தீர்கதரிசி - கொடுப்பது பற்றி
பிறகு ஒரு செல்வந்தன் கொடுப்பது பற்றி
கொஞ்சம் கூறுங்கள் என்றதும் அவர் பதில் சொன்னார்:
”உங்களிடம் இருப்பதில் நீங்கள் கொடுப்பது குறைவே.
உண்மையில் கொடுப்பது என்பது உங்களைக் கொடுப்பது.”
”நாளையத் தேவைக்கென்று
அச்சத்துடன் பாதுகாக்கும் பொருள்களைத் தவிர
உங்களிடம் இருப்பது என்ன?
புண்ணிய நகருக்கு போகும் பக்தர்களைப் பின்தொடரும்
வழித்தடம் பதியாத மணல்வெளியில்
எலும்புத் துண்டுகளைப் புதைத்து வைக்கும்
அதியூகம் கொண்ட நாய்க்கு
நாளைக்கு என்ன கிடைக்கும்?”
”தேவையின் அச்சம் என்பதில்லை
தேவையே அச்சம்தானே?
உங்கள் கிணறு நீரால் நிரம்பி இருந்தாலும்
தணியாத தாகத்தோடு இருப்பது
தாகத்தின் பெருமிரட்டல் இல்லையா?”
”இருக்கும் ஏராளமானவற்றில்
கொஞ்சம் எடுத்துக் கொடுப்பவர்கள் இருக்கிறார்கள்.
அவர்கள் கொடுப்பது அங்கீகாரம் பெறுவதற்கு.
அவர்களின் மறைமுக ஆசை
அந்த வெகுமதிகளை வெறுங்கதியாக்கி விடுகிறது.”
”இருப்பது குறைவானாலும்
எல்லாவற்றையும் கொடுப்பவர்கள் இருக்கிறார்கள்.
அவர்கள் வாழ்க்கை மீதும் வாழ்பவர் மீதும் நம்பிக்கை கொண்டவர்கள்.
அவர்கள் பணப்பெட்டி என்றைக்கும் வெறுமை ஆகாது.”
”மகிழ்ச்சியுடன் கொடுப்பவர்கள் இருக்கிறார்கள்.
அந்த மகிழ்ச்சிதான் அவர்களுக்கு பரிசுப்பொருள்”.
“வருத்தத்துடன் கொடுப்பவர் உண்டு.
அந்த வருத்தந்தான் அவர்களுக்கு தீக்சை ஆகும்.”
”பள்ளத்தாக்கான வனத்தின் வெட்டவெளியில்
நறுமணம் பரப்பும் பூஞ்செடிகள் போல
வருத்தமோ மகிழ்ச்சியோ அறச்சிந்தனையோ இல்லாமல்
கொடுப்பவர்களும் இருக்கிறார்கள்.”
”இறைவன் அப்படிபட்டவர்கள் கைகளால் பேசுகிறார்.
அவர்கள் கண்களின் பின்னால் இருந்து
புவியை நோக்கி புன்னகை பூக்கிறார்.”
”கேட்கும் போது கொடுப்பது நல்லது
ஆனால் கேட்காமலே புரிந்து கொண்டு கொடுப்பது மிக நல்லது.”
“எதையாவது தேடித் திரியும் திறந்த கைகள்
கொடுப்பதை விட பெறுவதில்தான் பெருமைப்படுகிறது.”
”தக்க வைத்துக் கொள்ள வேண்டியது ஏதாவது இருக்கின்றதா?
இருப்பதெல்லாம் என்றோ ஒரு நாள் கொடுக்கப்பட வேண்டியவைதான்.
ஆகையால் இப்போதே கொடுத்து விடுங்கள்.
கொடுக்கும் பருவம் உங்களுடையது.
உங்கள் வாரிசுகளுடையது அல்ல.”
”அடிக்கடி சொல்வீர்களே
’தகுதி உடையவர்களுக்கு மட்டுமே கொடுப்பேன்’ என்று.
உங்கள் தோட்டத்து மரங்களோ
மேய்ச்சல் நில மாட்டு மந்தைகளோ
இப்படிச் சொல்வதில்லை.”
“கொடுப்பவைகள் மட்டுமே செழிக்கும்
கொடுக்காமல் நிறுத்தி வைப்பவை அழியும்.”
”உறுதியாக உங்களில் மதிப்பானவர் யாரெனில்
யாருக்குத் தன்னுடைய பகல் இரவுகளைப்
பெறும் தகுதியுடையவரோ அவர்தான்.”
”வாழ்க்கை என்னும் உப்புக்கடலில்
மொண்டு குடிக்கத் தெரிந்தவன் மட்டுமே
தங்கள் சுவைநீரருவியில் இருந்து
தன் குவளையை நிரப்ப தகுதி உடையவன் ஆகிறான்.”
”தருமம் பெறுவதை மறுத்து
தைரியமும் தன்னம்பிக்கையும் அமைந்த
பாலைவனத்தை விடப் பெரியது
வேறு என்ன இருக்க முடியும்?”
”ஒளிவில்லாத மதிப்பையும் வெட்கமில்லாத பெருமையையும்
மார்பைப் பிளந்து தனது செறுக்கென்று திறந்து காட்டும்
மானிடர் யார் இருக்கிறார்?”
”நீங்கள் கொடுப்பவராகவும்
கொடுப்பதற்கான கருவியாகவும் இருக்க
முதலில் தகுதிப் படுத்திக் கொள்ளவும்.
உண்மையில் வாழ்க்கைக்கு வாழ்வு தருபவர்
கொடுக்கும் குணம் உடையவர்தான்.
சாட்சியாக நிற்பவர் அல்ல.”
.
”நீங்கள் பெறுபவர்.
நீங்கள் எல்லோருமே பெறுபவர்தான்.
நீங்கள் நன்றியறிதலை சுமையென்று கருதி
அதைக் காவடியாக்கிக் கொடுப்பவரையே சுமக்கச் செய்கிறீர்.
பரிசிலைச் சிறகுகளாக்கிக் கொடுத்துவருடன் ஓரளவாவது உயருங்கள்.”
”அகன்ற இதயம் கொண்ட பூமியைத் தாயாகவும்
இறைவனைத் தந்தையாகவும் கொண்டவரின்
பெருந்தன்மையை அய்யம் கொள்கிறீர்.
அதற்குபதில் அவரிடம் பட்டக்கடனை தீர்க்க
அதீத அக்கறை செலுத்துவீராக”
No comments:
Post a Comment