Saturday, June 11, 2016

மதுவென்னும் மயக்கம்

கள்ளுண்ணாமை – மதுவிலக்கு 
3 November 2014 at 15:37
மதுவிலக்குக் கொள்கையைப் பற்றியும் மதுவிலக்கு நடைமுறைப் படுத்துவதில் உள்ள சாத்தியம் பற்றி இப்போது ஊடகங்களில் சர்ச்சிக்கப் படுகின்றன. மதுவிலக்கு வேண்டுமா வேண்டாமா என்பது அலசப்படுகிரது.

மதுவிலக்கு இல்லாத சூழலில் அரசாங்கமே சில்லறை வணிகம் மூலம் மதுவை விற்பனை செய்யும் நிலமையில் இத்தகைய கேள்விகள் பலராலும் எடுத்து வைக்கப்படுவதும் கருத்துப் பரிமாற்றம் செய்வதும் நல்ல போக்கு என்றுதான் சொல்ல வேண்டும்.

குடிப்பவர்கள் எண்ணிக்கை குறிப்பாக தமிழகத்தில் கூடுதலாகி வருவதைக் கண்கூடாகக் காணமுடிகிறது. குடிப்பது என்பது நற்செயல் அல்ல என்பதான கருத்து ஒரு காலத்தில் நிலவியது. குடிப்பவர்களே கூட அந்த கருத்துக்கு மதிப்பு கொடுத்தனர். பெரியவர் பெண்கள் சிறுவர் குழந்தைகள் முன்பு குடிப்பதோ குடித்துவிட்டு வருவதோ சரியல்ல என்ற கருத்து நிலவியது.

ஆனால் இன்றைக்கு குடிப்பது என்பது மிகச் சாதாரணமாகக் கருதப்படுகிறது. தவறு அல்ல என்றும் வாதிடப்படுகிறது. நாளுக்கு நாள் குடிப்பவர்கள் எண்ணிக்கை கூடுதல் ஆகிறது. மது விற்பனை மூலம் அரசுக்கு ஆண்டுக்கு பல ஆயிரம் கோடி வருமானம் வருவதாகச் சொல்கிறார்கள். அரசு வருமானத்தில் பெரும்பகுதி மது விற்பனை மூலம்தான் வருவதாகச் சொல்கிறார்கள். இப்படியான நிலமை சரியானதுதானா?

2000 ஆண்டுகளுக்கு முன்னரே திருவள்ளுவர் கள்ளுண்ணாமை என்னும் தலைப்பில் 10 குறட்பாக்களில் மதுக்குடிப் பழகாமையின் முக்கியத்துவத்தைக் குறிப்பிடுகிறார். அப்பொழுதிருந்தே தமிழகத்தில் கள் என்னும் மதுவை குடிக்கும் பழக்கம் இருந்தது என்பது தெரியவருகிறது. அதன் தீமைகளும் தெரிந்து இருக்கின்றன. ஆனாலும் அப்பழக்கம் விலக்கப்படவில்லை. தொடர்ந்து கொண்டுதான் வருகிறது.

பழந்தமிழ் இலக்கியத்தில் வரலாற்று செய்திகள் அகழ்வாராய்ச்சி குறிப்புகள் மூலம் இதைப் பற்றிய பல செய்திகள் கிடைக்கின்றன. ஆண்களும் பெண்களும் சேர்ந்தே குடித்ததாகத் தெரிகிறது. அரசர்கள் தனியாகவும் புலவர்களோடு சேர்ந்தும் குடித்து இருக்கிறார்கள். படை வீரர்களுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது.

"நாள் கள் உண்டு நாள் மகிழ் மகிழின்
யார்க்கும் எளிதே தேர் ஈதல்லே
தொலையா நல்லிசை விளங்கு மலையன்
மகிழாது ஈத்த விழை அணி நெடுந்தேர்
பயன் கெழு முள்ளூர் மீமிசைப்
பட்ட மாரி உறையினும் பலவே"

புறநானூறு 123-ஆவது பாடல் இது. கபிலர் மலையமான் திருமுடிக்காரியைப் பாடியது.
இதன் பொருளைச் சரியாக சொல்ல வேண்டுமானால்

 “காலையில கள்ளக் குடிச்சிட்டு கண்ணுமண்ணு தெரியாம கேட்கறவனுக்கு தேரினை  அதான்பா அந்த காலத்து காரை எடுத்துகிணுபோ என்று சொல்றது ரொம்ப சுளுவு. ஆனா எங்க ராசா மலையமான் அப்படில்லாம் கிடையாது. கள்ள குடிச்சி மயங்காமலயே அவன் குடுத்த தேர்கள் முள்ளூர் மலையுச்சியில் விழும் மழைத்துளிகளை விட கூடுதலானது. மயக்கதில குடுப்பது செயற்கை. மயங்காமல் குடுப்பது இயற்கை”

மட்டு வாய் திறப்பவும் மைவிடை வீழ்ப்பவும்
அட்டான்றானாக் கொழும் துவை ஊன் சோறும்
பெட்டாங்கு ஈயும் பெருவளம் பழுனி
நட்டனை மன்னோ முன்னே இனியே
பாரி மாய்ந்தெனக் கலங்கிக் கையற்று
நீர் வார் கண்ணேன் தொழுது நிற் பழிச்சிச்
சேறும் வாழியோ பெரும்பெயர்ப் பறம்பே
கோறிரண் முன்கைக் குறுந்தொடி மகளிர்
நாறிரும் கூந்தற் கிழவரைப் படர்ந்தே"

புறநானூறு 113ம் பாடல் இது. இதுவும் கபிலர் பாடியது பறம்பு நோக்கிப் பாடியது.

பறம்பு மலையை ஆண்ட பாரி இறந்த பிறகு பாரிமகளிர் இருவருக்கும் திருமணம் செய்ய பாரியின் நண்பர் கவிஞர் கபிலர் முயல்கிறார். அப்போது பாரி ஆண்ட பறம்பு மலையை நோக்கிப் பாடுவதாக இந்த பாடல் அமைகிறது.

அதில் முதல் நான்கு வரிகளுக்கான பொழிப்புரை ”மது இருந்த பானை வாயை திறக்கவும் இன்னொரு பக்கம் கருப்பு ஆட்டுக்கிடாயை வீழ்த்தவும் அவை  சேர்த்து சமைக்கப்பட்டு தீரவே தீராத அளவிற்கு சுவையான துவையலும் ஊனும் கலந்த சோற்றை தொடர்ந்து தரும் செல்வம் நிறைந்த எங்களுடன் நட்புடன் இருந்தாய் முன்னர்.”

அதன் பொருள் ”மதுவோடு ஆட்டுக்கறி சேர்த்து சமைத்து கலந்த சோறுடன் தொட்டுக்க துவையலும் தொடர்ந்து வழங்கிய வளம் பொருந்திய எங்களுடன் நட்புடன் இருந்தாயே முன்பு” என்பதுதான்.

இதிலிருந்து நமக்குத் தெரிவது அந்த காலத்தில் தமிழர் ”தண்ணி” அடித்தார்கள் என்பது மட்டும் அல்ல அதைக் கலந்து சமையல் செய்த ‘கிச்சன் கில்லாடி’களாகவும் இருந்து இருக்கிறார்கள். Food&Wine கலாச்சாரம் நாம் நினைப்பது போல் மேற்கத்தியர்களுக்கு மட்டுமே உரித்தானது அல்ல என்பது தெரிகிறது.

மகாபாரதம் இராமாயணம் மற்றும் பல வடமொழி வேதநூல்களிலும் அக்காலத்தில் இந்திய மக்கள் மதுஉண்டனர் என்பதற்கான குறிப்புகள் உள்ளன.

செளத்ரமணி என்று ஒரு வேள்வி அதில் ரிஷிகள் குடித்துவிட்டு ஆடுவதே  தலைமையான நிகழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது. நீலகேசி என்னும் தமிழ் காப்பியத்தில் பூதிகன் என்னும் ஆரியப் பார்ப்பனரிடம் நீலகேசி நீங்கள் எல்லாம் யோக்கியமா என்பது போல் வாதிடும் போது இந்த குறிப்பு வருகிறது.

தமிழகத்தில் அகழ்வாராய்ச்சியில் கிடைத்தவைகளில் அதிகமானது மதுச்சாடிகள். அவைகள் சீனம் கிரேக்கம் பாரசீகம் போன்ற நாடுகளில் இருந்து தருவிக்கப்பட்டவை என்பதால் அக்காலத்தில் அரசர்களும் செல்வந்தர்களும் இறக்குமதி செய்யப்பட்ட மதுவை குடித்து இருக்கிறார்கள் என்று தெரிகிறது. 

கள் – தேரல் என்பவை பனை தென்னை ஈச்சை போன்ற மரங்களில் இருந்து பெறப்படும் சாறு அல்லது வடிநீர்.

போதை இன்பம் காண விரும்புவர் இதனை அருந்தி களித்து இருக்கின்றனர். போதைத் தலைக்கேறி சிலர் செய்யும் சேட்டைகளால் , போதையில் தாம் என்ன செய்கிறோம் என்பதறியாமல் சிலர் குற்றம் செய்யவும் நேர்வதால் போதை தவிர்க்கப்பட கள்ளுண்ணாமை வலியுறுத்தப்படுகிறது.

திருக்குறளில் கள்ளுண்ணாமை அதிகாரத்தில் வள்ளுவர் உளவியல் அடிப்படையில் கள்ளுண்ணாமையை பெரிதும் வலியுறுத்துகிறார்.

மது குடிப்பதால் மதிப்பை இழந்துவிடுவார்கள், பகைவர் பயப்படமாட்டார், சான்றோர் விரும்ப மாட்டார், பெற்ற தாய்க்கு துன்பம் தரும், நாணம் என்னும் நற்பண்பு இல்லாமல் போகும், தன்னிலை மறக்கும் போதை வரும், உயிர் போக்கும் நஞ்சு போன்றது, நிதானம் தவறி  (உண்மை) உளறுவர் மனமயக்கமும் உடல் சோர்வும் தரும் என்றெல்லாம் வள்ளுவர் சொல்கிறார்.
உடல்நல அடிப்படையில் வலியுறுத்தப் படுவதைவிட உளவியல் அடிப்படையில் அவர் அதிகமாக வலியுறுத்தவதைக் காண முடிகிறது.

இவைகளை எல்லாம் சீர்தூக்கின் நாம் அறிவது அக்காலத்தில் உடல் நலனுக்கு தீங்கு தருவதாக மக்கள் கருதினர் இல்லை. மேலும் உடல் நலனுக்கு ஏற்றது என்ற கருத்தும் நிலவி இருக்கிறது.

இது பற்றிய கருத்துகளையும் சிந்தனைகளையும் மேலும் தொடர்வோம்…

No comments: