Wednesday, January 6, 2016

பண்டைத் தமிழ்மணம்


பண்டைத் தமிழ்மணம் என்று இங்குக் குறிக்கப்பட்டவை, தமிழகத்தில் தொன்றுதொட்டுப் பிராமணர் பெருந்தொகையாய் வந்து பலவூரிலும் தங்கும் முன்னர், தமிழப் பார்ப்பாராலும் குலத்தலைவராலும் தமிழில் நடத்தப்பெற்று வந்த மணங்களாகும். அவை எந்தவித சமய சடங்குகள் இல்லாமல் இக்கால வழக்கத்தில் உள்ள முறைகள் எதுவும் இல்லாமல் நடந்தேறியதாக சங்கஇலக்கிய அகநானூற்றுப் பாடல்கள் 86 - லும் 136 – லும் தெளிவாகவே குறிக்கப்பட்டுள்ளன. அதில் வேள்வித்தீ இயற்றலும் தீவலம் வருதலும் ஆரியப்பார்ப்பன புரோகிதமும் தட்சணை தருதலும் இல்லாமல் இருப்பதைக் காணலாம்.

பிராமணர் தென்னாடு புகத்தொடங்கியது ஏறத்தாழ கி.மு.2000 எனினும், அவர் முதலடியிலேயே பெருந்தொகையினராய் இங்கு வந்தவரல்லர். முதன்முதல் இங்குக் கால்வைத்த பிராமணர் விரல்  விட்டு எண்ணத்தக்கவரேயாவர். கிறித்தவவூழி தொடங்கும்வரை இடையிட்டிடையிட்டு சிறுசிறு கூட்டத்தாராகவே அவர் வந்து கொண்டிருந்தனர். கி.பி. 3 ம் நூற்றாண்டிற்குப் பின், பல்லவ அரசர் காலத்தில் தான், அவர் பெருவாரியாக வடநாட்டிலிருந்து குடியேற்றப்பட்டனர். இதைப் பிற்காலச் சேரசோழ பாண்டியரும் பின்பற்றினர்.

"மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிட," என்று சிலப்பதிகாரம் பிராமண அல்லது ஆரியப்பார்ப்பன புரோகிதத்தைக் குறித்திருப்பது, கடைச் சங்கக் காலத்தில் நகரங்களிலும் மாநகரங்களிலும் பெரும்பாலும் அரசரிடையும் வணிகரிடையும் இருந்த நிலையைத் தான் குறிக்கும். இன்றும் பிராமணரில்லாத பல நாட்டுப்புறத்து ஊர்கள் இருப்பதாலும், சில தமிழ்க்குலத்தார் பிராமணப் புரோகிதமின்றித் தம் மணங்களை நடத்திக்கொள்வதாலும், பிராமணர் வந்த பின்பும், கடைச்சங்க காலம் வரை பெரும்பாலும் தமிழர் மணங்கள் தமிழ் மரபிலேயே நடந்து வந்தன என்று அறிதல் வேண்டும்.

தமிழப்பார்ப்பார், பண்டாரம், புலவன், குருக்கள், திரு(க்கள்), பூசாரி, உவச்சன், ஓதுவான், போற்றி, நம்பி, அருமைக்காரன் (புடவைக்காரன்), வள்ளுவன் முதலிய பல்வேறு வகுப்பார் ஆவர். பார்ப்பான் கோயிற் கருமங்களைப் பார்ப்பவன். அந்தணன், ஐயன் என்னும் பெயர்கள் முதன்முதலில் தமிழ்ப் பெரியோரை - சான்றோரை குறித்தது போன்று, பார்ப்பான் என்னும் பெயரும் முதன் முதலில் தமிழப்பூசாரியையே குறித்ததுதுரை என்னும் தமிழ் அல்லது தெலுங்குச் சொல் நம் நாட்டில் தங்கும் மேனாட்டார்க்கு வரையறுக்கப்பட்டது போன்றே, அந்தணர், பார்ப்பார் என்னும் பெயர்களும் பிராமணர்களுக்கு வரையறுக்கப்பட்டன.


 நாட்டாண்மைக்காரன், நாட்டான், பெரியதனக்காரன், அம்பலக்காரன், ஊர்க்கவுண்டன், ஊருக்குடும்பன், பட்டக்காரன், ஊராளி, மூப்பன், முதலி என ஆங்காங்கு வெவ்வேறு பெயரால் அழைக்கப்படுபவர்கள் குலவியல் ஊராட்சி முறையில் தலைவராவார். பண்டைத்தமிழ்மண முறையிலேயே இன்னும் சில பகுதியில் சில குலக்குழுவினரிடையே திருமணங்கள் பார்ப்பன புரோகிதம் தவிர்த்து நடைபெறுவது இன்றும் இருக்கிறது. இன்னும் இதன் விரிவையெல்லாம் திரு.தேவநேய பாவாணரின் "தமிழர்குல மரபு" என்னும் நூலில் காணலாம்.

No comments: