Thursday, July 4, 2019

இமயத்தில் எதிரொலித்த இடிமுழக்கம்


இமயத்தில் எதிரொலித்த இடிமுழக்கம்

“வடிவேல் எறிந்த வான் பகை பொறாது,
பஃறுளி யாற்றுடன் பன்மலை அடுக்கத்துக்
குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு
தென் திசை ஆண்ட தென்னவன் வாழி!
சிலப்பதிகாரம் செப்பிடும் செந்தமிழ்ப் பாடலில் காடுகாண் காதையில் கண்டிடும் வரிகள் இவை. வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு ஆண்டான் தென்திசைத் தென்னவன் தமிழன் என்னும் செய்தியை எண்ணிடின் நெஞ்சம் எழுச்சி பெற்று மகிழ்ச்சி உற்றிடும்.


பகைவிலக் கியதிப் பயங்கெழு மலையென
இமையவர் உறையும் சிமயப் பீடர்த்தலைக்
கொடுவரி ஒற்றிக் கொள்கையிற்
கரிகாலன் என்னும் சோழ மாமன்னன், பெருவளத்தான் என்னும் பேர்புகழ் பெற்றவன், பனிமலை இமயத்தில் புலிக்கொடி ஏற்றிய நனிநல்  செய்தியை அடிகளார் இளங்கோ நவிலும் வரிகள் இதனை வரலாறு என்பர்  
.
செண்டு கொண்டுகரி காலனொரு காலி னிமயச்
சிமய மால்வரை திரித்தருளி மீள வதனைப்
பண்டு நின்றபடி நிற்கவிது வென்று முதுகிற்
பாய்பு லிக்குறிபொ றித்தது மறித்த பொழுதே.

சோழ மரபில் வீரம் காட்டி வெற்றிகள் ஈட்டிய முதலாம் குலோத்துங்கன் காலத்தில் செயங்கொண்டார் என்னும் செந்தமிழ்ப் புலவன் எழுதிய இலக்கியம் கலிங்கத்துப் பரணியில் கரிகாலன் பற்றிய குறிப்புகள் உண்டு. இமயத்தில் புலிக்கொடி என்றே பகுதி பிரித்து இயம்புவார் செயங்கொண்டார்.

புலிக்கொடி ஏற்றினான் சோழன் என்றால் “வடபுல இமயத்து வாங்கு வில் பொறித்தான்” என்று இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனை விளம்பிடும் சங்கக்கால இலக்கியம் சிறுபாணாற்றுப்படை. இப்படியாக இமயத்தில் வில் பொறித்த போது இமயச்சாரலில் இருந்தனர்  கனக விசயர் என்னும் ஆரிய அரசர் இருவர் என்றும் அவர்களை  ஆரிய அண்ணல் என்று பதிற்றுப்பத்து பதிகம் பதிவு செய்கிறது. தம்மை வெல்வார் தரணியில் உளரோ என்று தம்பட்டம் அடித்த அவ்விருவரின் செறுக்கை  சேரன் செங்குட்டுவன் சென்று அடக்கினான் என்று சிலப்பதிகாரத்தில் சிறப்பிகின்றார் இளங்கோ.
விற்பொறி  பதித்த இமயத்திலிருந்து கற்கொண்டு வந்து கண்ணகிக்குச் சிலை சமைக்க அடிகளார் அண்ணன் செங்குட்டுவன் சென்றான் வடப்புலம். வென்றான் வடவேந்தர் கனக விசையரை.

கண்ணகி சிலைக்கான கல்லை அவர்தலை ஏற்றி சுமக்கச் செய்தான். கல் சுமந்த கசடர் இருவரும் வில் ஏந்தும் வீரர் வாழ்ந்த  சேர மண்ணில் அக்கல்லை சேர்ப்பித்து சென்றார் என்ற செய்தி சிலப்பதிகாரத்தில் சிலாகித்துச் சொல்லப்படுகிறது.
    
இலக்கியச் சான்றுகள் இவ்வாறு காலந்தோறும் உறுதி செய்திடினும்; தமிழன் இமயச் சிகரம் ஏறிய சரித்திரந்தன்னை வரலாற்று அறிஞர் ஏற்றிடல் வேண்டி, அறிவியல் அடிப்படையில் ஆய்வுகள் செய்து நிறுவுதல் நமது கடமை ஆகும்.

தமிழும் தமிழரும் இந்திய பூபாகம் எங்கும் ஆதியில் எழுச்சியுடன் மகிழ்ச்சியுடன் வாழ்ந்த இனக்குழுவினர் என்று வரலாற்று அறிஞர்கள் ஆய்ந்து அறிந்து அறிவிக்கின்றனர். அதனை ஏற்க மறுத்து எகத்தாளம் செய்தவர்களும் இன்று வாயடைத்து போய் நிற்கும் அளவுக்கு உண்மை உலகம் அறியத் துவங்கிவிட்டது.

இந்திய நாடாளுமன்றத்தில் 1962 ஆம் ஆண்டு மே முதல்நாள் முழங்கப்பட்ட கருத்துகள் சிந்தனை விட்டு அகலாத சீர்மிகு கருத்துகள் ஆகும். திராவிடர்கள் மறக்க முடியாத அந்த முழக்கம் இந்தியா எங்கும் எதிரொலித்தது. அது ஆழிப் பேரலையாய் எழுந்து எரிமலை நெருப்புக்  குழம்பாய் தகித்தது சிலருக்கு. அன்னைத் தமிழ்நாட்டின் அடிமைத் தளை அறுக்க அன்று ஆர்ப்பரித்த குரல் அறிஞர் அண்ணா அவர்களுடையது.
கடற்கரைகளில் வெட்ட வெளிகளில் நகர்ப்புறங்களில், பட்டி தொட்டிகளில், சந்து பொந்துகளில், ஒலித்துக்கொண்டிருந்த  விடுதலைப் பாட்டு , டெல்லிப் பட்டணத்து ஆதிக்கவாதிகளின்  அத்தாணி  மண்டபத்திலே போர்ப்பரணியாக முழங்கப்பட்டது.

வேட்டு முறையை வெறுத்து நாட்டு விடுதலைக்கு வோட்டு முறையே சிறந்தவழி என்ற நம்பிக்கையில் அறிஞர் அண்ணாவின் பரந்த உள்ளம் அன்று நமக்கு உணர்த்தியது.

அவர் டெல்லி மாநிலங்கள் அவையில் குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் அவர்களின் உரைமீது நடந்த விவாதத்திலே கலந்துகொண்டு பேசிய 35 நிமிடப் பேச்சு இந்தியத் துணைக் கண்டத்து வரலாற்றிலே முக்கிய இடத்தைப் பிடித்துக்கொண்டு விட்டது.


தமிழகம் இந்தியாலிருந்து பிரிந்து போகவேண்டும் என்ற குரல் முதன்முதலாக சுதந்திர இந்தியாவின் பாராளுமன்றத்தில் அன்று ஒலித்தது.


“இந்திய யூனியனில் இருந்து தென்னகம் பிரிந்து போக வேண்டுமென்ற அண்ணாதுரையின் துணிவான வாதம், மாநிலங்கள் அவையை ஸ்தம்பிக்கச் செய்து விட்டது.” என்று பம்பாயிலிருந்து வெளிவரும் டைம்ஸ் ஆப் இந்தியா என்ற ஏடு குறிப்பிட்டது

“திமுகழகத் தலைவர் திரு சி.என் அண்ணாதுரை தென்னகத்திற்கு சுய நிர்ணய உரிமை வேண்டும் என்ற கோரிக்கையைத் தெளிவாக எடுத்துரைத்தார். அன்று கூடியிருந்த மாநிலங்களவை திராவுடக் கொள்கைக்காக பாடுபடும் சொல்லாற்றல் மிக்க தலைவரின் பேச்சைக் கேட்டது. தேசியத்திற்கு அவர் ஒரு புதிய விதியைத் தந்தார்“ என்று இந்துஸ்தான் டைம்ஸ் இதழ் கூறியது.


“கொள்கையிலே கொண்ட உண்மைப் பிடிப்பாலும், தனது சக்திவாய்ந்த பேச்சுத் திறமையாலும் அண்ணாதுரை, சந்தேகமின்றி ராஜ்ய சபாவைக் கவர்ந்துவிட்டார்” என்பதாக இந்து பத்திரிகை தலையங்கத்தில்குறிப்பிட்டது..



“ஆட்சி அமைப்பு முறையின் எதிரி என்ற அளவில் அறியப்பட்ட அண்ணாதுரையின் சொற்பொழிவு, என்ன இருந்தாலும் பலமுறை குறிப்பாக வட இந்தியாவிலிருந்து வந்திருந்த பல உறுப்பினர்களை வியப்பில் ஆழ்த்தாமல் இருக்கவில்லை. சிறந்த பேச்சாளர் என்றுள்ள நிலையில் பெயர் பெற்ற அண்ணாதுரை அன்று மாநிலங்கள் அவையில் தன திறமை முழுவதையும் வெளிப்படுத்தினார்” என்று மலையாள நாள் இதழ் மாத்துருபூமி எழுதியது.


முப்பதைந்து நிமிட முத்தான உரையில் சத்தான வாக்கு என்னவென்றால், “இப்போது இந்தியாவின் ஒருபகுதியாக இருக்கிற தமிழ் நாட்டிலிருந்து நான் வந்திருக்கிறேன். நான் திராவிட இனத்தைச் சார்ந்தவன் நான் என்னைத் திராவிடன் என்று அழைத்துக் கொள்ளப் பெருமைப் படுகிறேன். இப்படிக் கூறுவதால் நான் வங்காளிக்கோ, மராட்டியருக்கோ, குஜராத்தியருக்கோ எதிர்ப்பானவன் அல்ல. ராபர்ட் பர்ன்ஸ் சொன்னது போல, மனிதன் எப்படியிருந்தாலும் மனிதன் தான். நான் என்னைத் திராவிட இனத்தைச் சேர்ந்தவன் என்று சொல்லிக்கொள்ளும் போது திராவிடனிடம் இந்த உலகத்திற்கு வழங்க திட்டவட்டமான தெளிவான மற்றவைகளிடமிருந்து வேறுபட்ட சில இருக்கின்றன என்று கருதுகிறேன். அதனால் எங்களுக்குச் சுயநிர்ணய உரிமை தேவை என்று விரும்புகிறோம். என்பதாகும்.

காலம்தோறும் நாம் எண்ணி எண்ணி பெருமைப்படத்தக்க இந்த கூற்றினை அன்று எதிர்த்தவர்கள் இன்று ஏற்றுக் கொண்டு இருக்கிறார்கள் எந்த நாடாளுமன்றம் தமிழகத்திற்கு  ‘தமிழ்நாடு ‘ என்றப் பெயர் சூட்ட எதிர்ப்புத் தெரிவித்ததோ அதே நாடாளுமன்றத்தில் ‘தமிழ் வாழ்க’ என்றும் ‘என் தாயகம் தமிழ்நாடு வாழ்க’  என்றும் குரல் ஒலிக்கப்படுவது கால மாற்றமா அல்லது காலக் கட்டாயமா என்பதை எண்ணிப் பார்க்கும் தருணம் இது.

எண்ண அலைகளால் மன ஆழத்திலிருந்து வெளிவரும் வண்ண நிகழ்வுகள் ஏராளம். இமய வரம்பில் ஒலித்த இடி முழக்கங்களில் முக்கியமான மற்றொன்று 1991 மார்ச் 18 அன்று பீகாரின் தலைநகரமான பாட்னாவில் ஒலித்தது. 1991 ஆம் ஆண்டு பிரதமர் சந்திரசேகர் தலைமையிலான மைய அரசு தமிழ்நாட்டில்  திமுக ஆட்சியை  கலைத்தது. அதற்கடுத்த முப்பத்து நாலாவது நாள் சந்திரசேகர் அரசும் கலைந்தது.

அந்தச் சூழலில்தான் பீகார்  தலைநகரமான பாட்னாவில், தேசிய முன்னணி சார்பில் நாடாளுமன்றத்திற்கான தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் திமுக தலைவர் கலைஞர் அவர்கள் ஆற்றிய உரை வரலாற்றில் சிறப்புமிக்க ஒன்றாகும். கலைஞர் பேச்சை  காந்தியாரின் பேரன் ராஜ்மோகன் காந்தி மொழி பெயர்க்க வி.பி.சிங், என்.டி.ராமாராவ் போன்றோர் மேடையில் வீற்றிருக்க கலைஞர் பேசுகிறார்.

நான் முதலில் என்னை அறிமுகப் படுத்திக் கொள்கிறேன். என் பெயர் கருணாநிதி. நான் ஒரு தேசத் துரோகி! இந்த நாட்டில் நான் ஒரு அபாயமான பேர்வழி!என்று தொடங்கினார். ஆம். அப்படிச் சொல்லித்தான் தமிழ்நாட்டில் எங்கள் ஆட்சியைக் கவிழ்த்தனர்என்று விளக்கினார். கூட்டம் ஆர்ப்பரித்தது. பேசி முடித்தபோது, அந்த மக்கள் வெள்ளம் எழுந்து நின்று கை தட்டியது. வடப்புலம் வியந்த்தது. மலைத்தது அவர் பேச்சில். டைம்ஸ் ஆப் இந்தியா ஏடு "stealing the show" என்ற தலைப்பில்,  கலைஞரின் உரையைப் பாராட்டி ஒரு பெரிய செய்தியை அப்போது வெளியிட்டிருந்தது. காவிரிமைந்தன் கங்கைக்கரையில் ஆற்றிய உரை இமயத்தில் இடித்து ஒலித்தது  அன்று.


இன்றோ இட்டுக் கட்டப்படும் இந்துத்துவ சிந்தாந்ததிற்கு எதிரான வலிமைமிக்க ஆயுதம் திராவிட சித்தாந்தம் என்னும் வரலாற்று உண்மையை உணர்ந்ததனால் நாடாளுமன்றத்தில் நாங்களும் திராவிடப் பழங்குடிகள் என்று பிரகடனம் செய்தார் திருணாமுல் காங்கிரசு மக்களவை உறுப்பினர் திரு. சேகர் ராய்.

இந்த தேசம் முழுதும் தமிழர்களின் மூத்தக் குடியான நாகர்கள் வாழ்ந்தார்கள். அவர்கள் பேசிய மொழி தமிழ் என்று சொன்னார் அண்ணல் அம்பேத்கர் அவர்கள். அந்நாளில் அன்னார் சொன்னதும் தமிழ்நாட்டின் திராவிட இயக்கம் இயம்பியதையும்  இந்நாளில் எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் முகத்தான் வங்காளி சேகர் ராய் பாராளுமன்றத்தில் பறைசாற்றியது தமிழின் தமிழரின் மறைக்கப்பட்ட வரலாற்றை மீட்டெடுக்கும் முயற்சிக்கு உரமூட்டும் உன்னத செயல் என்றே கருதவேண்டும்.

அறிஞர் அண்ணாவின் அன்னியோன்ய கொள்கையான திராவிட மாநிலங்களின் கூட்டமைப்பு அவர் காலத்தில் ஆகுமா இது, அக்கிரமம் அல்லவா,  அழிக்கப்பட வேண்டிய குரல், அணைக்கப்பட வேண்டிய தீபம், அடக்கப்பட வேண்டிய எழுச்சி, பிய்த்து எறியப்பட வேண்டிய பிரச்சனை, வெறித்தனமான கோரிக்கை,  அதனை விரட்டுவோம் அனுமதியோம் என்று ஆதிக்கசக்திகள் வெளியிட்ட கருத்துகளை தமிழகம் தாண்டி மற்றையோர் ஏற்றுக் கொண்டனர். ஆனால் இன்றோ அதே ஆதிக்க சக்திகளின் அடாவடிச் செயல்களால் திராவிடம் என்னும் தெள்ளிய கொள்கையின் உண்மை உணர்ந்து தென்னகம் மட்டும் அல்லாமல் வங்காளமும் குரல் கொடுக்கும் நிலை வந்தது நல வாய்ப்பு என்று சொல்ல வேண்டும்.

திராவிடம் என்னும் சொல் இந்தியத் துணைக் கண்டப் பகுதியில் பலநூறு ஆண்டுகளாக தமிழையும் தமிழரையும் குறிப்பிட்டு வந்ததை பல்வேறு  ஆய்வுகள் உறுதி செய்கின்றன. அப்போது ஏற்காதவர்களும் ஏற்கும் காலம் வந்து இருப்பது நல்ல முன்னேற்றம்.

தமிழ் தமிழன் தமிழ்நாடு இம்மூன்றின் அருமை பெருமை புகழ் சிறக்க பணி ஆற்றல் நம் கடமை.

வாழ்க தமிழ்