Sunday, November 11, 2007

திருவள்ளுவர் அருள்வாக்கு



திருவள்ளுவர் அருள்வாக்கு

முகவுரை

திருக்குறள்-
தமிழின் பெருமையை, தமிழனின் மாண்பை, தரணிக்கு உணர்த்தும் நூல்.
உலகப்பொதுமறை என உயரிய மதிப்பைப் பெறத்தக்க உன்னதமானது.
சாதி மதம் கடந்தது.  எல்லா சமயத்தவரும் ஏற்றிடத்தக்கது.
எந்த ஒரு கடவுள் பெயரையும் குறிப்பிடாதது.
ஏன் கடவுள் என்ற சொல்லே இல்லாதது.
முதல் அதிகாரமாக விளங்கும் இறைவாழ்த்திலும்கூட
கடவுள் தன்மைகள் மட்டுமே குறிக்கப்பெற்றது.
கடவுள் பெயர் மட்டுமல்லாமல்
மொழி- இனம்- இடம் என்று எதனையும் குறிக்கப்பெறாமல்
அனைவருக்கும் ஏற்ற கருத்துகளைத் தாங்கி நிற்பதால்
உலகமாந்தர் அனைவருமே ஏற்றிப் போற்றிடும் மதிப்பைப் பெற்றது.

சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே இத்தகைய பரந்த நோக்கில் சிறப்புற ஓர் அரிய நூலை எழுதிய மனிதரை திருவள்ளுவர் என்று சொல்கிறோம். உறுதியாக அவர் சிறந்த அறிஞராக மட்டுமல்லாமல் சிந்தனைப் புரட்சியாளராகவும் இருந்து இருக்க வேண்டும்.அக்கால தமிழகச்சூழல், வேற்று  நாட்டவரின் சமூகப் படையெடுப்பினாலும்அவர்தம் பண்பாட்டுச் சிதைவுகளாலும் தமிழர் மனம்மாறி வருதலைக் காணச்சகிக்காமல்; அவரை ஒழுங்குபடுத்தும் முயற்சியாக திருக்குறள் எனும் ஒழுக்கநூல் எழுதப்பட்டதோ எனவும் கருத இடம் உண்டு.

அன்றிருந்த ஆட்சியாளர் இதனை தம் சட்டநூலாக ஏற்று, கடைபிடித்தொழுக ஆணையும் ஆவணமும் செய்திருப்பார்களேயானால் இன்றையத் தமிழகம் / தமிழர்நலம் காப்பாற்றப்பெற்று, இன்றுகாணும் அவலநிலைகள் தவிர்க்கப்பட்டிருக்கும்.

கற்றறிந்த சான்றோரிடையேயும் தமிழ்ப்புலவர்களிடையேயும் மட்டுமே
திருக்குறள் புழக்கத்தில் இருந்திருக்கிறது. அதன் கருத்துக்களைச் செயலாக்க அப்போதிருந்த / பிறகுவந்த ஆட்சியாளர்களின் அக்கறையின்மையினால்
குறள் கூறும் நெறிகளை நாம் கடைபிடிக்கத் தவறிவிட்டோம் என்று கருதிடவும் கூடும்.  அந்நெறிமுறைகளின் பெரும்பகுதி,  தமிழர் மட்டுமல்லாமல் உலகமாந்தர் அனைவரும் ஏற்கத்தக்கதாக விளங்குவதால் இக்காலகட்டத்திலாகினும் நாம் அதனைப் பின்பற்றுவது நலம்பயக்கும்.

திருக்குறள் என்னும் பெயரில் கூட புதுமை இருப்பதைச் சுட்டிக் காட்ட வேண்டும். குறள் என்றால் குறுகியது- குள்ளம்- குட்டி எனப் பொருள்படும்.
திருக்குறள் என்றால் திருவாளர் குட்டி என்பதே. இந்நூலை இயற்றியதாகக் கருதப்படும் திருவள்ளுவர் நம்மைப்போல் மனிதரே. கடவுளின் அவதாரமாகவோ பிரிதிநிதியாகவோ அவரும் தன்னை முன்னிருத்தவில்லை.
யாரும் கருதவும் இல்லை. கடவுள் சொல்லிதான் திருக்குறள் இயற்றப்பட்டதாக கதைகள் கூட இல்லை. இதுவே அதன் தரத்திற்கும் மதிப்பிற்கும் தக்கவாறு பரவலாகாமல் போகக் காரணமாக இருக்குமோ
என்று கருதவும் இடம் உண்டு. இதை அறிந்தோ என்னவோ சிலர் அவரை தெய்வப்புலவர் என்று கூறத் தலைப்பட்டனர்.இன்னும் சிலர் அவர் வாழ்வில் நடந்த நிகழ்வுகள் என்று பல கதைகள் புனைந்து மகிமைப் படுத்தவும் முனைந்துள்ளனர். இவைகள் எதுவும் எடுபடாமல் போனதற்குக் காரணமே
வள்ளுவர் என்ற சாதாரண மனிதரும் அவரால் உருவாக்கப்பட்ட திருக்குறளுமே என்றால் மிகையாகாது.

திருக்குறளில்
படைப்புக் கொள்கை,
முற்பிறவி,
மறுபிறவி,
பாவமன்னிப்பு,
அதிர்ஷ்டம்,
முக்தி,
கைத்தொழல்,
மண்டியிடல்,
மன்றாடல்,
வேண்டிக் கொள்தல்,
வரம் பெறுதல்,
சரணடைதல்
என்பனவாகிய சமயக் கருத்துகள் எதுவும்
காணப் பெறாமை ஈண்டு நினைவு கூறல் வேண்டும்.

சமுதாயவாழ்வுக்கும் தனிமனித வாழ்வுக்குமான அறிவுரைகளும் அறவுரைகளுமே இருக்கும். தவம், துறவு, நிலையாமை, ஊழ் என்னும் அதிகாரங்களில் கூட சமயச் சார்பின்றி சடங்குகளற்ற சமுதாயத்திற்கு ஏற்ற மெய்யியல் கருத்துகளே வலியுறுத்தப் படுகின்றன.

ஊழ் என்பது முற்பிறவிபயன் என்றில்லாமல் இயல்பான இயற்கை நிகழ்வே என்கிறார். அது நல்லதாகவும் இருக்கலாம் கெட்டதாகவும் இருக்கலாம்.
அதனை தடுத்தல் எளிதன்று; பெருவலி மிக்கது. ஆகவே நல்லது நடக்க மகிழ்ச்சி அடைபவர் கெட்டது நடக்கும்போது மட்டும் துயரம் கொள்வது எதற்கு என்று திருவள்ளுவர் வினவுகிறார். ( குறள் 379 ).

அவ்வாறே படைப்புக் கொள்கையை மறுக்கும் தன்மையில் 
“இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின்
பரந்து கெடுக இவ்வுலகு இயற்றியான்” (குறள்1062)
என்று பிச்சை எடுத்து ஒருவன் உயிர் வாழ வேண்டியிருக்குமானால்
அந்நிலையை உருவாக்கிய இவ்வுலகைப் படைத்தோன் ஒருவன் இருப்பானானால் அவன் இல்லாமல் போகட்டும் என்று படைப்புக் கொள்கையை மறுதலிக்கிறார்.

நிலையாமை குறித்து சொல்லும் போதும் உயிர் உடம்பு இரண்டின் இயற்கைத் தன்மைகளைக் கூறுகிறாரே அல்லாமல் மறுபிறவி இருப்பதாக குறிக்கவில்லை. அவ்வாறே முக்தி என்றும் மோட்சம் என்றும் கூறப்படும்
வீடுபேற்றைப் பற்றியும் எதுவும் கூறாமல் தவிர்க்கிறார். அறம் பொருள் இன்பம் என்பவே வாழ்க்கையின் முக்கூறுகள்; வீடு எனும் நான்காவது பகுதி வாழ்வில் உண்டு என்னும் சமயக்கருத்தினை தவிர்த்த பாங்கினை
எண்ணிப்பார்த்தல் வேண்டும்.

அவருக்கு உடன்படாத, தமிழரின் பண்பாட்டிற்கு ஒவ்வாத, வேற்றார் கொள்கைகளையும் கூட நளினமாக மறுதலிக்கும் போதிலும்; திறந்த மனதினராய்
எப்பொருள் எத்தன்மைத்தாயினும் ( குறள் 355 )
அதனை யார் யார்வாய் கேட்பினும் ( குறள் 423 )
அப்பொருளின் மெய்ப்பொருளை உணர்வதே உண்மையறிவு
என்று தம் கொள்கைகளுக்கு மாறான
“கேளாரும் கேட்டு உணரத்தக்க” (குறள்-643) சொற்களால்
“மாசற்ற சில சொல்லல்’ (குறள்-649) எனும் முறையில்
திருக்குறளை வடிவமைத்தது அருமையினும் அருமை.


இத்தனைப் பெருமைமிக்க திருக்குறளை இயற்றிய திருவள்ளுவர் சில குறள்களை வினாவாகவும் சிலவற்றை விடையும் வியப்பும் கூடிய வினாவாகவும் எழுதியுள்ளமை காணலாம். 1330 குறள் பாக்களில் 103 குறள்கள்
இவ்வாறு அமந்துள்ளன. 
‘இன்பம் கூட்டும் வினாக்கள்’ 
‘பொருள் சேர்க்கும் வினாக்கள்’ 
‘அறம் வளர்க்கும் வினாக்கள்’ என்னும் பகுதியில் பட்டியல் இட்டு அவைகளுக்கு விளக்கம் கூறப்பட்டுள்ளது.

இது திருக்குறளுக்கான முழு உரை நூல் அல்ல.
விளக்கங்கள் விரிவானதாக இல்லாமல், முடிந்தவரை சுருக்கமாக
இந்நூல் எழுதப்பட்டுள்ளது. மேலும் இன்பத்துப்பால் வினாக்குறள்களுக்கான விளக்கம் மட்டும் புதுக்கவிதை நடையில் தரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அறம்-பொருள் எனும் அதிகாரங்களில் உள்ள வினாக்குறள்களுக்கு
கூடியமட்டும் மற்ற குறள்களின் துணைகொண்டே விளக்கம் தரப்பட்டுள்ளது.

மேலும் உலகு என்று முடியும் இருபது குறள்களுக்கும் அரிது என முடிவுறும் இருபது குறள்களுக்கும் நன்று என முடிவுறும் இருபது குறள்களுக்கும் புதுக்கவிதை நடையில் முறையே
‘குறள் உலகு’
‘குறள் அரிது’
‘குறள் நன்று
என்னும் பகுதியில் பொருள் கூறப்பட்டுள்ளது.

திருக்குறள் என்பது ஒர் ஆழ்கடல்.
அதில் மூழ்கி முத்தெடுக்கும் செயலே உரை எழுதுவது அகும். பல்வேறு அறிஞர் பெருமக்கள் அரும் முயற்சியினால் பலதரம் கொண்ட உரைநூல்கள் வெளிவந்துள்ளன. இவைகளுக்கிடையே சிலகுறள்களைமட்டும் தேர்ந்தெடுத்து என் அறிவுக்கு எட்டியவரை எழுத எடுத்துக்கொண்ட எளிய முயற்சியே ‘திருவள்ளுவர் அருள் வாக்கு’ என்னும் என்னும் தலைப்பில் 
இதில் காணும் கருத்துகள் சில மற்ற உரைகளுடன் பொருந்தியோ பொருந்தாமலோ இருக்கலாம். ஆயினும் அவை வாசகர்களுக்கு ஏற்புடையதாக இருக்கும் என்னும் நம்பிக்கையுடனே இந்நூல் பதிப்பிக்கப்பட்டுள்ளது.

இவற்றுடன் திருக்குறளில் திரட்டிய தீந்தமிழ்ப் பெயர்கள் என்னும் பகுதியில் தூயத் தமிழில் பெயர் சூட்ட வேண்டியதின் காரணங்களை விளக்கி திருக்குறள் என்னும் மாபெரும் இலக்கியத்திலிருக்கும் சொற்களைப் பயன்படுத்தி பெயர்வரிசைப் பட்டியல் ஒன்றும் தரப்பட்டுள்ளது. தமிழ் அன்பர்களுக்கு மிக்கப் பயன்படும்.

இந்நூல் எழுதிட எனக்கு உறுதுணை புரிந்த
என் வாழ்க்கைத் துணைவி அருள்மீனா,
வெளியிட ஊக்கம் அளித்த நண்பர் திரு.வேனில்,
பதிப்பதில் எழுத்துப்பிழை களைந்த நண்பர் திரு. கவிஞர் அறிவன்,
எல்லாவற்றிலும் மேலாக அணிந்துரை வழங்கி சிறப்பித்த
அய்யா திரு. கோவை ஞானி
முதலான அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றியினைத்
தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.
வாசக அன்பர்கள் இதனைபடித்து பயனுறுவர் என்னும் நம்பிக்கையுடன் வணங்கி விடைபெரும்………..

அன்பன்
அருள் பேரொளி













குறள் உலகு

1


அகரமுதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு


கடவுள் வாழ்த்து---1

(இறைநலம்)



அகரம் முதலான எழுத்துக்கள்
உயிராய் மெய்யாய்
உயிர்மெய்யாய் மட்டுமல்ல
ஆண்எழுத்து பெண்எழுத்து
அலிஎழுத்து ஆய்தஎழுத்து
பெருஎழுத்து பேசாஎழுத்து
மூலஎழுத்து மூளிஎழுத்து
போலிஎழுத்து பொன்எழுத்து
தலைஎழுத்து கைஎழுத்து
என எத்தனையோ!

எழுத்தின் மதிப்பு எதற்கும் இல்லை
சுவர் கிறுக்கல்கள் – குகை ஓவியங்கள்
கல்வெட்டு – செப்பேடு
ஆணை – ஆவணம்
ஓலைச்சுவடி – குறுவட்டுத் தகடு
இவை எழுத்தின் அதிகாரங்கள்

எழுத்து ஆதியில் இருந்ததா?
யாராய் இருந்தது? யாருடன் இருந்தது?
எப்படி எழுந்தன இத்தனை எழுத்துகள்?
பேரண்டப் பெருவெடிப்பின் ஒரு பாகம்
ஆதிதீயின் குடும்ப உறுப்பினர்
உலகம்
இங்கே எழுத்துகளின்
ஆதாரம் – அடிப்படை – முதலீடு
ஆதி பகவு

அணுவுக்கு அணுவான அணுகுதற்கு அரிதான
எங்கும் நிறைந்த எதிலும் உறைந்த
இயற்கை – இறை – நீ - நான்




2
இருமை வகைதெரிந்து ஈண்டறம் பூண்டார்

பெருமை பிறங்கிற்று உலகு


நீத்தார் பெருமை---23

(பொதுநலம் புரியும் பெரியோர் பெருமை)

பிறப்பு இறப்பு
ஆண் பெண்
இரவு பகல்
நன்மை தீமை
உறவு பகை
உயர்வு தாழ்வு
எல்லாமே இரண்டிரண்டாய்!
இயற்கைத் தன்மை
இருமைத் தத்துவம்

