Saturday, November 5, 2022

தமிழர் வாழ்வில் திருமணம்

 


தொல்காப்பியர் திருமண வினையை இவ்வாறு குறிப்பிடுவார்.

 

பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்

ஐயர் யாத்தனர் கரணம் என்ப                                     (கற்பியல்,4)

 

துவக்க காலத்தில் ஒரு ஆணும் பெண்ணும் இணைந்து வாழும் இயல்பு முறைதான் இருந்தது. ஒரு ஆணும் பெண்ணும் கூடி வாழும்  வாழ்க்கையில் அதற்கு யாதொரு சான்றும் இல்லாத போழ்து சில வேளைகளில் சிலர் பொய்சொல்லி அவ்வாழ்க்கையை விட்டு வழுவினர். நான் இவரை  அறிந்ததில்லை என்று சொல்லி காதல் மணம் கொண்டவரை கைவிடும் பழக்கம் எல்லோரிடமும் பரவாதிருப்பதற்காக பலர் அறியத் திருமணம் நடத்தும் வழக்கம் வந்திருக்கிறது. அதனால் திருமண முறை உருவாயிற்று. அதனை மதிப்புமிக்க சான்றோர் உருவாக்கினர் என்பது இதன் பொருள்.

 

கரணம் யாத்த அய்யர் என்பதன் பொருள் கரணம் என்னும் தலைகீழ் நிலையான ஒரு வினைமுறை அல்லது சடங்கை  அய்யர் என்னும் சான்றோர் இயற்றினார் என்பதாகும். கரணம் என்பது வதுவைச் சடங்கு என்று இளம்பூரணர் பொருள் கூறியுள்ளார். இக்காலத்தில் கரணம் என்பதற்க்கு தொழில், கருவி, எண் என்பதாகவும் இன்னும்  பல பொருள்கள் கூறப்படினும் தொல்காப்பியர் திருமணச் சடங்கு என்னும் பொருளிலேயே குறிப்பிட்டு உள்ளார் என்பது உறுதிபட விளங்கும். 


தமிழர் வாழ்வில் திருமணம்

தமிழர் வாழ்வில் நடந்த நிகழ்வுகளை நாம் சங்க இலக்கிய நூல்களில் இருந்து அறியலாம். குறிப்பாக தமிழரின் திருமண முறைகளைப் பற்றி ஆராய்ந்து நோக்கினால் பல அறிய கருத்துக்களை நாம் அறிய முடியும். தொல்காப்பியம் தமிழ் மொழியின் தமிழரின் பண்புகளை எடுத்துக் காட்டும் காலக் கண்ணாடியாக விளங்குகிறது, அது வெறும் மொழி இலக்கண நூலாக மட்டுமின்றி வாழ்வியல் கருத்துக்களை பதிப்பிக்கும் கருத்தாழம் கொண்ட தகவல் களஞ்சியமாகவும் விளங்குகிறது. அதே போன்று பல்வேறு காலக் கட்டத்தில் எழுதப்பட்ட பல பாடலாகளின் தொகுப்பாகத் திகழும் சங்க இலக்கியப்பாடல்கள் மூலமாக தமிழரின் அக்கால வாழ்வியல் நடைமுறைகளை நாம் அறியலாம். தொல்காப்பியம் வாழ்வின் இலக்கணத்தை களவியல் கற்பியல் என வகுத்துக் காட்டியது. மானிட வாழ்க்கையை அகம் என்றும் புறம் என்றும் பிரித்து நோக்கியது.

 

பழந்தமிழ் இலக்கியங்களில் திருமணம் என்ற சொல் இருப்பதாக அறிய முடியவில்லை. மணம், மன்றல்,   வரைவு என்றும் மகட்க்கொடை, உடன்போக்கு, வதுவை என்ற சொற்களும் திருமணத்தைக் குறிக்கப் பயன்பாட்டிருக்கிறது. இவைகளின் பொருளை பொருளை நுட்பமாக ஆய்ந்தால் உண்மை உட்பொருள் தெள்ளென விளங்கும். மணம் என்னும் சொல்லின் பொருள் நறுநாற்றம் , வாசனை,  மதிப்பு, மாண்பு, கூடுதல் என  அகராதியில் காணக்கிடைக்கின்றன. வாழ்வில் ஆண் பெண் இணையும் வகையினை மணம் என்னும் பொருளில் மதிப்புக் கூட்டி திரு சேர்த்து திருமணம் என்று நாம் அழைப்பது வழக்கில் வந்திருக்கிறது. அது போலவே  அளவு , எழுதுதல் என்ற பொருள்படும் வரைவு என்னும் சொல்லும் திருமணத்திற்கு எப்படிப் பொருந்தும் என்பதை விளக்க வேண்டியதில்லை. ஆண் பெண் இருவரும் இல்லறத்தில் இணையும் நிகழ்வை வரையரை செய்வதால் வரைவு எனப்பட்டது. மன்றல்  என்பதும்  அம்பலம், வெளி, நெடுந்தெரு என்கிற பொருளில் அணுகினால் திருமணம் அம்பலத்தில் திறந்த வெளியில் அனைவரும் காணும் வகையில் நடத்தப்படுதல் என்று கொள்ளலாம்.

 

உடன்போக்கு என்பது பெற்றவர்கள் அறியாமல் ஆணும் பெண்ணும் சென்று இல்லறம் தொடர்தல். இது களவியல்  எனப்படுகிறது. காதல் என்னும் அன்பு வயப்படுபவர் கள்ளத்தனமாக இவ்விதம் செய்வதற்குக் காரணம் பெற்றோர் சம்மதம் இல்லாது ஊரறிய திருமணம் செய்யும் வாய்ப்பு மறுக்கப்படும் போது அல்லது மறுக்கப்படும் என அஞ்சிடும் போது அவர்கள் மேற்கொள்ளும் முறையாகும்.      

 

மகட்கொடை என்னும் சொல்லும் அதன் வழக்கமும் பிற்காலத்தில்  உருவாகி இருக்க வேண்டும். பெண்வீட்டார் மகளைப் பெற்றவர் தன் மகளை தானமாகக் கொடுக்கும் பொருள்படும் இச்சொல்

        கற்பெனப் படுவது கரணமொடு புணர

கொளர்க்குரி  மரபிற்  கிழவன் கிழத்தியை

கொடைக்குரி  மரபிபினோர்  கொடுப்பக் கொள்வதுவே

என்று தொல்காப்பிய கற்பியல் முதலாம் சூத்திரம் சொல்லும் முறையே மகட்கொடை எனலாம்.

 

இதையே தற்காலத்தில் திருமணத்தின் போது பெண்களுக்கு வழங்கும் சீதனம் அல்லது வரதட்சணை என்பதாகக் குறிப்பிடுகிறார்கள். பெண்ணை பொருளாகக் கருதி தந்தை தன் மகளை வேறு ஆணுக்கு கூடி வாழ்க எனக் கொடுப்பதும்; மகளோடு பொருளும் சேர்த்துக் கொடுப்பதும்தான் மகட்கொடை என்றும் கன்யாதானம் என்றும் சொல்வதானால் அந்த சொற்களை  நாம் பயன்படுத்தல் சரியல்ல.

 

ஒரு ஆணும் பெண்ணும் இயற்கையான உணர்வின் உந்துதலால் ஈர்க்கப்பட்டு அன்பு காட்டி காதலுறுவது களவுநிலை எனலாம். இந்நிலையை மற்றவரும் அறியச்  செய்து இருவரும் அனைவரின் சம்மதத்துடன் வாழ்வில் இணைவது கற்புநிலை ஆகும். களவுநிலை கற்புநிலைக்கு மாறும் நிலை வாய்க்காத போது சிலர் உடன்போக்கு மேற்கொண்டாலும் அவர்கள் கற்புநிலை நெறிகளைக் கடைப் பிடித்தல் வேண்டும். பலரும் அறியாமல் களவில் இன்பம் காணுதல் தனிமனிதச் சுதந்திரமாகக் கருதப் பட்டாலும் சமூகக் கட்டுக்கோப்பையும் ஒழுங்கையும் குலைத்துவிடும். ஆதலால் அந்தந்த நாட்டின் சட்டதிட்டங்களுக்கு ஏற்ப சமூக ஒழுங்கைக் காத்திடும் வகையில் திருமண நடைமுறைகள் இருத்தல் வேண்டும். ஒரு பெண்ணும் ஆணும் பலரறிய திருமணம்  புரிந்து இணையாய் இன்பமாய் ஒன்றி வாழும் பண்பட்ட வாழ்வியலை வதுவை என்ற சொல் விளக்குகிறது. வதிதல் என்றால் தங்குதல் எனப்படும். வதுவை என்றால் நறுமணம் – வாசனை என்றும் பொருள்படும். ஆதலின் மணம் என்றால் மயக்கம் தரும் வாசனை உணர்வுடன் மனம் ஒன்றி வாழும் முறை எனக் கொள்வது சிறப்பாகும்.

 

மேலும் தற்காலம் பெரும்பாலும் ஆரியப் பண்பாட்டிற்குரிய சடங்குகள் நிறைந்த   திருமணங்கள் நடைபெறுதல் மலிந்துவிட்டன. ஆனால் சங்க காலத்தில் தமிழரால் தனிப்பட்ட முறையில் ஆரியப் பண்பாட்டுத் தாக்கம் இன்றி திருமணங்கள் நடைப் பெற்றதை அகநானூறு 86 ஆம் 136 ஆம் செய்யுள்கள் தெரிவிக்கின்றன. திருமணம் காலை நேரத்தில் மலரால்  அலங்கரிக்கப்பட்ட மணல் பரப்பிய மன்றில் முரசம் முழங்கி வாழ்த்த வந்தவர்க்கு உணவு அளித்து மணப்பெண்ணை அலங்கரித்து மேடையில் அமர்த்தி முதுபெண்டிர் நடத்திய திருமணத்தை விவரிக்கின்றன இவ்விரு பாடல்களும்.

 

மிகவும் எளிமையான சடங்குகளுடன் நடைப்பெற்ற தமிழர் திருமணம் நாளடைவில் வேற்றார் முறையை வேதியர் வகுத்த வீணான சடங்குகள் பலவற்றை மேற்கொண்டு நடைபெறலாயின. மகளிர் நடத்திய திருமணம் மறையோர் நடத்தும் படி நேரிட்டது. இத்தகைய நடைமுறைகளால் இயற்கையான நிலை மாறி ஏதும் புரியாத சடங்குகள் சாத்திரத்தின் பெயரால் சமசுகிருத மொழியில் நடைபெறுவது தமிழரின் தரத்திற்கு ஒவ்வாதது என்பதை உணர்தல் வேண்டும். புரோகிதப் பார்ப்பனர் நடத்தும் திருமணத்தில் உச்சரிக்கும் மந்திரங்களின் பொருள் இன்னதென்று மணமக்களும் அவர்தம் உறவினரும் உய்த்து உணரும் படி இல்லாமல் சமாசுகிருதத்தில் இருப்பதை மறுத்து தாய் மொழியாம் தமிழில் மந்திரங்கள் முழங்கியோ உரைநடை பதத்தில் உறுதிமொழி ஏற்றோ நடத்துவதே சாலச் சிறந்தது என சான்றோர் பலர் சாற்றிச் சென்றனர்.

 

அதன்படிக்கை  பல்வேறு வகை புதியத்  திருமண முறைகள் உருவாகின. அவைகளில் பொதுவாகப் பின்பற்றும் ஒரு அம்சம் புரோகித மறுப்பும் சமசுகிருத எதிர்ப்பும் ஆகும். அதாவது பார்ப்பனர் மூலமாக சமசுகிருத மந்திரங்கள் சொல்லி நடை பெறுவது தவிர்க்கப்படுகிறது. பார்ப்பனப் புரோகிதமில்லாத – பொருளற்ற தேவையற்ற சடங்குகள் இல்லாதஓரே நாளில் ஓரிரு மணிக்குள்  நடைபெறக்கூடியவீண்செலவு இல்லாத திருமணம் சிறப்பானது, இத்தகையத் திருமணங்கள் சீர்திருத்தத் திருமணங்கக்கள் என்று அழைக்கப்படுகின்றன. திராவிட கொள்கையில் பற்று கொண்டோர் சீர்திருத்த எண்ணம் கொண்டோர் முற்போக்குச் சிந்தனையாளர்கள் இத்தகைய திருமணங்களை பல்வேறு வகையில் தங்கள் எண்ணத்திற்கு ஏற்ப ஆதரித்தும் நடத்தியும் வைக்கின்றனர்

No comments: