Friday, January 15, 2016

தீர்கதரிசி - மகிழ்ச்சியும் கவலையும் பற்றி


பிறகு ஒரு பெண்
மகிழ்ச்சியும் கவலையும் பற்றி
சொல் என்றதும் அவர் சொல்லத் தொடங்கினார்:

உங்கள் மகிழ்ச்சி மாறுவேடம் தரித்த கவலை.
எந்த கிணற்றில் உங்கள் சிரிப்பொலி எழும்பியதோ
அதே கிணற்றில்தான் உங்கள் கண்ணீர் நிரம்பி இருக்கிறது
வேறு எப்படி இருக்க முடியும்?

உங்கள் மீது கவலை செதுக்கிய பள்ளத்தில்
உங்களால் அதைவிட கூடுதல் மகிழ்ச்சியை நிரப்ப முடியும்.

குயவர் சூளையில் சுட்டெடுக்கப்பட்டது தானே
உங்கள் மதுக்குவளை?
கத்தியால் துளையிடப்பட்ட மரம்தானே
உங்கள் உயிர்மையைக் கரையச் செய்யும் புல்லாங்குழல்?


உங்களின் மகிழ்ச்சியான தருணங்களில்
இதயத்தின் ஆழத்தில் பாருங்கள்.
எது உங்களுக்கு கவலை அளித்ததோ
அதுதான் மகிழ்ச்சியை கொடுத்தது என்பதை காண முடியும்.
உங்களின் கவலையான சந்தர்ப்பங்களில்
மீண்டும் இதயத்தைப் பாருங்கள். உண்மை புரியும்.
எது உங்களுக்கு மகிழ்ச்சிகரமாக இருந்ததோ
அதற்காக அழுவதைப் பார்க்க முடியும்.

உங்களில் சிலர் மகிழ்ச்சிதான் கவலையைவிட பெரிது என்பர்.
வேறு சிலர் இல்லை கவலைதான் மகிழ்ச்சியைவிட பெரிது என்பர்.
ஆனால் நான் சொல்கிறேன் அவை இரண்டும் பிரிக்கமுடியாதது என்று.
அவை ஒன்றாகவே உங்களிடம் வந்தன.
ஒன்று முற்றத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கும் போது
நினைவிருக்கட்டும் மற்றது உங்கள் படுக்கையில் தூங்கி கொண்டிருக்கும்.

உண்மையில் உங்கள் கவலையும் மகிழ்ச்சியும்
தராசுத் தட்டுகளில் ஊசலாடுகின்றன.
நீங்கள் கவலையும் மகிழ்ச்சியும் அற்றவராக இருக்கும்போது
சமநிலையில் அமைதியுடன் இருப்பீர்.

தங்கத்தையும் வெள்ளியையும் கொண்டு - கருவூலன்
உங்களை எடை போடும் பொழுது
உங்கள் கவலை அல்லது மகிழ்ச்சி
கூடுதலாகவோ குறைவாகவோ இருக்கும்.


No comments: