Saturday, November 5, 2022

அயலவர் பழக்க வழக்கங்கள் பரவியது எப்படி?

 

அயலவர் பழக்க வழக்கங்கள் பரவியது எப்படி?

இக்காலத்தில் நம் கண் எதிரில் நடைபெற்ற சில மாற்றங்கள் மூலமாக இதை எளிதில் புரிந்து கொள்ளலாம். திருமண நிகழ்ச்சிகளில் மெகந்தி என்னும் மருதாணி வரைதல்  மற்றும் ஹல்தி என்னும் மஞ்சள் பூசுதல் போன்ற கொண்டாட்டங்கள் இப்போது தமிழ் நாட்டில் பரவி வருகின்றன. இவைகள் திரைப்படங்கள் மூலமாகவும் திரைப்பட நட்சத்திரங்கள் மூலமாகவும் பிரபல்யம் ஆகி மக்களிடம் ஒருவகையான மனமயக்கத்தை உண்டாக்கி இவைகளை நாமும் செய்வோம் என்று கொண்டாடத் துவங்கிவிட்டார்கள். உணவு முறையில் அரிசி சோறுக்கு பதிலாக கோதுமை பண்டம் வந்ததையும், விழாக்களில் பாரம்பரிய இனிப்பு வகைகள் இல்லாமல் பல்வேறு வகையான இனிப்புகள் பரிமாறப்படுவதையும், பார்க்கிறோம். இத்தகைய உணவுப் பொருள்கள் நம் வீட்டு விழாக்களில் ஒன்றாகி போய்விட்டது. நலுங்கு என்று சொல்லப்படும் சடங்கு நிகழ்வுடன் இதைப பொருத்தி ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு மக்கள் தள்ளப்படுகின்றனர். இவை குறித்து இப்போது சிலர் விமர்சனம் வைத்தாலும் நாளடைவில் இயல்பாகி இவைகளும்  நம்முடைய பாரம்பரிய வழக்கம் போன்று ஆகிவிடும்.

 

எடுத்துக்காட்டிற்குதான் இவைகள் குறிப்பிடப்பட்டன. இவற்றால் பெரிய அளவில் கலாச்சார சீரழிவு இல்லை என்றாலும் ஒருசிலரின் தன்னல நோக்கில் வணிக மேம்பாட்டிற்காக இத்தகைய நிகழ்வுகள் நடத்தப்படுவதை நாம் அறிவதில்லை.

 

இப்படியாகத்தான் பல்வேறு பழக்க வழக்கங்கள் கலையிலும் பண்பாட்டிலும் வழிபாட்டு முறைகளிலும் இல்லத்தில் நடைபெறும் திருமணம் , புதுமனை புகல் குழந்தைப் பிறப்பு , பெயர் சூட்டல், போன்ற நற்காரியங்களிலும் ஒருவரின்  மறைவுவுக்குப் பின் நடைபெறும் உடல் அடக்கம் / எரியூட்டல்  அது தொடர்ந்து  காரியம் , திதி போன்ற நிகழ்ச்சிகளில் கால ஓட்டத்தில்  பல்வேறு வகையான மாற்றங்கள் நடைபெற்று வருவதை காணலாம்.

 

அதில் நாம் கவனிக்க வேண்டிய அம்சம் என்னவென்றால் எந்த ஒரு செயலும் நம்முடைய பொருளாதார செலவினங்களுக்கு உட்பட்டு இருக்கிறதா என்பதை முதலில் பார்க்க வேண்டும். அடுத்து அத்தகைய செயல்கள் வெறும் நம்பிக்கை மற்றும் பழக்க வழக்கங்களின் அடிப்படையில் இல்லாமல் அறிவு ஆக்கம் முற்போக்கு எண்ணங்களின் அடிப்படையில்  அமைந்திருக்க வேண்டும் அந்த அடிப்படையில் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் மாற்றங்களை நாம் ஏற்றுக் கொள்வதில் தவரில்லை.

 

No comments: