Saturday, December 19, 2015

தைப்பிறந்தால் வழிப்பிறக்கும்

"தையே முதற்றிங்கள் தை முதலே ஆண்டு முதல்

பத்தன்று நூறன்று பன்னூ றன்று

பல்லாயி ரத்தாண்டாய்த் தமிழர் வாழ்வில்

புத்தாண்டு, தைம் முதல் நாள், பொங்கல் நன்னாள்

நித்திரையில் இருக்கும் தமிழா!

சித்திரை அல்ல உனக்குத் தமிழ்ப் புத்தாண்டு

அண்டிப் பிழைக்க வந்த ஆரியக் கூட்டம் காட்டியதே

அறிவுக்கு ஒவ்வாத அறுபது ஆண்டுகள்

தரணி ஆண்ட தமிழர்க்கு

தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு"

                                                                                     (புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்)

சனவரி ஆங்கிலப் புத்தாண்டு தமிழருக்கு எவ்விதம் அந்நியமோ அதேபோல சித்திரைப் புத்தாண்டும் தமிழருக்கு அந்நியமே!

சித்திரை முதல் நாளில் பிறக்கும் மாதங்களின் பெயர்கள் ஒன்றேனும் தமிழாக இல்லை. சித்திரை முதல் நாள் தமிழர்களின் புத்தாண்டென்றால் ஏன் மாதங்களின் பெயர்கள் தமிழ்ப் பெயர்களாக இல்லை? தமிழில் மொழிக்கு முதலில் வராத எழுத்துகள் பல இடம் பெற்றுள்ளன. அனைத்துச் சொற்களும் தமிழ் மொழிக்கும் மரபுக்கும் பண்புக்கும் மாறான வடமொழி வடிவங்களே!



இப்போது வழங்கும் பிரபவ தொடங்கி சய ஈறாக 60 ஆண்டுப் பெயர்கள் சாலிவாகனன் என்பவனால் அல்லது கனிஷ்கனால் கி.பி 78 இல் ஏற்பட்டவை. இவை வடநாட்டு அரசனால் ஏற்பட்டவையாதலின் வடமொழிப் பெயர்களாய் உள்ளன. (பக்கம் 7 தி ஹிந்து 10-03-1940)

60 ஆண்டுச் சக்கரம் சுற்றிச் சுற்றி வருவதனாலும் அது மிகக் குறுகிய காலத்தைக் (60ஆண்டுகள்) கொண்டுள்ளதாலும் வரலாற்று ஆசிரியர்களுக்குப் பயன்படாது. ருத்ரோத்காரி ஆண்டில் ஒருவர்.  பிறந்தார் என்று கூறினால் எந்த ருத்ரோத்காரி என்று அறியமுடியாது

                                                                                               (பக்கம் 163 - பாவாணரின் ஒப்பியன்மொழி நூல் -1940)

கண்ணனும் நாரதரும் கலவி செய்து பெற்றெடுத்த குழுந்தைகள்தாம் 60 தமிழ் ஆண்டுகள் என்பது புராணக் கதை. இந்தக் கதையே அருவருக்கத்தக்கது. ஆபாசமானது. அறிவுக்கும் அறிவியலுக்கும் ஆராய்ச்சிக்கும் பொருத்தம் இல்லாதது. கருத்துக்கும் காலத்துக்கும் ஒத்துவராதது. மானமும் அறிவும் உள்ள மக்களால் ஏற்றுக் கொள்ள முடியாதது.

இந்தக் குழப்ப ஆண்டு முறையால் குடும்பம், சமுதாயம், நாடு, உலகம் ஆகியவற்றின் வாழ்க்கை, வரலாற்று நிகழ்ச்சிகளை 60 ஆண்டுகளுக்கு மேல் கணக்கிட முடியாது.

இந்த 60 ஆண்டு முறையால் தமிழர் மொழி, மரபு, மானம், பண்பு, வாழ்வு முதலியவற்றுக்கு ஏற்பட்டுள்ள அழிவும் இழிவும் எண்ணிப் பார்த்து, உணர்ந்து தெளிந்த தமிழ் அறிஞர்கள், சான்றோர்கள், புலவர்கள் 1921 ஆம் ஆண்டு சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்க்கடல் மறைமலை அடிகள் தலைமையில் கூடிய மாநாட்டில் ஆராய்ந்தார்கள். பேராசிரியர் கா. நவச்சிவாயர் அந்த மாநாட்டைத் தொடக்கி வைத்தார்.



திருவள்ளுவர் இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு 31 ஆண்டுகளுக்கு முன்பு தைத் திங்கள் முதல்நாள் பிறந்தவர் என்றும் அவர் பெயரில் தொடர் ஆண்டை பின்பற்றுவது என்றும் அதையே தமிழ் ஆண்டு எனக் கொள்வது என்றும் முடிவு செய்தார்கள.



இந்த முடிவு செய்தவர்களில் தலையான தமிழ் அறிஞர்கள் தமிழ்க் கடல் மறைமலை அடிகள், தமிழ்த் தென்றல் திரு.வி கலியாணசுந்தரனார், தமிழ்க்காவலர் கா. சுப்பிரமணியப் பிள்ளை, சைவப் பெரியார் சச்சிதானந்தம் பிள்ளை, நாவலர் ந.மு வேங்கடசாமி, நாவலர் சோமசுந்தர பாரதியார், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ விசுவநாதம் ஆகியோர் அடங்குவர்.

திருவள்ளுவர் ஆண்டுக்கு முதல் மாதம் தை. இறுதி மாதம் மார்கழி. புத்தாண்டுத் தொடக்கம் தை முதல் நாள். கிழமைகள் வழக்கில் உள்ளவை. திருவள்ளுவர் காலம் கி.மு 31. எனவே, ஆங்கில ஆண்டுடன் (2014) 31 அய்க் கூட்டினால் வருவது திருவள்ளுவர் ஆண்டு 2045.

தமிழ்நாடு அரசு திருவள்ளுவர் ஆண்டு முறையை ஏற்று 1971 முதல் தமிழ்நாடு அரசு நாட்குறிப்பிலும் 1972 முதல் தமிழ்நாடு அரசிதழிலும் 1981 முதல் தமிழ்நாடு அரசின் அனைத்து அலுவல்களிலும் நடைமுறைப்படுத்தி வருகிறது.

பழந்தமிழகத்தில் ஆண்டுத் தொடக்கம் தை மாதமாக இருந்தது பின்னர் ஆவணி ஆண்டின் முதல் மாதமாகக் கொள்ளப்பட்டது. பின்பு சித்திரை ஆண்டின் முதல் மாதமாக மாற்றப்பட்டது. எனவே இழந்த தொன்மைச் சிறப்புக்குரிய தை மாதம் முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் ஆகும்.

தமிழர்களுக்கு தையில் தொடங்கும் ஒரு தொடர் ஆண்டு தேவை. வேண்டுமென்றால் சித்திரையை கோடை விழாவாக சித்திரைத் திருநாளாகக் கொண்டாடலாம்.

தை முதல் நாளை புத்தாண்டாகக் கொண்டாடுவதற்கு வானியல் அடிப்படையும் உண்டு. அன்றுதான் ஞாயிறு தனது தென் திசை நோக்கிய செலவை முடித்துக் கொண்டு வட திசை நோக்கிய செலவை மகர இராசியில் இருந்து மேற்கொள்கிறது. எனவே தமிழர் தை முதல் நாளை புத்தாண்டு, பொங்கல், திருவள்ளுவர் பிறந்த நாள் என முப்பெரும் விழாவாகக் கொண்டாட வேண்டும்.



“பொங்கல்”என்கின்ற பழந்தமிழ்ச் சொல்லுக்கு உரிய அர்த்தங்கள்தான் என்ன? பொங்குகை, பெருங்கோபம், மிளகு-சீரகம்-உப்பு-நெய், முதலியன கலந்து இட்ட அன்னம், உயர்ச்சி, பருமை, மிகுதி, கள், கிளர்தல், சமைத்தல், பொலிதல் என்று பல பொருட்களைத் தமிழ் மொழியகராதியும், தமிழ்ப் பேரகராதியும் தருகின்றன. அதோடு இன்னுமொரு பொருளும் தரப்படுகின்றது.



‘சூரியன் மகரராசியில் நுழையும் நாளான தைமாத முதற்தேதியன்று சூரியனை வழிபட்டுப் பொங்கல் நிவேதனம் செய்யும் திருவிழா’- என்ற பொருளும், பொங்கல் என்ற சொல்லுக்கு தரப்பட்டுள்ளது. இந்தப் பொருளுக்கு உள்ளே பல முக்கியமான அம்சங்கள் பொதிந்திருப்பதை நாம் காணக் கூடியதாக உள்ளது.



அதாவது பொங்கல் திருவிழா என்பது தமிழ் மக்கள் வாழ்வில் வரலாற்று அடிப்படையில், ஒரு பண்பாட்டு அங்கமாக, அவர்களது வாழ்வியலில் திகழுகின்ற திருவிழாவாக இருந்து வந்துள்ளது என்பது புலனாகின்றது. அத்தோடு பண்டைத் தமிழர்கள் இயற்கையின் காலக்கணக்கைக் கணித்து சரியாக எந்த நாளில் தைத்திருநாளைக் கொண்டாட வேண்டும் என்பதையும் அறிந்திருந்தார்கள் என்பதையும் நாம் அறியக் கூடியதாக உள்ளது.

பண்டைத் தமிழன் இயற்கையை வணங்கி, இயற்கையோடு ஒன்றிணைந்து வாழ முனைந்தவன் ஆவான்.! தன்னுடைய வாழ்க்கைக் காலத்தில் வித்தியாசமான காலப்பருவங்கள் தோன்றுவதையும் அவை மீண்டும் மீண்டும் தொடர்ந்து வருவதையும் பார்த்து; ஒரு குறிப்பிட்ட காலச் சேர்வையில், மழை, வெயில், குளிர், பனி, தென்றல் வாடை, ஆகியவை மாறிமாறித் தோன்றி, தம் வாழ்வை ஆண்டு வந்ததால் இந்தக்காலச் சேர்வையைத் தமிழன் ‘ஆண்டு’ என்று அழைத்தான் என்று அறிஞர் பெருமக்கள் கூறுகின்றனர்.

தமிழர்கள் இயற்கையை ஆதாரமாகக் கொண்டு, காலத்தைப் பகுத்தார்கள். ஒரு நாளைக் கூட ஆறு சிறு பொழுதுகளாகத்  அன்றே பகுத்து வைத்தார்கள். ‘வைகறை, காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை, யாமம்’ என்று அவற்றை பகுத்தனர். அது மட்டுமல்ல, அந்த ஆறு சிறு பொழுதுகளின் தொகுப்பையும் அறுபது நாழிகைகளாகப் பகுத்துக் கணக்கிட்டார்கள். அதாவது ஒரு நாளில் ஆறு சிறுபொழுதுகள். அந்த ஆறு சிறு பொழுதுகள் கழிவதற்கு அறுபது நாழிகைள் எடுக்கின்றன என்று தமிழர்கள் பண்டைக் காலத்தில் கணக்கிட்டார்கள். ஒரு நாழிகை என்பது தற்போதைய 24 நிமிடங்களைக் கொண்டதாகும்.பண்டைக்கால தமிழர்களோ, தமக்குரிய ஆண்டை, அந்த ஆண்டுக்குரிய தமது வாழ்வை ஆறு பருவங்களாக வகுத்திருந்தார்கள்.

1. இளவேனில் - ( தை-மாசி மாதங்களுக்குரியது)

2. முதுவேனில் - (பங்குனி - சித்திரை மாதங்களுக்குரியது)

3. கார் - (வைகாசி – ஆனி மாதங்களுக்குரியது)

4. கூதிர் - (ஆடி - ஆவணி மாதங்களுக்குரியது.)

5. முன்பனி – (புரட்டாசி – ஐப்பசி மாதங்களுக்குரியது)

6. பின்பனி – (கார்த்திகை - மார்கழி மாதங்களுக்குரியது)



காலத்தை, அறுபது நாழிகைகைளாகவும், ஆறு சிறு பொழுதுகளாகவும், ஆறு பருவங்களாகவும் பகுத்த பண்டைத் தமிழன் தன்னுடைய புத்தாண்டு வாழ்வை இளவேனிற் காலத்தில்தான் தொடங்குகின்றான்.



பண்பாட்டுப் பெருமை கொண்ட மற்றைய பல இனத்தவர்களும், தங்களுடைய புத்தாண்டு வாழ்வை, தங்களுடைய இளவேனிற் காலங்களில்தான் துவக்குகிறார்கள். தமிழர்கள் மட்டுமல்ல, சீனர்களும், ஜப்பானியர்களும், கொரியர்களும், மஞ்சூரியர்களும் என, பல கோடி இன மக்கள் - தொன்மையான பண்பாட்டு வாழ்வினைக் கொண்ட பெருமை வாய்ந்த மக்கள்- தங்களுடைய இளவேனிற் காலத்தையே தமது புத்தாண்டாகக் கொண்டாடி வருகின்றார்கள். இடையில் தமிழன் மட்டும் மாறி விட்டான்! ஆளவந்த ஆரியர்களின் அடிமையாக மாறியது மட்டுமல்லாது, இன்றும் கூட ஆரியர்களின் பண்டிகைகளான சித்திரை வருடப்பிறப்பு, தீபாவளி போன்ற பண்டிகைகளை, தன் இனத்துப் பண்டிகைகளாக எண்ணி மயங்கிப் போய்க் கிடக்கின்றான்.



“சித்திரை வருடப்பிறப்பு என்பது சாலிவாகனன் என்ற வடநாட்டு அரசனால் பின்னாளில் நிலைநாட்டப்பட்டது.  இந்த அரசனுக்கு முன்னர் பல்லாயிரம் ஆண்டுகளாக நயத்தக்க நாகரிகத்துடன் வாழ்ந்த தமிழ் மக்கள் தம் நாட்டுப் பெருமகன் ஒருவனுடன் இணைந்த தொடர் ஆண்டை நிலை நாட்ட முயலாதது பெரும் விந்தையாக உள்ளது. . .(சித்திரை வருடப் பிறப்பை) வரவேற்று, (அதன் மூலம் ) தமிழினத்தின் பழமையையும், பண்பையும், சிறப்பையும், செல்வாக்கையும் (இன்றைய தமிழர்கள்) சிதைத்து வந்துள்ளமை பெரும் வெட்கத்திற்கு இடமானதாகவும் இருக்கின்றது. தமிழ் மக்களிடையே நிகழ்ந்த மானக்கேடான நகைப்புக்கிடமான செயல் இது ஒன்று மட்டும்தானா?- தமிழ் மக்களின் கோவில்களிலே இன்று தமிழ் மொழியும், தமிழ் இசையும் ஒதுக்கப்பட்டுள்ளன. . .” என்று பேராசிரியர் க.பொ. இரத்தினம் அவர்கள் மிகக் கடுமையாக விமர்சித்து இருக்கிறார்.

தமிழர்களின் தேசியத் திருநாளான தைப்பொங்கல் நாளை தமிழர்களுடைய பண்டைக் காலத்திலிருந்தே வரலாற்று வழியாகவும், வாழ்வியல் வழியாகவும், பண்பாட்டு வழியாகவும், வானியல் அறிவு வழியாகவும் தமிழர்கள் இனம் கண்டு அறிந்துணர்ந்து கொண்டாடி வந்துள்ளார்கள் என்பதை நாம் உணர வேண்டும்.



பொங்கல் திருநாளுக்கு முதல் நாளை ‘போகி’ (போக்கி) என்று அழைத்தார்கள். போகி என்பது போக்கு, போதல் என்பதாகும். (ஓர் ஆண்டைப் போக்கியது- போகி-போகியது- போகி) இந்நாளில் பழைய பொருட்களை எரித்தல் போன்ற நடைமுறைகள் மேற் கொள்ளப்படுகின்றன. தமிழ்ப் புத்தாண்டான தைப்பொங்கல் நாளன்று புத்தாண்டுக்குரிய சகல நடைமுறைகளும் மேற்கொள்ளப்படும். தோரணம் தொங்கவிடல், புதுநீர் அள்ளுதல், வீட்டை அழகு படுத்தல், பொங்கலிடுதல், புத்தாடை அணிதல் போன்ற நடைமுறைகள் மேற்கொள்ளப்படும். தைப்பொங்கல் நாளுக்கு அடுத்தநாள் பயிர்ச் செய்கையிலே இணைந்து தொழிற்படும் மாடு சிறப்பிக்கப்பட்டு அது மாட்டுப் பொங்கல் நாளாக அறியப்பட்டது. அதற்கு மறுநாள் உறவினர் வீடுகளுக்குச் செல்லும் நடைமுறையைக் ‘காணும் பொங்கல்’ என்று அழைக்கப் படுகிறது. இந்த நாளில் சமைக்கப்படும் படையலின் போது மதுவும், புலாலும் படையற் பொருட்களாக  விளங்கின. இதனை ஈழத்தமிழர் தவப்படையல் என்பர். இப்படையலில் மீன்-இறைச்சி முதலியன படைக்கப்படும். இந்தப் பழக்கம் இன்றும் தமிழ் நாட்டில் பலரிடம் இருப்பதைக் காணலாம். 



தைப்பொங்கல் நாளான, தைத்திங்கள் முதல் நாள்தான் தமிழனுக்குரிய தமிழ் புத்தாண்டுத் துவக்க நாளாகும். பொங்கல் திருநாள்-தமிழ்ப் புத்தாண்டுத் திருநாள்-என்பதானது, சிலர் பிதற்றித் திரிவதுபோல் இந்துசமய விழா அல்ல! உண்மையில் இது சமய சார்பற்ற இயற்கை சார்ந்த, எல்லாத் தமிழர்களுக்கும் பொதுவான திருநாளாகும்.! மற்றைய எல்லாத் திருநாட்களையும் எடுத்து ஒப்பிட்டுப் பார்த்தால் அங்கே ஏதாவது ஒரு அரசனை, வீரனை, கடவுளைக் குறிப்பிட்ட ‘கதை’ ஒன்று புனையப் பட்டு அந்தத் திருநாள் உருவாகியதற்கான காரணம் ஒன்றும் கற்பிக்கப்பட்டிருக்கும். ஆனால் தைப்பொங்கல் திருநாள் அப்படியான ஒன்றல்ல! அது வான் சார்ந்து, மண் சார்ந்து, முழுமையான இயற்கை சார்ந்து உருவாகிய திருநாளாகும்.! இது தமிழர்களான எமக்குப் பெருமையையும் மகிழ்ச்சியையும் தருகின்ற திருவிழாவாகும்.! இத்திருநாளைப் புறம் தள்ளுவதும் இதற்கு மதம் சார்ந்த கற்பிதங்களை உருவாக்குவதும், தமிழினத்தை கேவலப்படுத்தும் செயல்களாகும்.!



தைப்பெங்கல் திருவிழாவிற்குச் சமயச் சாயம் பூச முற்படுபவர்களுக்கு சங்கராந்தி தினம் என்பவர்களுக்கு ஒரு வரலாற்று நிகழ்வை குறிப்பிட்டாக வேண்டும். 1935ம் ஆண்டு திருச்சியில் அகில தமிழர் மாநாடு என்ற பெயரில் ஒரு மாநாடு நடைபெற்றது. பசுமலை சோமசுந்தர பாரதியார் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் கா. சுப்பிரமணியனார், மதுரை தமிழவேள் பி.டி. இராசன், தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், புலவர் கா.ப. சாமி, திரு.வி.க., மறைமலை அடிகளார் முதலான பல தமிழறிஞர்கள் கலந்து கொண்டார்கள். தந்தை ஈ.வெ.ரா. பெரியாரும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டிருந்தார். இந்த மாநாட்டின் போது தைப்பொங்கல் சமயவிழாவா? இல்லை சமயமற்ற விழாவா? என்று பலத்த விவாதம் எழுந்தது. இறுதியாக, எந்த சமயமும் சாத்திரமும் சொல்லாத இதிகாசத்திலோ புராணத்திலோ குறிப்பிடாத ஆனால் தமிழர் வரலாற்றில் பின்னிப்பிணைந்த இந்தவிழாவை திராவிடத் திருநாளாகவும் தமிழர் பெருநாளாகவும் கொண்டாடுவதே சாலச் சிறந்தது என முடிவெடுத்தனர்.



ஆகவே தைப்பொங்கல் திருவிழா என்பது ஒரு சமய விழா அல்ல! சங்கராந்தி அல்ல. தமிழரின் பண்பாட்டு விழா! காலக் கணிப்பை மேற் கொண்டு மிகச் சரியாகத் தமது புத்தாண்டுக்குரிய இளவேனிற் காலத்தின் முதல்நாளை வகுத்தறிந்து தமிழரின் தமிழ்ப் புத்தாண்டு துவக்கத்தைக் கொண்டாடும் நாள்!



”திருமிக்க  தமிழகத்தின்  குடும்பத்தீர்!  இல்லறத்தீர்!  செந்த  மிழ்க்கே

வருமிக்க  தீமையினை  எதிர்த்திடுவீர்  நெஞ்சாலும்  வாய்மெய்  யாலும்!

பொருள்மிக்க  தமிழ்மொழிக்குப்  புரிந்திடுவீர்  நற்றொண்டு; புரியீராயின்,                                                       

இருள்மிக்க  தாகிவிடும்  தமிழ்நாடும்  தமிழர்களின்  இனிய  வாழ்வும்!”

                            என்று புரட்சிக்கவிஞர் கூறுவதை நினைவில் கொள்வோம்.

No comments: