Saturday, June 11, 2016

கழகம் கண்ட முதல் இரணகளம் - குன்றத்தூர்

கழகம்  கண்ட  முதல்  இரணகளம் -  குன்றத்தூர் 

குன்றத்தூர்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சிறுஊர். ஆனாலும் சரித்திரப் புகழ்ப் பெற்ற ஊர். அனபாய சோழன் என்ற இரண்டாம் குலோத்துங்கனின் அரசவையில் அமைச்சராக இருந்த பெரியபுராணம் இயற்றிய சேக்கிழார் இந்த ஊரில் பிறந்தவர்.

இன்றைக்கு காஞ்சிபுரம் மாவட்டத் திமுகழகச் செயலாளராக இருக்கும் அண்ணன் திரு தா.மோ. அன்பரசன் அவர்கள் இந்த ஊரில் வசிக்கிறார் என்பது கூடுதல் சிறப்பு.

திராவிட முன்னேற்றக் கழக வரலாற்றிலே முக்கிய இடம் பெற்ற ஊர் இது.  திமுகழகம் உருவான ஒரு வருட காலத்தில் இந்த ஊரில் நடந்த ஒரு நிகழ்ச்சி.. நெஞ்சை பிளக்கும் தன்மையுடையது. ஆம் தடையை மீறி பேச்சுரிமை காக்க ஒன்றுகூடிய கூட்டத்தில் குண்டு வீச்சு நடத்தியது அன்றைய அரசு. மூவர் மாண்டனர்.

1949 செப்டம்பர் 17 ஆம் தேதி திமுகழகம் உருவானது. அந்த காலகட்டத்தில் மைய அரசிலிருந்து வரும் அமைச்சர்களுக்கு கருப்புக் கொடி காட்டுவது என்ற ஒரு நடைமுறைப் போராட்டத்தை திமுகழகம் அறிவித்து இருந்தது.

திமுகழகத்தின் கருப்புக் கொடியை முதல் முதல் பார்த்தவர் திரு.ஆர்.ஆர்.திவாகர். அவர் அப்போது மைய அரசில் தொலை தொடர்புத் துறை அமைச்சராக இருந்தார். 1950 செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி அவருக்கு சென்னை ,காஞ்சிபுரம், மகாபலிபுரம் ,திருக்கழுகுன்றம் ஆகிய இடங்களில்  கருப்புக் கொடி காட்டப்பட்டது. அந்த போராட்டம் அமைதியாகவும் அறவழியிலும் எந்த அசம்பாவிதமும் இல்லாமல் நடந்தது.

அடுத்து 24-10-1950 அன்று சென்னையில் திரு இராஜாஜி அவர்களுக்கு கருப்புக் கொடி காட்ட திமுக அறிவித்தது. இராஜாஜி  அவர்கள் அப்போது மைய அரசில் உள்துறை அமைச்சர் ஆக அறிவிக்கப்பட்டார். 26-10-1950 ல் அவர் உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.  ஆம் இந்தியாவின் இரண்டாவது உள்துறை அமைச்சர். முதல் உள்துறை அமைச்சர் திரு வல்லபாய் பட்டேல் உடல் நலம் குன்றி இருந்ததால் அவர் பொறுப்பில் இருந்த உள்துறை திரு ராஜாஜி அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது. துணைப்பிரதமராக நீடித்த திரு வல்லபாய் பாட்டீல்  15-12-1950 ல் மறைந்தார்.

திரு இராஜாஜி அவர்களுக்குக்  கருப்புக்கொடி காட்ட அரசாங்கம் தடை விதிக்கிறது. திவாகர் வந்தபோது அனுமதித்த அரசு ராஜாஜிக்கு கருப்புக்கொடி காட்ட அனுமதி மறுக்கிறது. அன்றைக்கு தமிழக முதல்வர் திரு குமாரசாமி ராஜா அவர்களும் காங்கிரசு தலைவராக  திரு காமராஜ் அவர்களும் இருந்தார்கள்.

26-10-1950 அன்று குன்றத்தூரில் ஒரு பொதுக்கூட்டத்திற்கு திமுகழகம் ஏற்பாடு செய்தது. அதில் சிறப்புரை ஆற்ற திரு என்.வி.நடராஜன் அவர்களை அந்த பகுதி கழகத்தினர் அழைத்து இருந்தனர். அந்த பொது கூட்டத்திற்கு அன்றைய அரசு தடை விதித்தது.

அதாவது 26-09-1950 அன்று ஒரு வார காலம் 144 தடை போடப்பட்டு அது ஒரு மாதமாக ஆகி இரண்டுமாதம் என நீட்டிப்பு செய்யபடுகிறது. அப்போது குன்றத்தூரில் 144 தடை மீறி பேச்சுரிமை காக்க அந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள திரு என்.வி.நடராசன் 26-10-1950 அன்று செல்கிறார்.

ஊருக்குள் நுழையும் முன்பே கைது செய்கிறது போலிஸ். ஊருக்குள் திரண்ட மக்களை தடி கொண்டு அடித்தது மட்டுமல்ல துப்பாக்கியால் எட்டு முறை சுட்டு இருக்கிறார்கள்.

நண்பர்களே கவனிக்கவும்,

குன்றத்தூர் இன்றும் சென்னையின் ஒதுக்கு புறமான ஒரு சிற்றூர். 1950 ல் சுமார் 64 ஆண்டுகளுக்கு முன்னர் எப்படி இருந்திருக்கும். அந்த ஒரு சின்னஞ்சிறிய ஊரில் கூட பொதுக்கூட்டம் நடத்த கூடாது என்ற தடை விதித்த சுதந்திர இந்திய காலம் ஒன்று இருந்தது. அந்த அடக்கு முறையை சந்தித்த இயக்கம் திமுகழகம்.

அண்ணா திராவிடநாடு 05-11-1950 இதழில் குறிப்பிடுகிறார் யார் யார் அந்த அடக்கு முறைக்கு ஆளாகி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் என்று.

”குன்றத்தூர் கொடுமைக்கு இலக்காகி, அகிம்சா ஆட்சியினரால், கைது செய்யப்பட்டு அடக்குமுறைக்கு ஆளானோர்:-

என்.வி.நடராசன்
முனுசாமி
பாலசுந்தரம்
பக்கிரி
மாங்காடு கண்ணப்பனார்
தாமோதரன்
தாந்தோனி
சுப்பராயலு
சி.திராவிடமணி
முத்து
வரதன்
ராஜவேலு
டி.கே.சிவகுமாரன்
காஞ்சி சபாபதி
என்.திருநாவுக்கரசு
காஞ்சி பாலகிருஷ்ணன்
வேலாயுதம்
காஞ்சி ஏழுமலை
சுப்பிரமணியம்

கைதான இருபது தோழர்களில், தோழர்கள் என்.வி.நடராசன், பாலசுந்தரம், ஆகியோர் பூந்தமல்லி சப் ஜெயிலில் கிடக்கின்றனர்.

ஏனைய தோழர்கள் சைதாப்பேட்டை சப் ஜெயிலுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

குண்டுக்கு இரையானோர் மூவர்.
குண்டடிபட்டு படுகாயமடைந்த மூவரில் கீழ்க்கண்ட இரு தோழர்களும் சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரியில் கிடக்கின்றனர்.

பச்சையப்பன்
சாமிநாதன்.


”குன்றத்தூர் கோரத்தாண்டவம்”

”குன்றத்தூர் ஜாலியன்வாலா பாக்”

என்று குன்றத்தூர் நிகழ்ச்சியை குறித்து எழுதிய இரு கட்டுரைகளுக்கு அண்ணா வைத்த தலைப்பு.

அந்த கட்டுரையில்

”மூவர் பிணமென வீழ்ந்தனர். எட்டுமுறை சுட்டத்தில் மூவர் உயிருக்கு ஆபத்து வருமளவு அடிபட்டது! அவர்கள் குற்றுயிரும் குலையுயிருமாக்கிடந்தனர். அவர்கள் ஆவி, சாவு மண்டலம் போய்த்தான் திரும்பி வந்தது! சாக்காட்டில் விளையாடுந்தோள்கள் என்று பாடிய பரம்பரையினர். உயிர் வெல்லமல்ல என்று ஊருக்கு உரைத்திடும் உத்தமர்கள் வழிவந்தனர். சாவைக்கண்டு சிரித்தவர்கள், ஆறிலும் சாவு நூறிலும் சாவு அது ஒரு இலட்சிய வெற்றிக்காக இருப்பதானால் அஞ்சாமல் ஏற்போம் என்ற வீரர் வழிவந்தோர். ஆகவே அவர்கள் அஞ்சாது நெஞ்சைக்காட்டினர். சுட்டனர். குண்டுகள் பாய்ந்தன. புகை மண்டலத்திலே ‘அந்தோ சாகிறோம்’ என்று கூறத்துடிக்கும் உதடுகளைப் பிரிக்கவும் முடியாமல் வீழ்ந்தனர். அவர்கள் சாகவில்லை. உயிரோடுதான் இருக்கிறார்கள். ஆனாலும் உயிரைக் காப்பாற்ற உன்னத இலட்சியத்தைவிடத் தயாராக இல்லை! சாவைக்கண்டு அவர்கள் அஞ்சவில்லை. சாவு தான் அவர்களைக்கண்டு அஞ்சி ஓடிவிட்டது!

இந்த நிகழ்ச்சிக் குறிப்புகள் எங்கு நடந்தன என்று கேட்கிறீர்களா? கொரியா போராட்ட ஒருநாள் வருணைனையல்ல. திபேத் படையெடுப்பின் நிகழ்ச்சிச் சித்திரமல்ல. அகிம்சாமூர்த்தி காந்தி அண்ணலின் வழிவந்தவர்கள் ஆட்சியிலே உள்ள குன்றத்தூர் என்ற சிற்றூரிலே நடந்தது இது!

பேச்சுரிமையைக்காக்க திராவிட முன்னேற்றக் கழகத்தினர், 144  தடையுத்தரவை மீறிடத் திட்டமிட்டனர். அறவழியில், முறையும், கட்டுப்பாடும் கைகோர்த்து நிற்கும் வகையில்!

சென்ற 26.10.50 ல் தான் இந்தக்கோரப் போராட்டம்!

ஆண்டிடும் பொறுப்பிலே அமர்ந்துள்ளோர் அக்கிரம் வழி நடந்து ‘அப்பாவி’ மக்களை கொடுமைக்குள்ளாக்கினர் அன்று!

ஆம், குன்றத்தூரில்தான் இந்தக்கொடுமை!

குன்றத்தூர் எதிர்கால திராவிட சரித்திரத்திலே குருதியால் குறிப்பிடப் படும் இடமாகிவிட்டது! வரலாற்றிலே வரும் இரத்தத்தடாகம் கண்ணீர்ப் பெருவெள்ளம் அது! அங்கு பிணவாடை வீசும், நிச்சயம்!”
”குன்றத்தூரில் அன்று நடைபெற்ற நிகழ்ச்சிகளை நம் கண் முன்னால் கொண்டுவந்தால் நெஞ்சு கொதிக்கிறது!

பேச வந்தவர்கள், கொடியெடுத்துச் சென்றவர்கள், துண்டறிக்கைகள் வெளியிட்டவர்கள், சுவரொட்டிகள் ஓட்டியவர்கள், கூட்டங்கூட்டமுயற்சித்தவர்கள்-எல்லோரையும் அடித்து நொறுக்கினர்.

அன்று அங்கு, தலையிழந்த சார்லஸ் மன்னனின் குரலைக் கேட்டனர். பிரஞ்சு லூயியின் உருவத்தைப் பார்த்தனர். ரஷ்ய ஜாரின் ஆவி உலவிற்று. இட்லரின் சாயல் தெரிந்தது. இத்தாலிய முசோலினியின் சிரிப்புக் கேட்டது. குன்றத்தூரில் ஆணவ ஆர்ப்பாட்டம் உச்சநிலைக்குப் போய்விட்டது!

ஆளவந்தாரே, இதை மட்டும் கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்! அறப்போரில் குதித்துள்ள அவர்கள் அத்தனை பேரும் பயணம் சொல்லிக்கொண்டு கிளம்பிவிட்ட பட்டாளம்.  மரண சாசனம் எழுதிவைத்துவிட்டுப் புறப்பட்டுள்ள உரிமைச் சேனை- உயிர் பெரிதல்ல. மானந்தான் பெரிது என்று கூறிடும் போரணிவகுப்பு. ஆகவே துப்பாக்கி முனையை நீட்டி, அவர்களின் தூய இலட்சியத்திலிருந்து பிரித்துவிட முடியாது! குண்டுகள் பாயப் பாய, இன்னும் அதிகமாக மக்கள் திரண்டு நிற்பர்.

‘குன்றத்தூர்’ அவர்களின் உணர்ச்சியைக் குன்றிடச் செய்யவில்லை. ஊக்கத்தைப் பொன்றிடச் செய்யவில்லை- ‘குன்றத்தூரால்’ அவர்கள் உள்ளத்திலே ஒளிவிடும் இலட்சியங்கள் அகன்று விடாது-மேலும் அதிக வலுவாக வளரும்! இதனை மட்டும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள்!”
என்று அண்ணா எழுதினார்.

திராவிட முன்னேற்றக் கழகம் உருவான பிறகு கழகம் கண்ட முதல் இரணகளம் ‘குன்றத்தூர்’.

கழக வரலாற்றில் அக்டோபர் 26 ஆம் தேதி மறக்கமுடியாத நாள். மறக்க முடியாத ஊர் குன்றத்தூர். 

No comments: