Saturday, November 5, 2022

சடங்குகள் என்றால் என்ன ?

 சடங்குகள் என்றால் என்ன ?

சடங்குகள் வெவ்வேறு முறையில் வெவ்வேறு பகுதிகளில் நடத்தப்படுகின்றன. பொதுவாக சடங்குகளின் நோக்கம் நம்மை உற்சாகப்படுத்திக் கொள்வதற்கான சில அடையாளங்கள். மகிழ்வான மங்கலமான நிகழ்வாக திருமணம் நடைபெறவேண்டும் எனற்ற நோக்கத்தில் சடங்குகள் உருவானதாக கருதலாம். திருமணத்தின் போது 'நலங்கு' என்கிற பெயரில் மஞ்சள் தேய்த்து, எண்ணெய் வைத்துக் குளிப்பது, மருதாணி வைப்பது என பலவிதமான வழக்கங்கள் உண்டு. இவையெல்லாம் உடல் ஆரோக்கியத்தை மையப்படுத்தியே உருவாக்கப்பட்டவை என்பார்கள். ஆனால் இக்காலத்தில் இப்படி செய்யும் போது சிலருக்கு ஒவ்வாமை ஆகி உடல்நலம் குன்றிப் போகும் நிலைமை உருவாவதையும் காண்கிறோம்.

இது போன்ற சடங்குகளில் அறிவியல் பூர்வமான ஏதோவொரு காரணம் இருக்கும் என்ற மன உணர்வில் பூரித்துப் போகலாமே தவிர இக்கால கட்டத்தில் அவைகளால் பெரிய பயன் எதுவும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆனாலும் உடல் தவிர, மனதளவிலும் இவை எல்லாம் உங்களை 'ஸ்பெஷல்ஆக உணர வைக்கும். அந்தப் பூரிப்பே அழகைக் கூட்டும். இதை உணர்ந்து, அவற்றை ஒதுக்காமல் மகிழ்ச்சியாக  ஏற்றுக் கொள்ளலாம்.

திருமணச் சடங்குகலில் நலங்கு போன்று பல்வேறு சடங்குகள் திருமணம் உறுதி செய்த நாள் முதல் நடத்தப் படுகின்றன. அவைகள் நாடு மாதம் சாதி இனம் என்பதன் அடிப்படையில் வேறுபடுகிறது. ஒரே சாதியனர் வேவேறு பகுதிகளில் வசிப்பவர் ஒரே வகையான சடநகையோ சாம்பிராதாயத்தையோ கடைப் பிடிப்பதில்லை.

 

தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் வசிக்கும் சில சாதியினருக்கு வட மாவட்டங்களில் வசிக்கும் அதே சாதியினருக்கும் இடையில்  ஒரு பெருத்த வேறுபாடு திருமணங்களில் காணப்படுகிறது. வடமாவட்டங்களில் மணமகள் வீட்டில் திருமணம் செய்வதும் தென் மாவட்டங்களில் மணமகன் வீட்டில் திருமணம் செய்வதும் வழக்கமாக இருக்கிறது.

 

ஒவ்வொரு சடங்குகளிலும் ஏதோ ஒரு சிறு வேறுபாடாவது இருப்பதைக் காணமுடியும். திருமணம் மட்டும் அல்லாமல் எல்லா மனைவினை நிகழ்வுகளிலும் இதைக் காணலாம். பிறப்பு முதல் இறப்புவரையிலான சடங்குகள் எல்லாம்  ஊருக்கு ஊர் தெருவுக்குத் தெரு மாறுபடுவதையும் எதிலும் ஒத்திசைந்தத் தரம் இல்லை என்பதையும் ஒப்புக் கொள்ள வேண்டியிருக்கிறது.

 

அதே நேரத்தில் தொல்காப்பியர் குறிப்பிட்ட அறிஞர்கள் யாத்த கரணம் என்னும் சடங்கின்  தேவையைக் கருதி அதை எவ்விதம் செயல்படுத்த வேண்டும் என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

 

முதலில் நாம் ஒன்றை முடிவு செய்துக் கொள்வது நல்லது, சடங்குகள் எதுவானாலும் அவை அறிவுக்கு ஏற்றதாக பொருளும் காலமும் கருதி வீண் விரயம் அற்றதாக இருக்க வேண்டும். இப்படிதான் செய்யவேண்டும் என்ற கடின மனப்பாங்கு இல்லாமல் இருந்தால்தான் இதைச் செயல் படுத்த முடியும்.

 

திருமண நிகழ்வில் குறிப்பாக பெற்றோர் பார்த்து முடித்து வைக்கும் திருமணங்களில் ஒவ்வொரு நிகழ்விற்கும் துணிமணி ஆடை அணிகலம் வாங்குவதற்கும்  அழைப்பிதழ் அச்சடிக்கக் கொடுப்பதிலும் கூட நல்ல நாள் நல்ல நேரம் என்று கணித்துச் செயல்படுவதைப் பார்க்க முடிக்கிறது. இவைகள் சமூகத்தில் பொதுபுத்தியில் படிந்துவிட்ட கறை எனலாம். இது தன்னம்பிக்கை இல்லாத தளர்ந்த மனம் கொண்டவர்கள் தன் நினைவின்றி செய்வதாகும். 

 

நல்ல காரியங்கள் செய்யும் போது “நல்ல நேரம்” என முன்னோர் கணிக்கத் தொடங்கியது ஏன் என்று கேட்கலாம்.  நல்லவை சிறப்பாக, நன்மையாக நடைபெற வேண்டும் என்றால் நல்ல நேரம் பார்க்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் இவை தொடங்கினாலும் நடைமுறையில் இப்படிப் பார்த்து செய்த காரியங்கள் யாவும் நல்லதாகவே அமைந்தன என்று யாராலும் அறுதியிட்டுக் கூற முடியாது.

 

நாள் என் செய்யும் வினை தான் என் செய்யும்
எனை நாடி வந்தகோள் என் செயும் கொடும்
கூற்று என் செயும் குமரேசன் இரு தாளும்
சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும்
தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே”

என்கிற அருணகிரிநாதரின் கந்தர் அலங்கார வரிகள் கூறும் கருத்து என்ன?

 

குமரக்கடவுள் நம் முன்னே வந்தால் நாள் நட்சத்திரம் எதுவும் ஒன்றும் செய்யாது என்கிறார். ஆறுமுகன்  ஆதரவு இருந்தால் போதும் நல்லநேரம் கணிக்காமல் எதையும் செய்யலாம் என்கிறார். அழைப்பிதழில் முருகன் துணை என முகப்பிலேயே எழுதி, மணமுடித்து மணமக்களை  வாழ்த்தும் போதும் வழியனுப்பி வைக்கும் போதும்  முருகன் துணை சொல்லி முடித்து வைத்தத் திருமணங்கள் எல்லாமே நறுமணம் வீசும் வாழ்க்கைப் பூங்காவாகி விட்டனவா? 

 

இல்லையே. அப்படியிருக்க இந்த நாள் நட்சத்திரம் நல்ல நாள் கேட்ட நாள் என்று எதையும் சட்டை செய்யாமல் நமக்கு வசதியான இடம் காலம் நேரம் இவைகளைக் கருத்தில் கொண்டு நம்முடைய மனைவினை நிகழ்வுகள் எதுவாகிணும் நாமே முடிவு செய்து நடத்திட வேண்டும். இதில் பிறருடைய தலையீடு எதுவும் இல்லாமல் தொடர்புடையவர்கள் மட்டும் ஒத்தக் கருத்துடன் தீர்மானித்து செயல்படுத்துவதே சிறந்ததாகும். இது எல்லா மதத்தவர்களுக்கும் சாதியினருக்கும் பொதுவாகக் கூறப்பட்டது.

 


No comments: