Saturday, June 11, 2016

கலைஞரும் கிருபானந்த வாரியாரும்

கலைஞரும் கிருபானந்த  வாரியாரும் 

7 July 2014 at 01:17

அறிஞர் அண்ணாவின்  பிறந்த நாள் விழாவில் 1975 ஆம் ஆண்டு திருமுருக கிருபானந்த வாரியார் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்ததும் அந்த விழாவில் வாரியார் அவர்கள் பேசிய பிறகு கலைஞர் ஆற்றிய உரை இன்றும் நாம் எல்லாம் படித்து உணர வேண்டிய பல கருத்துகள் நிறைந்தது. இந்த செய்தியே அதாவது கலைஞரும் வாரியாரும் கலந்துகொண்ட நிகழ்ச்சி அதுவும் அண்ணாவின் பிறந்தநாள் விழாவில் என்பது இக்கால இளைஞர்களுக்குத்  தெரிந்திருக்காது. அதே வேளையில் புரட்சிநடிகர் எம்ஜிஆர் உடன் வாரியார் கலந்துகொண்டது தெரிந்து இருக்கும். இணையத்தில் கலைஞரும் வாரியாரும் சேர்ந்து இருக்கும் புகைப்படம் கிடைக்கவில்லை. ஆனால் எம்ஜிஆருடன் இருப்பது கிடைக்கும். இப்படிப்பட்டச் செய்திகளை வரலாற்று நிகழ்வுகளை அரிய தகவல்களாக நாம் கருதுவதை இன்றைய இளைஞரிடம் கொண்டு சேர்ப்பது நம் கடமை.

கலைஞரின் உரை:

இந்த விழாவில் வாரியார் அவர்களுடைய உரையை கேட்கும் வாய்ப்பு கிடைத்தற்கு பெரு மகிழ்ச்சி அடைகிறேன். அவருடைய பேச்சு காலம் தழுவியது காலத்திற்கு ஏற்ற பேச்சு. காலத்திலே ஒரு கண் வைத்து இருந்த காரணத்தினால்தான் மிக எச்சரிக்கையாக பேசினார். இல்லாவிட்டல் மணி 12 ஆனது நமக்கெல்லாம் தெரியாத போது அவருக்கு எப்படி தெரிந்தது?.

அவர் பேசும்  போது காலம்காட்டி மணி 10 காட்டி இருந்தால் அதற்கு ஏற்ற உதாரணங்கள் ராவணன் தலை பத்து தசாவதாரம் பத்து இப்போது மணி பத்து என்று சொல்லி இருப்பார். ஒருவேளை கடிகாரம் மணி 6 காட்டி இருந்தால் முருகனுடைய 12 கைகளை விட்டு விட்டு முருகனுக்கு தலை ஆறு  இப்போது மணி ஆறு என்று சொல்லி இருக்கக் கூடும். மணி 3 ஆக இருந்தால் தமிழ் மூன்று தமிழர் கொடி மூன்று என்று அந்த மூன்றுடன் மணி மூன்றை இணைத்து இருப்பார்.

ஆகவே மிகுந்த கற்பனை வளமும் சொல்வளமும் நிறைந்த அவருடைய சொல் இனிமைக்காக நாம் என்றென்றும் பாராட்டக் கடமைபட்டு இருக்கிறோம். 

கம்பனுக்குச் சிலை வைத்து இருப்பதாகச் சொன்னார். கம்பன் எழுதியக் கதையை ஏற்றுக் கொண்டு அல்ல. கம்பனுடைய அழகுத்தமிழைப் பாராட்டுவதற்க்காகத்தான் அவருக்குச் சிலை வைத்தோம்.

அதைப் போலவே வாரியாருடைய சொற்பொழிவைப் பாராட்டுகிறோம் என்று சொன்னால் அவர் சொல்கின்ற கருத்துகள் அத்தனையும் ஏற்றுக் கொண்டல்ல. அவர் பேசுகிற சொல்லுகிற நேரத்தில் விளையாடுகின்ற தமிழைப்பாராட்டுவதற்காத்தான் அவரை நாம் பாரட்டுகின்றோம்.

அவர்கள் ஒன்றைச் சொன்னார்கள் ராமாயணம் பாரதம் இரண்டையும் ஒரு ஆசிரியர் பல முதியவர்களுக்குக் கற்றுத்தந்து, பிறகு ஓராண்டு காலம் கழித்து அவர்களை எல்லாம் அழைத்து அவர்களிடம் ராமாயணத்திற்கும் பாரதத்திற்கும் என்ன வேறுபாடு என்று கேட்டார். ஒருவன் ராமாயணம் அட்டை பச்சை;  பாரதத்திற்கு பக்கம் இத்தனை;  அச்சகம் இன்னார் என்று ஒவ்வொறு விதமாகச் சொன்னார்கள். ஆனால் ஒரு சிறுமி ஒரே வித்தியாசம் ராமாயணம் பெண்ணாசையால் வந்தது பாரதம் மண்ணாசையால் வந்தது என்று சொன்னதாக வாரியார் குறிப்பிட்டார்.

ஒரே ஒரு வித்தியாசம் உடனடியாக எண்ணிப் பார்த்தால் ராமாயணம் ஐந்து எழுத்து பாரதம் நான்கு எழுத்து ஆகவே ஒரு எழுத்து வித்தியாசம் என்று கூட நாம் சொல்லிக் கொள்ளலாம்.

இராவணணுக்குப் பெண்ணாசை ஏற்பட்டதாக வாரியார் அவர்கள் குறிப்பிட்டார்கள். வாரியார் அவர்கள் தமிழினத்திற்காக பாடுபடும் பெரும் புலவர்.என்கின்ற வகையிலே அறிஞர் அண்ணா அவர்கள் வாரியார் மீது பெரும் அன்பு கொண்டு இருந்தார் என்பதை நண்பர் வில்லாளன் அவர்கள் எடுத்துக் கூறினார்கள்.

அந்தப் பெண்ணுக்கு பதிலாக வெறு ஒரு பெண் அவர் அண்ணா அவர்களுடைய பள்ளிக்கூடத்திலே படித்தவராக இருந்து இராமயணத்தைப் பற்றி அந்தப் பெண்ணிடம் கேட்டு இருந்தால்; அதற்கு வேறு பதில் கிடைத்து இருக்கும்.

“இராமாயணம் என்பது ஆரியருக்கும் திராவிடருக்கும் நடந்தப் போர். பாரதம் என்பது ஆரியருக்குள்ளேயே நடந்தப் போர்” என்று பதில் கிடைத்து இருக்கும்.

ஆரியருக்கும் திராவிடருக்கும் நடந்த போர் என்று நான் சொல்லவில்லை. இன்றைய பிரதமரைப் பெற்றெடுத்த முன்னாள் பிரதமர் பண்டிட் ஜவகர்லால் நேரு அவர்கள் இன்றைய பிரதமர் பிரியதர்சினியாக இருந்த காலத்தில் எழுதியிருக்கிற கடிதத்தில் பண்டிதர் நேரு அவர்கள் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

இன்றைக்குப் பள்ளிக்கூடத்தில் சிறுவர்களுக்கான பாடப்புத்தகத்தில் நேரு அவர்களுடைய வாசகங்கள் மின்னிக் கொண்டு இருக்கின்றன.

ஆனால் வால்மீகி எழுதிய ராமாய்ணம் வேறு கம்பர் எழுதிய ராமாயணம் வேறு. இதை நானே வீட்டில் எடுத்துச் சொன்னால் நம்புவதில்லை. இல்லை இல்லை எல்லாம் ஒரே ராமாயணமாகத்தான் இருக்கும் என்று வாதாடுவார்கள்.

வாரியார் அவர்களேகூட இப்படிப்பட்டவர்களுக்கு நல்ல பதில் அளிக்கும் விதமாக வால்மீகி ராமாயணம் வேறு கம்ப ராமாயணம் வேறு என்று எடுத்து சுட்டிக் காட்டி இருக்கிறார்கள்.

வால்மீகி ராமாயணத்தில் சீதையை ராவணன் கையால் தொட்டுத் தூக்கிக் கொண்டு போனான் என்று வால்மீகி எழுதி இருக்கிறார். ஆனால் கம்ப ராமாயணத்தில்,ராவணணுடைய தமிழ்ப்பண்பை உயர்த்திக் காட்டுவதற்காக ராவணன் சீதையைத் தொட்டுத் தூக்கிக் கொண்டு போனான் என்று இல்லாமல் சீதை இருந்த இடத்தோடு பெயர்த்து எடுத்துக் கொண்டு போனான் என்று குறிப்பிடுகின்றார். அப்படி எடுக்க இயலுமா? முடியுமா முடியாதா என்பதல்ல கேள்வி. தமிழன் ஒரு கதையை அணுகுகின்ற நேரத்தில்,  தமிழ்ப் பண்பாட்டோடு அணுகினான் என்பதற்கு அடையாளமாகத்தான் பல இடங்களில் வால்மீகி ராமாயணத்தை மாற்றி அமைத்து இருக்கிறார்.

என்னதான் கம்பன் வால்மீகி ராமாயணத்தை மாற்றி அமைத்தாலும் கூட வாலி வதை படலத்தில் ராமனுக்கு நியாயம் கற்பிக்க கம்பரால் முடியவில்லை.

அந்தக் கம்ப ராமாயணத்தை எடுத்து இங்கே பேசிய நம்முடைய வாரியார் அவர்களும் வெற்றி பெற்றார் என்று சொல்வதற்கில்லை. நான் ஏதோ பட்டிமன்றம் நடத்துவதாக எண்ணிக் கொள்ளாதீர்கள். வாரியார் கருத்துகளுக்கு எதிர் கருத்து சொன்னதாக எண்ணாதீர்கள்.

ஏனெனில் வாலியினுடைய வர்க்கம் வானர வர்க்கம் என்று சுட்டிக் காட்டப் படுமேயானால் சுக்கிரீவனுடைய வர்க்கமும் அதே வர்க்கம்தான். அவனும் அவனுக்குத் தம்பிதான். வாலியின் மனைவி தாடகைக் கூட வாலி இறந்தபிறகு சுக்கிரீவனை மணம் செய்து கொண்டாள் என்பதில் அகமகிழ்ந்த ராமன், வாலியைக் கொன்றதற்கு அவன் முறையற்ற முறையில் திருமணம் செய்து கொண்டான் என்று வாதிடுவது எந்த வகையிலும் பொறுத்தமானது என்று நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது.

 ஆயினும் வாரியார் அவர்கள் இங்கே விளக்குவதற்கு மனிதன் என்ன தெய்வமாவது விலங்கு கூட தெய்வமாகலாம் என்பதற்காக எடுத்துச் சொன்னாரே அல்லாமல் ராமனைக் காப்பாற்றுவதற்காக ராமனின் செயலுக்கு நியாயம் கற்பிப்பதற்காக எடுத்துச் சொன்னார் என்று நான் கருதவில்லை. வாரியார் அவர்களும் ஒப்புக்கொள்வார் என்றே நான் கருதுகிறேன்.

விலங்குகள்கூட தெய்வமாகலாம் மனிதன் ஏன் தெய்வமாகக்கூடாது?  அண்ணா ஏன் ஆகக்கூடாது என்ற கேள்விகளை அழகுற அவருக்கே உரிய தெள்ளு தமிழில் பின்னிப்பின்னி இங்கே எடுத்துக்காட்டினார்கள்.

முதலில் தெய்வம் என்றால் என்ன என்பதை நாம் புரிந்து கொண்டாக  வேண்டும். தெய்வம் என்று ஒன்று தனியாக இருக்கிறதா? தனியாக உட்கார்ந்து கொண்டு காரியம் ஆற்றுகிறதா?  இல்லை என்று வாரியாருடைய நீண்ட பேச்சில் நமக்கு விளக்கி இருக்கிறார் என்று நான் கருதுகிறேன்.

ஆசை - அடுத்த கட்டமாக பற்று -  அடுத்த கட்டமாக அன்பு - அதற்கு அடுத்த மேல் கட்டமாக அருள் -  என்று இப்படியே அடுக்குவதின் மூலம் தெய்வம் கொஞ்சம் கொஞ்சமாக வளர்கிறது. ஆசையாக இருக்கிறது. பின்பு பற்று பருவத்தை அடைகிறது. அதன் பிறகு அன்பு பருவத்தை அடைகிறது. இறுதியாக அருள் என்னும் முதுமை நிலைக்கு வந்து சேருகிறது. அந்த நிலைதான் தெய்வ நிலை என்று வாரியார் அவர்கள் எடுத்துக் காட்டி இருக்கிறார்கள்.

ஆகவே தெய்வம் என்பதற்கு சொல்லப்படுகின்ற வார்த்தைகள் வள்ளுவரே மிக அழகாகக் கூறுகிறார்; தெய்வத்தை தனது குறளில் கடவுள் அதிகாரத்தில் கூட வாலறிவன், தனக்குவமை இல்லாதவன், வேண்டுதல் வேண்டாமை இலான் என்று….   வெறுப்பு விருப்பற்றவனாக, மிகுந்த அறிவு படைத்தவனாக, தனக்கு உவமை இல்லாதவனாக இருப்பவன்தான் தெய்வம் என்று குறிப்பிடுகின்றார்.  

ஆக தெய்வத்திற்கு எந்த எந்த சிறப்புகள் சொல்லப்பட்டதோ உயர்வுகள் கூறப்பட்டதோ அந்த சிறப்புப் பண்புகளுக்கு உரியவராக இருந்தால் அவரை நாம் தெய்வம் என்று சொல்கின்றோம்.

ஒருவனைத் தலைவன் என்கிறோம். அந்தத் தலைவனுக்கு உரிய சிறப்புகள் என்ன? ஒரு இயக்கத்தையோ அல்லது நாட்டையோ வழிநடத்திச் செல்கின்றவன், அந்த இயக்கத்திலே இருப்பவர்களை எல்லாம் கட்டிக் காப்பவன்; அந்த இயக்கத்திலே உள்ளக் கொள்கைகளை உயிர் போல பாதுகாப்பவன்; இவ்வளவு இலக்கணங்களும் பொறுந்தியவனைத் தலைவன் என்கின்றோம். அதைப் போலத்தான் தலைவன் என்கின்ற தனிப்பொருள் கிடையாது. இவ்வளவு இலக்கணங்களையும் பொருந்திய ஒருவனைத் தலைவன் என்கின்றோம்.

அதைப் போல தனக்குவமை இல்லாதவனாக வேண்டுதல் வேண்டாமை இல்லாதவனாக, விருப்பு வெறுப்பற்றவனாக, மிகுந்த அறிவுடையவனாக ஒருவர் இருந்தால் அவரை தெய்வம் என்கிறோம்.

தெய்வத்தைவிட உயர்ந்தவனாக வள்ளுவர் மனிதனை ஒரு இடத்தில் குறிப்பிடுகிறார்.
எந்த இடத்தில்
”தெய்வம் தொழாள் கொழுனன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை”

தெய்வம் என்று சொல்லப்படுகின்ற ஒன்றினைத் தொழாமல் தனது கணவனைத் தொழுதெழுகிற பெண்ணிருக்கிறாளே அவள் பெய்யெனப் பெய்யும் மழை. வேண்டுகின்ற நேரத்தில் பெய்யும் மழைக்கு ஒப்பானவள் என்று பெண்ணைப் பற்றி பாடுகிறார்.


அங்கே தெய்வம் பின்னால் போய் விடுகிறது. மனிதன் முன்னால் வருகிறான். அந்தப் பெண், தெய்வத்தைவிட உயர்வாகத் தனது கணவனைக் கருதுவாளேயானால் அந்தப் பெண்தான் தனது கணவனுக்கு எப்படி ஒரு உழவனுக்கு தேவைப் படுகின்ற நேரத்தில் மழை கொட்டுகின்றதோ அந்த மழையை போன்றவள் என்று வள்ளுவர் எடுத்துக் காட்டுகின்றார்.


இதை வாரியார் விளக்குவாரேயானால் அந்த குறளுக்கு வேறு ஒரு பொருளைக் கூறி நம்மை எல்லாம் சிரிக்க வைத்து இருக்க முடியும். நேற்றுவரை இதற்கு உரை எழுதிய பெரும் புலவர்கள் எல்லாம் தெய்வம் தொழாமல் கணவனைத் தொழுத்தெழுகிற பெண்கள் பெய் என்று சொன்னால் மழை பொழியும்.  இப்படித்தான் உரை எழுதப்பட்டிருக்கிறது.


மன்னிக்க வேண்டும் நம்முடைய டாக்டர் மு.வ அவர்கள் எழுதி முடித்திருக்கிற உரை வரையில் கணவனைத் தொழுதெழுகின்றப் பெண் பெய்யென்று சொன்னால் மழை பெய்யும் அது பத்தினித் தன்மையைக் குறிப்பது என்று எழுதி வைத்து இருக்கிறார்கள்.


அப்படியானால் ஓராண்டு காலம் நூறாண்டு காலமாக இல்லாத வறட்சி ஏற்பட்டபோது இந்த காரியத்தை யாரும் செய்ய முன்வரவில்லையா? என்கிற சந்தேகம் நமக்கெல்லாம் எற்பட்டுவிடும்.

அப்படி பெண்களைக் காட்டிக் கொடுக்கின்ற விதத்திலே வள்ளுவர் எழுதி இருக்க மாட்டார் என்பதுதான் நமது நம்பிக்கை. ஆகவேதான் பெய் என்றால் பெய்யும் மழைக்கு ஒப்பானவள் அந்த பெண் என்கிற அருமையான கருத்தாழம் மிக்க பொருளில் உரை செய்திருக்கின்ற பாரதிதாசன் அவர்கள்  இதே குறளுக்கு விளக்கம் தருகின்றார்.

அப்படிப்பட்ட தெய்வம் என்ற சொல்லுக்கு தெய்வம் என்பதற்கு கூறப்பட்ட இலக்கணத்திற்கு ஏற்ப, வேண்டுதல் வேண்டாதவனாக, வாலறிவனாக, தனக்குவமை இல்லாதவனாக  நம்முடைய  தமிழகத்தில் திகழ்ந்தவர்தான் நம் பேரறிஞர் அண்ணா அவர்கள்.


அந்த வகையில் நாம் தெய்வம் என்று சொல்கிறோமே அல்லாமல் , இதுவரையில் கேட்டு அறிந்து இருக்கிற புராணங்களில் கூறப்படுகின்ற தெய்வங்களோடு இணைத்து அல்ல.


வாரியார் அவர்கள் எடுத்துக் காட்டிய தெய்வங்களுக்குரிய சிறப்புகளோடு இணைத்துத் தான் நம்முடைய அண்ணனை அவரும் நம்முடைய குலதெய்வம் நம்முடைய குடும்ப தெய்வம் என்று நாம் அவர் மீது வைத்து இருக்கின்ற அன்பின் காரணமாக   அவர் மீது  நாம் கொண்டிருக்கின்ற பாசத்தின் காரணமாக அதை எடுத்து சொல்கிறோமே அல்லாமல் வேறல்ல என்று நான் சுட்டிக் காட்ட கடமைப்பட்டு இருக்கின்றேன்.


அண்ணா அவர்கள் ஏழை எளிய மக்களுக்காக அடிதளத்து மக்களுக்காக ; சாதாரண சாமான்ய மக்களுக்காகப் பாடுபட்டவர். தெய்வத்திற்கு சொல்லப்பட்ட இலக்கணங்களும் அப்படிப்பட்டவைதான்.


ஆகவேதான் நம்முடைய அண்ணா தெய்வத்திற்கு சமமானவர் என்கிற கருத்தாழ மிக்க நல்ல சிந்தனைச் செல்வங்களை எல்லாம் வாரியார் இங்கே வழங்கி இருக்கிறாரே அல்லாமல், தெய்வம் என்றால் இரண்டுக்கு மேற்பட்ட தலைகளும் கைகளும் இருக்க வேண்டும் என்பது பொருள் அல்ல.

ஆகவே தெய்வமாகி ஆகி விட்டார் என்று நாம் குறிப்பிடுவதெல்லாம் நம்முடைய அன்பை நம்முடைய பாசத்தை காட்டுவதல்லாமல் பிறிதில்லை. என்பதையும் நாம் எடுத்துக் கூறி பேரறிஞர் அண்ணா அவர்களுடைய கொள்கைகளை அவர்களுடைய எண்ணங்களை செயல்படுத்துவதுதான் நமது கடமை என்பதை வாரியார் அவர்கள் இங்கே எடுத்துச் சொன்னார்கள்.

(தன்னுடைய உரையின் இறுதியில் பலத்த ஆரவாரங்களுக்கு கைதட்டல்களுக்கும் இடையே கலைஞர் தன்னுடைய சொற்பொழிவை முடிக்கின்ற பாங்கு அவரது அறிவுத்திறனுக்கும் ஆற்றலுக்கும் சான்றாண்மைக்கும்  எடுத்துக்காட்டாகத் திகழும். அந்த இறுதி வாக்கியங்களைப் படித்துப் பாருங்கள் நண்பர்களே …! )


நான் தொடக்கத்திலே எடுத்துக் காட்டியவாறு சந்திப்பு முடிந்து விட்டது. வாரியார் ரயில் ஏறுகிறார் நெய்வேலிக்கு நான் ரயிலேறுகிறேன் நாளை ஈரோடு செல்வதற்காக.. ஆக இந்த சந்திப்பிற்குப் பிறகு நான் செல்கின்ற இடம் ஈரோடு அவர் செல்கின்ற இடம் நெய்வேலி என்பதை மாத்திரம் நினைவுப் படுத்தி;  இடையிலே சென்னை காஞ்சிபுரத்திலே சந்தித்தோம். ஈரோட்டுக்கு நான் போகிறேன்..  நீங்கள் நெய்வேலி போகிறீர்கள்… ஆனால் நம்முடைய நட்பும் உறவும் நம்மிடத்திலே ஏற்பட்டிருக்கின்ற அண்ணா அவர்கள் உருவாக்கிய பெருந்தன்மை, அரசியல் நாகரிகம், தமிழ்ப்பண்பாடு என்றென்றும் நிலைத்து நிற்கும்…  அது இந்த சந்திப்போடு விடுபட்டுப் போகின்ற தன்மையானது அல்ல என்பதை மாத்திரம் எடுத்துக்  கூறி வாரியார் நம்மிடத்தில் வந்தாரா அல்லது வாரியார் இடத்தில் நாம் சென்றோமா என்பது கேள்வி அல்ல.

நான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன் நாம் இருவரும் ஒரு இடத்தில் சந்தித்தோம். அண்ணா அவர்களுடைய பெருமைகளைப் பேசிக் கொண்டோம். அவர் சொன்னார் அண்ணா அவர்கள் தெய்வமாக ஆகிவிட்டார் என்று. அவரே சொல்லும் போது நாம் இல்லை இல்லை என்று சொல்லுவதற்கில்லை.

அண்ணா அவர்களை நாம் அண்ணாவாகப் பார்க்கிறோம்; தலைவனாகப் பார்க்கிறோம்; நமது வழிகாட்டியாகப் பார்க்கிறோம்; நம்மை ஆளாக்கியவராகப் பார்க்கிறோம்…

நம்முடைய ரத்தத்தோடு உணர்வுகளொடு கலந்திருக்கிற பேரறிஞர் அண்ணா வாழ்க வாழ்க

No comments: