Wednesday, January 13, 2016

எம்ஜியார் - எம்ஆர்ஆர் வழக்கு

அன்று 12-01-1967 ... மாலை நேரம் .. விடிந்தால் போகி.. அப்போது எனக்கு 10 வயது. காஞ்சிபுரத்தில் சேர்மன் திரு அ.க.தங்கவேலர் அவர்கள் வீட்டுக்கு நான்கு வீடு தள்ளி குடி இருக்கிறோம். இன்றும் நினைவிருக்கிறது. அன்றுமாலை ரங்கசாமி குளம் அருகில் கண்ணாயிரம் டீக்கடை அருகில் ஒரே கூட்டம். கண்ணாயிரம் டீக்கடை திமுக தொண்டருடையது. பெரிய அளவில் அண்ணாவின் உருவப்படமும் கழகத் தலைவர்கள் படமும் சுவரில் மாட்டப்பட்டிருக்கும்.

.”எம்ஜிஆரை எம்மாராதா சுட்டுடாரம்பா. அவரும் சுட்டுகிட்டாராம். ரெண்டு பேரையும் ஆஸ்பத்திரியில சேத்து இருக்காங்களாம்’
“படுபாவி ஏன் அப்படி செய்ஞ்சானோ”
“எல்லாம் இந்த காங்கிரசுகாரனுங்க செய்யிற வேலை”
”ரேடியோ நியூசில் என்னப்பா சொன்னா”
”ஏழேகால் டெல்லி நியூசில என்னா சொல்றான் பாக்கனும்பா”
இப்படி ஆளாளுக்கு பேச்சு.
அன்றைக்கு இரவு எங்கள் வீட்டில் யாரும் சாப்பிடவில்லை. அப்பாவுக்கு காத்திருந்தோம். அவர் ராத்திரி வரவில்லை. நான் அம்மா தங்கை மூவரும் அழுதுகொண்டிருந்தோம். அப்பாவும் அவர் நண்பர் திரு ஜெகன்நாதன், இருவரும் அன்று இரவு லாரி பிடித்து சென்னைக்குச் சென்று விட்டதாக மறுநாள் அவர்கள் வந்ததும்தான் தெரிந்தது. ராயப்பேட்டை மருத்துவமனை அருகில் அன்று இரவு குழுமிய ஆயிரக்கணக்கான திமுகவினரில் இவர்களும் அடங்குவர். அங்கே கண்ணீர்புகை தடியடி எல்லாம் நடத்தி கூடி இருந்த கூட்டத்தை கலைத்து இருக்கிறார்கள்.

மறுநாள் போகி அன்று பக்கத்தில் இருந்த தோழர் சபாபதி அவர்கள் வீட்டின் முன் இயங்கிய கிளை கழகத்தில் போய் தினத்தந்தி பார்த்தேன். கன்னித்தீவு படிக்க அங்கேதான் போவேன்.
தந்தியில் தலைப்புச் செய்தி
எம்ஜிஆர் சுடப்பட்டார்
முரசொலிக்காக கட்சிக்காரர்கள் காத்து இருந்தனர்.
முரசொலி 13-01-1967 தலைப்புச் செய்தி
புரட்சி நடிகர் உயிர் தப்பினார்
துப்பாக்கிக்குப் பலியாக்கிடச் செய்த முயற்சி பலிக்கவில்லை

எம்ஜிஆர் சுடப்பட்ட சம்பவத்தின் வழக்கு சாராம்சம்:
1967-ம் ஆண்டு ஜனவரி 12-ம் நாள் மாலை 5 மணி அளவில் எம்.ஆர். இராதாவும், பெற்றால்தான் பிள்ளையா திரைப்படத் தயாரிப்பாளார் வாசுவும் எம்.ஜி.ஆரின் நந்தம்பாக்கம் வீட்டிற்குச் சென்று அவரைச் சந்தித்துப் பேசியுள்ளனர். இந்த சந்திப்பின்போது எம்.ஜி.ஆர். துப்பாக்கியால் சுடப்பட்டார். இடது காது அருகில் குண்டு உரசி சென்று தொண்டையில் காயம். இராதாவின் உடலில் நெற்றிப் பொட்டிலும் தோளிலுமாக இரு குண்டுகள் பாய்ந்தன. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவரும் உயிர்பிழைத்தனர். இந்தத் துப்பாக்கிச் சூட்டையடுத்து இராதா எம்.ஜி.ஆரை சுட்டுக் கொல்ல முயன்றார் என்றும், அதன்பின் தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்ய முயன்றார் என்றும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
செங்கல்பட்டு அமர்வு நீதிமன்றத்தில் எம்.ஜி.ஆரை, எம்.ஆர்.ராதா சுட்ட வழக்கு விசாரிக்கப்பட்டது. அவ்வழக்கை விசாரித்தவர் நீதிபதி திரு. லட்சுமணன். அரசுத் தரப்பில் வழக்கறிஞர்கள், பி.ஆர். கோகுலகிருஷ்ணன் (இவர் பின்னாளில் குஜராத் தலைமை நீதிபதியாக பொறுப்பு வகித்தார்) மற்றும் பி.இராஜமாணிக்கம்; எம்.ஆர்.ராதா தரப்பில் பிரபல வழக்கறிஞர் மோகன் குமாரமங்களம். (இவர் இந்திரா காந்தி பிரதமராக இருந்த சமயத்தில் மத்திய அமைச்சராக இருந்தவர்), மூத்த வழக்கறிஞர்கள் என்.டி.வானமாமலை மற்றும் என்.நடராஜன் ஆகியோர் வாதாடினார்கள்.

எமஜிஆர் தரப்பு வாதம்:
சம்பவத்தன்று மாலை 4.00 மணி அளவில் எம் ஆர் ராதாவும் வாசு என்ற படத்தயாரிப்பாளரும் சினிமா படம் ஒன்றில் நடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ள வந்ததாகவும்.. பேசிக் கொண்டு இருக்கும் போதே எம் ஆர் ராதா திடீரென்று துப்பாக்கி எடுத்து தன்னை சுட்டு விட்டதாகவும் கூறினார். அடுத்து ராதா அதே துப்பாக்கியால் தன்னைதானே சுட்டுகொண்டதாகவும் சொன்னார். தயாரிப்பாளர் வாசுவும் ஏறக்குறைய இதே போலவே சொன்னார்.

எம் ஆர் ராதா தரப்பு எதிர் வாதம்:
எம் ஆர் ராதா வந்தவுடன் எம்ஜிஆர் அவரை திட்டியதாகவும் எம்ஜிஆரைப் பற்றி ராதா தவறான தகவல்களுடன் கட்டுரை ஒன்றை எழுதியதாக சொல்லி மிகவும் கோபப்பட்டதாகவும் எம்ஜிஆர்
“ காமராஜரை கொல்ல நான் திட்டமிட்டு இருப்பதாக கட்டுரை எழுதி இருக்கிறீங்க. என்னை அதற்காக சுட்டு விடுவதாகவும் மிரட்டிரீங்க. . என்னாலும் அதே மாதிரி பேச முடியும்”
என்று சொன்ன போது எம் ஆர் ராதா தடுத்து பேச முயன்ற போது எம்ஜிஆர் அவரை சுட்டு விட்டதாகவும், ராதா சுதாரித்துக் கொண்டு அந்த துப்பாக்கியை பிடுங்கி எம்ஜிஆரை திருப்பிச் சுட்டதாகவும் சொன்னார்.

எம்.ஜி.ஆரை, எம்.ஆர். ராதா சந்தித்தற்கான காரணம் என்ன என்பதை ஊடகங்கள் தெரிவித்த செய்தி:
‘பெற்றால்தான் பிள்ளையா படத்தைத் தயாரிக்க, தயாரிப்பாளர் வாசுவுக்கு ஒரு லட்சம் ரூபாய் பணம் தேவைப்பட்டது. அதை எம்.ஆர்.ராதா, வாசுவுக்கு கொடுத்து உதவினார். பின்னர் தனக்கு அந்தப் பணம் வேண்டுமென்று ராதா வாசுவிடம் கேட்டார். படப்பிடிப்பு முடிந்து படம் வெளியில் வரட்டும், அந்த பணத்தை எம்.ஆர்.ராதாவுக்குத் தருகிறேன் என்று கூறியிருந்தார் எம்.ஜி.ஆர். பெற்றால்தான் பிள்ளையா படம் திரையிடப்பட்டு பிரமாதமாக ஓடிக்கொண்டிருந்தது. எம்.ஆர்.ராதா தன்னுடைய பணத்தை வாங்க வாசுவுடன் எம்.ஜி.ஆர் வீட்டிற்கு சென்றிருக்கிறார். எம்.ஜி.ஆருக்கும், எம்.ஆர்.ராதாவிற்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது. இதில் கோபம் அடைந்த எம்.ஆர்.ராதா, எம்.ஜி.ஆரை துப்பாக்கியினால் சுட்டார். பின்னர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டார்.’
வழக்கு நடந்தபோது எம்ஜிஆரை எம் ஆர் ராதா சுட்டதற்கான காரணங்கள் ஒன்று தொழில்முறை போட்டி இரண்டாவது அரசியல் பகை என்று சொல்லப்பட்டது. எம்ஜிஆரால் ராதவின் பட வாய்ப்புகள் குறைந்ததாக சொல்லப்பட்டது. எம்.அர்.ராதாவுக்கு, எம்.ஜி.ஆரின் மீது தொழில்முறைப் போட்டி, பொறாமை இருந்தது என்றும் அரசியலில் திமுக விற்கு எதிராக பெரியார் காங்கிரசுக்கு ஆதரவாக இருந்ததால் பெரியார் தொண்டரான ராதாவுக்கும் எம்ஜிஆருக்கும் பகை என்றெல்லாம் சொல்லப்பட்டது.
1967 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட தேர்தல்களில் தி.மு.க, காங்கிரசை வழக்கம்போல் எதிர்த்தது. பெரியாரின் திராவிடர் கழகம் காங்கிரசை ஆதரித்தது. எம்.ஆர்.ராதாவும் காங்கிரஸ் தலைவர் காமராஜரும் நெருங்கிய நண்பர்கள். எம்.ஆர்.ராதா காங்கிரஸ் ஜெயிக்கவேண்டும் என்று நினைத்தார். தி.மு.கவுக்கு எதிராக பிரசாரம் செய்தார்.
தி.மு.க சார்பாக பரங்கிமலைத் தொகுதியில் போட்டியிட்ட எம்.ஜி.ஆரால் காமராஜருக்கு ஆபத்து ஏற்படும் என்று நினைத்தார். அரசியலில் எம்.ஜி.ஆருக்கும் எம்.ஆர்.ராதாவுக்கும் இடையே காழ்ப்புணர்ச்சி இருந்ததன் காரணமாகத்தான் எம்.ஜி.ஆரை, எம்,ஆர்.ராதா சுட்டார் என்ற கருத்தும் சொல்லப்பட்டது.

இந்த சம்பவத்திற்குப் பிறகு நடந்த தேர்தலில் திமுக வெற்றி அடைந்து அறிஞர் அண்ணா தலைமையில் ஆட்சி அமைத்தது. எம்ஜிஆர் பரங்கிமலை சட்டமன்ற உறுப்பினர். எம்ஜிஆர் சார்ந்த திமுக ஆட்சி தமிழ்நாட்டில் நடைபெறுவதால் தன் வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என்று எம் ஆர் ராதா கேட்டார். ஆனால் அது ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அண்ணாவும் இந்த வழக்கில் தம் ஆட்சி அதிகாரம் எதுவும் இந்த வழக்கில் தலையிடாது என்றும் சொல்லி இருந்தார்.

தீர்ப்பு:
வழக்கின் வாதம் எதிர்வாதம் எல்லாம் முடிந்து எம் ஆர் ராதா குற்றவாளி என்று முடிவாகி தீர்ப்பில், எம்.ஆர்.ராதாவுக்கு கீழ்கண்டவாறு தண்டனை தரப்பட்டது:
1) எம்.ஜி.ஆரைக் கொலை செய்ய முயற்சித்ததற்காக ஏழு ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை.
2) தற்கொலை முயற்சி செய்ததற்காக 6 மாத சிறை தண்டனை.
3) உரிமம் இல்லாத துப்பாக்கி வைத்திருந்ததால் 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை.
4) துப்பாக்கியை வைத்து சட்ட விரோதமான நடவடிக்கையில் ஈடுபட்டதால் இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை.
அனைத்து தண்டனைகளையும் எம்.ஆர்.ராதா ஒரே சமயத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் வெளியிடப்பட்டிருந்தது.
செங்கல்பட்டு அமர்வு நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து, எம்.ஆர்.ராதா சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். ஆனால் சென்னை உயர் நீதிமன்றம் வழக்கத்துக்கு மாறாக, முன் அறிவிப்பின்றி வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டு எம்.ஆர்.ராதாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை உறுதி செய்தது.
இதையடுத்து எம்.ஆர்.ராதா உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். மேல்முறையீட்டை ஏற்காத உச்ச நீதிமன்றம், எம்.ஆர்.ராதாவுக்கு வழங்கப்பட்ட தண்டனை காலத்தை, மனிதாபமான அடிப்படையில் 7 ஆண்டுகளிலிருந்து 4 1/2 ஆண்டுகளாக குறைத்தது.
29-04- 1971 ஆம் தேதி தண்டணைக்காலம் முடிய ஒரு மாதம் முன்பாகவே எம் ஆர் ராதா விடுவிக்கப்பட்டார்.

வியப்பான விவரங்கள் :
இந்த வழக்கில் பெரிய ஒரு வியப்புக்கு உரிய விஷயம் என்னவென்றால், எம்.ஆர்.ராதா தன்னுடைய துப்பாக்கியால் எம்.ஜி.ஆரை அருகிலிருந்து சுட்டதாகவும், பின்னர் தன்னையும் நெற்றிப்பொட்டில் சுட்டுக் கொண்டதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் இருவர் உயிருக்கும் ஒன்றும் ஆகவில்லை என்பது ஆனந்தப்பட வேண்டிய ஆச்சரியம்.
அடுத்த ஒரு ஏதோச்சையான ஒற்றுமை. எம் ஆர் ராதா எம்ஜிஆர் இருவரும் ஒரே வகையான துப்பாக்கி வைத்து இருந்துள்ளார்கள். இரண்டு பேரும் பி. ஆர் அண்ட் சன்ஸ் P.ORR and sons கடையில் வாங்கி இருக்கின்றனர். இருவருடைய துப்பாக்கியும் இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்ட Webley & Scott make single barrel .420 Caliber. மாடல் ஆகும். இன்னொரு ஆச்சரியம் 1950 ல் ஒரே நாளில் வாங்கி இருக்கிறார்கள். . இருவரின் துப்பாக்கி உருளைகளும் (Cylinders) ஒரே மாதிரியானவை.
எம்ஜிஆர் தன்னுடைய துப்பாக்கியை பயன்படுத்த தேவையான உரிமத்தை, அரசிடம் பெற்று புதுப்பித்து வந்திருக்கிறார். ஆனால் எம் ஆர் ராதா தன் துப்பாக்கியை பயன்படுத்த வழங்கப்பட்ட உரிமத்தை புதுப்பிக்கவில்லை.
இந்த வழக்கின் தீர்ப்பு எம் ஆர் ராதாவை குற்றவாளியாக அதாவது அவர் எம்ஜிஆரை கொல்ல முயற்சித்ததாக உறுதி செய்திருந்தாலும் அதற்கான காரணங்கள் என்று நீதிமன்றத்தில் சொல்லப்பட்டவை எதுவும் வலுவானதாகவோ நம்பும்படியாகவோ இல்லை என்று சொன்னவர்கள் உண்டு.
எம்ஜிஆர் எம் ஆர் ராதா இருவருக்கும் தீவிர அரசியல் கருத்து வேறுபாடுகள் இருந்து அது துப்பாக்கிச் சூடு வரை போகும் அளவுக்கு எம்.ஜி.ஆருக்கு தி.மு.க-வில் கொள்கைப்பிடிப்போ, செல்வாக்கோ இருந்ததாகவும் சொல்லமுடியாது
சுடுவதற்கான Motive என்ன என்பது சந்தேகத்திற்கு இடம் இல்லாமல் இரண்டு தரப்பிலுமே சரியாக சொல்லவில்லை என்று பலருக்கு இன்றும் சந்தேகம் உண்டு.
ஒரு குற்றம் நடைபெறும்போது, அதைப் பார்த்த நேரடி சாட்சிகள் இல்லாத சமயத்தில், சந்தர்ப்ப சூழ்நிலை சாட்சிகளை வைத்து குற்றத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில்தான், குற்றமிழைத்தவருக்கு குற்றம்புரிவதற்கு motive தூண்டுதல்கள்/காரணங்கள் என்ன என்பதை ஆராய வேண்டும். எம்.ஆர்.ராதாதான் எம்ஜிஆரை சுட்டிருக்கிறார் என்பதால், எம்.ஆர்.ராதா என்ன காரணத்திற்காக எம்.ஜி.ஆரை சுட்டார் என்பது அவசியமில்லை என்ற வாதம் அரசு தரப்பில் வைக்கப்பட்டதை குறிப்பிட வேண்டும்.
1964 ல் காமராஜரை தன் தலைவர் என்று புகழ்ந்த எம்ஜிஆர் மீது 1967 ல் காமராஜரை கொல்ல சதி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது என்பது இன்னொரு ஆச்சரியம்.
இதற்கு அரசு தரப்பின் மறுவாதத்தில்
”எம்.ஆர்.ராதாவுக்கு எம்.ஜி.ஆரின் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சி இருந்திருக்கிறது, அதனால் எம்.ஜி.ஆரைப் பற்றி நாத்திகம் என்ற பத்திரிகையில் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார். எம்.ஜி.ஆர் இரண்டு லட்சம் ரூபாய் செலவு செய்து, குண்டர்களை வைத்து காமராஜரைக் கொலை செய்ய முயற்சி செய்ததாக எம்.ஆர்.ராதா தவறாக நினைத்திருக்கிறார். ஆனால் எம்.ஜி.ஆருக்கு அப்படிப்பட்ட எண்ணங்கள் இல்லை. இன்னும் சொல்லப்போனால் காமராஜரின் பிறந்தநாள் விழாவுக்குச் சென்ற எம்.ஜி.ஆர், காமராஜரைப் பாராட்டியிருக்கிறார். அதையறிந்த எம்.ஜி.ஆரின் கட்சிக்காரர்கள், எதிர் கட்சி பிரமுகரை எம்.ஜி.ஆர் பாராட்டியது தவறு என்றும் கூறியிருக்கிறார்கள்”
என்று குறிப்பிட்டார்கள்.
இந்த வழக்கைப் பொறுத்தவரை சுடப்பட்டதும் இருவருக்கும் குண்டு காயம் பட்டதும் உண்மை. யார் யாரைச் சுட்டார்.. யார் முதலில் சுட்டார். எதற்காக சுட்டார் என்பவை வழக்கின் தீர்ப்பில் சுட்டிக் காட்டப்பட்டன. இருந்தாலும் அதன் உண்மை சம்பந்தப் பட்டவர்களுக்கு மட்டுமே தெரியும்.
எம் ஆர் ராதா விடுதலை ஆன பிறகு சில படங்களில் நடித்தார். அவர் முக்கிய வேடத்தில் நடிப்பதாக விளம்பரம் செய்யப்பட்டு வெளிவராத படங்களில் இரண்டின் தலைப்பு:
சுட்டான் சுட்டாள் சுட்டேன்
நான்தான் சுட்டேன்


2004 ல் ஜுன் மாதம் 3 ஆம் தேதி ஐதராபாத் நகரில் ஏறக்குறைய இதே போன்றதொரு சம்பவம் நடந்தது. புகழ் பெற்ற தெலுங்கு பட நடிகர் திரு என். பாலகிருஷ்ணா என்பவர் வீட்டில் நடந்தது. அவர் தன் மனைவியின் துப்பாக்கியால் வீட்டுக்கு வந்த இருவரை சுட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஒருவர் பட தயாரிப்பாளர் பெல்லம்கொண்ட சுரேஷ் மற்றவர் சத்தியநாராயண சவுத்திரி, குடும்ப ஜோதிடர். முதலில் பாலகிருஷ்ணா தம்மை சுட்டதாக சொன்னவர்கள் பிறகு யார் சுட்டது என்று தெரியவில்லை என்று இருவருமே சொல்லிவிட்டார்கள். 2005 பிப்ரவரியில் தீர்ப்பு வழங்கப்பட்டது. போலிஸ் தரப்பில் குற்றவாளி மீதான புகாரை நிரூபிக்கத் தவறிவிட்டதாக சொல்லி வழக்கிலிருந்து பாலகிருஷ்ணா அவர் மனைவி மற்றும் கார் ஓட்டுனர் மூவரும் விடுவிக்கப் படுகின்றனர். பழைய தெலுகு நடிகராகவும் ஆந்திர முன்னாள் முதல்வராகவும் இருந்த திரு என்.டி.ராமாராவ் அவர்களுடைய மகன்தான் பாலகிருஷ்ணா என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
பல வழக்குகளில் அதன் தீர்ப்பில் உண்மை உறங்கிக் கொண்டு இருப்பதாக சொல்வார்கள்.
சட்டம் ஒரு இருட்டறை என்று அறிஞர் அண்ணா சொன்னதும் நினைவில் வருகிறதா நண்பர்களே..?

No comments: