Wednesday, January 6, 2016

ஆன்மீகமும் வள்ளுவமும்



ஆன்மீகர் என்போர் கூற்று ஆனால் வள்ளுவம் சமுதாயவாழ்வுக்கும் தனிமனித வாழ்வுக்குமான அறிவுரைகளும் அறவுரைகளும் வழங்கினாலும், தவம், துறவு, நிலையாமை, ஊழ் என்னும் அதிகாரங்களில் கூட சமயச் சார்பின்றி சடங்குகளற்ற சமுதாயத்திற்கு ஏற்ற மெய்யியல் கருத்துகளைதாம் வலியுறுத்தும். மதம் அல்லது சமயம் என்பதற்கும் மெய்யியல் என்பதற்குமான வேறுபாடு என்ன என்பதனை அறிய வேண்டும். மெய்யியல் என்பது திறந்த மனத்தினராய் எதனையும் பகுத்தறிந்து அணுகும் முறைமை. மதம் அல்லது சமயம் என்பது குறிப்பிட்ட கொள்கையை தேர்ந்து அதனை நம்பிக்கையின் அடிப்படையில் எதனையும் ஆராயாமல் ஏற்று நடக்க நிர்பந்திக்கும் முறைமை.

ஊழ் என்பது தலைவிதி என்றும் ஊழ்வினை என்றால் முற்பிறவிப் பயன் என்ற கருத்தை வள்ளுவம் ஏற்கவில்லை. மாறாக ஊழ் என்றால் இயல்பான இயற்கை நிகழ்வே என்றும் அது நல்லதாகவும் இருக்கலாம் கெட்டதாகவும் இருக்கலாம். அதனை தடுத்தல் எளிதன்று; அது பெருவலி மிக்கதுஆகவே நல்லது நடக்க மகிழ்ச்சி அடைபவர் கெட்டது நடக்கும்போது மட்டும்  துயரம் கொள்வது எதற்கு என்று வள்ளுவம் வினவுகிறது (குறள் 379 )

அவ்வாறே படைப்புக் கொள்கையை மறுக்கும் தன்மையில்  “இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக இவ்வுலகு இயற்றியான் (குறள்1062) என்று பிச்சை எடுத்து ஒருவன் உயிர் வாழ வேண்டியிருக்குமானால் அந்நிலையை உருவாக்கிய இவ்வுலகைப் படைத்தோன் ஒருவன் இருப்பானானால் அவன் இல்லாமல் போகட்டும் என்று படைப்புக் கொள்கையை  மறுதலிக்கிறது வள்ளுவம். நிலையாமை குறித்து சொல்லும் போதும் உயிர் உடம்பு இரண்டின் இயற்கைத் தன்மைகளைக் கூறுகிறதே  அல்லாமல் மறுபிறவி இருப்பதாக குறிக்கவில்லை. அவ்வாறே முக்தி என்றும் மோட்சம் என்றும் கூறப்படும் வீடுபேற்றைப் பற்றியும் எதுவும் கூறாமல் தவிர்க்கிறது.


அறம் பொருள் இன்பம் என்பவே வாழ்க்கையின் முக்கூறுகள்; வீடு எனும் நான்காவது பகுதி வாழ்வில் உண்டு என்னும் சமயக்கருத்தினை வள்ளுவம் தவிர்ப்பதை எண்ணிப் பார்த்தல் வேண்டும். ஏழாம் நூற்றாண்டுக்குப் பிறகான இலக்கியங்கள், தேவாரம், திருவாய்மொழி, திவ்வியபிரபந்தம் போன்ற சைவ வைணவ இலக்கியங்கள்தான் வீடுபேற்றைப் பற்றி இயம்புகின்றன. அதற்கு முற்பட்ட இலக்கியங்கள் அறம் பொருள் இன்பம் என்றே குறிப்பிடுகின்றன. வீடுபேறு என்பது உலக துன்பங்களில் இருந்து விடுதலை பெறுவது. மறுபிறப்பில்லாமல் இறைவனின் திருவடியை அடைவது என்பர் ஆன்மீகர். ஆனால் வள்ளுவம் இந்த கொள்கையை ஏற்காமல் மறுதலிக்கின்றது என்பதற்கு ஏராளமான சான்றுகள் திருக்குறளில் விரவிக் கிடக்கின்றன

No comments: