Wednesday, January 6, 2016

ஏழு கோட்பாடுகள்



வைதிகத் திருமணத்தில் சப்தபதி என்று ஒரு சடங்கு இருக்கிறது. மணமக்கள் இருவரும் ஏழு அடி எடுத்து நடக்கச் செய்வர். அப்போது ஏதோ ஒரு மந்திரம் சொல்லப்படும். அதன் உண்மை பொருள் நமக்குத் தெரியாது. ஆனால் வள்ளுவரின் வாழ்க்கை நெறியாம் வள்ளுவத்தில் கீழ்காணும் ஏழு கோட்பாடுகளை ஒருவர் தம் வாழ்வில் கடைபிடித்தாலே போதும். அவரது வாழ்வு சிறக்கும்.
1.        அன்புடைமை:
அன்புதான் உலகின் உயிர்ப்பு (80). அன்பில்லாத வாழ்க்கை பாலைமரத்தில் பட்டமரம் போன்றது (78). அன்பு அறத்திற்கு மட்டும் அல்ல வீரத்திற்கும் அடிப்படையாகும்(76) இந்த உலகம் இன்புற்று வாழும் வாய்ப்பு அன்பினால் மட்டுமே ஈடேறும்(75) .
2.        பகுத்தறிதல்:
மெய்யுணர்தல், அறிவுடைமை என்னும் இரு அதிகாரங்களிலும் பகுத்தறிவைப் பற்றிய கருத்துகளைக் காணலாம். எப்பொருளும்எத்தன்மைத்தாயினும் (355) அதனையார்யார்வாய்க் கேட்பினும் (423) அதனுடையமெய்ப்பொருள் காண்பது அறிவுஎன்கிறது வள்ளுவம்.
அதாவது எதனையும் அதன் தன்மைகளை சீர்துக்கி ஆய்ந்து அறிந்து ஏற்றுக்கொள்வதே சிறந்தது. அவர் சொன்னார் இவர் சொன்னர் என்றோ நம்பிக்கையின் அடிப்படையிலோ எதனையும் ஏற்கக் கூடாது என்பதே வள்ளுவம். உண்மைப் பொருளை ஆய்ந்து அறிவதுதான் அறிவு என்னும் வள்ளுவம்  ”நன்றின்பால் உய்ப்பது அறிவு (422) என்று மனம் போன போக்கில் போகாமல் தீமையை விலக்கி  நன்மையானதில் மட்டும் மனதை செல்லவிடுவதே அறிவு என்றும் விளக்குகிறது. கற்றல் மட்டுமே அறிவு அல்ல. நன்மை, தீமைகளையும் அறிவதே அறிவு என்றும் கொள்ளலாம்.


3.        வாய்மை
வாய்மைஇன்று மறைந்து போன ஒன்றாகக் காணப்படுகிறது. வாய்மை என்னும் உண்மை  மனிதனுக்குத் தேவையான பண்பாக இருந்தாலும் கூட அது பல சமயங்களில் பின்பற்றப்படுவதில்லை. பொய் சொல்லாமல் உண்மை மட்டுமே பேசுவதை வாழ்வினில் கடைப்பிடித்தால்  நன்மை விளையும் என்று அரிதியிட்டுக் கூறமுடியாதச் சூழலில் வாழ்கிறோம்.
எனினும் வாய்மை வலியது. வாய்மை என்றேனும் வெல்லும். வாய்மை என்பது உண்மை பேசுவது என்னும் புறப்பொருளையும் தாண்டி உட்பொருள் பலவற்றை வள்ளுவம் விளக்குகிறது.
வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல்  (குறள். 291)
பிறருக்கு எள்முனையளவு தீமையும் ஏற்படாத ஒரு சொல்லைச் சொல்வதுதான் வாய்மை எனப்படும்பொய்ம்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த  நன்மை பயக்கும் எனின் (குறள். 292)
குற்றமற்ற தன்மையை விளைவிக்கக் கூடுமானால் பொய்யான சொல்லும்கூட வாய்மை என்றுகூறத்தக்க இடத்தைப் பெற்றுவிடும்.அதாவதுவாய்மைஎன்பது பிறருக்கு எந்தவிதத் தீங்கும் செய்யாத சொற்களைச் சொல்வதுதான். பொய்யான சொற்களால் பொதுவில் நன்மை  விளையாது. ஆனாலும் குற்றமற்ற பொய்யான சொற்களும்  நன்மையை விளைவிக்குமானால் வாய்மை என்றே கருதலாம் என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்..



4.        குற்றங்கடிதல்
தவறு செய்வது மனித இயல்பு. தெரியாமல் அறியாமல் செய்வதே தவறு ஆனால் தப்பு என்பது தெரிந்து செய்வது. குற்றமாகக் கருதக் கூடியது. குற்றம்தான் ஒருவனுக்கு அழிவைத்தரும் பகை (குறள் 434). குற்றத்திற்கு அடிப்படையானவை மூன்று. முதன்மையானது செறுக்கு (இறுமாப்புதற்பெருமை), இரண்டாவது சினம் என்னும் கோபம் அல்லது ஆத்திரம், மூன்றாவது சிறுமை என்னும் கீழ்த்தரமான இழிவான நடத்தை (குறள் 431). இவையுமல்லாமல் மிகுந்த செல்வம் சேர்க்கும் எண்ணமும் சேர்த்த செல்வத்தை வறியவருக்கும் தேவையானவருக்கும் வழங்கிடும் மனம் இல்லாத கஞ்சத்தனமும் கூட பெரும் குற்றம் ஆகும் (438) செய்த குற்றம் சிறிதே ஆனாலும், அதைப் பெரிய குற்றமாகக் கருதி மனம் வருந்தி திருந்த வேண்டும். (குறள் 433) தவறைத் திருத்திக் கொள்வதும் தப்பை செய்யாமலிருப்பதும்தான் குற்றம்கடிதல்.

5.        வினைத் தூய்மை
செய்கின்ற அல்லது செய்யப் போகின்ற செயல் புகழையும் நன்மையையும் தருமா என்று ஆராய்ந்து செய்ய வேண்டும்( குறள் 652, 653).  எவ்வளவு துன்பப்படுவதாக இருந்தாலும் தெளிந்த அறிவுடையவர்கள் இழிவான செயல்களைச் செய்ய மாட்டார்கள் (குறள் 654).                              ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை (குறள் 656) …  அதாவது பெற்ற தாயின் பசியைக் கண்டு வருந்த நேர்ந்தாலும், சான்றோர் பழிப்பதற்குக் காரணமான இழிவான செயல்களை  செய்யக் கூடாதுஎந்த ஒரு செயல் குற்றமற்றதாகவும் நன்மையும் புகழையும் தருமோ அதுவே வினைத்தூய்மை.


6.        வெகுளாமை
கோபம் கூடாது. சினம் கொள்வது தீது. இது ஒரு கொடிய பழக்கம். சினத்தை விடப் பெரிய பகை வேறு இல்லை. ஒருவன் தன்னைத் தான் காத்துக் கொள்ள விரும்பினால் சினம் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்; தவறினால் சினம் அவனைக் கொன்றுவிடும். சினம் யாரிடம் உள்ளதோ அது அவர்களையே அழித்துவிடும் (குறள் 305). சினங்கொள்ளாமல் வாழப் பழகுவோம். இக்கால அறிவியலும் கூட கோபம் கொள்வதால் மன அழுத்தமும் குருதி அழுத்தமும் கூடுதலாகுவதாகவும் அது உடல் நலனுக்குக் கேடு விளைவித்து உயிருக்கே உலைவைக்கும் என்பதை மெய்பித்திருப்பதை நினைவில் கொள்வோம்.

7.        கள்ளுண்ணாமை ( குடிப்பழகாமை)
இன்றைய காலகட்டத்தில் கள் / மது  என்ற போதைப் பொருள் குடிப்பது நவநாகரீகமான ஒன்றாகக் கருதப்படுகின்றது. குடிபழக்கம் மிகக் கொடிது. உடலுக்கும் உயிருக்கும் கேடு விளைக்கும்குடிபழக்கத்திற்கு அடிமை ஆனவர்கள் முதலில்உட்கப்படார் ஒளியிழப்பார் (குறள் 921) அதாவது மதிப்பை இழந்து விடுவார்கள். அவர்களிடம் பகைவரும் அஞ்சமாட்டார்கள்அடுத்ததாகசான்றோரான் எண்ணப் பட வேண்டாதார் (குறள் 922) ஆகிவிடுவர். அதாவது நல்லவர்களின் உறவு போய்விடும்குடித்துவிட்டு மயங்கிக் கிடக்கும் தன் மகனை அவன் குற்றங்களை மன்னிக்கக்கூடிய தாயே சகிக்கமாட்டாள் என்கிறபோது மற்றவர்கள் நல்லவர்கள் எப்படி சகித்துக் கொள்வார்கள் ? ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால்; என்மற்றுச் சான்றோர் முகத்துக் களி  (குறள். 923) என்றும், ஒரு குடிகாரன் தான் குடிக்காமல் இருக்கும்போது மற்றொரு குடிகாரன் மது மயக்கத்தில் தள்ளாடுவதைப் பார்த்தப் பிறகாவது அதன் கேட்டினை எண்ணிப்பார்க்க மாட்டானா? கள்ளுண்ணப் போழ்திற் களித்தானைக் காணுங்கால உள்ளான்கொல் உண்டதன் சோர்வு (குறள் 930) என்றும் வள்ளுவர் கேட்கிறார்.


ஆதலால் குடி குடியை கெடுக்கும். மிகுந்த குடி உடல் நலனை ஒடுக்கும். பெரும்குடி உயிரைக் குடிக்கும் என்பதனை மனதில் இருத்தி மதியுடன் வாழ்வோம். அவ்வாறே புகைப்பதும் புகையிலை மெல்வதும் உடல்நலக்கேடு என்பதை அறியவேண்டும். வள்ளுவர் காலத்தில் புகைப்பழக்கம் இல்லை. இருந்திருந்தால் அதையும் அவர் கண்டித்து இருப்பார்.

1 comment:

Unknown said...

KING CASINO, LLC GIVES A $100 FREE BET
KING CASINO, 토토사이트 LLC herzamanindir.com/ GIVES A https://septcasino.com/review/merit-casino/ $100 FREE BET to wooricasinos.info try. Visit us today and casinosites.one receive a $100 FREE BET! Sign up at our new site!