Saturday, June 11, 2016

இன உணர்ச்சியை அணையாது காப்போம்

 1975 ஆம் ஆண்டு செப்டம்பர் 24 தேதி சென்னையில் அண்ணா சாலையில் கலைஞர் சிலை திறக்கப்பட்டது. அந்த சிலையை திறந்து வைத்தவர் தவத்திரு குன்றக்குடி அடிகளார். அந்த சிலையை வைக்க ஆசைப்பட்டவர் தந்தை பெரியார். அந்த சிலையை வைத்து பெரியரின ஆசையை நிறைவேற்றியவர் அன்னை மணியம்மையார்.

அந்த நிகழ்ச்சியில் தவத்திரு குன்றக்குடி அடிகளார் பேசும்போது:

”ஆயிரம் சிறப்புகள் தமிழனுக்கு உண்டு. அதற்குள்ளே ஒரே இழிகுணம் உண்டு. ஒரு தமிழன் வாழ இன்னொரு தமிழன் பொறுத்துக் கொள்ளமாட்டான். ஆகவே இனவழிபட்ட பகைமை இருக்கிறதே அது தமிழனுக்கு அதிகம். எனவேதான் தமிழ் இலக்கிய சுவடிகளைப் புரட்டினால், அய்யா (பெரியார்) அவர்களுக்குக் கூட கோபம் வரும் சேரனை பாண்டியன் அடித்தான் பாண்டியனை சோழன் அடித்தான் இதுதானே என்று பேசுவார்.”

”தமிழினத்தின் ஒருமைப்பாட்டை நாம் கட்டிக் காக்கத் தவறியதால்தான் நாடாண்ட தமிழினம் கிழக்காசிய நாடுகள் முழுவதும் பரவி வாழ்ந்த தமிழினம் அந்த நாடுகளில் எல்லாம் தனது கலையை – கொற்றத்தை- வாழ்க்கை நெறிகளைப் பரப்பிய தமிழினம் வீழ்ந்துபட்டது என்று சொன்னால் அறிவினுடைய ஆற்றல் குறைவினால் அல்ல ஆளுமைத் திறன் இல்லாதாதினலும் அல்ல, அவர்களுக்குள்ளே ஏற்பட்ட பகை இருக்கிறதே அதுதான் காரணம். அதனால்தான் உலகப் பொதுமை பெசிய திருவள்ளுவர் கூட குடிசெயல் என்ற அதிகாரம் வைத்தார்.”

”நீ பிறந்த குடியை ஆளாக்கு; நீ பிறந்த குடியை வளர்த்துவிடு; நீ பிறந்த குடிக்கு இடையூராக நிற்காதே என்றார்.”
அப்படி சொல்கிறபோது சொன்னார்; மூன்று கடமைகளைப் பின்பற்றினால் தமிழினம் வளரும் என்று சொன்னார்.

முதல் கடமையாகச் சொன்னார்- எந்த கடமையை செய்யவும் நாள் பார்க்காதே, பருவம் பார்க்காதே என்றார். பஞ்சாங்கங்களுக்கு நாம் அடிமையாக இருக்கும் வரை நிச்சயமாக நமது முயற்சிகள் தடைபடும். நம்முடைய நாட்டில் இருக்கிற வேடிக்கை – முற்போக்குப் பத்திரிகை என்று தலையிலே போடுவார்கள்- கீழே ராசிபலனையும் போடுவார்கள் .இதிலே எது முற்போக்கு என்று தெரியவில்லை.

அடுத்து மடி செய்யாதே – சொம்பலை செய்யாதே- நாளை செய்யலாம் என்று ஒத்தி போடாதே – இன்றே செய் என்றார்.


மூன்றாவது முக்கியமானது மானம் பார்க்காதே – நீ தமிழனொடு தமிழனாக வாழும் போது உன்னுடைய தமிழனிடம் நீ மானம் பார்க்காதே- அவனிடத்தில் தோல்வி அடையாதே – பெருமையாக இரு என்றார்.

இந்த குறளைக் கூட எனக்கு எடுத்துச் சொன்ன ஆசிரியர் யார் என்று சொன்னால் – ஒரு தடவை நானும் அய்யாவும் திருநெல்வெலிக்குச் செல்ல திருப்பரங்குன்றத்தில் இருந்து ஒரே காரில் பயணம் செய்கிறோம்.

கொஞ்ச நேரம் போனதும் தன்னுடைய பையில் இருந்து திருக்குறள் புத்தகத்தை எடுத்து இந்தத் திருக்குறளைக் காட்டி படித்தீர்களா என்று கேட்டார். நான் படித்துப்பார்த்தேன். – அய்யா சொன்னார் – மானம் பார்க்காதே- என்று போட்டு இருக்கிறார்களே ஏன் தெரியுமா? – நான் தமிழர்கள் என்று சொன்னால் தமிழன் வசை செய்தாலும் பரவாயில்லை- அவன் தமிழனாக இருந்து வசை செய்து கொண்டு போகட்டும்என்று சொல்வது எனக்கு வழக்கம் என்றார்.

தமிழன் தமிழனிடத்திலே பெருமை சிறுமை பாராட்டாதீர்கள் என்று திருவள்ளுவர் சொன்னார்.
இந்த அடிப்படை பண்பைத் தமிழினம் என்றைக்குப் பெருகிறதோ அன்றைக்குதான் நம்முடைய இனம் மீண்டும் வளர்ச்சி அடைய முடியம்.

பெருகின்ற எழுச்சி அப்படியே பாதுகாக்கப்படும் என்று எண்ணாதீர்கள். ஏற்றிய அடுப்பை அணையாமல் ஊதி வளர்த்துகொண்டே இருப்பது போல , எழுச்சி கொண்ட இன உணர்ச்சி தொடர்ந்து பாதுகாத்தால்தான் அது நம்மிடத்திலே  ஒழுங்காக இருக்கும். இல்லையானால் நாலிரண்டு எலும்பு துண்டுகள் வந்து விழுந்தால் நம்மவர்களில் கூட சிலபேர் நிலைகலங்குவார்கள். அதற்குப் பிறகு இலட்சியக் கோட்டைகள் தளர்ந்து விழும் நிலை வந்துவிடும்.

எனவே அண்ணா அவர்கள் ஒரு கற்பனை சொன்னார்கள்.
அண்ணா அய்யா அவர்களைப் பிரிந்திருந்த காலம். மற்றவர்களுக்கு அது எவ்வளவு சவுகரியமாக இருக்கும் என்று கருதுகிறீர்கள். ?

இரண்டு பேர்களுக்கு இடையே இலேசான மனமாறுதல் ஏற்பட்டு இருக்கிறது என்றால் அதை அகலமாக்குகின்ற நிபுணர்கள் நம்முடைய நாட்டிலே உண்டு.

அண்ணா அவர்கள் எழுதினார் “கொய்யாப்பழம் பறிக்கப் போகும் போது கருநாகம் காலைக் கடிக்க வருகிறது.”  நம்முடைய நோக்கம் கொய்யாப் பழத்தைப் பறிப்பது. அதற்காக நாம் ஏறுகிறோம். காலிலெ கருநாகம் சுற்றிக் கொள்கிறது..கடிக்க வருகிறது. நாம் கொய்யாப்பழத்தைப்  பறிப்பதற்கு நாகம் கடித்து சாவதா? என்று கேட்டுவிட்டு கொய்யாப்பழம் திராவிடர் கழகம் அதைப்பறிக்க புசிக்க ருசிக்க ஆசைதான் ஆனால் காலைச் சுற்றி கடிக்க வருகிறது இந்த நாட்டு மேட்டுக்குடி சாதி ஆதிக்கம் என்ற் கருநாகம் ஆகவே கொய்யாபழத்தை இழந்தாலும் இழப்பேன் இந்தப் பாம்பு கடித்து சாகமாட்டேன். முதலில் அதைக் கொல்லத்தான் முயல்வேன் என்று எழுதினார்.

அதனால்தான் நாடே வியக்கின்ற அளவுக்கு எவ்வளவு இழிவாகப் பேசினாலும் அதைத்தாங்கிக் கொள்கிறவர்கள் இருக்கிறார்களே அவர்கள் துறவிகளைவிடப் பெரியவர்கள் என்று வள்ளுவர் சொன்னார்.

நம்முடைய நாட்டுத் துறவிகளின் கதைகளைப் படித்தால் பெரிய சாபங்கள் இட்ட வரலாறுகள் அதிகம். அவர்களுக்கு கோபம் வந்தால் சபித்துவிடுவார்கள். அப்படிப்பட்டவர்களைத்தான் மகரிஷிகள் என்று புராணங்கள் சொல்லுகின்றன. அண்ணா அவர்கள் மற்றவர்கள் இழித்தும் பழித்தும் பேசிய போதும் கூட அதைத் தாங்கிக் கொண்டு மறு வார்த்தை பேசாமல் இருந்தார் என்றால் ஒரே ஒரு காரணம் – இனமானம்..

காரைக்குடி விழாவில் கலந்துகொள்ள அண்ணா அவர்கள் வந்தார்கள் . அதற்கு முன்பு நான் அவர்களை எழுத்தில் பேச்சில்தான் சந்தித்து இருக்கிறேன். சில சமயம் தொலைப்பேசியில் பேசியிருக்கிறேன்.

அவர் விழாவிற்கு வந்தார் என்றதும் மடத்துக்கு வருமாறு அழைத்தேன். இரவு உணவுக்கு வருவதாக ஒப்புக் கொண்டார். அப்போது நானும் அய்யாவும் வீரமணியும் வேறு ஒரு பேராயக்கட்சியை ஆதரித்துப் பேசிக்கொண்டு இருந்தோம்.
அண்ணா அவர்கள் வந்ததும் மிக அமைதியாக நான் கேட்டேன் : நீங்கள் யாருடனோ கூட்டு வைத்து இருக்கிறீர்கள் அது எந்த அளவு பயன் அளிக்கும்; அவர்களோடு கூட்டுச் சேர்ந்து எவரும் வெற்றிப் பெற்றதாக வரலாறு இல்லை; அவர்கள் வழியில் தான் அழைத்துச் செல்வார்களே தவிர நம்முடைய வழியில் வரமாட்டார்களே என்று சொன்னேன்.

உடனே அண்ணா அவர்கள் எப்போதும் போல் இரண்டே வரிகளில் சொன்னார்கள் “அவர்கள் நம்மைஉபயோகப்படுத்திக் கொள்வதைப் போல் நம்மால் அவர்களை உபயோகப்படுத்திக் கொள்ள முடியாது என்றுநம்புகிறீர்களா? என்று கேட்டார். அவ்வளவு பெரிய தலைவர் முன்னால் அதற்கு மேல் என்ன பேசுவது?

1967ல் அவர் அவர்களைப் உபயோகப்படுத்திக் கொண்டு அதற்குப் பிறகு யாரிடம் சேர வேண்டுமோ சேர்ந்தார்கள்.  காரணம் தமிழன் என்ற ஒரே காரனத்திற்காக. இன ஒருமைப்பாட்டைக் கட்டிக்காக்க வேண்டும் என்ற உணர்வு இருந்தது. அந்த வழியில் நாம் இன்றைக்கு இந்த எழுச்சியைப் பெற்று இருக்கிறோம். பல்வேறு சாதனைகளைப் பெற்று இருக்கிறோம்.
நம்முடைய நாட்டில் ஒவ்வொரு அடியையும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று சொன்னால் இன்னும் வலிமையான பிரச்சார சாதனங்கள் நமக்கு இல்லை.

இந்த உணவு நல்ல உணவா என்று தேடி உண்ணுகின்ற தமிழன் இருக்கிறான். ஆனால் இந்தக் கருத்து இந்தப் பத்திரிகை  இந்த செய்தி நல்லனவா என்று தேடிப் பார்க்கும் உணர்வு நமக்கு வரவில்லை. அதனால்தான் பெரியார் பத்திரிகைகளையும் சேர்த்து சாபம் கொடுத்தார்.

நமது குறிக்கோள் – சாதிகளை ஒழிப்பது.
நமது குறிக்கோள் தமிழர்களை உயர்த்துவது.
நமது குறிக்கோள் தமிழனின் பண்பாட்டை உலக அளவில் உயர்த்துவது
தமிழனுடையச் செய்திகளை உலகுக்குக் கொண்டு சென்று கொடுப்பது
உலகத்தில் வேறு எந்த இனத்தையும்விட தமிழன் பெருமைக்கு உரியவன் என்பதனை உலகுக்கு அறிவித்தல்

இதற்கு எந்த வகையிலும் மதம் தடையாக இருக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டிய  கடப்பாடு அய்யாவுடன் பழகியதால் எனக்கு இருக்கிறது.

பின் குறிப்பு: கலைஞரின்  சிலை எம்ஜிஆர் மறைந்த போது அதிமுகவினரால் இடிக்கப்பட்டது .


https://web.facebook.com/notes/738439439546796/
முகநூல்  பதிவு  3 July 2014 at 22:48



No comments: