Monday, December 21, 2015

மயக்கம் தரும் மதுவிலக்கு உண்மைகள்

2000 ஆண்டுகளுக்கு முன்னரே திருவள்ளுவர் கள்ளுண்ணாமை என்னும் தலைப்பில் 10 குறட்பாக்களில் மதுக்குடிப் பழகாமையின் முக்கியத்துவத்தைக் குறிப்பிடுகிறார். அப்பொழுதிருந்தே தமிழகத்தில் கள் என்னும் மதுவை குடிக்கும் பழக்கம் இருந்தது என்பது தெரியவருகிறது. அதன் தீமைகளும் தெரிந்து இருக்கின்றன. ஆனாலும் அப்பழக்கம் விலக்கப்படவில்லை. தொடர்ந்து கொண்டுதான் வருகிறது.

பழந்தமிழ் இலக்கியங்கள் -  வரலாற்று செய்திகள்-  அகழ்வாராய்ச்சி குறிப்புகள் மூலம் இதைப் பற்றிய பல செய்திகள் கிடைக்கின்றன. ஆண்களும் பெண்களும் சேர்ந்தே குடித்ததாகத் தெரிகிறது. அரசர்கள் தனியாகவும் புலவர்களோடு சேர்ந்தும் குடித்து இருக்கிறார்கள். படை வீரர்களுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. அவ்வையார், கபிலர் போன்ற புலவர்களின் பாடல்கள் மூலம் இந்த செய்திகள் பதிவாகி இருக்கின்றன.

மகாபாரதம் இராமாயணம் மற்றும் பல வடமொழி வேதநூல்களிலும் அக்காலத்தில் இந்திய மக்கள் மதுஉண்டனர் என்பதற்கான குறிப்புகள் உள்ளன.

செளத்ரமணி என்று ஒரு வேள்வி அதில் ரிஷிகள் குடித்துவிட்டு ஆடுவதே  தலைமையான நிகழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது. நீலகேசி என்னும் தமிழ் காப்பியத்தில் பூதிகன் என்னும் ஆரியப் பார்ப்பனரிடம் நீலகேசி நீங்கள் எல்லாம் யோக்கியமா என்பது போல் வாதிடும் போது இந்த குறிப்பு வருகிறது.

தமிழகத்தில் அகழ்வாராய்ச்சியில் கிடைத்தவைகளில் அதிகமானது மதுச்சாடிகள். அவைகள் சீனம் கிரேக்கம் பாரசீகம் போன்ற நாடுகளில் இருந்து தருவிக்கப்பட்டவை என்பதால் அக்காலத்தில் அரசர்களும் செல்வந்தர்களும் இறக்குமதி செய்யப்பட்ட மதுவை குடித்து இருக்கிறார்கள் என்று தெரிகிறது. 

மதுக்குடிப் பழக்கம் தமிழருக்கு மட்டுமல்ல எல்லா நாட்டவருக்கும் பல நூறு ஆண்டுகளாக சரித்திரகாலத்திற்கு முன்பிருந்தே இருந்தது என்பதும் அறிய முடிகிறது. அதே வேளையில் அதன் தீமைகளும் தெரிந்து இருக்கிறது.

கள் – தேரல் என்பவை பனை தென்னை ஈச்சை போன்ற மரங்களில் இருந்து பெறப்படும் சாறு அல்லது வடிநீர். போதை இன்பம் காண விரும்புவர் இதனை அருந்தி களித்து இருக்கின்றனர். போதைத் தலைக்கேறி சிலர் செய்யும் சேட்டைகளால் , போதையில் தாம் என்ன செய்கிறோம் என்பதறியாமல் சிலர் குற்றம் செய்யவும் நேர்வதால் போதை தவிர்க்கப்பட கள்ளுண்ணாமை வலியுறுத்தப்படுகிறது.

மேலை நாடுகளில் திராட்சை சாற்றிலிருந்து wine பல்வகைப் பழச்சாற்றலிருந்து whisky கரும்புச்சாற்றிலிருந்து rum பார்லி கஞ்சியிலிருந்து beer பொன்ற மது வகைகள் தயாரிக்கப்பட்டு குடிக்கப்பட்டன. இவைகள் Foreign Liquor என்று இந்தியாவில் அழைக்கப்பட்டன. தற்போது இவைகள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படுவதால் IMFL – Indian made Foreign Liquor என்று சொல்லப்படுகிறது.
இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலதில் கள்ளுக்கடைகள் இருந்தன. உள்நாட்டு மதுவான சாரயம் இருந்தது. இவை இரண்டும் குறைந்த விலையாதலால் அவரவர் சக்திக்கு ஏற்ப குடிக்கப்பட்டது. செல்வந்தர்கள் சீமான்கள் வெளிநாட்டு மதுவகைகளைக் குடித்தனர். இப்படி குடித்தவர்கள் பெரும்பாலும் குடித்துவிட்டு கும்மாளம் போடவோ சேட்டை அரட்டை அட்டகாசம் செய்வதோ இல்லாமல்தான் இருந்தார்கள்.
குடிப்பது என்பது நற்செயல் அல்ல என்பதான கருத்து ஒரு காலத்தில் நிலவியது. குடிப்பவர்களே கூட அந்த கருத்துக்கு மதிப்பு கொடுத்தனர். பெரியவர் பெண்கள் சிறுவர் குழந்தைகள் முன்பு குடிப்பதோ குடித்துவிட்டு வருவதோ சரியல்ல என்ற கருத்து நிலவியது.
ஆனால் இன்றைக்கு குடிப்பது என்பது மிகச் சாதாரணமாகக் கருதப்படுகிறது. தவறு அல்ல என்றும் வாதிடப்படுகிறது. நாளுக்கு நாள் குடிப்பவர்கள் எண்ணிக்கை கூடுதல் ஆகிறது.

இந்தநிலை தமிழகத்தில் மட்டும் அல்ல பொதுவாக இந்தியா முழுவதும் இருப்பதைக் காணலாம். மதுவிலக்கு கொள்கைக்கு ஆதரவான காந்தி பிறந்த குஜராத்தில் மதுவிலக்கு இன்னும் இருப்பதாகச் சொல்வார்கள். ஆனால் அது எந்த அளவு உறுதியாகவும் உண்மையாகவும் வெற்றிகரமாகவும் அமுல்படுத்தப்படுகிறது என்பதை நேரில் சென்று பார்த்தால்தான் உணரமுடியும். வெளிநாட்டினர் வெளிமாநிலத்தினர் இராணுவத்தினருக்கு தனி சலுகைகள் உண்டு. அந்த அடிப்படையில் மதுவிலக்குக் கொள்கை எப்படி மீறப்படுகிறது என்பது பலருக்குத் தெரியாது.

அமெரிக்காவில் 1920 லிருந்து 1933 வரை மது விலக்கு கடைபிடிக்கப்பட்டது என்பது பலருக்கும் தெரியாத செய்தியாக இருக்கும். மதுவிலக்கு அமுல் படுத்துவதில் 13 ஆண்டுகாலம் முயன்று பார்த்தார்கள். வெற்றிகாண முடியவில்லை. அப்போது மதுவிலக்குக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் இரு குழுக்கள் செயல்பட்டன. ஆதரவாக புரட்டஸ்டண்ட் சர்ச்சும் எதிர்ப்பாக கத்தோலிக்க சர்ச்சும் இருந்தது என்பது வரலாறு. உட்ரூ வில்சன் அதிபராக இருந்தபோது அமுலுக்கு வந்த மது விலக்கு பிரான்க்லின் ரூஸ்வெல்ட் காலத்தில் விலக்கப்பட்டது.

இந்தியாவிலே காந்தி அடிகளுக்கு மதுவிலக்குக் கொள்கை உயிர்மூச்சானது என்பார்கள். ஆங்கில அரசுக்கு எதிரான கள்ளுக்கடை மறியல் போராட்டம் அவர் அறிவித்தபோது தமிழ்நாட்டு காங்கிரஸ் தலைவராக இருந்த பெரியார் தனக்குச் சொந்தமான தோட்டத்தில் இருந்த ஆயிரத்துக்குமேலான தென்னைமரங்களை வெட்டியவர். அவர் மனைவி திருமதி நாகம்மையார் தங்கை கண்ணம்மாள் இருவரும் நேரடியாக களத்தில் இறங்கி போராடியவர்கள். ஒருகட்டத்தில் போராட்ட முடிவு என் கையில் இல்லை அது தமிழ்நாட்டில் உள்ள இரண்டு பெண்களிடம் இருக்கிறது என்று காந்தியார் இந்த இருவரைபற்றி குறிப்பிடும் அளவிற்கு தமிழ்நாட்டில் அவர்களால் மதுவிற்கு எதிரான போராட்டம் முன்னெடுத்துச் செல்லப்பட்டது.

காந்தியார் ஒத்துழையாமை இயக்கம் நடத்தியபோது காங்கிரசின் செயல் திட்டங்களில் ஒன்றான மதுவிலக்கு ஏனோ பிற்பாடு ஒத்துழையாமை இயக்கம் விலக்கிக் கொள்ளப்பட்ட போது அறிவிக்கப்பட்ட தேசிய செயல் திட்டத்தில் இடம் பெறவில்லை. A programme of three positives, he said could provide a platform of national unity: Khadhi, Hindu-muslim harmony and the removal of untouchability என்கிறது காந்தியாரின் வரலாறு.

இந்தியர்களுக்கு ஆட்சியில் உரிமை அளிக்க மாண்டேகு செம்ஸ்போர்டு கொண்டு வந்த சீர்திருத்த செயல் திட்டங்களில் ஒன்று தேர்தல் முறை. அதன்படி தேர்தலில் நின்று சட்டமன்றத்திற்கு போகக்கூடாது என்பது காந்தி அடிகளின் எண்ணம்.
1920 செப்டம்பர் 4 தேதி கல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரசின் சிறப்புக் கூட்டத்தில் காந்தியார் இதனை அறிவித்தார். சரித்திரப் புகழ்பெற்ற ஒத்துழையாமை இயக்கம் பிரகடனம் செய்யப்பட்டது இந்த கூட்டத்தில்தான். அப்போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களில் முக்கியமானவர்கள் திருமதி அன்னிபெசன்ட், சி.ஆர்.தாஸ் என்று அழைக்கப்பட்ட சித்ரஞ்சன் தாஸ், பண்டிட் மதன் மோஹன் மாளவியா ஆவார்.

தேர்தலில் நின்று சட்டசபை சென்று ஆட்சி அதிகாரத்தில் அமர வேண்டும் என்று காங்கிரசாரிடம் நாடுமுழுக்கச் சென்று ஆதரவு திரட்டினர். அப்படி ஆதரவு கொடுத்தவர்கள் சுயராஜ்ய கட்சியினர் என்று அழைக்கப்பட்டனர்.
தன் கருத்துகள் ஏற்கப்படாமல் போவதை அறிந்த காந்தியார் ஒத்துழையாமை இயக்கத்தை கைவிட்டு அவர்களுடன் சமாதானமாகப் போனபோது அறிவித்த செயல்திட்டம்தான் மேலே குறிப்பிட்ட காதி – இந்து முசுலிம் ஒற்றுமை- தீண்டாமை ஒழிப்பு இம்மூன்றும். அப்போதே மதுவிலக்கு கொள்கை காந்தியாரால் முன்னெடுத்துச் செல்லமுடியாமல் போனது.
தமிழ்நாட்டில் சட்டசபைக்கு போவதற்கு ஆவலாக இருந்த காங்கிரசின் சுயராஜ்ய கட்சியினரில் முக்கியமானவர்கள் திருவாளர் சத்தியமூர்த்தி ஐயர், கஸ்தூரிரங்க அய்யங்கார், சீனிவாச ஐயங்கார் போன்றவர்கள். அவர்களுக்கு எதிரணியில் காந்தியுடன் இருந்தவர் திரு ராஜாஜி.

ஒருகட்டத்தில் காங்கிரசில் சுயராஜ்ய கட்சியினரின் செல்வாக்கு கூடியதாலும் காந்தியடிகளும் அதனை தடுக்க இயலாதவராக ஆகிவிட்டர் என்று  ராஜாஜி திருச்செங்கொட்டில் ஒரு ஆசிரமம் அமைத்து அங்கே கதர் வளர்ச்சி, தீண்டாமை ஒழிப்பு, மதுவிலக்குப் பிரச்சாரம் போன்ற பணிகளை செய்யப் போவதாகக் கூறி ஒதுங்கிவிட்டார்.

இந்திய அளவில் சுயராஜ்ஜிய கட்சியினர் ஆங்கில அரசு கொண்டுவரும் எல்லா திட்டங்களுக்கும் முட்டுகட்டைப் போடும் விதமாக சட்டசபைக்குள் நடந்து கொண்டாலும் கவர்னரின் அதிகாரத்தால் அந்த திட்டங்கள் அமுலுக்கு வந்தன.
போகப்போக அவர்கள் அரசு திட்டங்களுக்கு ஆதரவு தரவெண்டிய சூழல் பெருகியது. மோதிலால் நேரு விட்டல்பாய் பட்டேல் போன்றவர்கள் அரசின் கமிட்டிகளில் அங்கத்தினராக ஆவதுமான அளவிற்கு ஆளாயினர்.

இந்த நிலையில் காங்கிரசார் ஒருவரை ஒருவர் தூற்றிக் கொண்டும் நீ யோக்கியமா நான் யோக்கியமா என்ற வாதத்திலும் கோஷ்டி சண்டையிலும் ஈடுபட்டு வந்தனர்.

சி ஆர் தாஸ் மறைவிற்குப் பிறகு சுயராஜ்ய கட்சியின் செல்வாக்கு குறையத் தொடங்கிய போது பெல்காமில் சரோஜினி நாயுடு அவர்கள் தலைமையில் நடந்த மாநாட்டில் ராஜாஜி அவர்கள் கலந்து கொண்டு ஒரு ஆலோசனையை வைக்கிறார்.
”சட்டசபையில் எல்லவற்றிற்கும் முட்டுகட்டை போடுவதில் பயன் இல்லை, எப்படியும் கவர்னரின் அதிகாரத்தில் திட்டங்கள் வந்து விடுகின்றன. இனி ஆக்கபூர்வமான திட்டங்களை நாமே கொண்டு வருவோம். அரசின் ஆதரவு இல்லை என்றால் அதையே ஆங்கில அரசுக்கு எதிரான ஆயுதமாக கொள்வோம் அதனால் மக்களிடம் காங்கிரசின் மதிப்பு உயரும் காங்கிரசும் வலுப்பெறும்”  என்று சொல்கிறார்.

“வெள்ளை அரசே கள்ளுக்கடையை மூடு என்று சுயராஜ்ஜிய கட்சியினர் குரல் கொடுக்க வேண்டும்..அரசு மூட முன் வராவிட்டால் அதுவே ஏழைகள் பிரச்சினை என்று அதனை அரசுக்கு எதிராக வெடிக்கச்செய்யும் சிறந்த வேட்டாக ஆக்கிக் கொள்ளலாம் என்று சொல்கிறார்.
இதை காந்தி – ராஜாஜி இருவருக்கும் பேரனான திரு ராஜ் மோகன் காந்தி  The Rajaji story என்னும் தன் நூலில் குறிப்பிடுகிறார்

At this stage C.R proposed the councils be used to further the constructive programme. Let Swarajists Members demand Prohibition, he suggested. If the Raj blocked it a lively political issue would arise. A poor man’s question like drink is the best fireworks even such as they (swarajists) want, he said to the Mahathma  

மேலும் அவர்குறிப்பிடுகிறார் அந்த ஆலோசனையை எதிர்த்தவர் திரு சத்தியமூர்த்தி அவர்கள் என்று

On behalf of Swarajists Sathyamurthy first disparaged the idea, “ swaraj is the only issue’ he said adding, “ I would rather be a member of a free nation of drunkards, than belong to a slave nation of teetotalers”…. C.R replied that a definite struggle will bring matters to a head…
சத்தியமூர்தி அவர்கள் அப்போது ”குடிகாரர்கள் இல்லாத அடிமை நாட்டில் வாழ்வதைக்காட்டிலும் குடிகாரர் இருக்கும் சுதந்திர நாட்டின் பிரஜையாக இருக்கவே விரும்புகிறேன்.. சுதந்திரம் மட்டுமே நமது இலட்சியமாகும்” என்று சொன்னதை தன் நூலில் பதிவு செய்து இருக்கிறார் திரு ராஜ் மோகன் காந்தி

மேலும் அந்த நூலில் காந்தியார் ராஜாஜியிடம் ”மது விலக்குப்பற்றி இப்படி பகிரங்கமாக சுயராஜ்ஜியக் கட்சியினரிடம் வற்புறுத்தாதீர்கள் அது அவர்களுக்கு தர்மசங்கடத்தை தரும்” என்று சொன்னதாகவும் குறிப்பிடுகிறார்.
சுயராஜ்ஜியக்கட்சிக்கு தேர்தலில் பிரச்சாரம் செய்வேன் என்று சொல்லி மதுவிலக்குக்கு ஆதரவாக சீனிவாச அய்யங்காரை சம்மதிக்கச் செய்கிறார் ராஜாஜி.

அதன் பிறகே காந்தியார் ”பரிபூரண மதுவிலக்கை அமுல் செய்” என்ற கோஷத்தை வைத்து வெள்ளை அரசுக்கு எதிராக காங்கிரசுக்காரர்களை பிரச்சாரம் செய்யச் சொல்கிறார்.

இப்படி ராஜாஜியால் சுயராஜ்ஜியக்கட்சியினர் மீது அரசியல் பேரமாக திணிக்கப்பட்ட மதுவிலக்குக் கொள்கையின் இன்னொரு அம்சம் எது தெரியுமா?

C.R’s ardour for prohibition had produced a surprising alignment with the Swarajists. The cooperation was probable also influenced by the worsening cast climate in the south. Anti- Brahmins feelings were on the increase. Championing the non-brahmins the Justice party charged the secret aim of the congress, which in the south was now led by Brahmin Swarajists, was to prolong Brahmin domination. Discreetly concurring, the Raj carried out a policy of favouring the Justice Party wherever possible.
Differing significantly from the Swarajists C.R was nonetheless glad to give the later shield against the communal acquisition – the prohibition plank which promised relief to the underdog. And he asked the public to “sink or swim” with the congress urging non-brahmins to give up ideas of separate groups

அதாவது பிராமணர் அல்லாதவர்களின் கட்சியான நீதிக்கட்சியின் குற்றச்சாட்டான ”காங்கிரஸ் பிராமணர்களின் கட்சி” என்ற பிரச்சாரத்தை எதிர்கொள்வதற்கான கேடயமாக மதுவிலக்கு கொள்கை காங்கிரசாலும் பிராமணர்களாலும் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.  இந்த உண்மையை திரு ராஜ் மோகன் காந்தி தன் நூலில் அம்பலப் படுத்துகிறார்.

மதுவிலக்குக் கொள்கை இந்தியாவில் மக்கள் நலனைக் காட்டிலும் அரசியல் ஆதாயத்திற்குதான் காந்தியார் காலத்திலேயே முன்னெடுக்கப்பட்டது என்பது மிகவும் கசப்பான உண்மை.



1 comment:

Subashnj said...

அய்யா மிக அருமையான அவசியமான கட்டுரை. நன்றி. இதுபோல தொடர்ந்து அறியாத தகவல்களை அறிய வேண்டுகிறேன். நன்றி.