Monday, December 14, 2015

தமிழ்நாட்டின் நீர்தேக்கங்கள்- தெரிந்ததும் தெரியாததும்

நண்பர்கள் பலர் இணையத்தில் தமிழ்நாட்டில் வெள்ளப் பெருக்கு வரும் போதெல்லாம் பாடும் பாட்டு அந்த நாள் போல வருமா என்பதுதான். அதாவது காமராஜர் ஆட்சி போல் வருமா அவர் கட்டிய அணைகள் தெரியுமா என்று பட்டியல் போடுவார்கள். நமக்கும் அதை படிப்பவருக்கும் அடடா இந்த திராவிடக் கட்சிகள் வந்துதான் மோசம் போனோம் என்று எண்ணிடத் தோன்றும்.
காங்கிரசார் காலத்தில் காமராசர் ஆட்சியின் போது தமிழகத்தில் பல அணைக்கட்டுகள் / நீர்தேக்கங்கள் கட்டப்பட்டன என்பது உண்மைதான். மறுக்க முடியாது. ஆனால் அதன் பிறகு திராவிட முன்னேறக் கழகம் அல்லது அதிமுக ஆட்சியில் நீர் மேலாண்மையில் நீர் வளம் பெருக எதுவுமெ செய்யவில்லை என்று சொல்வது சுத்த வடி கட்டின பொய். வேண்டும் என்றே சிலர் திராவிடத்திற்கு எதிராக செய்யும் சதிவேலை. போகிற போக்கில் புழுதி வாரித் தூற்றுவதாகும்.
தெரிந்தோ தெரியாமலோ இப்படிப்பட்ட பொய்களைப் பரப்புவர்களும் அதை நம்புபவர்களும் முதலில் சில தகவல்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
· தமிழ் நாட்டில் உள்ள அணைகள் / நீர் தேக்கங்கள் எண்ணிக்கை 85.
· சென்னை பகுதியில் (வட தமிழகம்) இருப்பவை 26
· மதுரை பகுதியில் ( தென் தமிழகம்) இருப்பவை 28
· பொள்ளாச்சி பகுதியில் (மேற்கு தமிழகம்) இருப்பவை 24
· திருச்சி பகுதியில் (காவிரி ஆறு) இருப்பவை 7
இதில் சிறிய ஏரிகள், கண்மாய், குளம் குட்டைகள் அடங்காது . அவை வெள்ளையர் ஆட்சிக்கும் முன்பு அரசர் காலத்தில் இயற்கையாகவும் செயற்கையாகவும் உருவானவை.
இந்த 85 அணைகள் / நீர்தேக்கங்களில் அரசர் காலங்களில் வீராணம், செம்பரம்பாக்கம் கல்லணை மூன்றும் உருவானவை.
வெள்ளையர் ஆட்சியின் போது ரெட் ஹில்ஸ், சோழவரம், பூண்டி, வெலிங்டன், பெரியாறு, பேச்சிப்பாறை மேட்டூர் நீர்தேக்கங்கள் கட்டப்பட்டன.
காங்கிரஸ் ஆட்சியில் மொத்தம் 14 பெரிய அணைகள் கட்டப்பட்டன.
மீதம் 61 நீர் தேக்கங்கள் திராவிட கட்சிகள் ஆட்சியின் போது கட்டப்பட்டவை. இதில் திமுக ஆட்சியில் 29 அதிமுக ஆட்சியில் 32 கட்டப்பட்டன.
இந்த மொத்த நீர் தேக்கங்களின் கொள்ளளவு 6669.57 M.Cum மில்லியன் கனமீட்டர்
ஒரு M.Cum என்பது 100 கோடி லிட்டர் அளவாகும் .
அரசர் காலத்தில் கட்டிய தேக்கங்களின் கொள்ளளவு 129.48 M.Cum
ஆங்கிலேயர் காலத்தில் கட்டிய தேக்கங்களின் கொள்ளளவு 3574.51 M.Cum
காங்கிரசு ஆட்சியில் கட்டிய தேக்கங்களின் கொள்ளளவு 2380.84 M.cum
திமுக ஆட்சியில் கட்டிய தேக்கங்களின் கொள்ளளவு 358.19 M.Cum
அதிமுக ஆட்சியில் கட்டிய தேக்கங்களின் கொள்ளளவு 226.55 M.Cum
இங்கே கவனிக்க வேண்டியது:
வெள்ளையர் ஆட்சியின் போதுதான் அதிக கொள்ளளவு கொண்ட நீர்தேக்கங்கள். அடுத்து காங்கிரஸ் ஆட்சியின் போது என்பது உண்மை. வெறும் 14 அணைகளின் கொள்ளளவு 2380.84 MCum. ஆனால் திமுக மற்றும் அதிமுக ஆட்சிக் காலங்களில் கட்டிய அணைகள் என்ணிக்கை 61 ஆக இருந்தாலும் அதன் மொத்த கொள்ளளவு 584.74 MCum மட்டுமே என்பது ஏன் என்று சிந்திக்க வேண்டும்.
முதல் காரணம் நமக்கு நீர்வளம் குறைவு. இருந்த நீர் ஆதாரங்களில் போதிய அளவு பெரிய திட்டங்கள் முதல் ஐந்தாண்டு திட்டக் காலத்தில் காமராஜர் ஆட்சிக் காலத்தில் கோண்டு வரப்பட்டது. பிறகு பெரிய அணைகள் கட்ட வாய்ப்பு இல்லாமல் போனாலும் திராவிடக் கட்சிகள் பல சிறு அணகளை கட்டியதை மறப்பது கூடாது.
முதல் ஐந்தாண்டு திட்டத்தின் (1951-1956) படி விவசாய பாசன வசதியை பெருக்கவும் மின் உற்பத்திக்கும் அணைகள் கட்டுவதற்கு 27.2 % நிதி ஒதிக்கீடு செய்யப்பட்டு செயல் படுத்தப் பட்டது. அப்போது திட்டமிடப்பட்டவைகள் தான் காமராசர் ஆட்சியின் போது செயல் படுத்தப் பட்டு அந்த 14 அணைகள் கட்டப்பட்டன.
இதற்கு மூலக் காரணமாக இருந்தது முதல்வர் காமராஜர் முழு முழுமூச்சுடன் மத்திய அரசுடன் போராடி திட்டங்கள் அனுமதி பெற்று கொண்டு வந்தது திமுக என்ற மக்கள் இயக்கம் தமிழர் நலனுக்கு போராடியதால்தான் என்பதை மறைக்கவோ மறுக்கவோ முடியாது.
அப்போது தனிநாடு கோரிக்கை வைத்த திமுக வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்றும் டெல்லிக்கு காவடி எடுக்க வேண்டிய நிலை பற்றியும் குரல் எழுப்பியதன் விளைவுதான் நமக்கு அந்த திட்டங்கள் கிடைத்தன என்பது உண்மை வரலாறு.
வடநாட்டில் மிகப்பெரிய பக்ராநங்கல் அணை சட்லெஜ் நதியின் குறுக்கே கட்டுவதற்கு சுதந்திரம் கிடைத்த மறு ஆண்டே 1948 ல் துவக்கப்பட்டு 1963 ல் முடிக்கப்பட்டது. அதன் கொள்ளளவு 9340 M.Cum அதே போல் ஒரிசாவில் மகாநதியின் குறுக்கே 1948 ல் துவக்கப்பட்ட ஹிராகுட் அணைக்கட்டு 1957 ல் முடிக்கப்பட்டது. அதன் கொள்ளளவு 5896 M.Cum. ஆந்திராவில் நாகார்ஜுன சாகர் அணை 1955 ல் துவக்கப்பட்டு 1967 ல் தான் முடிக்கப்பட்டது. அதன் கொள்ளளவு 544 MCum. அந்த காலகட்டத்தில் மிகப் பெரிய திட்டங்களாக இம் மூன்றும் கருதபட்டன.
மேலும் அடுத்தடுத்த ஐந்தாண்டு திட்டங்களில் வேறு திட்டங்களுக்கு முதலிடம் கொடுக்கப்பட்டது. இரண்டாவது ஐந்தாண்டு திட்டம் BHEL போன்ற பொது நிறுவனங்கள் இரும்பு தொழிற்சாலைகள் துவக்க முன்னுரிமை கொடுக்கப்பட்டது. அபோது திருச்சியில் BHEL வந்தாலும் சேலம் இரும்பாலை திட்டம் திமுக ஆட்சியின் போதுதான் பல போராட்டங்களுக்கு பிறகு வந்தது. 1956 ல் நெய்வேலி லிக்னைட் கார்பரேஷன் துவங்கப்பட்டது.
1961-66 மூன்றாவது ஐந்தாண்டு காலகட்டங்களில் இந்தியா சீனாவுடனும் பாக்கிஸ்தானுடனும் போர் புரியவேண்டிய நிலையில் பொருளாதார வீழ்ச்சியும் பணவீக்கமும் அதிகரித்த காரணத்தால் பல வளர்ச்சி திட்டங்கள் தடைபட்டன.
பிறகு மூன்றாண்டுகள் எந்த திட்டங்களுக்கும் அனுமதி இல்லாமல் Plan Holiday 1966 முதல் 1969 வரை இருந்தது. இந்த காலகட்டத்தில்தான் திமுக தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தது.
முதல்வர் அறிஞர் அண்ணா சேலம் இரும்பாலை, நெய்வேலி இரண்டாவது சுரங்கம், சேது சமுத்திர திட்டம் மூன்றையும் வலியுறுத்தி மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க எழுச்சிநாள் கூட்டங்கள் நடத்தினார்.
நெய்வேலியில் இரண்டாவது சுரங்க திட்டப் பணிகள் அப்படி ஒன்றும் லேசாக செயல்படுத்த அனுமதி கிடைக்கவில்லை. திமுக உள்ளிட்ட கட்சிகளின் பல போராட்டங்களுக்குப் பிறகுதான் கிடைத்தது.
சேது சமுத்திர திட்டம் பற்றி எல்லோருக்கும் இப்போது தெரியும். அந்த திட்டம் திமுக ஆட்சியின் போது வந்தது என்பதற்காகவே முடக்கப்பட்டிருப்பதும் வழக்கு போடப்பட்டு எதுவும் செய்ய முடியாமல் இருப்பதும் தானே உண்மை. இதைப் பற்றி பேச யாருக்கு இன்று மனம் இருக்கிறது. அந்த திட்டத்தின் பயன்கள் தென் தமிழகக் கடலோர மாவட்டங்களின் வளர்ச்சிக்கு எப்படி துணை இருந்து இருக்கும் என்பதை எண்ணிப் பார்க்காமல் வாய்க்கு வந்தபடி குறை சொல்லித் திரிபவர்களை என்ன என்று சொல்வது.
1969-74 நான்காவது ஐந்தாண்டு திட்டத்தின்போது பசுமைப் புரட்சிக்கு முதலிடம் கொடுக்கப்பட்டது. அப்போது 14 வங்கிகள் தேசியமயம் ஆக்க கலைஞர் தலைமையிலான திமுக ஆதரவு தராமல் போயிருந்தால் இந்த நான்காவது ஐந்தாண்டு திட்டம் மிகப் பெரும் தோல்வியை கண்டிருக்கும். அப்போது பங்களாதேச பிரச்சினையில் பாக்கிஸ்தானுடன் போரிட்டும் கூட திட்ட வளர்ச்சி இலக்கு 4.4% ஆக இருந்தாலும் அது 5% ஆக உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த காலகட்டத்தில்தான் 1974 ல் இந்திய தேசிய நெடுஞ்சாலை முறை நடைமுறைக்கு வந்து பல தேசிய சாலைகள் உருவாக காரணமானது. இதற்கு அகில இந்திய அளவில் திமுகவின் இந்திரா அரசிற்கான ஆதரவு மன்னர் மான்ய ஒழிப்பிலும் வங்கிகள் தேசிய மயமாக்கலிலும் திமுக ஆதரவு அளித்ததே என்ற வரலாற்றை யாரும் மறக்கக் கூடாது.
அதற்கு காமராஜர் இருந்த காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தது அன்றைய கால சூழல். இப்போது அதற்காக நாம் காமராஜரை குறை சொல்ல முடியுமா என்பதையும் நினைத்துப் பார்க்க வேண்டும்.
தமிழ்நாட்டின் தண்ணீர் வளம் மற்ற மாநிலங்களில் உருவாகி ஓடி வரும் ஆறுகளை நம்பி இருக்கிறது. அவர்கள் அந்த ஆறுகளில் அணைகள் கட்டினால் நமக்கு நீர் வராது. இதுதான் தமிழ்நாட்டின் உயிர் நதியான காவிரி பிரச்சனை. இதை மத்திய மாநில அரசுகள் அதில் அங்கம் வகித்த கட்சிகள் பல்வேறு காலகட்டத்தில் பல்வேறு விதமாக அணுகியதால் நம்முடைய உரிமைகள் பாதிக்கப்பட்டன. இதில் நமக்குள்ளாக நாமே ஒருவரை ஒருவர் குற்றம் சொல்வதில் அர்த்தம் இல்லை.
சிலர் எல்லாவித சிக்கல்களுக்கும் கலைஞரையும் திமுகவையும் மட்டுமே குறை சொல்வதே பிழைப்பாக இருக்கிறார்கள். அது திட்டமிட்டு பரப்பபடும் பொய்கள். தமிழ்நாட்டில் ஒவ்வொரு தமிழனும் கொஞ்சமாவது சூடு சொரணையுடன் சோறு தின்பது திமுக என்ற அரசியல் கட்சியாலும் திராவிட இயக்கத்தாலும்தான்.
தமிழ்நாட்டில் இன்று பலரும் ஏரி குளங்களைக் காணவில்லை என்று அங்கலாய்த்துக் கொள்கிறார்கள். அதற்கு இப்போது உள்ள அரசு என்ன செய்தது அதற்கு முன்பு என்ன செய்தது என்பதெல்லாம் கேட்க திராணி இல்லாமல் சில பத்திரிகைகள் ஊடகங்கள் நடுநிலை போர்வையில் இருக்கும் சிலர் திமுகவை குற்றம் சொல்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்.
சிலர் இரண்டு கட்சிகளையும் சேர்த்து வைகிறேன் பேர்வழி என்று திமுகவை மட்டும் கிழிப்பார்கள். ஆனால் இந்த ஏரி குளம் விஷயத்தில் தமிழ்நாட்டை கூறுபோட்டு கொடுத்தது யார் என்றால் 13 வருஷம் தொடர்ந்து ஆட்சி செய்தாரே ஒரு மகராசன் அவருதான். கட்சிகாரருக்கு எல்லாம் காலேஜ் ஆரம்பிக்க ஏரி புறம்போக்குகளை வளைத்துபோட அனுமதி கொடுத்ததே அவருதான்.
அதற்கு முன்னால் வெறும் புறம்போக்கு நிலங்களில் வீடு இல்லாதவர் குடிசை போட்டு வாழ்ந்து வந்தனர். அவர்கள் ஒரு குறிப்பிட்ட காலம் அங்கு வாழ்ந்திருந்தால் பட்டா தருவது வழக்கம். 1976க்கு முன்பு அந்த மகராசன் ஆட்சிக்கு வருவது வரை அதுதான் நடைமுறை. ஏரி கால்வாய் குளம் குட்டை கோயில்நிலம் எல்லாம் அப்போது ஆக்கிரமிப்பு கிடையாது. இவருடைய ஆட்சியின் போதுதான் முதலில் இந்த அக்கிரமம் ஆரம்பமானது.
அதுவும் கோயில் நிலங்கள் வெகுவாக அவர் சார்ந்த மொழியின மக்கள் ஆக்கிரமிப்பு சென்னையில் அதிகமாக நிகழ்ந்தது. சில பகுதிகளில் பட்டாவும் வாங்கி மாடிவீடு கட்டி வாழுகின்றனர் அவர்கள்.
13 வருஷம் அவர் ஆட்சியில் செய்த சாதனை என்று என்ன சொல்கிறார்கள் சத்துணவு போட்டாராம். வேறு ஏதாவது உருப்படியான திட்டம் சொல்லச் சொல்லுங்கள். சொல்ல முடியாது .
சென்னைக்கு கிருஷ்ணா குடிநீர் பெறுவதற்கு ஆந்திராவிடம் ஒப்பந்தம் செய்தது நல்ல ஒரு திட்டம். அதற்கு பிற்காலத்தில் நிதி ஒதிக்கி திட்டம் செயலுக்கு வர காரணமானவர் கலைஞர். கலைஞர் ஆட்சியில் எந்த ஒரு திட்டமும் காழ்ப்புணர்ச்சியால் நின்றது கிடையாது.
சென்னை குடிநீருக்கு வீராணம் திட்டம் போட்டது கலைஞர் ஆட்சியில். அவர் ஆட்சி கலைக்கப் பட்டபிறகு சர்க்காரியா கமிஷன் போட்டு ஊழல் என்று சொல்லி இந்த திட்டம் பாழடிக்கப்பட்டது. அதற்குப் பிறகும் அந்த திட்டம் நல்ல திட்டம் அப்படியே தொடரலாம் என்று feasibility அறிக்கை நிபுணர்கள் தந்தும் அப்போது அந்த திட்டத்தை அந்த புண்ணியவான் செயல்படுத்தாமல் கிருஷ்ணா நீர் திட்டம் கொண்டு வந்தார்.
அதில் பல சிக்கல் வந்த போது வீராணம் திட்டம் தூசி தட்டி ஜெயா ஆட்சியில் புதிய வீராணம் திட்டம் என்ற பெயரில் கொண்டு வரப்பட்டது. புதிய வீராணம் திட்டத்தில் வீராணம் ஏரி அருகில் வடலூரில் ராட்சச போர்வெல் அமைத்து அதிலிருந்து நீர் இரைக்கும் முறை புகுத்தப்பட்டதால் அங்கு இப்போது இரண்டு போகம் விவசாயம் ஒரு போகம் செய்யும் நிலை ஏற்பட்டது. அதுவும் கிருஷ்ணா நீர் சென்னைக்கு இல்லாமல் போனால் அதிக நீரை அங்கே உறிஞ்சும் நிலை ஏற்பட்டு இன்னும் மோசமான நிலைமைக்கு அங்குள்ள விவசாயிகள் ஆளாகி இருப்பார்கள்.
ஒன்று மட்டும் உறுதியாக சொல்ல முடியும். திமுக ஆட்சியில்தான் பல எண்ணற்ற பயனுள்ள திட்டங்கள் செயல்படுத்தப் பட்டன. பல்வேறு திட்டங்களுக்கு முன்னோடி மாநிலமாக கலைஞர் ஆட்சி திகழ்ந்தது. உதாரணமாக குடிசை மாற்று வாரியம், குடிநீர் வடிகால் வாரியம், போன்ற அமைப்புகள் முதல் முதல் அமைத்து பல திட்டங்களை கொண்டு வந்தது கலைஞர் அரசுதான்.
ஒரு மாநிலம் தன்னுடைய திட்ட வரையரைகளை தெளிவாக்க மாநில திட்டக் குழுவை அமைத்து எல்லா மாநிலங்களுக்கும் முன்னோடியாக திகழ்ந்தது கலைஞர் அரசுதான்.
இந்த உண்மைகள் எதுவும் யாரும் மக்களிடம் சொல்வது இல்லை. மக்களும் எந்த அக்கறையும் இல்லாமல் மிகவும் பொறுப்பற்று இருப்பதாகவே தெரிகிறது. முன்பு ஓட்டுக்கு நோட்டு என்ற நிலை இருந்தது மாறி இப்போது நோட்டுக்கு ஓட்டு என்றாகிவிட்டது. இதைத் தடுக்க வேண்டும்.
இந்தியாவில் ஜனநாயகம் தழைத்தோங்க விரும்பியவர் பண்டிதர் நேரு. தமிழ்நாட்டில் அறிஞர் அண்ணா. ஆனால் ஜனநாயகம் என்ற பெயரில் ஓட்டு அரசியல் இந்தியாவிற்கு சரிவராது என்பதை அறிந்து மக்களுக்கு விழிப்புணர்வு வரவேண்டும், அதற்கு சமூக நீதி தேவை.என்பதை வலியுறுத்தியவர் தந்தை பெரியார். பெரியார் அண்ணா வழி நடப்போம்.
மக்களின் அறியாமை இருள் விலக உதிக்கட்டும் உதய சூரியன்…

5 comments:

Natarajan said...

முல்லைப் பெரியாறு அணை
1979 ல் அந்த மகராசன் செய்த குழப்படி தான் இன்றும் தொடர்கிறது
கேரள அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் மகாராசனை " நம்முட சேட்டன் அல்லே , நமுக்கு எல்லாம் செய்யும் " என்று சொல்லி முல்லைப் பெரியாறு திட்டத்தை குழம்பினார்
கையொப்பம் இட வேண்டாம் என்று சொன்னது நம் அதிகாரிகளும் மற்றும் பொதுப் பணி துறை அமைச்சர் ராஜா முகமது
இவர்களின் எதிர்ப்பையும் மீறி தீர்மானம் நிறைவேறியது
1979 முதல் இன்று வரை விவசாயிகளின் இழப்பு பல ஆயிரம் கோடி இருக்கும்.

Unknown said...

புள்ளிவிவரங்களோடு கூடிய தெளிவான,ஆழ்ந்த பதிவு

aruLperoLi said...

மிக்க நன்றி

Unknown said...

நன்றி சா கணேசன் சமூக ஆர்வலர் திண்டுக்கல் 9791816699

Unknown said...

சார் சூப்பர் சார்