Saturday, June 11, 2016

கலைஞர் மேடை காவிய ஓடை

கலைஞர்  மேடை காவிய  ஓடை 

தமிழக அரசியல் வரலாற்றில் யார் எதைச் சொன்னாலும்,  கண்ணியமான பேச்சும் செயலும் தி.மு.கழகத்தால் கடைபிடிக்கப்பட்டு வந்தது என்பதற்கு எண்ணற்ற ஆதாரங்கள் உண்டு. கழகத்தின் மூத்தத் தலைவர்கள் யாரும் தரம் தாழ்ந்து பேசமாட்டார்கள். எதிர் கருத்து உடையவர்களையும் மதிக்கும் பக்குவம் அறிஞர் அண்ணா அவர்களால் போதிக்கப்பட்டது.

ஒருமுறை திரு என். வி.நடராசன் அவர்கள் திருக்கழுகுன்றத்தில் திரு காமராஜ் அவர்களை தவறாக ஏதோ பேசிவிட்டார் என்பதால் மேடையில் இருந்த அண்ணா அவர்கள் என்விஎன் அவர்களுடைய பேச்சை நிறுத்தச் சொல்லி கண்டித்த சம்பவம் உண்டு.

கலைஞரும் முன்னால் பேசியவர்களுடைய தவறான கருத்துகளுக்கு அல்லது யார்மீதான தனிப்பட்டத் தாக்குதல்களுக்கு தன்னுடையப் பேச்சில் கண்டணம் செய்த நிகழ்வுகள் ஏராளம்.

அறிஞர் அண்ணா அவர்கள் மருத்தவமனையில் இருந்த சமயம் அமெரிக்க மருத்துவர் மில்லர் வந்து வைத்தியம் பார்க்கிறார். அப்போது நெய்வேலியில் திருமிகு வாரியார் அவர்கள் உபன்யாசம் செய்யும் நிகழ்ச்சியில் ஒரு கருத்தை வெளி இடுகிறார். அந்த கருத்து திமுகவினர் மனம் வருத்தச் செய்கிறது. அதனால் ஆத்திரம்கொண்டு அடிக்கப் போனார்கள். அந்த தமிழ்தாத்தா அந்த பக்தி ஞானப்பழம் 64ஆம் நாயன்மாராக கொண்டாடப்படும் வாரியார் அவர்கள் 1975 ஆம் ஆண்டு அண்ணா பிறந்த நாள் விழாவில்

”இறுதிவரை மூச்சிலும் பேச்சிலும் பிறருக்காகவே வாழ்ந்து அண்ணா தெய்வமானார்”

என்று உருக்கமான உரையை நிகழ்த்தினார்.

அந்த மேடையில் கலைஞரும் இருக்கிறார். கொள்கையால் கருத்தால் மாறுபட்டவர்களையும் அரவணைத்துப் போகும் பக்குவம் அவர்களாலேயே பாராட்டப்படவும் மெச்சப்படவும்  நல்லெடுத்துக்காட்டாக விளங்குவது திமுகழகம்.

அதுவும் கலைஞர் காலத்தில் பல நிகழ்வுகள். உண்டு. கலைஞர் அண்ணாவின் இதயத்தைப் பெற்றவர் என்றால் வெறும் பேச்சல்ல. அதில் ஆயிரம் ஆயிரம் அர்த்தங்கள் உண்டு. அதற்கான முழு அருகதையும் அவருக்கே உண்டு.  சோதனைகளையும் சாதனைகளின் படிக்கட்டாக மாற்றும் வல்லமை மிக்கவர் கலைஞர்.

வாரியார் சொல்கிறார்

“ அண்ணா என்ற சொல்லுக்கு அணுகி அருள் புரிதல் என்று பொருள். அணுகுதல் என்றால் நெருங்குதல். கிணற்றில் விழுந்தவனை கிணற்றில் குதித்துதான் காப்பாற்ற வேண்டும்.அதைப் போல ஏழை எளியோரை நெருங்கி அவர்கள் குறை தீர்த்தவர் அண்ணா”

”திருவாசகத்தில் மாணிக்கவாசகர் சிவபெருமானை அண்ணா என்று அழைக்கிறார்”.

“ மனிதனும் தெய்வமாகலாம் என்பதற்கு அண்ணா எடுத்துக் காட்டாக திகழ்கிறார். மனிதன் என்றால் சிந்திப்பவன் மனம் உடையவன் என்று பொருள். .மனிதன் தனது சிந்தனையினால் அறிவு ஆற்றலினால் அரிய குணங்களினால் தெய்வமாக முடியும்.  அப்படி ஆனவர்தான் அண்ணா”

என்று ஒரு நீண்ட அரிய உரை நிகழ்த்தினார். இறுதி உரை ஆற்றும் போது கலைஞர் தெரிவித்தக் கருத்துகள் அவருடைய சான்றான்மைக்கும் தலைமைப் பண்புக்கும் உண்மையான பெரியார் அண்ணா வழிவந்த தீரர் என்பதற்கும் சாட்சியாக அமைந்தது, 

No comments: