Wednesday, January 6, 2016

புதுமுறைத் திருமணம்


தந்தை பெரியார் அவர்கள்சித்திர புத்திரன்என்கிற புனைப் பெயரில் 14-03-1950 விடுதலை நாளிதழில்திருமண விழா: வினா விடைஎன்ற தலைப்பில்சுயமரியாதைத் திருமணம் குறித்த கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். அந்தவினா-விடை உங்கள் பார்வைக்காக:
சுயமரியாதைத் திருமணம் என்பது எது?
நமக்கு மேலான மேல் ஜாதிக்காரன் என்பவனை புரோகிதனாக வைத்து நடத்தாத திருமணம்    சுயமரியாதைத் திருமணமாகும்.

பகுத்தறிவுத் திருமணம் என்றால் என்ன?
நமக்குப் புரியாததும், இன்ன அவசியத்திற்கு இன்ன காரியம் செய்கிறோம் என்று அறிந்து கொள்ளாமலும், அறிய முடியாமலும் இருக்கும்படியானதுமான காரியங்களைச் (சடங்குகள்) செய்யாமல் நடத்தும் திருமணம் பகுத்தறிவு திருமணம் ஆகும்.

தமிழர் திருமணம் என்றால் என்ன?
புருஷனுக்கு மனைவி அடிமை (தாழ்ந்தவள்) என்றும், புருஷனுக்கு உள்ள உரிமைகள் மனைவிக்கு இல்லை என்றும் உள்ள ஒரு இனத்திற்கு ஒரு நீதியான மனுநீதி இல்லாமல் வாழ்க்கையில், கணவனும் மனைவியும் சரிசம உரிமை உள்ள நட்பு முறை வாழ்க்கை ஒப்பந்தமாகக் கொண்ட திருமணம் தமிழர் (திராவிடர்) திருமணமாகும்.
சுதந்திரத் திருமணம் என்றால் என்ன?
ஜோசியம், சகுனம், சாமி கேட்டல், ஜாதகம் பார்த்தல் ஆகிய மூடநம்பிக்கை இல்லாமலும், மணமக்கள் ஒருவருக்கொருவர் நேரில் பார்க்காமல், அன்னியர் மூலம் ஒருவரைப் பற்றி ஒருவர் தெரிந்தும், அல்லது தெரிந்து கொள்வதைப் பற்றிக் கவலையில்லாமல் மற்றவர்கள் கூட்டி வைக்கும் தன்மை இல்லாமலும், மணமக்கள் தாங்களாகவே ஒருவரை ஒருவர் நன்றாய் அறிந்து திருப்தி அடைந்து காதலித்து நடத்தும் திருமணம் சுதந்திரத் திருமணமாகும்.

புரட்சித் திருமணம் என்றால் என்ன?
தாலி கட்டாமல் செய்யும் திருமணம் புரட்சித் திருமணமாகும்.

சிக்கனத் திருமணம் என்றால் என்ன?
கொட்டகை, விருந்து, நகை, துணி, வாத்தியம், பாட்டுக் கச்சேரி, நாட்டியம், ஊர்வலம் முதலிய காரியங்களுக்கு அதிகப் பணம் செலவு செய்வதும், ஒருநாள் ஒரு வேளைக்கு மேலாகத் திருமண நிகழ்ச்சியை நீட்டுவதும் ஆன ஆடம்பர காரியங்கள் சுருங்கின செலவில், குறுகிய நேரத்தில் நடத்துவது சிக்கனத் திருமணமாகும்.

இவைகளையெல்லாம் சேர்த்து நடத்துகிற திருமணத்திற்கு ஒரே பேராக என்ன சொல்லலாம்?
நவீனத் திருமணம் அல்லது தற்காலமுறைத் திராவிடத் திருமணம் என்று  சொல்லலாம்.


இது தந்தை பெரியார் அவர்கள்  1950 – ல் எழுதியது. இன்றைக்கு இந்த வரிசையில் தமிழ்த் திருமணம், திருக்குறள் திருமணம், சன்மார்க / சோதி வழிபாடு / வள்ளளார் வழி திருமணம் என்று மேலும் சில முறைகள் கூடி இருக்கின்றன. இறை வாழ்த்தும் சில பழைய சடங்குகளும் கூட இந்தமுறைகளில் இடம் பெறுகிறது. இருந்தாலும் இவைகள் யாவும் ஒருமித்து வலியுறுத்துவதும் ஏற்றுக் கொள்வதும் எவை எனில் சமசுகிருதம் மற்றும் பார்ப்பன புரோகிதம் இவை இரண்டையும் எதிர்ப்பது என்பதேயாகும். இத்தகைய திருமணங்கள் மிகப் பெரிய சீர்திருத்தம் அல்லது புரட்சித் திருமணங்களாக கருத முடியாதாகினும் ஒருவகையில் இவைகள் நல்ல ஒரு மாறுதலுக்கு வழிவகுக்கும் என்கின்ற வகையில் ஏற்புடையதே ஆகும்.

No comments: