Saturday, June 11, 2016

"பிள்ளையோ பிள்ளை”- பின்னனி

"பிள்ளையோ பிள்ளை”- பின்னனி

8 July 2014 at 18:12
கலைஞர் செல்வன் மு.க.முத்து சினிமாவில் நடிக்க வந்த கதை பலருக்கு இப்போது தெரியாது. எம்ஜிஆர் கலைஞர் இருவருக்குமான நட்பு முறியவும் எம்ஜிஆர் திமுகவில் இருந்து விலகவும் மு.க.முத்துவின் திரைப்பட நுழைவுதான் காரணம் என்பார்கள். அவர் நடிக்க வந்ததால் எம்ஜிஆருக்கு தொழில் முறைப் போட்டி உருவானது என்பவர்கள் உண்டு.

 மு.க.முத்து சினிமாவில் நடிக்கப் போகிறார் என்று முதலில் அறிவித்ததே எம்ஜிஆர் தான். அந்தசமயத்தில் கழக நிகழ்ச்சிகளிலும் வெளியிலும் முக.முத்து நாடகங்கள் நடத்திவந்தார். அருமையாகப் பாடுவார். தாய்மாமன் தந்த வரம் அது.

ஒருமுறை திருவல்லிக்கேணியில் நாடகம். அந்த நாடகத்தை பார்க்கவந்த படத் தயாரிப்பாளர் ஒருவர் நாடக நிகழ்ச்சிக்குத் தலைமைதாங்கிய எம்ஜிஆரிடம் சொல்கிறார். நான் முத்துவை வைத்து படம் எடுக்கலாம் என்று இருக்கிறேன் இதை நீங்கள் இந்த நிகழ்ச்சியில் அறிவித்துவிடுங்கள் என்று.

அதை அறிவித்த எம்ஜிஆர் அதோடு நிறுத்தாமல் அந்த படத் தயாரிப்பாளருக்கு ஒரு எச்சரிக்கை என்று சொல்லி ஒரு கருத்தை வெளியிடுகிறார்.

”முத்துவை நல்லவனாக இன்று ஒப்படைக்கின்றோம். இன்றுபோல் அவரை நல்லவனாகவே திருப்பித் தரவேண்டும்” என்று அந்த மேடையிலேயே சொல்கிறார்.

அந்த பட முதலாளி அதிர்ச்சி அடைகிறார். அவர் ஏதோ அவரிடம் செல்பவர்களை கெடுத்துவிடுவதாக மறைமுகமாக எம்ஜிஆர் குற்றம் சாட்டியதை மனதில் கொண்டு படம் எடுக்கும் முயற்சியில் இறங்காமல் விட்டுவிடுகிறார்.

எதை எம்ஜிஆர் நடக்க வேண்டும் என்று நினைத்தாரோ அது அப்போதைக்கு நடந்தது.

வெளியே பொது மக்கள் என்ன நினைத்து இருப்பார்கள்?  முத்துவின் மீது எம்ஜிஆருக்கு எவ்வளவு அக்கறை பார்த்தீர்களா என்று கருதி இருப்பார்கள்..

அதே நேரத்தில் படத்தயாரிப்பாளர் எம்ஜிஆரின் பேச்சில் இருந்த உட்கிடக்கை அறிந்து நமக்கு ஏன் வம்பு என்று ஒதுங்கிக் கொண்டு முத்துவுக்கு நடிக்கும் வாய்ப்பை மறுக்க நேர்ந்தது.அது எம்ஜிஆரின் சதிவேலை என்று புரியாது. எம்ஜிஆரிடம் பழகியவர்களுக்கு அவர் உண்மை குணம் அறிந்தவர்களுக்கு அவர் எப்படிப் பட்டவர் என்பது தெரியும். ஆனால் திரையுலகில் அவரைப்பற்றி வெளியில் சொல்ல மாட்டார்கள் . காரணம் பயம் அடுத்து பக்தி (அடிமை).

இந்த நிலையில் முத்துவின் எதிர்காலத்தை உத்தேசித்து அவருடைய திறமைக்கு ஏற்ப சினிமாவில் நடித்தால் நல்லது என்று கருதி எம்ஜிஆரால் யாரும் முன்வராத காரணத்தால் அஞ்சுகம் பிக்சர்ஸ் நிறுவனம் உருவானது.

15 ஆண்டுகால சினிமாத்துறை அனுபவம் கொண்டவரான ஒளிப்பதிவாளர் அமிர்தம்மும் முரசொலி செல்வமும் இணைந்து அந்த நிறுவனத்தை ஆரம்பித்தனர். கலைஞரின் கதையையே தேர்வு செய்தனர். படத்தின் பெயர் “பிள்ளையோ பிள்ளை”
ஈஸ்ட் இந்தியா பிலிம் கம்பனி பிரைவேட் லிமிடெட்  என்ற சினிமா தயாரிக்க நிதிஉதவி செய்யும் கமபனியில் ரூபாய் 75000/- கடன் உதவி பெற்று அஞ்சுகம் பிக்ச்சர்ஸ் அந்த படத்தை எடுத்தது.

கலைஞரின் கதை
கிருஷ்ணன் –பஞ்சு இயக்கம்
கலைஞர் மகனின் அறிமுகம்
விசுவநாதன் இசை

இந்த கூட்டணியில் படம் வெற்றிப் படமாகும் என்ற எதிர் பார்ப்பில் அவுட் ரைட் முறையில் அந்த படத்தை வினியோகஸ்தர்கள் வாங்கினார்கள். படமும் ஓரளவு வெற்றி அடைந்தது. இந்தப் படம் வெளிவந்த போது எம்ஜிஆர் திமுகவில் இருக்கிறார். படத்துவக்க விழாவில் கிளாப் அடித்துத் துவக்கியவர் எம்ஜிஆர். இந்தப் பட சம்மந்தப் பட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு இருக்கிறார். முத்துவிற்கு அறிவுரைகள் தந்து இருக்கிறார். தினமும் கர்லா கட்டை சுற்றச் சொன்னார். தனக்கென்று தனி பாணி அமைத்துக் கொள்ள வேண்டும் என்றார்.

அதே நேரத்தில் முத்துவை தவறான வழி நடத்த சில திரைத்துறை அல்லாத நபர்களையும் ஏற்பாடு செய்து அனுப்பி அவர்களுக்கு உதவி செய்து அந்த இளைஞன் வாழ்க்கையை சீரழித்தவர் எம்ஜிஆர் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். எம்ஜிஆரை பற்றிய பல நிரூபிக்க முடியாத உண்மைகளில் இதுவும் ஒன்று.

திமுகவை விட்டு எம்ஜிஆர் பிரிந்த பிறகு இந்தப் படத்தைப் பற்றி சில பிரச்சனைகளை தெரிவித்தபோது எம்ஜிஆரின் காழ்ப்புணர்வு - மு க முத்துவை அவர் தொழில் போட்டியாளராகக் கருதினார் என்பதும் சிலருக்குப் புரிந்தது.


அறிவுச்சுடர் மூவிஸ் பெயரில்” நம்பிக்கை நட்சத்திரம்” என்ற மு.க. முத்து நடித்த படத்தை தயாரித்தவர்கள்  திரு.மு.க. ஸ்டாலின் , திரு.சி.சிட்டிபாபு M.P திரு. ஆர்.கே சின்னதுரை என்பது கூடுதல் தகவல். 

No comments: