட்டும் கசடர்களே..! வரலாறு தெரியாமல் வரட்டுத் தவளைகள் போல் வசை பாடும் வன்நெஞ்சம் கொண்டவர்களே..! திருந்துங்கள். திமுகழகம் ஒன்றுதான் தமிழகத்தை காக்கும் அரண் என்பதை உணருங்கள்...
ஐம்பது ஆண்டுகால அறப் போராட்டங்களையும் சட்டப் போராட்டங்களையும் சந்தித்த காவிரி சிக்கல் இறுதி கட்டத்தில் உச்ச நீதி மன்றத்தில் தமிழகத்திற்கு ஓரளவு சாதகமான வெற்றித் தீர்ப்பு கிடைப்பதில் திமுகழகத்தின் பங்கு அளப்பரியது.
இந்த சமயத்தில் இன்னொரு வரலாற்றையும் நினைவு படுத்தினால்தான் காவிரிப் பிரச்சனையின் இன்னொரு பக்கம் தெரிய வரும். 
1956 ஆம் ஆண்டு இந்தியா மொழிவாரி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டபோது, தனிமாநிலமாக துளு மொழியின் அடிப்படையில் குடகுஎன்கிற மாநிலம் உருவாக இருந்தது. தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் இடையில் மிகச் சிறிய பகுதி குடகு.
அப்போது குடகு மக்கள் தங்களை இந்தியாவின் யூனியன் பகுதியாக அறிவிக்க வேண்டும் என்று பிரதமர் நேருவிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால் நேரு, யூனியனாக உங்களை இணைக்க முடியாது, ஏதேனும் ஒரு மாநிலத்தோடு இணைந்து கொள்ளலாம் என ஆலோசனை கூறினார்.
குடகு மக்கள், தமிழகத்துடன் இணையவே தங்களின் விருப்பத்தை ஒருமித்த கருத்தாக வெளிப்படுத்தினர். ஆனால் தமிழகத்தில் அப்போதிருந்த ஆட்சியாளர்கள் அதனை மறுத்து விட்டார்கள்.
தமிழகம் போல் கர்நாடகமும் முதலில் மறுத்தது. ஆனால் பிறகு சம்மதித்து தம்முடன் குடகு பகுதியை இணைத்து ஒரு மாவட்டமாக ஏற்றுக் கொண்டது.
எந்த குடகு பகுதியை தமிழகம் வேண்டாம் என்று சொல்லியதோ அந்த குடகில்தான் தலைக்காவிரி என்னும் இடத்தில்தான் காவிரி ஆறு உற்பத்தி ஆகிறது. 

அப்போது தந்தை பெரியார், குடகை தமிழகத்துடன் இணைக்க வேண்டுமென உரிமைக் குரல் கொடுத்தார். விடுதலைப் பத்திரிகையில் எழுதினார். பேரணி நடத்தினார். இருந்தும் அவரின் குரலை அப்போதைய காங்கிரஸ் அரசாங்கம் அலட்சியம் செய்தது.



அன்றைக்கு குடகு மக்களின் எண்ணம் போல் நாம் அவர்களை அந்தப் பகுதியை தமிழகத்துடன் சேர்த்து இருந்தால்காவிரி ஆற்றுநீர் பிரச்சினை இந்த அளவு முற்றி இருக்காது தமிழகத்தின் உரிமை இன்னும் மிக பலப்பட்டு இருக்கும்.
அத்தகைய வாய்ப்பை விட்டுக் கொடுத்தவர்கள் யார் ? காவிரி சிக்கலில் காலம் காலமாக கசப்பான உண்மைகள் பல மறைந்து கிடக்கின்றன.
திமுகவின் செயல் தலைவரை  நாம் அடுத்த முதல்வராக ஆக்கினால்தான் தமிழகம் காப்பாற்றப்படும் என்கிற எண்ணம் மக்கள் மனதில் வந்துவிட்டது. ஆம் ஆட்சியில் இருந்தாலும் இல்லை என்றாலும் இப்போதல்ல கர்ம வீரர் காமராஜர் காலத்திலிருந்து தமிழகம் திமுகழகத்தால் மட்டுமே முன்னேற்றம் கண்டது. காணும். இதுவெறும் வார்த்தையல்ல வரலாறு.  எதற்கெடுத்தாலும் திராவிடத்தையும் திமுகழகத்தையும் கலைஞரையும் குறை சொல்லித் திரியும் தில்லுமுல்லுப் பேர்வழிகள் தெரிந்து கொள்ளட்டும் இந்த வரலாற்றை.