Monday, December 14, 2015

பரிசு

உள்ளத்து உணர்ச்சியை உலுக்கிடும் கதை ஒன்று
சிந்திக்கும் ஆற்றல் சிறிதே பெற்ற
பள்ளி நாட்களில் பால பருவத்தில் படித்தது.
பள்ளத்தில் அமிழ்ந்து பதிந்து போன
பளபளப்பான பொன்னணி
ஏதோ எண்ணத்தில் தோண்டியபோது
கிடைத்தது போன்று நினைவுக்கு வந்தது.
அன்பினில் இருவர் இணைந்திடும் போது
இல்லற இன்பம் எத்துணை இனிது
என்பதை விளக்கும் நல்லறம் ஓதும்
நல்ல ஒரு கதை.
சொல்லுதற்கு விழைந்தேன் உங்களிடம்.
மெல்லுதற்கு இனிய தேன்பாகாய் சுவைக்கும்
அதை கேளீர்.

கதை மாந்தர் இருவர்.
கருத்தொருமித்த காதலர்.
கணவன் மனைவி ஆகினர்.
வாழ்க்கைப் பயணத்தில் இணைபிரியா இணையர்.
வறுமைப் பிடியில் வதங்கிற்று அவர் வாழ்வு.
சிறுமதி கொண்டு செயல்பட்டார் இல்லை.
பெருமைபட வாழ்ந்தனர்.
மாற்றார் பொறாமைப்பட வாழ்ந்தனர்.

மணம் முடித்து ஓராண்டு ஆனது.
காதல் மனையாளை கைபிடித்த நாளில்
கனமான பரிசொன்று தரவேண்டுமென்று
கணவன் விரும்பினான்.

தோதான துணைவன் தோள்பற்றிய நாளில்
ஏதேனும் பரிசு வழங்க வேண்டுமென
அவளும் எண்ணினாள்.

மனம் கொள்ளா ஆசை.
இருவருக்கும் இனம் புரியாத உணர்வுகள்.
என்ன செய்வது. எப்படி வாங்குவது பரிசு.

ஏக்கத்துடனே எழுந்து போனான்.
பணம் இல்லை பையில்.
ஒன்றுமில்லையே கையில்
என்று எண்ணியபொது
மின்னியது மணிக்கட்டில்
உருமாறிப் போன தோல்பட்டையுடன்
பெறுமானமிக்க கைக்கடிகாரம்.
பழையப் பொருள் கடையில்
பாதி விலைக்கு விற்றான்.
பரிசுப் பொருள் ஒன்றை
கரிசனத்துடன் வாங்கினான்.

அவளும் அப்படியே
என் செய்வேன் எது செய்வேன்
என்று எண்ணியபடியே
கடைவீதி போனாள்.
கடன் தருவார் யாராவது
கிடைப்பாரா என்று கலங்கியபடியே.  
கண்ணில் பட்டது கடை ஒன்று.
சவுரிமுடி கட்டி விற்கும் கடை அது.
மின்னலாய் உதித்தது
அவள் உள்ளத்தில் ஒரு உபாயம்.
கரிய வண்ணத்தில் பின்னலுடன்
தொங்கிய அவள் கூந்தலை
உரிய விலைக்கு வெட்டி விற்றாள்.
வெகுமானம் வாங்கினாள் வீட்டுக்காரனுக்கு.
வீடு திரும்பினாள் வெற்றிக் களிப்புடன்.

மாலை வந்தது.
மணாளனும் வந்தான்.
பரிசுப் பொருளைப் பரிமாறிக் கொண்டனர்.

அவன் வாங்கியது
பொன்னில் செய்த கொண்டை ஊசி.
கோலமயில் கார்குழலை கோதி
கொண்டையிட்டு சொறுகுதற்கு

அவள் வாங்கியதோ
தங்கத்தாலான கடிகாரப்பட்டை.
நைந்துபோன தோல்பட்டையை மாற்றுதற்கு.

கொண்டையிட கூந்தல் இல்லை அவளுக்கு.
பட்டைமாற்ற கடிகாரம் இல்லை அவனுக்கு

அன்பு வெள்ளம் அணைபோட முடியாமல்
இருவருக்கும்
கண்ணீர் திரண்டது கன்னத்தில் உருண்டது

(O Henry என்னும் புகழ்பெற்ற அமெரிக்க எழுத்தாளர் எழுதிய சிறுகதையின் தழுவல். பள்ளியில் ஆங்கிலத் துணைப்பாட நூலில் படித்தது) 

1 comment: