பிறகு ஒரு முதியவர்,
விடுதி ஒன்றை நடத்துபவர்
உண்பதும் குடிப்பதும் பற்றி
சொல்லும்படி கேட்டார்.
அதற்கு அவர் சொண்னார்:
“நீங்கள் ஒளியால் நீடித்து இருக்கும் இந்த காற்றுக்கூடமான
பூமியின் நறுமணத்தில் மட்டுமே வாழ முடியுமா?
உண்பதற்காக கொல்லவேண்டி இருக்கிறது
தாகம் தணித்துக்கொள்ள குழந்தைக்கான பாலை – அதன்
தாயிடம் இருந்து திருட வேண்டி இருக்கிறது - ஆதலால்
அவை உங்கள் பிரார்த்தனையின் பலன் என்று விட்டுவிடுகிறீர்.
தூய்மையான ஒன்றுமறியா காடுகளிலும் சமவெளிகளிலும்
உங்கள் உணவு கிடைக்கிறது
பரிசுத்தமும் அப்பாவித்தனமும் கொண்டவர் மானிடர் என்று
பலியிடப்படும் பலிபீடமாக அவைகளை எண்ணுகிறீர்.
ஒரு விலங்கைக் கொல்லும் போது
உங்கள் இதயத்தால் அதனிடம் சொல்வீர்:
“எந்த வலிமையால் உன்னைக் கொன்றேனோ
அதே வலிமையால் நானும் வீழ்த்தப்பட்டு விழுங்கப்படுவேன்.
எந்த விதி உன்னை என் கைகளில் கிடத்தியதோ - அதுவே
என்னை என்னிலும் வல்லவன் கரங்களில் சேர்க்கும்.
நம் இருவரின் இரத்தமும் இரத்தமல்ல - அவை
சொர்கத்து மரங்களில் பாயும் உயிர்சத்து.” என்று
பற்களால் ஆப்பிள் பழத்தைக் கடிக்கும் போது
அதனிடம் உங்கள் இதயத்தால் சொல்வீர்:
”உன் விதைகள் என் உடம்பில் வாழும்.
உன் நாளைய மொட்டுகள் என் இதயத்தில் மலரும்.
உன் நறுமணம் என் மூச்சுக்காற்றாகும்.
நாம் இருவரும் எல்லா பருவக்காலங்களிலும்
மகிழ்ச்சியில் திளைப்போம்”. என்று
இலையுதிர் காலத்தில் சாறு பிழிய
திராட்சைத் தோட்டத்தில் பழங்களைச் சேகரிக்கும் போது
உங்கள் இதயத்தில் சொல்வீர்:
“நானும் ஒரு திராட்சைத் தோட்டம்தான்.
என் பழங்களும் பறிக்கப்பட்டு சாறாகப் பிழியப்படும்.
புதிய மதுவாக நித்தியம் என்னும் பாத்திரத்தில் வைக்கப்படுவேன்.”
”குளிர் காலத்தில்,
அந்த மதுவை குடிப்பதற்கு எடுக்கும் போது
அதன் ஒவ்வொரு குவளைக்கும்
உங்கள் இதயத்தில் ஒரு இனியபாடல் ஒலிக்கட்டும்.
அந்த பாடல்
இலையுதிர்காலத்தையும் திராட்சைத் தோட்டத்தையும்
பழச்சாறுபிழியும் கருவியையும்
நினைவுகூரட்டும்.”
No comments:
Post a Comment