Thursday, June 9, 2016

தீர்க்கதரிசி - சமயத்தைப் பற்றி

சமயத்தைப் பற்றி
ஒரு முதிய பூசாரி சமயத்தைப் பற்றி சொல்லுங்கள் என்றார்
அவர் சொன்னார்

இன்றைக்கு இதைப்பற்றி பேசாமல் இருப்பேனா?
கைகள் கல்லை உடைத்தாலும் தறி நெய்தாலும் 
எப்போதும் உயிர்மையில் தாண்டவம் புரியும்
மதம்
வினையோ எதிர்வினையோ இல்லாதிருந்தும்
எல்லா வினைக்கும் எதிர்வினைக்கும் காரணி ஆகிறது

வினோதமாகவும் ஆச்சரியமானதாகவும் இருக்கிறது அல்லவா?
தன் செயலிலிருந்து சமயப்பற்றையும்
பணியிலிருந்து சமயநம்பிக்கையையும் பிரிக்க யாரால் முடியும்?

 “இது இறைவனுக்கு இது எனக்கு
இது என் உயிர்மைக்கு இது என் உடலுக்கு
என்று தன் நேரத்தை பிரித்து யாரால் சொல்ல முடியும்?

தனக்குத்தானே அடித்துக்கொள்ளும் சிறகுகளாக
உங்கள் நேரம் விண்ணில் பரந்து கிடக்கிறது

காற்றும் கதிரும் மேனியை துளைக்காதிருக்க
தன் சிறந்த உடையென்று
மதக்கோட்பாடுகளைத் தரித்துகொண்டு இருப்பவர்தான்
முழு அம்மணமாக இருக்கிறார்

தன் நடத்தையை கொள்கைகளால் வரையறுப்பவர்
தன் பாடும் பறவையை கூண்டில் அடைக்கிறார்
விடுதலைப்பாட்டு சிறைகம்பிகள் மூலம் வெளிவராது

யாருக்கு சன்னல்களை மூடித் திறப்பது  ஒரு வழிபாடோ –
அவர் இதுவரை சன்னல்கள் நிறைந்த
உயிர்மை வீட்டில் நுழைந்ததே இல்லை

உங்களின் நித்திய வாழ்க்கை
கோயிலாகவும் மதமுமாகவும் இருக்கிறது
அதன் உள்ளே நுழையும் போதெல்லாம்
உங்களவர் எல்லோரையும் அழைத்தும் போகிறீர்

கலப்பை உலைக்களம் சுத்தியல் யாழ் முதலியன கொண்டு செல்லுங்கள்
உங்கள் தேவைக்கும் மகிழ்ச்சிக்கும் அவைகளே ஏற்றவை

பகற்கனவால் உங்கள் சாதனையை மிஞ்சவும் முடியாது
தோல்வியை குறைக்கவும்   முடியாது

உங்களால் நம்பிக்கைகளை விட உயரம் பறக்கமுடியாது
துயரங்களைவிட குறைவாக இழவு அடையமுடியாது - ஆகவே
எல்லோரையும் வழிபாடு செய்ய அழைத்து செல்லுங்கள்

இறைவன் உங்களுக்கு தெரியுமானல் அவர்மூலம் உங்கள்
விடுகதைகளுக்கு விடை காண்பவராக இருக்க வேண்டாம்
அதற்கு பதில் உங்கள் குழந்தைகளுடன்
அவர் விளையாட வேண்டுமே என பாருங்கள்

விண்ணில் இறைவன் மின்னலாய் கைகளைவிரித்து நடந்து
மழையாக இறங்கி வருவதைப் பாருங்கள்
அவர் மலர்களாக புன்சிரிப்புச் சிரித்து

மரங்களாக உயர்ந்து தன் கரங்களை அசைப்பதை பாருங்கள்

No comments: