Wednesday, December 23, 2015

அரசியல் நாகரிகம் – கர்மவீரரும் கலைஞரும்


பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் தமிழ்நாட்டின் சிறந்த தலைவர் என்பதில் சந்தேகம் இல்லை. அவர் உயிருடன் இருந்த போது தமிழகத்தில் நிலவிய அரசியல் சூழல் அப்போதைய  அரசியல் கட்சிகளுக்கிடையிலான புரிதல் கட்சித் தலைவர்களிடம் நிலவிய நாகரிகம் முன்புபோல் இப்போது இல்லை என்பது உண்மைதான். 


தற்போதைய கெடுநிலைக்கு எந்த வகையில் திமுக அல்லது கலைஞர் பொறுப்பாக முடியும் என்றும் தெரியவில்லை.  

தமிழ்நாட்டின் அரசியல் நாகரிகம் கெட்டுவிட்டது என்று புலம்பும் சில நடுநிலையாளர் (?) கலைஞரையும் திமுகவையும் கரித்துக் கொட்டும் அறிவுஜீவிகள் தாங்கள் சிலாகித்து போற்றும் இப்போதைய தலைவர்கள் சிலரது போக்கும் செயலும் நடத்தையும் சொல்லும் எந்த அளவு நாகரிகம் உடையது என்பதையும் கொஞ்சம் சிந்திக்க வேண்டும்.

அரசியல் நாகரிகம் காப்பதிலே என்றும் திமுகழகம் குறைந்தது இல்லை. அறிஞர் அண்ணாவாகட்டும் கலைஞர் ஆகட்டும் இருவரின் தலைமையின்  போதும் திமுகழகம் மாற்று கட்சியினரை மதித்தே இருக்கிறது.

 சிலர் அப்படி பேசினார் இப்படி பேசினார் என்று கதை கட்டுவார்கள். அரசியல் மேடைகளில் சில பேச்சாளர்கள் தரம் தாழ்ந்து விமர்சனம் செய்வது எல்லா கட்சி மேடைகளிலும் இருந்ததுதான். அவைகள் அளவுகோலாக இருக்க முடியாது.

தலைவர்கள் தனிப்பட்ட முறையில் எப்படி மற்றவர்களிடம் நடந்து கொண்டார்கள் அரசியல் தவிர்த்த விஷயங்களில் அவர்களுக்கிடையான உறவு எப்படிப் பட்டது என்பதை மட்டும் பார்க்கவேண்டும்.

இப்போது ஒரு செய்தி. அரசியலில் நேர்மை நாணயத்தை நாகரிகத்தை  மீட்டெடுக்க அவதாரம் செய்ததாக சொல்லிக்கொண்ட  ஒருவர்
 “என் தாயாரின் மறைவுக்கு துக்கம் விசாரிக்க கருணாநிதி, அரசியல் நோக்கத்துடன் மகன் ஸ்டாலின் மகள் கனிமொழி இருவரையும் அனுப்பி வைத்தார்”
என்று பேசி இருக்கிறாராம். 

அவருடைய தரமும் தகுதியும் இதை வைத்தே மதிப்பிட முடியும்.

அவர் எப்படியும் பேசட்டும். வசவுகள் ஒன்றும் திமுகழகத்தினருக்குப் புதிதல்ல.

இன்றைக்கு 93 வயதிலும் அரசியல் களத்தில் அசராமல் இயங்கும் கலைஞர் ஒரு சகாப்தம். அவருக்கு ஏற்பட்ட அவமதிப்புகள் அவதூறுகள் கொஞ்சமல்ல.

அவர் அருமையும் பெருமையும் இன்றைக்கு தெரியாது. காலம் அவர் பெயரை  தமிழக வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறித்து புகழ்பாடும்.

ஒரு வீட்டில் இருக்கும் வயதில் மூத்த  தாத்தாவின் அருமையும் பெருமையும் அவரால் விளைந்த நன்மை எதுவும் அவர் வீட்டிலிருப்பவர்களுக்கு தெரியாது.

அப்படிதான் இன்றைய தமிழகமும் கலைஞரும்.
கலைஞருக்கு தமிழகம் ஒரு குடும்பம்.

இந்த குடும்பத்தினருக்கு அவர் செய்தவைகளை  இப்போது இல்லாவிட்டாலும் எதிர்காலத்தில் இந்த மக்கள் எல்லோரும் நினைத்து நினைத்து நெஞ்சார மகிழ்ந்து போற்றிப் புகழ்வார்கள் என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை.

கர்மவீரர் காமராஜர் கலைஞர் இருவருக்குமிடையில் பல ஒற்றுமைகள் காணமுடியும்.

காமராஜ் அவர்கள் தேசிய இயக்கத்தில் சேர்ந்து சிறு வயதிலேயே விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர். கலைஞரும் திராவிட இயக்கத்தில் சேர்ந்து சிறுவயதிலேயே பொது வாழ்க்கைக்கு வந்தவர்.

இருவருமே கட்சிக் கோடி ஏந்தி தெருவீதிகளில் ஊர்வலம் வந்த தொண்டர்கள்.

இருவரும் பொது வாழ்க்கைக்கு வந்தபோது எந்தவித எதிர்பார்ப்பும் பலனும் பயனும் பட்டம் பதவிகள் வரும் என்றும் தெரியாத காலகட்டம்.

இருவருக்கும் பள்ளிப்படிப்பு மட்டுமே. பட்டப்படிப்பு எதுவும் படிக்காதவர்கள்.

அவரவர் இயக்கத்தில் போராட்டங்களில் பங்கெடுத்து சிறை சென்றவர்கள்.

இருவரின் குடும்பப் பொருளாதாரப் பின்னணியும் சமூகப் பின்னணியும் ஓரளவு ஒன்றுதான்.

இருவரும் பிற்படுத்தப்பட்ட சாமானியக் குடும்பத்திலிருந்து வந்தவர்கள்.

இருவரும் தம் கடும் உழைப்பால் ஆற்றலால் தியாகத்தால் உயர்நிலை அடைந்தவர்கள்.

இருவருக்கும் தமிழகத்தின் முதல்வர் பதவி தேடி வந்தது. அவர்களாகத் தேடிப் போகவில்லை.

இருவரும் ஒருவர் மீது ஒருவர் மதிப்பும் பாசமும் மரியாதையும் கொண்டிருந்தார்கள்.

அதற்கு எடுத்துக் காட்டு காமராஜ் அவர்களின் கடைசி காலம். 

1976  இந்தியாவில் நெருக்கடிக் காலம் இருந்தபோது தமிழக முதல்வர் கலைஞர். காமராஜ் அவர்களை கைது செய்ய மத்திய அரசு சொல்லிய போதும் அவரை கைது செய்வதற்கு பதில்  ஆட்சியே போனாலும் பரவாயில்லை என்று சொன்னவர் கலைஞர். ஆட்சியைப் பற்றி கவலை படாமல் நெருக்கடி நிலையை எதிர்த்தார்.

அப்போது நேராக காமராஜ் அவர்களை நேரில் சென்று சந்தித்தார். நெருக்கடி நிலையை எண்ணி வேதனைப்பட்ட காமராஜ் அவர்கள்
“தேசம் போச்சே....தேசம் போச்சே ...தேசத்தின் நிலை இப்படி ஆகிவிட்டதே”  என்று கண்ணீர் கலங்கியபடி கூற ; கலைஞரும் கண்ணீர் சிந்தியபடி
“அய்யா நீங்கள் சொல்லுங்கள். நாங்கள் எல்லோரும்  ராஜினாமா செய்து விடுகிறோம். இந்திய ஜனநாயகத்தை காக்க நீங்கள் தலைமை ஏற்று அணி சேருங்கள் .நாங்கள் உங்கள் பின்னால் வர தயாராக இருக்கிறோம்”
என்று சொன்னார். 

உடனே காமராஜர் அவர்கள்   “அவசரப்படாதீர்கள் .. இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான் ஜனநாயகம் இருக்கிறது. நீங்கள் ராஜினாமா செய்தால் அதுவும் போய்விடும். கொஞ்ச நாள் பொறுமையாக இருங்கள்”
என்று சொன்னார். 

இது நடந்து மூன்று மாதங்களில் காமராஜ் அவர்கள் காலம் ஆனார்.

காங்கிரசு கட்சியினர் தேனாம்பேட்டை மைதானத்தில் அவர் உடலை பொதுமக்கள் பார்வைக்கு வைத்துவிட்டு அங்கேயே அடக்கம் செய்ய நினைத்திருந்தார்கள்.

முதல்வராக இருந்த கலைஞர் இது தெரிந்து “அவர் உடல்  சகல அரசு மரியாதையுடன் இறுதி ஊர்வலம் போக வேண்டும். பொது மக்கள் பார்வைக்கு ராஜாஜி மண்டபத்தில் வைப்போம்” என்று சொல்லி அருகிலிருந்து எல்லா காரியங்களும் ஆற்றினார்.

கொட்டும் மழையில் காடு போன்றிருந்த கிண்டி ராஜபவனம் பகுதியில் கல்லிலும் முள்ளிலும் நடந்து சென்று அடக்கத் தலத்தை தேர்ந்தெடுத்தார் கலைஞர்.

இப்படி பல செய்திகள் திமுகழகத்திற்கும் காமராஜ் அவர்களுக்குமான நெருக்கத்தை ஒருவர்பால் ஒருவர் வைத்திருந்த மரியாதையை சொல்லிக் கொண்டே போகலாம்.

இன்றைக்கு காமராஜ் அவர்களுக்கு தமிழகத்தில் பல இடங்களில் சிலைகள் இருக்கின்றன. ஆனால் முதன் முதலில் அவருக்கு சென்னையில் சிலை வைக்கப்பட்டது திமுக மாநகராட்சி நிர்வாகத்தால்தான்.

பிரதமர் நேரு வந்திருந்து திறந்து வைத்தார். நேரு உயிருடன் இருப்பவர்களுக்கு சிலை வைப்பதில் விருப்பம் இல்லாதவராதலால் வர சம்மதிக்கவில்லையாம். அவரை சம்மதிக்க வைத்து அழைத்து வந்து காமராஜர் சிலையை திறந்து வைத்த பெருமை திமுகவினுடையது.

காமராஜர் மறைவிற்கு பிறகு குஜராத் முதல்வராக இருந்த திரு பாபுராய் படேல் அவர்களை அழைத்து வந்து வண்ணாரப்பேட்டையில் எம்.சி.ரோடில் உள்ள அன்னை சிவகாமி அம்மையார் பூங்காவில் காமராஜர் சிலை ஒன்றை தலைமை ஏற்று திறக்க வைத்தார்.

காமராஜர் நினைவகத்தில் உள்ள மார்பளவு சிலையும் கலைஞர் அமைத்ததுதான். 1997 ஆம் ஆண்டு வரை அங்கு அந்த சிலை கிடையாது. அங்கே ஒரு சிலை வைக்க  திரு நாத்திகம் ராமசாமி அவர்கள் “நான் சிலை வைக்கப் போகிறேன் அனுமதி கொடுங்கள்”  என்று கேட்டதும் கலைஞர் “அரசே அங்கு காந்தியார் சிலை போல் மார்பளவு சிலை வைக்கும்”  என்று அறிவித்தார்.  உடனடியாக வைக்கப்பட்டது.

கன்னியாகுமரியில் காமராஜருக்கு மணிமண்டபம் அமைத்ததும் கலைஞர் ஆட்சியில்தான். 

இப்படி காமராஜ் அவர்களுக்கும் திமுகவிற்குமான உறவு காமராஜர் மறைந்த பிறகு மட்டும் அல்ல காமராஜர் முதல் அமைச்சராகி பின் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப் படவேண்டிய காலகட்டத்தில்   1954 ல்  குடியாத்தம் தொகுதியில் போட்டி இடுகிறார்.

அண்ணாவின் தலைமையிலான திமுக காமராஜர் முதல் அமைச்சராகத் தொடர அவர் வெற்றி பெறுவது அவசியம் என்று கருதி அவருக்கு ஆதரவு அளித்த வரலாற்றை இன்றைய இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

அதுமட்டும் அல்ல அன்றைக்கு காமராஜ் அவர்களை எதிர்த்து நின்ற கட்சி எது தெரியுமா கம்யூனிஸ்ட் . 

ஆனால் பெரியாரும் அண்ணாவும் ஆதரித்தனர். 

அண்ணா திராவிட நாடு இதழில் கட்டம் கட்டி பெட்டி செய்தி போட்டார். “குணாளா குலக்கொழுந்தே” என்ற தலைப்பில் தம்முடைய ஆதரவைத்  தெரியப்படுத்தினார். 

கலைஞரின் தாயார் உடல் நலம் குன்றி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருந்தார். கலைஞர் கட்சி வேலையாக  வேறு ஊர் சென்றவர் திரும்பி வருவதற்குள் அவர் தாய் இறந்து விடுகிறார். மருத்துவமனையிலிருந்து உடலைப் பெற்றுக் கொண்டு வீடு வந்தால் அங்கே காமராஜ் காத்துக் கொண்டிருக்கிறார். கலைஞர் வருவதற்கு முன்பே அங்கே சென்றுவிட்டார் காமராஜர். கலைஞர் அப்போது வெறும் சட்டமன்ற உறுப்பினர். அதுவும் அவரை எதிர்க்கும் வெறும் 5௦ பேரை சட்டமன்ற உறுப்பினராகக்  கொண்ட கட்சியை சார்ந்தவர். அப்போது காமராஜர் அகில இந்திய காங்கிரஸ் தலைவர். முதல்வராக இருந்து விலகி சில மாதங்களே ஆன சமயம். அதுதான் அந்த காலகட்டத்தில் நிலவிய நாகரிகம்.

இத்தகைய நாகரிகம் இன்றும் திமுகழகத்தால் கடைபிடிக்கப்படுகிறது. 

அதன் சான்றுதான் வைகோ அவர்களுடைய தாயார் மறைவுக்கு திமுகழகத்தின் சார்பாக தளபதி ஸ்டாலின் அவர்களும் திருமதி கனிமொழி அவர்களும் மற்றும் பல திமுகவினரும் சென்றது.

"பெயக்கண்டும்  நஞ்சுண் டமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்"
என்ற வள்ளுவர் வாய்மொழிக்கு ஒப்ப நாகரிகம் வேண்டி நஞ்சையும் குடிக்கும் நெஞ்சுரம் கொண்டது திமுகழகம்.


இதுமட்டும் அல்ல இப்படி திமுகழகத்தின் அரசியல் நாகரிகத்திற்கு எடுத்துகாட்டாக பலவற்றை  சொல்லமுடியும். 

2 comments:

Nallayen N said...

காமராஜருக்கு் இறுதி மரியாதை செலுத்த இந்திரா அம்மையார் தயங்கியதாகவும் கலைஞரின் வற்புறுத்தலுக்கு பிறகு வந்ததாகவும் கேள்விப்பட்டிருக்கிறேன். வைகோ போன்ற நச்சு கிருமிகள் என்ன செய்தாலும் உண்மைக்கென்று ஒரு பழம் உள்ளது அதனை நாம் உயர்த்திபிடிப்போம். தங்களின் digital பதிவுகள் என் போன்றவர்கள் பின்னாளில் மற்றவர்களுக்கு எடுத்து சொல்ல அறிய Reference ஆக இருக்கும். நன்றிகள் பல

Unknown said...

காமராசர்/இறந்த தேதி 2 அக்டோபர், 1975

1976 இந்தியாவில் நெருக்கடிக் காலம் இருந்தபோது தமிழக முதல்வர் கலைஞர். காமராஜ் அவர்களை கைது செய்ய மத்திய அரசு சொல்லிய போதும் அவரை கைது செய்வதற்கு பதில் ஆட்சியே போனாலும் பரவாயில்லை என்று சொன்னவர் கலைஞர். ஆட்சியைப் பற்றி கவலை படாமல் நெருக்கடி நிலையை எதிர்த்தார்.