உணர்ந்து அறிந்து தெரிந்தவர்
உலகில் அறம் செய விரும்புவர்
உலகிற்கும் அவருக்கும்
அதுவே பெருமை

3


சுவை ஒளி ஊறு ஓசைநாற்றமஎன்றுஐந்தின்

வகைதெரிவான் கட்டே உலகு

நீத்தார் பெருமை---27


ஐம்புலன் பூட்டியத் தேர்
உடம்பு
வாய் கண் மெய் செவி மூக்கு
குதிரைகள்
சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம்
கொள்ளு குணம்

வாழ்க்கை
மேடுபள்ளப் பாதை

உணர்ந்து அறிந்து
ஐந்தினையும்
அடக்கத் தெரிந்தவன்
அடைவான் இலட்சியம்

4
கைமாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என்னாற்றும் கொல்லோ உலகு



ஒப்புரவு அறிதல்---211

(உலக நடை மற்றும் சமூக கடமை அறிதல்)

அகிலத்தின் அமிழ்தம்
உணவுக்கு உணவாகும் உணவு
வானம் வழங்கும் வான்
மேல் செய்யும் மேன்மை
மழை – மாரி

வறண்டால்
வளம் சாயும்
பொய்த்தால்
பசி மாய்க்கும்
தவறினால்
தவமும் தானமும் தங்காது
வராவிடின்
வந்தாரை உபசரிக்க இயலாது

எதிர்உதவி நோக்காமல்
நன்றி தூறி
கொடை பெய்து
கடமை பொழியும்
மழைக்கு
மக்கள் ஆற்றும் நன்மை என்ன?

ஒன்றும் இல்லை.

இனியேனும்
மேகத்துக்கு சாமரம் வீச
சாகாமரம் வளர்ப்போம்

5
நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்

பெருமை உடைத்திவ் வுலகு

நிலையாமை---336

(இயற்கை நியதி)

மானிடமே!
மனதில் கொள்

செல்வம் – பொருள்
சொல்லாமல் செல்லும்
நாள்
உயிர் அறுக்கும் வாள்

நில்லாதவற்றை
நிலையென கருதும்
ஒரு பொழுதும் வாழத்தெரியாத
உன் எண்ணங்கள் கோடிகோடி யாயினும்
ஒன்று மட்டும் உறுதி
இறப்பது

முட்டை உடலில்
உடல் கூட்டில்
இருந்த உயிர்
பறந்து போனால்
திரும்பி வராது
தெரிந்து கொள்

நேற்று இருந்தவன் இன்றில்லை எனினும்
அவன் நல்வினைப்புகழ் பாடும்
இவ்வுலகப் பெருமை

6

இன்சொலால் ஈத்தளிக்க வல்லாற்குத் தன்சொலால்
தான்கண் டனைத்திவ் வுலகு

இறைமாட்சி---387
(அரசியல் இலக்கணம்)

மண்ணாளும் மன்னவன் மாண்பு
நெறிமுறை தவறா நேர்மை
சரிவர ஆளும் சீர்மை

காட்சிக்கு எளியனாய்
கடுஞ்சொல் அகற்றி
இன்சொல் ஏற்றி
மக்கள் குறை அறிந்து
வேணது செய்யும் வேந்தன்
ஆணைகள் யாவும்
ஆவணம் ஆகும்

அவனே
விரும்பிய வண்ணம்
திரும்புதல் காண்பான்
உலகம்

7

செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கும் உலகு



இறைமாட்சி---389


உயர்வுக்கு உரமாகும்
உறுதிமிக்க அறிவுரை
உண்மை கசப்பதுவாய்
காதுகளை உறுத்தினும்
வெறுக்காமல்
பொறுக்கும்
செறுக்கிலா
பண்புடைய தலைவன்
வெண்குடை கீழ்
தங்கும் மண்ணுலகம்

8


எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மோடு

கொள்ளாத கொள்ளாது உலகு

தெரிந்து செயல்வகை---470

(செயல்களை ஆராய்ந்து செய்யும் வகை)


நீ ஏற்றுக் கொள்ளாத செயலை
உலகும் ஏற்காது
ஆதலால்
தரமும் தகுதியும் சரியாமல்
எவரும் இகழ்ந்து சிரியாமல்
காரிய கவனம் சிதறாமல்
பழிச்சொல் ஏதும் வாராமல்
செய்தலே என்றும் சிறந்தது

தெரிந்து
தெளிந்து செய்தால்
தோல்வி கிடையாது
தெரியாதாயின்
தெரிந்தவரிடம்
தெளிவு பெறு

ஆதாயம் இன்றேல்
அழிவு உற்ற
அறிவு அற்ற செயலாகும்

தக்கன தவறாதே
தப்பெனில் செய்யாதே
ஆய்ந்தறிந்து ஆரம்பி
ஆரம்பித்தபின் ஆராய்தல்
அவலம்

9


நாடொறும் நாடுக மன்னன் வினைசெய்வான்

கோடாமை கோடாது உலகு

தெரிந்து வினையாடல்---520

(மனிதவள மேலாண்மை)


அரசு
திட்டங்களும்
சட்டங்களும்
தீட்டினால்
மட்டும் போதாது

நடைமுறை என்னென்று
நாள்தொறும்
கணிக்க வேண்டும் - கண்
காணிக்க வேண்டும்

அதுவும்
ஊடால் இருக்கும்
ஊழியர் உள்ளம்
ஊனப்படாமல்

அப்போது
உலகினர்
வாட்டம் போகும்
வாழ்க்கை
மட்டம் உயரும்
இது
மேலாண்மை ஆளரின்
மேம்பாட்டு முறையும் ஆகும்

10


குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்

அடிதழீஇ நிற்கும் உலகு

செங்கோண்மை---544

(சிறந்த அரசாட்சி)

அரசு அதிகாரம்
கைக்கோல்

சீர்தூக்கி நேர்நிற்கும்
துலாக்கோல்
உதவிக்கு ஓடிவரும்
ஊன்றுகோல்

காப்பாற்றும் போது
கம்பு
அதட்டும் போது
பிரம்பு
நிலை நிறுத்தும்
கொழுகொம்பு

கோடையிலும் மழையிலும்
கொடைப்பிடி
ஓடையிலும் வெள்ளத்திலும்
படகுத் துடுப்பு
ஏடெழுதி ஆணையிடும்
எழுதுகோல்

பொது நன்மைக்கு
புதுப்புது உருவெடுக்கும்
செங்கோல்
ஏந்திய
மந்திர(ரி)க் கோனுக்கு
மாநில மக்கள்
மதிமயங்காமலே
கதியென கிடப்பர்

11


கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை

உண்மையான் உண்டிவ் வுலகு

கண்ணோட்டம்---571

(இரக்கம் காட்டும் அருட்குணம்)




பண்ணோடு பாவும்
இசை போல்
பரிவு காட்டும்
பார்வை

இரக்கம் சுரக்கும்
கண்களுக்கு
அணிகலம்

உண்மையில்
உலக உயிர்கள்
வாழ்வதே அதன்
அழகில்தான்


12


கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு
உரிமை உடைத்திவ் வுலகு
கண்ணோட்டம்---578




நஞ்சு உண்ணவும் தயங்காத
நயத்தக்க நாகரிகம்
மனமொத்த மனிதநேயம்
இளகிய இதயம்
இதனை
நலிவென கருதி
ஏய்க்க
எளிதென எண்ணுவர்
கயவர்

கடுமை காட்டின்
கருமம் சிதையலாம்

கடமையில் கருத்துடைய
காரியத்தில் கண்ணுடைய
கனிவுடை வல்லார்க்கு
விளையும் வினையால்
உலகே உரியதாகும்

13


வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை

தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு

ஆள்வினையுடைமை---612
(விடாமுயற்சி)

விடாமுயற்சி
விடாது காக்கும்
திருவினை ஆக்கும்

தெய்வம் ஆனவர்க்கும்
செல்லுபடி ஆகாதவை
செயற்கு அரியதையும்
செய்து முடிக்கும்

தணியாத ஆர்வம்
தளராத முயற்சி
இயற்கை இன்னலையும்
இல்லாது செய்யும்

தொடங்கிய பணியை
தொடராமல் விட்டாரை
தொடரும் வாழ்வில்
தொடராது உலகம்

14

எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம்
வேண்டாரை வேண்டாது உலகு
வினைத்திட்பம்---670
(செயல் உறுதி)

செயல் உறுதி
மன உறுதியே - அது
துன்பத்தைத் தராது
துயரத்தால் துவளாது

சொல்வது எளிது
செய்வது கடினம் - செயல்
முடிப்பது தீரம்
கெடுப்பது துயரம்


எத்தனை வலிமை
சொத்தென இருந்தும்
எண்ணியது எய்தும்
திண்ணிய நெஞ்சுரம்
பதிக்காத பேர்களை
மதிக்காது உலகம்

15

கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை
விடாஅர் விழையும் உலகு
பழைமை---809
(பாரம்பரிய நட்பு)

பாரம்பரிய நட்பு
பழகிய நட்பு
பழைய நட்பு – அது
உரிமை கொள்ளும்
உடைக்காது
பெருமை பேசும்
பொசுக்காது

கேட்காமலே
நட்பின் உரிமை
நற்செயல் புரியும்

புண்பட வைப்பினும்
பண்புடன் சகிக்கும்
அறியாத உரிமை என்று

உறவு கெடாமல்
உருகிடும் அன்பால்
தவறே செய்யினும்
தள்ளாத நட்பை
கொண்டுள்ளோரை
கொண்டாடும் உலகம்

16

அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை
இன்மையா வையாது உலகு
புல்லறிவாண்மை---841
(அறிவற்றத் தன்மை)

சொற்ப அறிவு
அற்ப அறிவு

அறிவிலார்
பிழையும் பகையும்
அறியாதது ஏதும்
இல்லை எனும்
இறுமாப்பு

வறுமைக்கும் வறுமை
அறிவிலாமை

எது இல்லை எனினும்
மதி இல்லை எனில்
மரியாதை தராது
உலகம்


17

பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன்
தகைமைக்கண் தங்கிற்று உலகு
பகைத்திறந் தெரிதல்---874
(பகைமை என்பதை ஆராய்தல்)

தீங்கற்றப் பகையும்
பாங்கற்றத் தன்மையால்
விரும்பிடல் ஆகாது
விளையாட்டு ஆயினும்

அமைதி நாடும்
அரும்பண்பளர்
பகைமை மறுத்து
நட்பை வளர்ப்பர்

பகையினை மாற்றும்
வகையறிந்த வல்லவர்
தகைமை உணர்வால்
வாழ்கிறது உலகம்

18

இளிவரின் வாழாத மானம் உடையார்
ஒளிதொழுது ஏத்தும் உலகு
மானம்---970
(தன்னிலையில் தாழாமை)


மானம்
மானிடம்
கவரிமானிடம்
கற்கவேண்டிய பாடம்
புகழொளி மாடம்

குன்றிமணி அளவே
குன்றினாலும்
குன்றுமலை அளவாய்
குறைந்திடும் மதிப்பு

மானம்
உயிருக்கு பிணை
மானக்கேடு
மயிருக்கு இணை

இழிவு வரின்
மானம் உடையார்
மனம் உடைவார்
மரணம் அடைவார்
அவர் பேர்புகழ்
ஏற்றும் போற்றும்
உலகம்

19

நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்
பண்பு பாராட்டும் உலகு
பண்புடைமை---994
(இளகிய மனமுடைமை)


பகைவர்க்கும் அருளும்
பரந்த நோக்கம்
அடுத்தவர் துன்பம்
தடுத்திடும் தன்மை
பண்புடைமை

அன்புடையர் ஆகார்
அணுகுதற்கு அரியர்
அரம் போல் கூர்மை
அறிவுடையரேனும்
மரம் போல் மழுங்கி
மதிப்பற்றுப் போவார்
பண்பிலாதார்

இரக்க இதயம்
இல்லை எனாது
இனிதாய் உதவும்

பண்பட்ட மென்மனம்
விண்முட்டும் உயர்குணம்
உடையோரை
பயன்கருதி பாராட்டும்
உலகம்

20

குற்றம் இலானாய்க் குடிசெய்து வாழ்வானைச்
சுற்றமாச் சுற்றும் உலகு

குடிசெயல்வகை 1025
(குடும்பத்தை மேன்மைப்படுத்துவது
அல்லது வழிநடத்துவது)
மேம்படுத்த
வழிநடத்த
காப்பாற்ற
கரையேற்ற
உறுதிகொண்ட
குடும்பத் தலைமை
பருவம் பாராமல்
கருமம் செய்தால்
பெருமை கொள்ளும்
குடும்பம்

பற்று விடாமல்
குற்றம் இல்லாமல்
முற்றும் செய்யும்
அவரை
எம் சுற்றம்
என் சுற்றம்
என சுற்றும்
உலகம்


குறள் நன்று

1

அறன்எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்பது இல்லாயின் நன்று

இல்வாழ்க்கை---49



இல்வாழ்க்கை
கணவன்
மனைவி
மக்கள்
சுற்றத்துடன்
இனிதாய் நடத்தும்
குடும்ப வாழ்க்கை
அது
குறை காணமுடியா
நிறை வாழ்க்கையாயின்
நன்று

2

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று
செய்நன்றி அறிதல்---108

நல்லவை புரிந்த
நல்லோர் செயலை
என்றும் மறப்பது
நன்றல்ல அறிக.

தீயவைச் செய்த
தீயோர் செயலை
அன்றே மறப்பதுவே
நன்று

3
அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்
பெண்மை நயவாமை நன்று
பிறனில் விழையாமை---150
(பிறருடைய மனைவியை அடைய விரும்பாமை)

அறம்எனும் நெறிமுறை
அனேகம் உண்டு
அதனில் ஒன்று
அடுத்தவர் மனைவியை
அடைய எண்ணாமை.

நன்னெறி தவறி
நடப்பவராயினும்
பெண்வெறி கொண்டு
பிறன்மனை நயவாமை
நன்று

4

பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று
பொறையுடைமை---152
(பொறுமை)


அன்னியர் ஆற்றிடும்
அடாத செயலை
மன்னித்து விடுதல்
மாபெரும் குணம்தான்
ஆயினும்
மறந்து விடுவதோ
அதைவிட
நன்று

5

திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து
அறன் அல்லசெய்யாமை நன்று

பொறையுடைமை--157


தீங்கு செய்தவரையும்
தாங்குதலே பொறை

தீங்கின் தீவிரத்தால்
தாங்கொணா துன்பம் தந்த
தகுதி இல்லா
தன்னலம் மிகுந்தவனை
தண்டித்தல் – கண்டித்தல்
தவறாதாயின்
நேர்மை - நீதி
நேரும்படி செய்வதே
நன்று

6

நயன்இல சொல்லினும் சொல்லுக சான்றோர்
பயன்இல சொல்லாமை நன்று
பயனில சொல்லாமை---197


அன்பின்றி சொற்களால்
அம்பென தைக்கலாம்
ஆதரவு காட்டாமல்
ஆர்பரித்து முழங்கலாம்
பரிவு பாராமல்
படபடவென பொரியலாம்
அன்றி
திறமை குறைவினால்
திக்கியும் பேசலாம்
ஆயினும்
சான்று என்று காட்டிட
ஒரு சருகு பயன் இன்றேல்
எதுவும் சொல்லாமல் இருப்பதுவே
நன்று


7

நல்லாறு எனினும் கொளல்தீது மேல்உலகம்
இல்எனினும் ஈதலே நன்று
ஈகை---222
(இரப்போர்க்கு இல்லை என்னாது கொடுத்தல்)

மனம் மகிழ ஆற்றும்
நலம் புரிவது ஆயினும்
இரவல் பெறுவது
தீது ஆதலின்
இரந்து வாழ்தல்
சிறந்தது அன்று

இல்லாத கொடுமையால்
இரந்து வருவோர்க்கு
இரக்கம் காட்டி
இருப்பதில் கொடுப்பதால்
உயரிய உலக
வசதியும் வாழ்க்கையும்
இல்லாமல் போனாலும்
ஈவதே நன்று

8
தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று
புகழ் 236

போற்றத் தக்க
ஏற்றம் மிக்க
இணைஈடு அற்ற
இறவா நிலை
உடையது புகழ் அதை
அடைவது மனிதர்
கடனென தெரிந்து
இசைபட வாழ்தல் உயிர்க்கு
விசை என்று அறிவோம்

முன்னின்று தோன்றி
முயன்றிடும் செயல்களில்
என்றென்றும் நிலைக்கும்
இயல்புடைய புகழை
ஈட்டிடல் வேண்டும்

இன்றேல்
இயலாது என்று
முயலாது இருப்பது
நன்று

9
அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத்து உண்ணாமை நன்று
புலால் மறுத்தல்---259


வேட்டல் என்னும்
வேள்வித் தீயில்
வெட்டப்படும் உயிர்கள்
கொட்டப்படும் குருதி
பொசுக்கப்படும் பொருள்கள்
மசிக்கப்படும் மலர்கள்
ஆயிரம் ஆயிரம்
ஆனாலும் அதனை
பொதுநலம் என்பர்
மதிநலம் இல்லார்

துறவறம் பூண்ட
தூயமனம் கொண்டோர் எனில்
ஒரு உயிரையும் கொல்லாமல்
ஊனுணவு உண்ணாமல்
இருப்பதே நன்று

10
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று
வாய்மை---297
(உண்மையே பேசுவது)

வாய்மைஎனப்படுவது
தீமை இல்லாமல்
சொல்லுதல்

பொய்மையும்
வாய்மையாகும்
குற்றமில்லா நன்மை
கொட்டிக் கிடந்தால்

பொய்யாமை
புகழை ஈர்க்கும்
அறமும் சேர்க்கும்
பொய்யாமை என்னும்
வாய்மை உண்டெனில்
அறம்பிற செய்யாமை
போயினும் நன்று

11
இணர் ஏரி தோய்வன்ன இன்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று
வெகுளாமை---308
(கோபம் கொள்ளாதிருத்தல்)


சினம்
சேர்ந்தாரைக் கொல்லும்
தன்னைக் காக்க
சினம் காக்க

சுடர் விட்டு எரியும் நெருப்பில்
உடல் பட்டது போல்
இடர் செய்தவர் மீதும்
கோபம் விடல் நன்று


12
ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்
பின்சாரப் பொய்யாமை நன்று
கொல்லாமை 323


அறவரிசையில்
ஆதியில் நிற்பது கொல்லாமை
அடுத்து வருவது பொய்யாமை
அதன் பிறகுதான் எல்லாமே
ஆதலின்
கொல்லுதல்
பொய் சொல்லுதல்
இல்லாமல்
இருப்பது
நன்று

13
எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானெல்
மற்றன்ன செய்யாமை நன்று.
வினைத் தூய்மை---655
(குற்றமற்ற செயல்கள்)

என்ன காரியம் செய்தோம் என்று
எண்ணி வருந்தும் செயலை
என்றென்றும் செய்யாதே

ஒருக்கால் செய்திடின்
மறுக்கால் செய்யாமை
நன்று

14
செய்தேமம் சாராச் சிறியவர் புன்கேண்மை
எய்தலின் எய்தாமை நன்று
தீ நட்பு---815
(தீமை உண்டாக்கும் நட்பு)


தீய குணம் கொண்டோர்
தூய நண்பர் ஆகார்
ஒப்பில்லா நட்பது
ஒன்றுக்கும் உதவாது

துன்பம் நேர்கையில்
துணைக்கு வராதது
பாதுகாப்பு இல்லாதது

பலப்பட பேசிடும்
பண்பற்றார் நட்பைப்
பெறுதலின் பெறாமையே
நன்று


15
ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே
கெட்டான் எனப்படுதல் நன்று
மானம்---967

துதிப்பது வேண்டாம்
மதிப்பது வேண்டும்
மரியாதை என்ன என்று
தெரியாத மனிதர் பின்
சேர்ந்து ஒருவன் வாழ
தேர்ந்து எடுக்கும் நிலைவரின்
கெட்டிடும் மானம் என்று - நலம்
கெட்டுப் போவதோ - உயிர்
விட்டுப் பிரிவதோ நன்று


குறள் அரிது
1

தனக்குஉவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது
 கடவுள் வாழ்த்து---7

தப்பின்றி வாழும்
ஒப்பற்றத் தன்மை இன்றேல்
மனக்கவலை மாற்றல்
அரிது

2
அறஆழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்
பிறஆழி நீத்தல் அரிது 
கடவுள் வாழ்த்து---8

நன்நெறி ஆழ்ந்த
பொன்மனம் இன்றேல்
பிறவிக் கடலில் நீந்துதல்
அரிது



3
விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது
 வான் சிறப்பு---16

மழைத்துளி
விழாவிடின்
மரம் மட்டும் அல்ல
புல்துளிர்ப்பதும்
அரிது


4
குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது
 நீத்தார் பெருமை---29

குணம் என்னும்
உயரிய பண்பு
கொண்டவர் சினம்
கணம்கூட இருப்பது
அரிது


5
செய்யமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது 
செய்நன்றி அறிதல்---101

எதிர்நோக்கு இல்லாமல்
உயர்ந்தோர் செய்யும்
உதவி
கைம்மாறு கருதா வானமும்
அகழ்வாரைத் தாங்கும் நிலமும்
ஆற்றும் தன்னார்வத் தொண்டினும்
பெரிது
அரிது


6
பாத்தூண் மரீஇ யவனைப் பசிஎன்னும்
தீப்பிணி தீண்டல் அரிது
 ஈகை---227

பகுத்துண்டு
பல்லுயிர் ஓம்பும்
பொதுமைக் கொள்கை
வகுத்து வாழும்

பசிப்பிணி தீண்டா
சமத்துவம் தழைக்கும்
சமுதாயத்தில்
தனியுடைமை
கொடுமை
அரிது


7
நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்
வித்தகர்க்கு அல்லார் அரிது 
புகழ்---235

உயிர் போயினும்
ஒளிரும்
மிளிரும்
சங்கு போல்
மரணத்திலும்
மறையா புகழ் பெறுதல்
அறிவுடை நல்லோர்க்கு
அல்லாமல்
பிறிதுடையோர்க்கு
அரிது

8
பொருள்அற்றார் பூப்பர் ஒருகால் அருள்அற்றார்
அற்றார்மற்று ஆதல் அரிது
 அருளுடைமை---248

தொலைத்தது கிடைக்கலாம்
தொடர்ந்து தேடினால் – அது
பொருளாக இருந்தால்

அருளைத் தொலைத்தால்
அரும் முயற்சியினும் –அதனை
அடைவது
அரிது

9
வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது 
ஊழ்---377
(இயற்கை நியதி)

இயற்றிய நீதிக்கு எதிராக
இயற்கை நியதிக்கு மாறாக
எத்தனை கோடி
சொத்துகள் சேர்த்தாலும்
துய்த்தல் அரிது

10
நுணங்கிய கேள்வியர் அல்லார் வணங்கிய
வாயினர் ஆதல் அரிது 
கேள்வி---419
(காதால் கேட்டு பெறும் அறிவு)

அறிவுரை
அறவுரைகளுக்கு
செவிமடுத்து
செயல்படத் தெரியாதார்
அமைதி
அடக்கம்
இன்சொல்
இனிதீன்றல் அரிது

11

எய்தற்கு அரியது இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற்கு அரிய செயல்
 காலம் அறிதல்---489
(காரியம் செய்யத்தக்க காலத்தை அறிவது)

காலம் அறிய
காத்திருக்கும் போது
கைகூடும் வாய்ப்பு வரின்
செய்தற்கு அரியதை
செய்தலே உரியது


12

சிறைநலனும் சீரும் இலர்எனினும் மாந்தர்
உறைநிலத்தோடு ஒட்டல் அரிது
 இடன் அறிதல்---499
(காரியம் செய்யத்தகுந்த இடத்தை அறிவது)


பாதுகாப்பு
சீர்சிறப்பு
ஏதுமில்லா
வாழுமிடம்
சொந்த இடமானாலும்
வசதி இல்லாவிடின்
வசிப்பது அரிது

13

படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார்
மாண்பயன் எய்தல் அரிது
மடியின்மை---606
(சோம்பல் இல்லாது இருத்தல்)

படி என்பது
புகழ்
பெருமை
செல்வம்
மடி என்னும்
சோம்பல் அதனை
சாம்பலாக்கிவிடும்

சோம்பித் திரிபவர்
சிறப்புகளாலே
சீர்பெறல் அரிது

14

சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது
சொல் வன்மை---647
(பேச்சுத் திறமை)

சொற்சுவை
பொருட்சுவை
இரண்டும் கூட்டி

அயர்ச்சி
தளர்ச்சி இல்லாதப்
பதங்கள் பூட்டி

வேண்டியதை
வேண்டியபோது
அஞ்சாமல் பேசுபவரை
வெல்லுவது
யார்க்கும் அரிது

15

போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின்
தேற்றுதல் யார்க்கும் அரிது
மன்னரைச் சேர்ந்தொழுகல் 693
(அதிகாரத்திலுள்ளவர்களிடம் நடந்து கொள்ளும் முறை)


அருமை செயலென்ற
பெருமை மட்டுமே
போற்றுதல் வேண்டும்

சிறுமை காரியம்
சிறப்பென பகர்ந்தால்
சந்தேகம் உண்டாகும்

நம்பிக்கை என்னும்
நாணயம் போயின்
நலிவது உறுதி

அதிகாரிக்கு ஐயம் வந்தபின்
தோற்றவரை தேற்றுதல்
யார்க்கும் அரிது

16
உலைவிடத்து ஊறஞ்சா வன்கண் தொலைவிடத்துத்
தொல்படைக்கு அல்லால் அரிது
படைமாட்சி 762
(சாதனைப் படைப்போர் பெருமை)

ஆதிக்கம் ஓங்க
சாதிக்க வேண்டின்
துன்பம் கண்டும்
துவளாத மனம் கொண்ட
தொண்டர் துணைநலம்
அமைவதே படைநலம்.

போர்க்களத்தில்
துயர்தரும் தோல்வியை
எதிர்கொள்ளும் ஆற்றலும்
வெற்றி ஈட்டிட வைரநெஞ்சமும்
பயிற்சி - முயற்சி
படைத்தவர்க்கு அல்லால் மற்றவர்க்கு
கிடைத்தல் அரிது



19
பலநல்ல கற்றக் கடைத்தும்மனம் நல்லர்
ஆகுதல் மாணார்க்கு அரிது
கூடாநட்பு 823

பலநூல் கற்றப்
படிப்பாளி ஆயினும்
ஒருபோதும் பகையாளி
மனம்மாறி
நலம் புரிவான் என்று
நம்புதற்கு அரிது

20
அறிவிலார் தாம் தம்மைபீழிக்கும் பீழை
செறுவார்க்கும் செய்தார் அரிது
புல்லறிவாண்மை 843


தெரியாதவற்றைத்
தாமே தெரிந்துணரும்
ஆற்றல்

அறிந்தோரை
அணுகித் தெளியும்
செயல்திறம்

இவை இரண்டும் இல்லா
இறுமாப்பு உடைய
புல்லறிவாளரே
அறிவிலார்

அறிவின்மையால்
அடையும் அளவற்றத்
துன்பத்தை
அவர்தம் பகைவர்க்கும்
செய்தல் அரிது

21

ஒன்றாமை ஒன்றியார் கண்படின் எஞ்ஞான்றும்
பொன்றாமை ஒன்றல் அரிது

உட்பகை  886

குடும்பம்
குடியரசு
கூட்டணி
சங்கம்
பேரவை
என்று பல்வேறு அமைப்புகள்
வெவ்வேறு மனிதர்கள்
ஆளுக்கொறு எண்ணங்கள்

ஆனாலும்
பொதுநலம் கருதி
போகிற பாதை
ஒன்றாய் இருந்தால்
நன்றாய் முடியும்

அன்றி
ஒற்றுமை உணர்வின்றி
உட்பகை வளர்ந்திடின்
எப்பொழுதாகினும்
அழிவு வராமல்
இருப்பது அரிது

22
நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்
யாதொன்றும் கண்பாடு அரிது

நல்குரவு 1049
(வறுமை)

நெறுப்புப் படுக்கையிலும்
நிம்மதி உறக்கம்
கிடைக்கப் பெறலாம்
ஆனால்
வறுமைத் தீயில்
வெறுமை வயிறு
வாடிடும் போது
மூடித் திறக்கவும்
இயலுதல்
இமைகளுக்கு அரிது

இன்பம் கூட்டும் வினாக்கள்



1

அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும்என் நெஞ்சு

தகையணங்குறுத்தல் 1081
(நாயகியின் அழகு துன்புறுத்தல்)


அழகு அரசியா?
பழகு மயிலா?
மாதர் குல மணியா?
உன் கன்னத்தின் ஓரம்
காதுகளில் தொங்கும்
கனமான குழைபோல
ஊஞ்சல் ஆடும் என் நெஞ்சம்
உண்மை உணராமல்
திண்டாடுகிறதே!
யார் நீ?

2

கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கம்இம் மூன்றும் உடைத்து

தகையணங்குறுத்தல் 1085
(நாயகியின் அழகில் மயங்குதல்)


பெண்ணே!
உன் கண்கள் என்ன – என்னை
கொல்லவரும் காலனா? – ஏதோ
சொல்லவரும் தூதுவனா? – மருங்கி
துள்ளியோடும் புள்ளிமானா? – இல்லை
மூன்றும் ஒருங்கிணைந்த உருவா?
முழு உண்மையென்ன உன் நோக்கில்?

3

தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு

புணர்ச்சி மகிழ்தல் 1103
(கலவி இன்பத்தை மகிழ்ந்து புகழ்தல்)


ஆசைநாயகியின்
அரவணைப்பில்
அயர்ந்து உறங்கும்
பேரின்பம் வேறெங்கே?

மலரன்ன மனதின்கண்
உலாவரும் உலகெதிலும்
இவ்வுவகை உண்டென்று
எவ்வுலகும் சொல்லாது

4

நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்
தீயாண்டுப் பெற்றாள் இவள்

புணர்ச்சி மகிழ்தல் 1104
வியத்தகு நெருப்பு
விலகிப் போனால் சுடுகிறது
அருகிலிருந்தால் குளிருகிறது
அடியே!
என்ன இது மாயம்?
எங்கிருந்துப் பெற்றாய் இதை?

5

அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல
மறுவுண்டோ மாதர் முகத்து

நலம் புனைந்துரைத்தல் 1117
(காதலியின் அழகை வருணித்தல்)

மனங்கவர் மங்கையின் முகவழகில்
மாசில்லை மறுவில்லை – அது
குறைவதில்லை மறைவதுமில்லை – பின்
எப்படி ஒப்பிட
அன்னவள் முகத்தை
வெண்ணிலவோடு

6

உறாஅதோ ஊரறிந்த கெளவை அதனைப்
பெறாஅது பெற்றன்ன நீர்த்து

அலரறிவுறுத்தல் 1143
(ஊரார் தூற்றுவதால் காதல் உறுதிபடல்)


உறுதியாகி விட்டது
அவள் என்னவள் என்று
எப்படித் தெரியுமா?

ஊரார் எம்வுறவை
ஏசி பேசுகின்றனர்
ஏளனம் செய்கின்றனர்
பரிகசமே
காதலுக்கு பிரகாசம்

7

அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளிந்தசொல்
தேறியார்க்கு உண்டோ தவறு

பிரிவாற்றாமை 1154
(காதலர் பிரிவை பொறுக்க முடியாமை)

அஞ்சாதே என்று
அபயம் அளித்தவர்
வந்திடுவேன் விரைவாக
விடைகொடு போகவென
புறப்படும் நேரத்தில்
போய்விடும் உயிரென
மறுத்திடும் மாதரைத்
தவறு எனல் தகுமோ?

8

துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை
இறையிறவா நின்ற வளை

பிரிவாற்றாமை 1157


பிரியன் பிரிந்ததை
ஊருக்கு உரைத்திடுமோ
கழலும் கைவளை?

9

தொடிற்சுடின் அல்லது காமநோய் போல்
விடிற்சுடல் ஆற்றுமோ தீ

பிரிவாற்றாமை 1159

தொட்டால் சுடும்
தீ
விட்டால் சுடுமா
காமநோய் போல?

10

கண்தாம் கலுழ்வது எவன்கொலோ தண்டாநோய்
தாம்காட்ட யாம்கண் டது

கண் விதுப்பழிதல் 1171
(அழுது அழுது கண் நலம் குறைதல்)


வாட்டிடும் நோயை
வரவைத்த கண்களே! – அன்று
காட்டியது நீதானே – இன்று
காட்டென்று அழுதல் ஏன்?

11

தெரிந்துணரா நோக்கிய உன்கண் பரிந்துணராப்
பைதல் உழப்பது எவன்

கண்விதுப்பழிதல் 1172

கண்களே!
தெரிந்து உணராமல் பார்த்து
பிரிந்து போனதால் நீர்த்து
பரிந்து அழுவதால் யாதுபயன்?

12

பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க்
காணாது அமைவில கண்

கண்விதுப்பழிதல் 1178

ஆதரவு காட்டும்
அளவிலா சொந்தம்
இருந்தும் பயன் யாது?

வருந்தும் கண்களுக்கு
மருந்து நீதானே – உனை
காணாது துடிக்கும் இமைகள்
கண்டதும் அடங்கும் அமைதியில்

13

நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தஎன்
பண்பியார்க்கு உரைக்கோ பிற

பசப்புறு பருவல்---1181
(காம உணர்வால் உடல்நிறம் மாறுபட்டதால் துன்பம்)

நாளையே வருவேன் – வெகு
நாள்பல கடவாது – என
நயம்பட உரைத்தீர் – நான்
நம்பினேன் உம்மை – ஆயின்
என்னானது இன்று ?

பசப்பு நோய் என் மேனியை
வசப்படுத்திக் கொண்டதே
யாரிடம் சொல்வேன் இதை – அன்பே
வேறிடம் ஏது உனை அன்றி ?

14

நாம்காதல் கொண்டார் நமக்குஎவன் செய்பவோ
தாம்காதல் கொள்ளாக் கடை

தனிப்படர் மிகுதி---1195
(தனிமையால் மிகைபட எண்ணுவது)

மனமாற காதலிக்கும் மணாளன்
மனம்மாறி காதலிக்க வில்லை எனில்
என்ன இன்பம் வாய்த்திடும் ?
என்ன நன்மை சேர்ந்திடும் ?

15

பருவரலும் பைதலும் காணான்கொல் காமன்
ஒருவர்கண் நின்றுஒழுகு வான்

தனிப்படர் மிகுதி---1197

உறுத்தும் துன்பமும்
ஊறும் பசலையும்
உணரவிலையா ? – என்
ஒருத்தியை மட்டும்
வருத்தும் காமம்

16

யாமும் உளேம்கொல் அவர்நெஞ்சத்து எம்நெஞ்சத்து
ஓஒ உளரே அவர்

நினைந்தவர் புலம்பல்---1204
(காதலனை நினைத்துச் சொல்லுவது)

நெஞ்சம் நிறைந்த காதலன்
கொஞ்சம் என்னை நினைக்கின்றாரோ
என்ன நினைக்கின்றாரோ?
எனது சொந்தம் அவர்
மனதில் இருப்பது யார்?
எனக்குப் புரியவில்லை
கணக்குத் தெரியவில்லை

17
தம்நெஞ்சத்து எம்மை கடிகொண்டார் நாணார்கொல்
எம்நெஞ்சத்து ஊவா வரல்

நினைந்தவர் புலம்பல்---1205

வெட்கம் இல்லையா ?
தன் மனதிலிருந்து என்னை
துரத்திவிட்டு
என் மனதில் மட்டும்
குடியிருக்கும் அவருக்கு

18

மற்றியான் என்னுளேன் மன்னோ அவரொடுயான்
உற்றநாள் உள்ள உளேன்

நினைந்தவர் புலம்பல்---1206

போகாத உயிருக்கு
சாகாத காரணம்
என்ன தெரியுமா ?
ஆசை மட்டுமா ?
அசை போடவும்தான்.
அன்புடன் வாழ்ந்த
இன்ப வாழ்வுதனை

19

எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தன்றோ
காதலர் செய்யும் சிறப்பு

நினைத்தவர் புலம்பல்---1208

பிரிவின் துயரில்
நான் வைதாலும்
அவர் வெகுளார்.

இதுவல்லவா பரிசு
வேறென்ன பெரிசு ?

20

காதலர் தூதொடு வந்த கனவினுக்கு
யாதுசெய் வேன்கொல் விருந்து

கனவுநிலை உரைத்தல்---1211
(காதலனைக் கனவில் கண்டதைச் சொல்லுதல்)

கனவே !
காதலனின் தூதுவனே !
விருந்து வைக்க விரும்பும்
மாது நான் – வேறு
ஏது செய்வேன்
உனக்கு ?

21

நனவினால் நல்காக் கொடியார் கனவினான்
என்னெம்மைப் பீழிப் பது

கனவுநிலை உரைத்தல்---1217

நினைவில் நீங்கா
நெஞ்சம் நிறைந்தவன்
நனவில் வரா கொடியனாகி
கனவில் வந்து
கலங்க வைப்பது ஏன் ?

22

புன்கண்ணை வாழி மருள்மாலை எம்கேள்போல்
வன்கண்ண தோநின் துணை

பொழுது கண்டு இரங்கல்---1222
(மாலைப்பொழுதில் வருந்துதல்)

மாலைப் பொழுதே !
மருள்வது ஏன் ?
உன் கண்ணில் நீர்
உருள்வது ஏன் ?
கல்நெஞ்சக் காதலனா உனக்கும் ?

23
காலைக்குச் செய்தநன்று என்கொல் எவன்கொல்யான்
மாலைக்குச் செய்த பகை

பொழுதுகண்டிரங்கல் --- 1225
(மாலைப்பொழுதில் வருந்துதல்)


மாலை
மரண ஓலம்

காலை
களித்திட்டக் கோலம்

காலை நகையானது
மாலை பகையானது
ஏன் ?

24

நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்
எவ்வநோய் தீர்க்கும் மருந்து

நெஞ்சொடு கிளத்தல்---1241
(மனத்தோடு பேசுதல்)

நெஞ்சமே!
கொண்டவன் பிரிவுக் கொடுமை
திண்டாடுகின்றேன்
திண்டு ஆடுகின்றேன்
தீயாக சுடுகிறதே மோகம்
தீராத நோயாமே காமம் ?
கூறாயோ ஒரு உபாயம் ?
தீராதோ வந்த அபாயம் ?

25

இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல்
பைதல்நோய் செய்தார்கண் இல்

நெஞ்சொடு கிளத்தல்---1243

என்
நோய்க்கு காரணன்
ஏய்க்கும் நாரன் அவன்
இல்லை இரவில்
தொல்லை அறியாய்
நெஞ்சமே!
நீ
இருந்து ஏதோ
மருந்து கொடுக்கிறாய்
ஆறுதலும் தேறுதலும்
ஆற்றுகிறாய் – ஒரு
மாறுதலும் இல்லையே ஏன்?

26

செற்றார் எனக்கை விடல்உண்டோ நெஞ்சேயாம்
உற்றால் உறாஅ தவர்

நெஞ்சொடு கிளத்தல்—1245

நெஞ்சமே !
விரும்பிப் போனால்
விலகிப் போகிறாரே
வெறுக்க முடியுமா ?

27

உள்ளத்தார் காதல வராக உள்ளிநீ
யாருழைச் சேறிஎன் நெஞ்சு

நெஞ்சொடு கிளத்தல்---1249

யாரைத் தேடுகிறாய்
வெளியே ?
மனமே !
உள்ளத்துள் ஒளிந்திருக்கும்
காதலனையா?

28

மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித்
தும்மல்போல் தோன்றி விடும்

நிறையழிதல்---1253
(அடக்கம் அகலுதல்)

மறைக்கவும் மறுக்கவும்
உரைக்கவும் உணர்த்தவும்
முயன்று பார்க்கிறேன்
இயன்று வரவில்லை
காமத்தை அடக்க
யாமத்தில் யானே
அதுவோ
தும்மலாய் வந்து
விம்மலை வீழ்த்தி
தொகுத்த இடரை
வகுத்து படரும்


29
பெறின்என்னாம் பெற்றக்கால் என்னாம் உறின்என்னாம்
உள்ளம் உடைந்துக்கக் கால்

அவர்வயின் விதும்பல்---1270
(காதலர் ஒருவரை ஒருவர் விரைந்து காண விழைதல்)

அவன்

பெற்ற வெற்றி
உற்ற செல்வம்
இனி எதற்கு ?
இனியவள் உள்ளம்
உடைத்த எனக்கு

அவள்

உன்னிடமல்லவா
இருந்தது என்மனம்
உடைந்தது எங்ஙனம் ?
உன்
வரவோ
தரவோ
உறவோ
ஒன்றிணைக்குமா ?

30

உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்
பொய்த்தல் அறிந்தென் புலந்து

புணர்ச்சி விதும்பல் ---1287
(கலவிக்கு அவசரப்படுவது)

ஆயத்தமாக இருக்கிறது
ஆபத்து இல்லை
கடற்படை காத்திருக்கிறது
கவலை இல்லை

குதி – மூழ்கு – திணறு
பூடகம் இல்லா நாடகம் எதற்கு ?

31

அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே
நீஎமக்கு ஆகா தது

நெஞ்சொடு புலத்தல் --- 1291
(மனதைக் கடிந்து கொள்வது)

உருக்கு உள்ளம்
அவருக்கு உள்ளது
உடன்பட மறுக்கிறார்
உருகாமல் இருக்கிறது
அடங்கிப் போகிறது
அவருக்கு ஆகிறது

இருகிறாய் நீயும்
இதையெலாம் கண்டும்
பொறுக்காமல் ஓடுகிறாய்
போகாதே என்றாலும்
வெறுக்காமல் அவர் நினைவாய்

வெள்ளந்தி மனமே! நீ
எனக்கு ஆகாமல் போனது ஏன் ?

32

கெட்டார்க்கு நட்டாரில் என்பதோ நெஞ்சேநீ
நீஎமக்கு ஆகா தது

நெஞ்சொடு புலத்தல் --- 1293
(மனதைக் கடிந்து கொள்வது)


நன்றி கெட்டவர்க்கு
நண்பரில்லை
என்பதோ நெஞ்சே !

எனை விடுத்து
நாடிப் போனாய்
நாயகன் பின்னாலே ?

33

நோதல் எவன்மற்று நொந்தாரென்று அஃதறியும்
காதலர் இல்லா வழி

புலவி --- 1308
(பிணக்கம் – சிறுபூசல் – ஊடல்)

பொய்ச்சினம் கொண்டு
மெய்கனம் தாங்க
பிணங்குதல் என்பது
இணங்குதல் அன்றோ ?

புலத்தல் நோவுக்கு
கலத்தல் மருந்தூட்டி
வருத்தம் போக்கும்
மருத்துவ மணாளன்
இரக்கம் இல்லாமல்
உறக்கம் கொள்கிறான்

பொல்லாத புலவே !
கொல்லாமல் கொல்லுவதேன் ?

34

யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்
யாரினும் யாரினும் என்று

புலவி நுணுக்கம் --- 1314
(புலத்தலின் போது உண்டாகும் நுணுக்கமான உணர்வுகள்)


கண்ணே!
உன்னிடத்தில் கொண்ட அன்பு
வேறு யாரிடத்தில் கொண்டதிலும்
கூடுதலே தெரியுமா ?


அப்படியா பட்டியல் எங்கே ?
பார்க்க வேண்டும்
யார்யாரிடத்தில் அன்பு கொண்டீர்
என் ஒருத்தியைத் தவிர ?

35

புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு
நீரியைந் தன்னார் அகத்து

ஊடலுவகை --- 1323
(ஊடலால் உருவெடுக்கும் இன்பம்)


நீர் நிலம்
சேரின் சேறு

நீ நான்
ஏர் பூட்டிய ஏறு

புதிர் பூசல்
புதுமை பதுங்கிய பதுமை
நீ
என் பேறு

நாடுமோ
என் மனம்
புதியவள் வேறு ?



‘பொருள் சேர்க்கும் வினாக்கள்’ 
‘அறம் வளர்க்கும் வினாக்கள்’ 
தொடரும்