Friday, January 15, 2016

தீர்கதரிசி - வீட்டைப் பற்றி


அப்போது ஒரு கொல்லத்துகாரர்
வீட்டைப் பற்றி வினவிய போது
அவர் விடை பகர்ந்தார்
.
தனித்து தொலைவில் கருக்கல் வெளிச்சத்தில்
உன்னில் திரியும் ஊர்சுற்றியை வரவேற்பதற்கு .
நகரின் மதில் சுவர் வளாகத்தினுள் வனாந்திரத்தில்
உங்களுடைய கனவுப்பந்தலை வீடாக கட்டுகிறீர்

பெருத்த உடல்தான் வீடு - அது
சூரியனால் வளர்கிறது
இரவில் அமைதிக்கு உறங்குகிறது - ஆனாலும்
கனவுகள் இல்லாமல் இல்லை.
வீடு கனவு காணாதா?
நகரத்தை விட்டு சோலைக்கும் மலை உச்சிக்கும்
செல்ல கனவு காண்கிறதே?      

என்னால் உங்கள் வீடுகளை என் கைகளால் சேகரித்து
காடுகளிலும் புல்வெளிகளிலும் தூவமுடியும். - அப்போது
பள்ளத்தாக்குகள் தெருவீதிகளாகும்
பசுமை பாதைகள் சந்துகளாகும்
அங்கே உங்கள் ஆடையில் மண்வாசனையுடன்
திராட்சைத் தோட்டங்களுக்கு நடுவே
நீங்கள் ஒருவரை ஒருவர் தேடலாம் - ஆனால்  
இவை இதுவரை நிறைவேறவில்லை

உங்களின் முன்னோர் அவர்களின் பயத்தால்
உங்களை அணைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த பயம் இன்னும் சிறிது காலம் நீடிக்கும்.

இன்னும் கொஞ்சகாலத்தில் உங்கள் சமையலறை
நகரமதிற்சுவரால் வீட்டிலிருந்து பிரிக்கப்படும்.

ஆர்பலேஸ் மக்களே சொல்லுங்கள்.
அந்த வீடுகளில் என்ன வைத்து இருக்கிறீர்கள்?
கதவுகளைப் பூட்டி எதைப் பாதுகாக்கிறீர்கள்?
உங்கள் ஆற்றலை வெளிப்படுத்தத் தேவையான
முழுஅமைதி அங்கே நிலவுகிறதா?
மனச்சிகரத்தில் வியாபித்திருந்த தோரணவாயில்
மங்கலாக உங்களுக்கு நினைவில் இருக்கிறதா?

புனிதமலையிலுருந்து
உங்கள் இதயத்தால் கொண்டு செல்லபடும்
மரத்தாலும் கல்லாலும் வடிவமைக்கப்பட்டப்
பொருள்களில் அழகு மிளிர்கிறதா? சொல்லுங்களேன்
அவையெல்லாம் உங்கள் வீட்டில் இருக்கிறதா?

அல்லது
வஞ்சகமாக வீட்டுக்குள் விருந்தாளியாக நுழைந்து
விருந்தோம்பியாக ஆனபிறகு
வீட்டின் அதிகாரியாகவே மாறிவிடுகிறதே இன்பம்
அது நாடும் இச்சைதான் இருக்கிறதா?

பேராசையாகிய நிழற்பதுமைகளைத்
துறட்டியாலும் சாட்டையாலும் ஆட்டுவிக்கும்
எந்திரியாக இருக்கிறது இச்சை

இச்சையின் கைகள்
பட்டுப்போல் மிருதுவானதாக இருந்தாலும்
இதயம் இரும்பாக இருக்கும்.

படுக்கையின் பக்கத்தில் இருந்து
பேருடலின் கண்ணியத்தை பரிகசிக்கதான்
தாலாட்டுப் பாடி உங்களை தூங்கச் செய்கிறது இச்சை

எளிதில் நொருங்கும் மெல்லிய பாத்திரங்களை
நெருஞ்சி கரடில் போடுவது போல் 
உங்கள் கேள்வி ஞானத்தை
எடுத்தெறிந்து ஏளனம் செய்கிறது இச்சை

மெய்யாகவே,
இன்பம் நாடும் இச்சை இருக்கிறதே - அது
உயிர்மையின் பேரார்வத்தை கொலை செய்துவிட்டு
இழவுச்சடங்கில் இளித்துக் கொண்டு நடக்கிறது.

பிரபஞ்சத்தின் பிள்ளைகளே,
நீங்கள் ஓய்வில் ஓய்வின்றி கிடக்கிறீர்.
நீங்கள் வசப்பட்டு அடக்கபட ஆள்படாதீர்.
உங்கள் வீடுகள் நங்கூரமாக அல்ல
பாய்மரத் தூண்களாக நிற்கட்டும்.
புண்ணுக்குப் புனுகு பூசியது போல் அல்லாமல்
கண்ணுக்கு இமைகளாக வீட்டைக் காத்திடுவீர்.

வீட்டுக் கதவின் வழியே நுழையும் போது
உங்கள் இறக்கைகள் ஒடுங்கவோ;
உங்கள் தலை கூரையில் முட்டவோ;
உங்கள் மூச்சுக் காற்றின் அச்சத்தில்
சுவர்கள் விரிசலாகி விழவோ கூடாது.

இறந்தவர் கல்லறையில் வாழ்வதைப்போல்
அங்கே வாழ வேண்டாம்.
வீடுகள் பிரகாசமகவும் கம்பீரமாகவும் இருந்தாலும் - அங்கே
உங்கள் இரகசியத்தை அடைக்கவோ
விருப்பங்களை குடியமர்த்தவோ செய்யாதீர்.

உங்கள் எண்ணற்ற விருப்பங்கள்
அமைதியுடன் தவழும் இரவில் 
பனித்துளி படரும் கதவுகளையும்
இன்னிசை முழங்கும் சாளரங்களையும் கொண்ட

வான்விடுதியில் வாழ்கிறது

No comments: