Monday, December 21, 2015

தீர்கதரிசி - அன்பைப் பற்றி (2)

தீர்கதரிசி - அன்பைப் பற்றி
அல்மித்ரா சொன்னாள்
அன்பைப் பற்றி பேசுங்கள் என்று.
அவர் தலை நிமிர்த்தி
அமைதியில் ஆழ்ந்திருந்த மக்களைப் பார்த்தார்
உரத்த குரலில் உரைத்தார்:

அன்பின் வழிகள் கடினமாகவும் நெட்டாகவும் இருக்கும்
என்றாலும் அதன் சைகைகளைப் பின்பற்றுங்கள்

அன்பின் சிறகுகள் அரவணைக்கும் போது
இறகுகளுக்கு இடையே மறைந்திருக்கும் கத்தி குத்தும்
ஆயினும் அதற்குள் அடைக்கலம் ஆகுவீர்.

வாடைக் காற்றில் தோட்டம் பாழாவது போல்
உம் கனவுகளைச் சிதைக்கும் இருந்தாலும்
அன்பு உம்மிடம் பேசும்போது அதனை நம்புவீர்

அன்பு உங்கள் தலையில் மகுடம் சூட்டினாலும்
சிலுவையில் அறையப் படுவது போல் இருக்கும். 
அதுவும் கூட உங்களை சீரமைத்து
 உங்கள் மேன்மைக்கு வழிகோலும்.”

அன்பு உங்கள் உச்சியில் ஏறி
வெய்யிலில் வதங்கும் இளைய கிளைகளை வருடும்
அதைப்போலவே வேர்களில் இறங்கி
அதன் பூமியின் பற்றுதலை அசைக்கும்.”

சோளதானியக் கதிர்களைப் போல்
உங்களை அன்பு தன்னிடத்தில் குவித்துக் கொள்ளும்.
பின்பு கதிர் அடித்து அம்மணம் ஆக்கும்.
உமியிலிருந்து பிரித்து எடுக்கும்.
வெண்ணிறமாக தீட்டும்.
பணியும் வரை  பிசைந்தெடுக்கும்.
அதன் பிறகு இறைவனின் நித்தியப் படையலுக்கு
புனிதத் தீயிலிட்டு பிரசாதமாக சமைக்கும்.”

நீங்கள் உங்கள் இதயத்தின் இரகசியத்தை அறியும் வரை,
அறிவு வாழ்க்கையெனும் இதயத்தின் பாகமாக ஆகும் வரை,
அன்பு உங்களிடம் இவைகளை செய்து கொண்டிருக்கும்.

ஆனால் ஒருவேளை இதற்கு அச்சப்பட்டு
அன்பிடத்தில் அமைதியும் ஆனந்தத்தையும் எதிர்பார்த்தால்
நேரம்காலம் இல்லாத உலகிற்கு
கண்ணீர் இல்லாத அழுகையும்
மகிழ்வு இல்லாத சிரிப்பையும் நோக்கி
உங்கள்  அம்மணத்தை  மூடிக்கொண்டு
கதிரடிக்கும் களத்தை விட்டு வெளியேறுங்கள்.”
.
அன்பு அன்பைதான் தரும் பெரும்.
அன்பு அன்புக்கு போதுமானது.
அன்பு அடக்கவோ அடங்கவோ செய்யாது

அன்பு காட்டும் போது
இறைவன் என் இதயத்தில் இருக்கிறான்என்று சொல்லாமல்
இறைவன் இதயத்தில் நான் இருக்கிறேன்என்று சொல்லுங்கள்

அன்பை வழி நடத்த முடியும் என எண்ணாதீர்
நீங்கள் தகுதி மிக்கவரானால்  
அன்பே உங்களை வழி நடத்தும்.”

அன்புக்கு தன்னைத்தானே நிறைவேற்றிக் கொள்வதைத் தவிர
வேறு ஆசை கிடையாது - .ஆனால்
அன்பு காட்டும் போது நிச்சயம் இச்சை தேவைதான்.
அது உங்களுடையதாக இருக்கட்டும்.
இரவில் இன்னிசைக்கும் சிற்றோடையாக
அந்த விருப்பம் உருகி கனிவாக ஓடட்டும்

கூடுதல் கனிவின் வலியை அறிவதற்கு
அன்பின் புரிதலால் அடிபட்டு
ஆர்வத்துடன் ஆனந்தத்துடன் இரத்தம் சிந்துங்கள்.”

இன்னொரு அன்பான நாளுக்கு நன்றி சொல்ல
விடியலில் இறக்கை கட்டிய இதயத்துடன் விழித்து எழுமின்.
நண்பகலில் ஓய்வெடுத்து அன்புக் களிப்பில் தியானிப்பீர்.
அலைச்சலான மாலை நேரத்தில் நன்றியுணர்வுடன் வீடு திரும்புவீர்.
இரவில் அன்பரை உதட்டால் போற்றிப் பாடுவீர்,

உள்ளத்தில் அவருக்கானப் பிராத்தனையுடன் உறங்குவீர்.”

No comments: