Wednesday, January 6, 2016

தமிழில் பெயர் சூட்டுவோம்


அண்மைக் காலமாகத் தமிழ்ப் பெற்றோர்களிடம் தங்கள் குழந்தைகளுக்குத் தமிழ் அல்லாத பெயர்களை வைக்கும் போக்கு அதிகரித்து வருகின்றது. இந்தப் பெயர்கள் தமிழ் அல்லாதன மட்டுமல்ல, அவை பொருள் அற்றதாகவும் இருக்கின்றன.

எடுத்துக்காட்டாக கஜன், டிலஷ்சனா, டில்ஷான், டிலக்ஷன், சாதனா, ரதிஷா, ஷாரா, ஷிரோமி, யூரேனியா, ஜெனாத், தர்ஷா, ஜசோன், ஆசா, கோசா, வவியன், லட்சிகா, நிருஜா, நிஷானி, நிருபிகா, அபிஷா, சுஜுதா, ஜீவிதன், நிரோஜன், நிரோஜி, வர்ஷன், அவந்திகா, சவ்மியா, போன்ற பெயர்களைக் குறிப்பிடலாம்.

 பெயர் ஒருவருடைய தேசியம் அல்லது இன அடையாளத்தின் குறியீடாகும். தமிழ்ப் பெயர்களைப் புறக்கணித்து விட்டு வடமொழிப் பெயர்களை வைப்பது தமிழர் தம்மையே சீரழிப்பதாகும். தமிழ்த் தேசியத்தை சிதைப்பதாகும். ஒரு யூதனை அல்லது ஒர் ஆங்கிலேயனை அவனது பெயரை வைத்துக் கொண்டே கண்டு பிடிக்கலாம். தமிழர்களை அப்படிக் கண்டு பிடிக்க முடியாது

பெற்றோர்கள் தமிழ் அல்லாத பெயர்களை வைப்பதற்கு அவர்களுக்கு தமிழ்மொழி பற்றிய அறியாமை காரணமாகவே வடமொழிப் பெயர்களைத் தங்கள் குழந்தைகளுக்கு வைக்கிறார்கள். தமிழ் எது வடமொழி எது என்பது அவர்களுக்குத் தெரிவதில்லை. குறிப்பாக பஞ்சாங்கத்தைப் பார்த்து அல்லது அர்ச்சகர் சொல்வதைக் கேட்டு நடப்பதாலும் இந்தக் கேடு நடக்கிறது. புதிதாக முளைத்துள்ள எண்சாத்திரம் இன்னொரு காரணம் ஆகும்.

நிரோஜன் நிரோஜினி என்றால் முறையே மானம் அற்றவன் மானம் அற்றவள் என்று பொருள். அது தெரியாமல் அந்தப் பெயர்களைப் பெற்றோர்கள் வைக்கிறார்கள். தமிழில் எழுதுகிறேன் என்று சிரஞ்சீவி என்று எழுதுகிறார்கள். இது தலைவெட்டி என்று பொருள்படும்.

தமிழில் மொழிமுதல் வராத எழுத்துக்கள் இருக்கின்றன. , ,,,,,, என்ற எட்டும் மொழிமுதல் வாரா. ஆனால் பெற்றோர்கள் இந்த அடிப்படை இலக்கண விதியை அறியாதவராய் எண்சாத்திரம் அல்லது பஞ்சாங்கம் பார்த்து இந்த எழுத்துக்களை முதலாகக் கொண்ட பெயர்களை வைக்கிறார்கள். எண்சாத்திரம்  பார்ப்பது மூடநம்பிக்கையாகும்.

தமிழில் அல்லி, அருள்மொழி, அன்பரசி, கலைமகள், கலையரசி, கோதை, நங்கை, நாமகள், நிலா, திருமகள், தமிழ்ச்செல்வி, பூங்கோதை, பூமகள், மங்கை, மலர், மலர்விழி, வள்ளி, அன்பரசன், இளங்கோ, கண்ணன், செந்தில், செந்தூரன், சேரன், பாரி, மாறன், முருகன், வேலன், போன்ற இனிமையான, அழகான, சின்னச் சின்னச் பெயர்கள் ஏராளமாக இருக்கின்றன.

முடிந்த மட்டும் அன் விகுதியில் முடியும் ஆண் பெயர்களை வைத்தால் சந்த இனிமை மிகும். அதேபோல முடிந்த மட்டும் பெயர்களில் வல்லின எழுத்துக்களைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்

"பெயரிட்டழைப்பதில் கூடத் தமிழர் தன் இனமானத்தையும் காக்கவில்லை, குடிமானத்தையும் காக்கவில்லை, நோக்கவில்லை. தாத்தாவின் பெயரையும்,பாட்டியின் பெயரையும், தம் மக்களுக்கு வைப்பதே தமிழர் முறை. எனவேதான் தாத்தாவின் பெயரை உடையவன் என்ற கருத்தில் பெயரன் எனப்பட்டான். பாட்டியின் பெயரை உடையவள் பெயர்த்தி எனப்பட்டாள். ஆனால் தமிழர் முறை, வழக்கு, முறைப்படி தொடர்ந்ததா? இல்லை. கிள்ளி என்றும் செழியன் என்றும் பொறை என்றும் இருந்த மூத்த பெயர்கள் கி.பி. மூன்றாம் நூற்றாண்டுக்குப் பிறகு சிம்ஹன் என்றும் வர்மன் என்றும் கிருஷ்ணசாமி என்றும் அருணாசலம் என்றும் மாறின.தனிப் பெயர்கள் மாறின. கோயில் பெயர்கள் மாறின. கடவுள் பெயர்கள் மாறின. மக்கட் பெயர்கள் மாறின. மன்னர் பெயர்கள் மாறின. இடைக்காலத்துச் சமற்கிருதமயமாயின. ஏன் அப்படி? இங்கிலாந்தில் எலிசபெத் போன்ற பெயர்கள் இன்றும் தொடர்கின்றன. ஜெர்மனியில் கெய்சர் போன்ற பெயர்கள் இன்றும் தொடர்கின்றன. அங்கெல்லாம் புது மொழிப் பெயர் மோகம் இல்லை. ஆனால் தமிழ் நாட்டில் மட்டும் நலங்கிள்ளி நந்திவர்மனாகி, குலோத்துங்கனாகி, பராகிரமனாகி, பரசுராமனாகி, ஜோசப்பாகி அப்துல் அஜீஸ் ஆகி தற்போது சதீஷ், சுரேஷ் என்று ஆகிறானே ஏன்? ஏன்? ஏன்?” என்று திரு .. அறவாணன் அவர்கள் தமிழர் மேல் நிகழ்ந்த பண்பாட்டு படையெடுப்புகள் என்னும் நூலில் வினாவுகிறார்

பல நூறு ஆண்டுப் பழமை வரலாறு பேசும் தமிழரிடம் கேவலம் தம் பெயரில் கூடத் தம் மொழி மானத்தைக் காக்கும் பண்பு இல்லாமையே இதனைக் காட்டுகிறது.


மதத்தையும் சாதியையும் நினைவுறுத்தும் வகையில் அல்லாமல் பெயர்கள் அமைவது மக்களை ஒற்றுமைப் படுத்தவும் பொதுவினராக மாற்றவும் வேறுபாடுகளைக் களைந்து சமுதாயம் முன்னேறவும் வழி வகுக்கும் என்று நம்புவதில் தவறில்லை

நம்முடைய தமிழ்ச் சமுதாயம் முன்னேற வேண்டுமெனில், நாம் யாவரும் இனத்தால் தமிழர்கள் என்ற உணர்வுடன் ஒன்றபடல் கட்டாயம் ஆகிறது. அதற்கு தமிழிலே பெயர் சூட்டுதலும் சூட்டிக்கொளலும் பெரிதும் பயன் அளிக்கும்.

No comments: