Friday, December 2, 2016

பாரதிதாசன் என்னும் பாவலன்

பாரதிதாசன் என்னும் பாவலன் - பாடலினால்
பகுத்தறிவு  பரப்பிய தமிழ்க் காவலன்
பாரதிர குரலெழுப்பி பாடியவன் - தமிழர்
பைந்தமிழ்ப்  பகைவரைப் பற்றிச் சாடியவன்

தமிழ்நாட்டை ஆண்டவர்  மூவேந்தர் - தமிழர்தம்
தன்மானம் காக்கமனம் கொண்டவர் பாவேந்தர்
அமிழ்தென்றார் தமிழை கவிஞர் -  அதையுண்டால்
அழியோம் என்றறைந்த அழகுதமிழ் அறிஞர் 

தலைவணங்கா குணங்கொண்ட தீரர்  – ஆயினும் 
தமிழென்றால் தாள்தொடும் தன்மைபூண் டவீரர்
சிலைவணக்கம் இழிவென்ற நாத்திகர் – செந்தமிழே
சிறந்த தெய்வமென தொழுதிட்ட ஆத்திகர்

குடும்ப விளக்கென்னும் காவியம் – இன்பம்
குழைத்த வண்ணச் சொல்கருத் தோவியம்
இடும்பை அகற்றும் மருந்தாக – தந்தார் 
இனிதே உண்ணுதற்கு இல்லறத்தார் விருந்தாக 

வேண்டிய மக்களாட்சி வெற்றிபெற  - சமத்துவ  
வேட்கையால் சாதிமத சமுதாயம் முற்றுபெற  
பாண்டியன் பரிசு படைத்தார்   புரட்சிக்கவி
புதியதோரு லகம்செய்ய  பழமையை உடைத்தார்    

திராவிடர் திருப்பாடல் தொகுத்தார் – புரட்சித்
திருமணம் நடத்திட நன்முறை வகுத்தார்
திராவிடர் வாழவே வளமுடன் – தமிழியக்கம்
தீட்டினார் இன்பம் சூழவே நலமுடன்  

இயற்றியவர்: அருள்பேரொளி (சண். அருள் பிரகாசம்)