Saturday, June 11, 2016

கழகமும் கறுப்புச் சட்டையும்

கழகமும் கறுப்புச் சட்டையும்

26 September 2014 at 00:14
திராவிட இயக்கத்தின் நிறம் கறுப்பும் சிவப்பும்..

ஆம் இந்த நாடும் நாட்டு மக்களும் இழிந்த நிலையில் இருப்பதை நினைவுகொள்ள இருட்டறையில் உள்ளதடா இச்சமுதாயம் என்பதை என்றும் நெஞ்சில் நிறுத்திட துக்கத்தின் சின்னமான கறுப்பும் அதை மாற்றும் எண்ணத்திற்கு வித்திட்டு புரட்சிப் பயிரை வளர்க்க செந்நீர் சிந்தி செயல்படவும் தயாராக இருக்க வேண்டும் என்பதை சொல்வதற்கு சிவப்பு வண்ணத்தையும் கொடியில் கண்ட இயக்கம் திராவிடர் இயக்கம்.

1945-ல் திருச்சியில் பெரியார் தலைமையில் திராவிடக் கழக மாநாடு நடைபெற்றது. அப்போழுது அறிஞர் அண்ணா அவர்கள் திராவிடக் கழகத்தின் மாநிலச் செயலாளர் அந்த மாநாட்டில்தான், திராவிடக் கழகத்திற்கு என்று கருஞ்சட்டைப் படை அமைக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

1946-ல் மதுரையில் பெரியார் அவர்கள் தலைமையில் கருஞ்சட்டைப் படையினர் மாநாடு நடைபெற்றது. முதல் நாள் அறிஞர் அண்ணா சிறப்புரை நிகழ்த்தினார். இரண்டாம் நாளில், எதிர்க்கட்சியினரால், வைகையாற்று மணலில் நடைபெற்ற கருஞ்சட்டைப்படை மாநாடு தீ வைத்துக் கொளுத்தப்பட்டது.

மதுரை எஸ்.முத்துவும், தொண்டர்கள் பலரும் காலையிலேயே கைது செய்யப்பட்டுவிட்டார்கள்.  தடிகளை ஏந்திக்கொண்டு, பகல் 2 மணி வரையில் தொண்டர்கள் பந்தலைக் காத்து நின்றனர். எதிரிகளின் வலிவான தாக்குதல்களைச் சமாளிக்க முடியவில்லை.

காவல்துறையினரின் பாதுகாப்பு அறவே இல்லை. எதிரிகள் பந்தலை இறுதியில் பகல் 2 மணிக்குக் கொளுத்திவிட்டார்கள். திராவிடக்கழகத் தொண்டர்கள் பலர் பெரும் தொல்லைகளுக்கும், துயரங்களுக்கும் ஆளானார்கள். பின்னர் ஆறு மாதம் எந்தவிதப் பொது நிகழ்ச்சியும் திராவிடக் கழகத்தின் சார்பாக மதுரையில் நடைபெறவில்லை. எதிர்ப்புக்கிடையே எந்த ஒரு முயற்சியும் எடுக்கப்பட முடியவில்லை.

பின்னர் மிக்கத் துணிவோடு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து, அதில்  பட்டுக்கோட்டை கே.வி.அழகர்சாமியும், மதுரை எஸ்.முத்துவும் கலந்து கொண்டு, கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தினர்.

1948-ஆம் ஆண்டில், கறுப்புச் சட்டைப் படையைத் தடைசெய்து, அப்பொழுது சென்னை மாநில உள்துறை அமைச்சராக இருந்த டாக்டர் சுப்பராயன் அவர்களால் அரசாணை ஒன்று வெளியிடப்பட்டது.

1945-க்குப் பிறகு கறுப்புச் சட்டை அணிவதைப் பொறுத்துப் பெரியாருக்கும், அறிஞர் அண்ணாவுக்கும் சிறிது கருத்து வேறுபாடு இருந்தது. பெரியார், திராவிடக்கழகத்திலுள்ள எல்லோரும் கறுப்புச் சட்டை அணியவேண்டும், எப்பொழுதும் அணியவேண்டும என்றார்.

அறிஞர் அண்ணா அவர்கள கறுப்புச் சட்டைப்படை வீரர்களாகத் தம்மைப் பதிவு செய்து வைத்துக் கொண்டிருப்பவர்கள் மட்டுந்தான், கறுப்புச்சட்டை அணியவேண்டும்; அதுவும் படையின் சார்பாகப் பணியாற்றும்போதுதான் அணிந்துகொள்ளவேண்டும என்று கூறினார்கள். 

இந்த நிலையில் கறுப்புச் சட்டைப் படைமீது விதிக்கப்பட்ட தடை ஆணையை மீறி, அதனை உடைத்திடும் நோக்கத்தோடு, பெரியார் அவர்கள், சென்னை மெமோரியல் மண்டபத்தில், கறுப்புச்சட்டை மாநாட்டைத் திடீரென்று கூட்டினார்கள்.
மாநாட்டில் கலந்துகொள்பவர்கள் கைது செய்யப்படலாம் என்ற செய்தி செய்தித்தாள்களில் வெளிவந்தது.

அப்பொழுது, அறிஞர் அண்ணா அவர்கள் பெரியார் தன்னை  அழைக்காவிட்டாலும்,  தடையெதிர்த்துக் கூட்டப்படுகின்ற கறுப்புச்சட்டைப் படை மாநாட்டில் கட்டாயம் கலந்துகொள்ளவேண்டும் என்று அவசரமாக அவர் மகன் திரு பரிமளம் அவர்களுடைய கறுப்புச் சட்டையை (ஜிப்பா) வாங்கி போட்டுக் கொண்டு போனார்.  

அது அவருக்கு நீளமாகவும் தொளதொளவென்று இருந்ததால் அங்கி அணிந்த பாதிரியாரைப் போல  காட்சி அளித்தார். மாநாட்டு மண்டபத்தில், அறிஞர் அண்ணாவைக் கண்டதும் அனைவரும் ஆரவாரித்து, ஒலி முழக்கம் எழுப்பி, வரவேற்று, மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்தனர்.மாநாட்டில் அறிஞர் அண்ணா அவர்கள் உணர்ச்சிமிக்க, வீரஞ்செறிந்த பேருரை ஒன்றை நிகழ்த்தினார்கள்.

யாரும் கைது செய்யப்படவில்லை. சில நாட்களக்குப் பிறகு தடை ஆணை திரும்பப் பெறப்பட்டது.
கழகத்தின் கருப்புசட்டை வரலாறு இப்படிதான் தொடங்கியது..


காரிருளைக் கிழித்து செங்கதிரைப் பரப்பும்  உதயசூரியனை சின்னமாகக் கொண்டது திராவிடர் இயக்க அரசியல் பிரிவு திமுகழகம்.

No comments: