Wednesday, January 6, 2016

வள்ளுவரின் வாழ்க்கை நெறி



வள்ளுவரின்  நெறியொற்றி வாழ்விணையர் வாழ்ந்திடிலோ
அள்ளுவதோ பேரின்பம் அளவின்றிதுள்ளிடுவர்
வாழ்வினிலே துவளாமல் வென்றிடுவர் இன்னல்வரின்
தாழ்வின்றி தன்னம்பிக் கையிலே.

இன்றைய இளைஞர்கள் ஆணாயினும் பெண்ணாகினும் அவர்களுக்குத் திருவள்ளுவர் கூறும் வாழ்வியல் நெறிகள் சிலவற்றைச் சுட்டிக் காட்டுதல் பெரியோர் முதன்மை கடமை ஆகும். இருபத்தொன்றாம் நூற்றாண்டில் அறிவியல் வளர்ச்சி காரணமாகச் சமுதாய அமைவுகளில் பலவிதமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. கூட்டுக் குடும்ப அமைப்பு சிதைந்து, தனிக் குடும்ப அமைப்பு மேலோங்கி உள்ளது.

பழைய மரபுகளும், சிந்தனைகளும் உடைக்கப்பட்டுப் புதிய சித்தாந்தங்களும், புதிய மரபுகளும் படைக்கப்பட்டுள்ளன. இவற்றை தடுப்பது நம் தரம் அன்றுஇவ்விதமான சமுதாயச்  சூழ்நிலைகளில்தான் இன்றைய இளைஞர்கள் வளர்கின்றனர். மாறுதல்கள் மாறிக்கொண்டே இருக்கும். நாம் அம்மாறுதல்களின் நல்லவை கெட்டவை அறிந்து ஏற்றுக்கொள்வதே அறிவுடைமை ஆகும். மனித சமுதாயத்தின் பொது நன்மை கருதி முற்போக்கு சிந்தனை ஒட்டிய சமத்துவ நீதியுடனான எச்செயலும் ஏற்றுக் கொள்ளக்  கூடியதே என்பதை உணர வேண்டும்.

வேலை காரணமாக வெளிநாடுகளுக்கும், பிற மாநிலங்களுக்கும்  இளைஞர்கள் செல்கின்றனர். பொருள் சம்பாதித்தல் ஒன்றே அவர்கள் வாழ்வின் குறிக்கோளாக மாறி உள்ளது. இதனால் பிற சமூகச் சூழல்களாலும் பாதிப்படைகின்றனர். இவ்விதமான சூழலில் வாழ்கின்ற இருபத்தொன்றாம் நூற்றாண்டு இளைஞர்கள் இரண்டாயிரம் ஆண்டுகள் முன்  வாழ்ந்த திருவள்ளுவரின் சில வாழ்வியல் நெறிகள் ஏற்றிப் போற்றி கடை பிடிக்க வேண்டியனவாக இருப்பதையும் உணர வேண்டும்.


தமிழரின் நீதி நூல்வேதம் - திருக்குறள். ஆகவே வள்ளுவர் நெறியை வாழ்வியல் நெறியாக முடிந்தவரை பின்பற்ற வேண்டும்.

No comments: