Saturday, November 5, 2022

அந்தணர் குருக்கள் பார்ப்பனர் என்பவர் யாவர் ?

 

அந்தணர்  என்பவர் யார் ?

அந்தணர் என்பதும் தூயத் தமிழ்ச் சொல்லே. திருவள்ளுவர்

 

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்

செந்தண்மை பூண்டொழுக லான்

                                [அறத்துப்பால், குறள்30, நீத்தார் பெருமை]

என்று குறிப்பிடுவார். இதன் பொருள் படித்ததுமே தெற்றென விளங்கும். அந்தணர் என்பவர்கள் அறச்செயலில் ஈடுபடும் அறவோர்  அவர்கள் எந்த உயிர்களுக்கும் தீங்கு செய்யாமல் செந்தண்மை என்னும் சீரிய  அருள்நெறியை மேற்கொண்டு ஒழுகி வருபவர்கள் ஆவர் என்பது இதன் பொருள்.

 

வள்ளுவர் அந்தணரின் அறச்செயல்களில் குறிப்பிடத்தக்கது என்று இக்குறளில் கூறுவது எந்த உயிர்களுக்கும் தீங்கு செய்யாத குணம். இப்படி  கூறுவதில் நுட்பமான செய்தி ஒன்று உண்டு என்று கருதுகிறேன்.

 

ஆடுகளை மாடுகளை குதிரைகளை வெட்டி பிண மேடுகளாய் வேள்விக்கென செய்தவர்களையும் அந்தணர் என்று சொல்லுவது தகாது என்னும் நோக்கில் உயிர்வதை செய்யா உத்தமர்களைதான் அறவோர் என்றும் அந்தணர் என்றும் கூற வேண்டும் என்பது அவர் கருத்தாக கொள்ளவேண்டும். இதையே அவர் இன்னொரு இடத்திலும் உறுதி செய்வதையும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

 

அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்

உயிர்செகுத் துண்ணாமை நன்று.   (குறள் 259  புலான்மறுத்தல்)

ஆயிரம் வேள்விகளை செய்து கிடைக்கும் புண்ணியத்தை விட உயிரை கொன்று புலால் சாப்பிடாதது நல்ல புண்ணியம்  தரும். வேள்வி என்பதும் யாகம் என்பதும் இறைவனிடம் வேண்டி நெருப்பிலே  நெய் முதலிய அவிப் பொருட்களை இட்டு செய்வதாக இன்றைக்கு நாம் காண்கிறோம். அது நமக்கு உயரிய பயனை அளிக்கும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் வேள்வியில் அக்காலத்தில் ஆடு மாடு போன்ற விலங்குகளை இட்டுப் பொசுக்கி உண்டார்கள் என்பதற்கு பல்வேறு இலக்கியச் சான்றுகள் உள்ளன. 

ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலையில்

        அப்பதி தன்னுள்ஓர் அந்தணன் மனைவயின்

        புக்கோன் ஆங்குப் புலைசூழ் வேள்வியில்

        குரூஉத்தொடை மாலை கோட்டிடைச் சுற்றி

        வெரூஉப்பகை அஞ்சி வெய்துயிர்த்துப் புலம்பிக்

        கொலைநவில் வேட்டுவர் கொடுமரம் அஞ்சி

        வலையிடைப் பட்ட மானே போன்றுஆங்கு

        அஞ்சிநின்று அழைக்கும் ஆத்துயர் கண்டு

 

இப்பாடல் வரிகளில் புலைசூழ் வேள்விஎன்கிற சொல்லின் விளக்கத்தை நாம் பெறமுடியும். விலங்குகளைப் பலி கொடுப்பதால் குருதியும் இறைச்சியும் தெறித்து இருக்கும் தூய்மையற்ற வேள்விச் சாலை என்று பொருள்படும் வகையில் அமைந்த இந்த பாடல் மட்டும் அல்லாது வேறு பல இலக்கியச் சான்றுகள் தமிழ் இலக்கியங்களில் மட்டும் அல்லாது வடமொழி இலக்கியங்களிலும் விரவிக் கிடப்பதை அறியலாம்.

 

அதை வடமொழி வல்லார் மறைந்த காஞ்சி பெரியவாள் எழுதிய தெய்வத்தின் குரல் இரண்டாம் பாகத்தில் குறிப்பிடுவதிலிருந்தும்  அறியலாம்.. தெய்வத்தின் குரல் இரண்டாம் பாகத்தில் காஞ்சிப் பெரியவர் இவ்வாறு கூறுகிறார்:

 

        ஒருத்தன் செய்ய வேண்டியதாக 21 யக்ஞங்கள் விதிக்கப்        பட்டிருக்கின்றன. பாக யக்ஞம், ஹவிர் யக்ஞம், ஸோம யக்ஞம் என்று மூன்று விதமான யக்ஞங்களில், ஒவ்வொன்றிலும் ஏழு வீதம்    மொத்தம் 21 சொல்லியிருக்கிறது. இவற்றிலும் பாக யக்ஞம் ஏழிலும் பசு பலி இல்லை. ஹவிர் யக்ஞங்களிலும் முதல் ஐந்தில் பசுபலி         இல்லை. நிரூட பசுபந்தம் எனற ஆறாவது யக்ஞத்திலிருந்துதான்       பசுபலி ஆரம்பிக்கிறது. பிராம்மணர்கள் செய்வதில் மிகவும்      உயர்ந்ததான வாஜபேயத்துக்கும் 23 பசுக்களே சொல்லப்படுகின்றன.         சக்ரவர்த்திகளே செய்கிற மிகப் பெரிய அச்வமேதத்துக்குக்கூட 100        பசுக்கள்தான் சொல்லியிருக்கிறது.

 

யாகத்தில் சொரியப்படும் அவிசு யாகம் செய்தவர்களால் உண்ணப்பட்டதை காஞ்சிப் பெரியவாள் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்:

 

ஒரு பசுவின் இன்னின்ன அங்கத்திலிருந்து மட்டுமே இத்தனை அளவுதான் மாம்ஸம் எடுக்கலாம். அதில் இடாவதரணம் என்பதாக       ரித்விக்குகள் இவ்வளவுதான் புஜிக்க வேண்டும் என்பதற்கெல்லாம்        சட்டம் உண்டு. அது துவரம் பருப்பளவுக்குக் கொஞ்சம் அதிகம்       தானிருக்கும். இதிலும் உப்போ, புளிப்போ, காரமோ, தித்திப்போ சேர்க்காமல், ருசி பார்க்காமல் அப்படியே முழுங்கத்தான் வேண்டும். ஆகையால், வேறு என்ன காரணம் சொல்லி யக்ஞத்தை கண்டித்தாலும் சரி, ‘பிராம்மணர்கள் இஷ்டப்படி மாம்ஸம் தின்னுவதற்கு யக்ஞம் என்று பெரிய பெயர் கொடுத்து ஏமாற்றினார்கள்என்றால் கொஞ்சங்கூட சரியில்லை.

 

கண்டிப்பாக யாகம் செய்பவர்கள் பசுக்கள் பலியிடப்பட்டு  நடத்தும் யாகத்தில் துவரம்பருப்பளவு இறைச்சி மட்டுமே ஒருவரால் உண்ணப்படும் என்று அவர் சொல்வது இக்கால வழமையை ஒட்டி பழிக்கு அஞ்சி சப்பைக் கட்ட சொல்வதாகவே எண்ணத் தோன்றுகிறது.

 

இந்த வேள்வி என்னும் யாகம் தமிழ் நாட்டிலும் வடக்கிலிருந்து வந்தவர்களால் வளர்க்கப்பட்டு அவர்களையும் அறவோர் என்ற வரிசையில் அந்தணர் என்று அழைக்கும் அவலம் ஏற்பட்டு இருக்கிறது. அதை மணிமேகலை காப்பியத்தில் அத்தகைய வேள்விகள் அந்தணர் மனையில் நடைபெற்றதாக குறிப்பதிலிருந்து அறியலாம்.

 

அப்படி யாரும் அவர்களை அந்தணர் என்று கூறக்கூடாது என்பதைத்தான் மணிமேகலைக் காப்பியம் இயற்றிய காலத்திற்கு முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பே திரு வள்ளுவர் எச்சரித்து இருக்கிறார். அந்தணர் என்பவர்கள் அறவோர். அவர்கள் எந்த உயிருக்கும் தீங்கு செய்ய மாட்டார்கள். ஆயிரம் வேள்வி செய்து கிடைப்பதாக சொல்லப்படும் நன்மையைப பெறுவதை விட  ஒரு உயிரை கொன்று உண்ணாமல் இருப்பது சிறப்பானது என்றெல்லாம் சொல்லியும் தமிழர்கள் அவர் சொன்னதை ஏன் பின்பற்றவில்லை என்பதை சிந்திக்க வேண்டும்.

 

அண்டிப் பிழைக்க வந்த அயலவர் தமிழர்களின் தனிப்பெரும் சிறப்புப் பெயர்களால் தங்களை அழைத்துக் கொண்டு தாமும் தமிழர் என்று தோற்றப் பிழையை உருவாக்கி தமிழர்களிடம் தம் கொள்கைகளை தமிழ் மன்னர்கள் மூலமாக பரப்பினர் என்பதாகத்தான் நாம் உணரமுடிகிறது.

பிராமணர்கள் இந்தியா முழமையும் வாழும் ஒரு குலக்குழுவினர். இந்தியாவில் காசுமீரம் முதல் குமரிவரை வாழும் இவர்கள் மக்கள்தொகையில் மிகவும் சொல்பமானவர்களாக இருந்தாலும் இந்திய அரசியல் அதிகார மட்டத்தில் இவர்களின் ஆதிக்கம் கோலோச்சுவதைப் பார்க்கமுடிகிறது. அவர்களில் பல்வேறு பிரிவுகள் உண்டு. அதை கோத்திரம் என்று சொல்கிறார்கள். இப்பிரிவினர் தங்களை ஒரு குறிப்பிட்ட இரிஷியின் வழித் தோன்றல்கள் வம்சாவழியினர் என்று சொல்லிக் கொண்டு சில பழக்கங்களை கட்டுப்பாடுடன் கடைப் பிடித்து வாழ்கின்றனர். ஒரு கோத்திரத்தில் பிறந்தவர் அதே கோத்திரத்தில் மணம் முடிப்பதில்லை. போன்ற நடைமுறைகள் பிராமிணர் இடையில் இந்தியா முழுவதும் பின்பற்றப்படுவதைக் காணமுடிகிறது.

தமிழ்நாட்டில் இவர்கள் அய்யர் அய்யங்கார் என்னும் இருபெரும் பிரிவுகளாக இருந்தாலும் பிராமிணர் என்ற அளவில் ஒருமித்து செயல்படுவதைக் காணலாம்.

 

தமிழ்நாடு தவிர்த்து மற்ற எல்லா பகுதிகளிலும் பிராமணராக அழைக்கப்படுபவர்கள் தமிழ்நாட்டில் மட்டும் அய்யர் என்றும் அந்தணர் என்றும் பார்ப்பனர் என்றும் அழைக்கப்படுவது ஏன்? மற்ற பகுதிகளில் பிராமணியம் என்னும் அவர்கள் தத்துவங்களும் கொள்கைகளும் வெகுவாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. அங்கே அவர்கள் தங்களை பிராமணர் என்று தைரியமாக சொல்லிக் கொண்டனர்.  ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் அக்கொள்கைகளுக்கு திரு வள்ளுவர் காலத்தில் இருந்தே எதிர்ப்பு இருந்திருப்பதை அறியமுடிகிறது. அதனால் அவர்கள் தங்களை தமிழர்கள் என்று சொல்லிக் கொள்ள தமிழ் சொற்களில் அழைத்துக் கொண்டாலும் தங்களது பேச்சிலும் செயலிலும் தனித்தன்மை கொண்ட பழக்கவழக்கங்களைக் கடைப்பிடித்து வருகின்றனர். 

 

இருப்பினும் ஆரியப் பார்ப்பனர்கள் தங்களின் வருணதருமம் என்னும் வர்ணாச்சிரம  கொள்கையை மெள்ள மெள்ள தமிழ்நாட்டில் பரப்பி சாதி வேறுபாடுகள் ஏற்பட வழி வகுத்தனர். அது தமிழ் இலக்கணத்திலும் புகுந்து வேற்றுமைப் பாராட்டும் வகையிலே வளர்ந்தது. வச்சணந்தி மாலை என்னும் இலக்கண நூலில் பார்ப்பனரை வெண்பாவாலும், அரசரை ஆசிரியப் பாவாலும், வணிகரைக் கலிப்பாவாலும், சூத்திரரை வஞ்சிப் பாவாலும் பாட வேண்டும் என்ற விதியை வகுக்கும் அளவிற்கு அவர்களுடைய ஆதிக்கம் அதிகமானது. இலக்கிய வழக்கில் இல்லாதவை இலக்கணத்தில் விதியாகப் புகுந்தது.

இதனை அறிஞர் அண்ணா தன்னுடைய ஆரியமாயை என்னும் நூலில்    “நால்வகைச் சாதியை இந்நாட்டினில் நாட்டினீர், என்று ஆரியரைப்       பார்த்து முழங்கிடும் உண்மையுணர்ந்தும், எழுத்திலும் நால்வகைச்        சாதியா? உயிரெழுத்தும் மெய்யெழுத்தும் உயிர் மெய்யும் சார்பும் எழுத்தின் வகையாம் என அறிவுடன் பட்டு ஆயிரமாயிரமாண்டுகளாய்      வழங்கிய உண்மைக்கு மாறாக, ஆரியம் புகுந்து வளம் பெற்று, தமிழ்     கற்று இலக்கியமியற்றும் தொண்டினை ஏற்று மெல்ல ஆரியப் புலவரெல்லாருள்ளமும் ஆரியக் கருத்துறையும் மடமாக்கி, அவர்கள்        எழுப்பிடும் ஒலியும், பொருளும் ஆரியத்தை வெளியிடும்         நிலைமையை உண்டாக்கி விட்டது. முக்காலத்திலும் மொழி         வழங்கிடத் துணைபுரியும் அறிவியற் சாலையாம் இலக்கணத்திலும்,      ஆரிய நச்சரவுதான் படத்தினை எடுத்து ஆடுகின்றது.”

ஆகவே அய்யர் பார்ப்பனர் அந்தணர் என்ற சொற்கள் தூய தமிழ் சொற்கள். அவற்றால் நம் தமிழ் சான்றோர்களை அழைத்திடல் தவறில்லை.. இச்சொற்களை மீட்டிடல் வேண்டும்.  தங்களை பிராமணர் என்போரை ஆரியப் பார்ப்பனர் என்றே அழைக்க வேண்டும்.

 

மேலும் பிறப்பால் பார்ப்பனராயினும் வாழும் முறையால் பிராமணிய கொள்கைகளைத் தவிர்த்து சமத்துவம் பேணும் நற்பண்பு கொண்டவர்கள் தற்காலத்தில் பலர் உண்டு, தமிழ் நாட்டில் வ,ரா (வ. ராமசாமி அய்யங்கார்) என்னும் எழுத்தாளர் அக்கிரகாரத்து அதிசய மனிதராகக் கருதப்பட்டார். அறிஞர் அண்ணாதான் அவரை அப்படி அழைத்தார். “வ.ரா.  நமது  முகாமில் இருக்க வேண்டியவர் என்று புன்னகையும் பெரு மூச்சும் கலந்த குரலிலே கூறுவதற்குக் காரணம்....” என்று காரணங்களை அடுக்கினார் அண்ணா. நம் காலத்தில் வாழ்ந்து மறைந்த அய்யா சின்னக்குததூசி அவர்கள் திராவிடக் கொள்கைகளைப் பரப்பிடும் திராவிடராகவும் திராவிட எழுத்தாளராகவும் மதிக்கப்பட்டவர். இவர்களைப் போல் பிரபலமாகாத பலர் மாந்த நேய மிக்கவர்களாக தங்கள் குலப் பெருமை பேசாமல் சாதி மத வேற்றுமைப் பாராட்டாமல் வாழ்ந்தவர்களும் வாழ்கின்றவர்களும் உண்டு.

 

அதே நேரத்தில் பார்ப்பனர் அல்லாதவாராகப் பிறந்தாலும் வருணப்பாகுபாட்டை ஏற்று சாதி மத வேற்றுமைப் பாராட்டும் பண்பினர் பலர் இருக்கக் காண்கிறோம். அவர்கள் தன்மான உணர்ச்சிப் பெற்று பகுத்தறிவுச் சிந்தனையுடன் சமத்துவக் கொள்கையைப் பின்பற்றி நடந்தால் நாடும் வீடும் நலம் பெறும்.  

 

குருக்கள் என்பவர் யார் ?

வருணம், ஆசிரமம் ஆசாரம் முதலியவை  பொய்ம்மை என்றும் அறிவுக்கண்ணைத் திறந்து கண்டால் தெளிவாகும் என்றும் உணர்ந்த உயரிய அருளாளர்கள் வாழ்ந்த நாடு தமிழ்நாடு, அவர்கள்தான் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என அன்பினால் ஒரு குடும்பத்தவராக ஒன்றிவாழ வேண்டும் என்று எண்ணியவர்கள். மக்களை குலமாக மாதமாக சாதியாக வகைப்படுத்தி வேறுபடுத்திக் காணும் தத்துவம் பொய் என்பதை உணர்ந்த நாட்டில் அவைகளின் பெயரால் உருவான வேற்றுமைகள் வெறுப்புகள் விதவிதமான விசித்திர நடைமுறைகள் பிற்காலத்தில்  தன்னலம் கொண்ட சிலரால் உருவாக்கப்பட்ட  உரைக்கப்பட்ட காத்துக் கதைகளாக்கும்

 

இவ்வுண்மையைத் தான் அருட்பிரகாச வள்ளலார் எடுத்துக் கூறினார்.

        நால்வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா

          நவின்றகலைச் சரிதம்எலாம் பிள்ளைவிளை யாட்டே

     மேல்வருணம் தோல்வருணம் கண்டறிவார் இலைநீ

          விழித்திதுபார் என்றெனக்கு விளம்பியசற் குருவே

    

நால்வகை வருணம், ஆசிரமம், அவற்றிற்குரிய ஆசாரம் முதலாக நூல்களில் சொல்லப்படும் ஒழுக்கங்கள் எல்லாம் பிள்ளை விளையாட்டாகும் என்கிறார்.  மேல்வருணம் என்பதை உடம்பின் தோல் வருணம் கொண்டு அறியமுடியாது என்கிறார். இதையெல்லாம் விழித்துப்பார் உண்மை விளங்கும் என சொல்பவரே உண்மையான குருவாவார் என்கிறார். மேலும்

சாதி சமயங்களிலே விதி பல வகுத்த
சாத்திரக்குப்பைகள் எல்லாம் பாத்திரம் அன் றெனவே
ஆதியில் என் உள்ளத்திருந்தே அறிவித்தபடியே
அன்பால் இன்றுண்மை நிலை அறிவிக்க அறிந்தேன்”

எனச் சாதிய வழிமுறைக்கு அடிகோலும் அனைத்து வைதீக மரபுகளையும்  நூல்களையும் சாடுகின்றார்.

 

வள்ளுவர் வள்ளலார் போன்றவர்களைச் சிறந்த குருக்களாக  நாம் கருதலாம். அந்த வரிசையில் நம் காலத்தில் தோன்றிய பெரிய குருவானவர் தந்தை பெரியார் என்று சொன்னால் மிகை ஆகாது.

பார்ப்பனர் என்பதன் பொருள்

பார்ப்பனர் எனும் சொல்லும் தமிழ் சொல்தான். ஆனால் தமிழர் என தங்களை அடையாளப்படுத்த தயங்கும் ஒரு குலக்குழுவினரைக்  குறிக்கும் சொல்லாக இக்காலத்தில் அறியப்படுகிறது. இது எப்படி என்பதை சிந்திக்க வேண்டும். பார்ப்பு என்னும் சொல் பறவைக் குஞ்சுகளைக் குறிக்கும். குழந்தைகளையும் இளையோரையும் பார்ப்பு என்று வழங்குவது பழங் கால பழக்கம். வசதி மிக்கவர் அரசர்கள் மன்னர்கள் மற்றும் வணிகர்கள் வீடுகளில் உள்ள இளையோரை கவனித்துப் பார்த்து வளர்ப்பதற்கு அமர்த்தப்படும் பணி பார்ப்புத் தொழில் எனப்பட்டது. இக்காலத்தில் காணப்படும் குழந்தைகள்  காப்பகம் crèche   போன்றது. அந்த வேலைக்கு  வடக்கிலிருந்து வந்த ஆரியர்கள் அமர்த்தப்பட்டனர். அதனால் அவர்கள் பார்ப்பனர் என்றும் அழைக்கப்பட்டனர். அவர்களே பிறகு வழிபாட்டு விவகாரங்களில் வீட்டு விழா சடங்குகளில்  தலையிட்டு தங்களின் முறைகளை புகுத்தி அர்ச்சனை போன்றவற்றில் தங்களது மொழியை சமசுகிருதத்தை வடமொழியை பயன்பாட்டுக்கு கொண்டுவந்துவிட்டனர்.

 


No comments: