Friday, December 16, 2022

திருவள்ளுவர் திரு உருவப்பட வெளியீட்டு விழா சிறப்பு மலர் கட்டுரை - கலைஞர் மு . கருணாநிதி

 திருவள்ளுவர் திரு உருவப்பட வெளியீட்டு விழா சிறப்பு மலர் 5 பிப்ரவரி 1960 ஆண்டு வெளியானது.

அதில் முதமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் அப்போது எழுதிய கட்டுரை :

 

அன்புள்ள நண்பர்களே ! இன்று காலையில் என்னை வந்து அழைத்த நண்பர்கள் திரு வேணுகோபாலர் அவர்களுடைய இல்லத்திற்கு செல்லலாம் என்று தான் அழைத்தார்கள். ஆனால் என்னை அவர்கள் அழைத்து வந்த இடமோ வேணுகோபாலர் அவர்களுடைய இல்லம் அல்ல. வள்ளுவருடைய இல்லம். நான் வள்ளுவருடைய வீட்டிற்கு வந்ததாகவே உணர்கிறேன்.

 

இனி மீண்டும் சந்திக்க இயலுமா என்று கருதி நாளெல்லாம் ஏங்கி ஏங்கி நாம் நம்முடைய கண்களை மூடுவதற்கு முன்பு ஒரு முறை வள்ளுவரை கண்டு விட்டு கண்களை மூட மாட்டோமா என்கின்ற தமிழக பெருமக்களுடைய ஏக்கத்தை எல்லாம் துடைத்திடும் வகையில்  நம்முடைய அருமை நண்பரும் ஓவியப் பெருந்தகையாருமாகிய  திரு வேணுகோபாலர் அவர்கள் திருவள்ளுவர் பெருமானுடைய ஓவியத்தை தமிழகத்திற்கு - இல்லை உலகத்திற்கு தந்திருக்கிறார்கள்.

 

அத்தகைய ஒரு பெரும் முயற்சியை பாராட்டுகிற பட்டியலிலே நானும் ஒருவன் என்று எண்ணி இறும்பூதெய்கிறேன்.  பெருமை அடைகிறேன்.  ஏன் இறுமாப்புக் கொள்கிறேன் என்று கூட சொல்லுவேன்.

 

வள்ளுவருடைய உருவம் எத்தகையது என்கின்ற குழப்பம் தமிழகத்தில் பல நாட்களாக இருந்து வருகிறது.  சொல்லப் போனால் பல்லாண்டு காலமாக இருந்து வருகின்ற பெரும் போராட்டமாகவும் இருந்து வருகிறது தமிழகத்தில் புலவர்களுடைய உருவம் மட்டும் அல்ல தமிழகத்தினுடைய வரலாறு தமிழகத்துப் பெருமக்களுடைய சரித்திரம் தமிழகத்து முடி வேந்தர்களுடைய வரலாறு இவைகள்  குழப்பத்திற்கு ஆளாகியுள்ள வரலாறு தான், சரித்திரம் தான்,  ஓவியம் தான் என்பதை நாம் அறியாத ஒன்று அல்ல.  

சேரன் செங்குட்டுவனுடைய காலம் எது? பாண்டிய நெடுஞ்செழியினுடைய காலத்திலே வாழ்ந்த வேறு நாட்டு மன்னர்கள் யார்?  என்கின்ற பல்வகையிலே பல பல குழப்பங்கள் நாட்டிலே உண்டு.  அத்தகைய சரித்திரங்கள் இன்று நாட்டிலே குழப்பமிக்க நிலைமையிலே தான் இருந்த வருகின்றன.  

 

இந்த சரித்திரங்களிலே உள்ள குழப்பம் தவிர்க்கப்பட்டு வரலாற்றிலேயே உள்ள சிக்கல்கள் தவிர்க்கப்பட்டு ஒரு நிர்ணயமான வரலாறு அது போலவே ஒரு நிர்ணயமான உருவம் புலவர்களுக்கும் அது போலவே மன்னர்களுக்கும் தரப்பட வேண்டும் என்கின்ற கருத்து உடையவர்களிலேயே நானும் ஒருவன்.  

 

அப்படி தரப்படுகின்ற உருவம் எல்லோராலும் ஒப்புக்கொள்ளக்கூடிய நல்ல உருவமாக நல்ல வரலாறாக அமைய வேண்டும் என்கிற கருத்தை நான் பலமுறை பல மேடைகளிலேயே எடுத்துச் சொல்லி இருக்கிறேன்.  அதுபோலவே பல ஏடுகளிலே எடுத்து எழுதியிருக்கிறேன்.  அந்த நிலைமையிலே தான் இன்றைய தினம் நான் மிக மிக மகிழ்ச்சி அடையக் கூடிய விதத்தில் திருவள்ளுவர் பெருமானுடைய உருவத்தை நமது ஓவிய நண்பர் வேணுகோபால் அவர்கள் தீட்டி இருப்பது கண்டு பெரு மகிழ்வு அடைகின்றேன்.  

 

வள்ளுவருடைய திருக்குறள் தான் அவருடைய ஓவியம், அவர் இயற்றி தந்த 1330 அருங்குறள் பாக்கள்  தான் வள்ளுவருடைய உருவத்தை நமக்கு காட்டக்கூடியவை என்கின்ற எண்ணத்தை தான் இதுவரை நாம் கொண்டிருந்தோம்.  இனி இவர்தான் வள்ளுவர் என்று அகிலத்திற்கு நாம் அறிவிக்கக்கூடிய வகையிலே அழகான ஒரு ஓவியத்தை நமக்கு வேணுகோபால் அவர்கள் தந்திருக்கின்றார்கள்.  

 

நான் வள்ளுவருடைய உருவத்தை காணுகின்றேன்.  நம் எதிரே அமர்ந்திருக்கின்ற அந்த வள்ளுவர் பெருமானுடைய ஓவியத்தை நான் காண்கின்றேன், காணுகின்ற நேரத்திலே அவருடைய கண்கள் உமிழ்கின்ற  அந்த ஒளியை என்னால் காண முடிகிறது.  சுவைக்க முடிகிறது.

“அமிழ்தினு ம் ஆற்ற இனிதே தம்மக்கள்  

சிறுகை அளாவிய கூழ்”

என்கின்ற குழந்தைக்காக அவர் பாடிய குழந்தைக்காக அவர் எழுதிய அந்த அருமையான குறளை  நான் எண்ணிப் பார்க்கிற நேரத்தில் எதிரே தவழ்ந்து வருகிற குழந்தையை வள்ளுவர் பார்த்து ரசித்து அந்த பாடலை எழுதுவது போலவே அவருடைய கண்ணொளி அமைந்திருப்பதை நான் காண முடிகின்றது.  

“கைவேல் காளிற்றோடு  போக்கி வருபவன்

மெய்வேல்  பறியா நாகும்”  

என்ற அந்த வீர உரைகள்  அந்த வீர உரைகளை சிந்திய  அந்த வேல்கள்தான்  வள்ளுவருடைய இதழ்கள்.  அதை ஓவியர் வேணுகோபால் அவர்கள் அழகாக சித்தரித்திருக்கின்றார்கள்.

 

வள்ளுவருடைய கையிலே பிடித்து இருக்கின்ற எழுத்தாணியும் , இன்னொரு கரத்திலே இருக்கின்ற சுவடியையும் காணுகின்ற நேரத்தில், சுவடியை அணைத்து இருக்கிற கரத்திலே புடைத்து இருக்கின்ற நரம்புகளையும்,  அதுபோல எழுத்தாணி வைத்திருக்கின்ற கரத்திலே புடைத்து இருக்கின்ற நரம்புகளையும்  காணுகிற நேரத்தில் ஓவியர் எவ்வளவு சிந்தித்து சிந்தித்து எந்த அளவிற்கு நெஞ்சத்திலே வள்ளுவருக்காக இடம் அமைத்து  அந்த ஓவியத்தை எழுதியிருக்கிறார் என்பதை நான் எண்ணுந்தோறும் எண்ணுந்தோறும்  அவரை பாராட்டுவதற்கு கடமைப்பட்டிருக்கிறோம்.

 

இப்படிப்பட்ட ஒரு நல்ல காரியத்தை தமிழகத்திற்கு செய்கின்ற ஓவியர் வேணுகோபால் அவர்களை அறிஞர்கள் பலரோடும் சேர்ந்து நான் பாராட்டுவதற்கு கடமைப்பட்டிருக்கிறேன்.  

“இனிய உளவாக இன்னாத கூறல்

கனியிருப்ப காய் கவர்ந்தற்று”

 

 

என்கின்ற வள்ளுவருடைய குறளையே  இன்று வள்ளுவருடைய ஓவியத்தை பற்றி யாராவது கூறுவார்களேயானால் அவர்களுக்கு நான் சமர்ப்பிப்பதற்கு கடமை பட்டிருக்கிறேன்.  

“பல்லார் முனியப் பயனில சொல்லுவர்

எல்லாரும் எள்ளப் படும்”

என்கிற கூறலாய்த்தான்  நான் அவர்களுக்கு எடுத்துக் காட்டுவதற்கு விரும்புகிறேன்.

இந்த வள்ளுவருடைய உருவம் தமிழ் நாட்டாரால், அகில உலகத்தாரால் பாராட்டப்பட வேண்டிய போற்றி ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய ஒரு உருவம் என்று நான் எடுத்துச் செல்ல விரும்புகிறேன்.  

 

இனி உலகத்தில் வள்ளுவருடைய பெயரோடு இன்னும் இரண்டு பெயர்கள் இதுவரை நினைத்தது போலவே நிலைக்கும்.  திருவள்ளுவர் திருக்குறள் ஓவியர் வேணுகோபாலர் என்னும் மூன்று பெயர்களும் தமிழகத்து மக்களால் மறக்க முடியாத பெயர்கள்

வாழ்க  வள்ளுவர் வாழ்க வேணுகோபாலர்

 

No comments: