Saturday, November 26, 2022

யாகம் -வேள்வி – வேட்டல் என்பதின் உண்மை விளக்கம்

 

அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று

உயிர்பலியிட்டு நெய் போன்ற பொருள்களோடு அதனை நெருப்பில் இட்டு ஆயிரக் கணக்கில் யாகங்களைகளைச் செய்து அவற்றை அவிர்ப்பாகமாக உண்பதால்  கிடைக்கும் நன்மையைக் காட்டிலும் ஒரு உயிரையும் கொன்று உண்ணாமல் இருந்தாலே நல்லதாகும்.

யாகம் என்ற பெயரால் உயிர்பலி இட்டவர்களை கண்டிக்கும் தன்மையில் எழுதப்பட்ட குறள்       இது. தமிழர் மரபில் யாகமும் வேள்வியும் அக்காலத்தில் இல்லை என்பதால் அவ்வித புதுப் பழக்கம் அயலவர் பண்பாட்டுப் படையெடுப்பால் வந்ததென இக்குறள்  உணர்த்துவதாகக் கருதலாம்.

இதைக் குறிப்பிடும் போது சிலர் பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி என்ற  பாண்டிய மன்னன் பற்றியும் அவன் செய்த யாகங்கள் பற்றியும் குறிப்பிடுவர். ஆயிரம் வேள்விகளைச் செய்தவனாகக் கருதப்படும் இம்மன்னனைப் பற்றி சின்னமனூர் செப்பேடு "பாண்டியன் ஒருவன் கடல்வற்ற வேல் எறிந்தான். பிரளயத்தில் உலகம் அழிந்தது. எங்கும் நீர் சூழ்ந்தது. பூமியில் நிலப்பரப்பு இல்லை. சூரியன் கதிர்கள் பட்டு நிலபரப்பு உருவாகி மனிதவர்க்கம் உருவாக ஆரம்பித்தது. அது, ஒரு பாண்டிய மன்னரான சத்தியவிரத பாண்டியன் மற்றும் சப்தரிஷிகள் மூலிகைகள் என காக்கப்பட்டு பகவான் மச்ச அவதாரம் இன்று இருந்துவரும் இந்து மகா சமுத்திரத்தில் நிகழ்ந்தது. அந்த ஒரு பாண்டியனின் பெயர் சத்யவிரத பாண்டியன். இவனே,பிரளயம் முடிந்து பின்னாளில், 7- வது மநுவாக நியமிக்கப்பட்டார்.” என்றும் வேள்விக்குடிச் “செப்பேட்டில் கொல்யானை பலஓட்டிக் கூடாமன்னர் குழாந்தவிர்த்தபல்யாக முதுகுடுமிப் பெருவழுதி” என்றும் குறிப்பிட்டு உள்ளதாகச் சொல்வார் உண்டு.

மதுரைக் காஞ்சியைப் பாடிய மாங்குடி மருதனார் இவனது சிறப்பினைப் பற்றிப் பாடுகையில “பல்சாலை முதுகுடுமித் தொல்ஆணை நல்லாசிரியர் புணர்கூட்டுண்ட புகழ்சால் சிறப்பின்” —(759,61,62) என்றும் இன்னும் சிலப் புறநானூற்றுப் பாடல்களில் இப்பெயர்க் குறிப்புகள் உண்டு என்பதும் கவனிக்கத்தக்கதே.

அதைப் போலவே இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி என்னும் சோழ மன்னன் ராஜயசூய யாகம் செய்தான் என்றெல்லாம் பாடல் பதிவுகள் உள்ளன. இவற்றைக் கொண்டு சிலர் யாகம் தமிழரின் சடங்கியல் சார்ந்தது என்று நம்புகின்றனர். வீரன்,  தீரன், கேசரி, பராங்குசன், பராந்தகன் என்றெல்லாம் வீரத்தின் அடையாளங்களைப் பெயருடன் ஒட்டிக் கொண்டவர்கள் போரில் கிடைத்த வெற்றி அவ்வரசர்கள் செய்த யாகங்களால் என்று நம்பவைக்கப்பட்டுள்ளது.  

யாகத்தை வேள்வி என்றும் வேட்டல் என்றும் குறிக்கப்படுகிறது. வள்ளுவர் வேட்டல் என்ற சொல்லைக் குறிக்கின்றார். வேட்டல் என்றால் வேண்டியதைக் கோரி யாகம் செய்வது. யாகத்தீயில் அவி என்றும் ஆகுதி  என்றும் கூறப்படும் யாகப் பொருள்களை பொசுக்குவது ஆகும். அப்படிப் பொசுக்கும் பொருள்களில் முக்கியமானது பிராணிகள் ஆகும். குதிரை, மாடு, ஆடு போன்ற விலங்குகள் மட்டுமின்றி மனிதர்களும்  பலியிடப்பட்டு யாகநெருப்பிலிட்டு   நெய்யுடன் சேர்த்து வாட்டி வதக்கி உண்டதாகத் தெரிகிறது. இது ஆரியரின் பழக்கமாக இருந்திருக்கின்றது. அப்பழக்கம் அவர்கள் ஓரிடம் தங்கி வாழா நாடோடி வாழ்க்கையின் எச்சமாகவும் அடையாளமாகவும் பின்பற்றி வந்திருப்பதாகக் கொள்ளலாம். நாடோடி வாழ்க்கையில் உணவை சுட்டு சமைத்து தின்பதற்கு தீயை அணையாமல் ஓம்பும் கட்டாயம் இருந்ததால் அவர்கள் செல்லும் இடமெல்லாம் தீயை சுமந்து அங்கே சென்று பற்றவைத்து அதில் உணவைப் பொசுக்கி உண்டிருக்கக் கூடும். அது அவர்களுக்கு யாகம்.

இத்தகையப் பழக்கம் பழங்காலத்தில் எல்லா இனக்குழுக்களிடமும் உலகம் முழுதும் இருந்திருக்கிறது. அதனை ஆங்கிலத்தில் Campfire என்று சொல்வார்கள்.  இக்காலத்தில் இது  நெருப்புக்களியாட்டம் என்று பொருள்படுகிறது. இது திறந்தவெளியில் இரவில் நெருப்புமூட்டி இறைச்சியை பொசுக்கி உண்பதும் மதுக்குடியுடன் ஆட்டம்பாட்டம் போடுவதும் முதன்மையாக இருப்பதை அறிகிறோம். வீட்டினுள் உணவை சுட்டுத் தின்னும் புது முறைக்கு Barbeque என்கிறோம்.  அதற்கான துணைக்கருவிகள் பலவித தினுசுகளில் இப்போது காண்கிறோம். இவையெல்லாம் ஆதிமனித வரலாற்று செயல்பாடுகளின் வெளிப்பாடு.

ஸ்வரடிக்கரன்ஸ் (Swartkrans - fossil-bearing cave  - South African National Heritage Site) என்னும் இடத்தில் நெருப்பில் சுடப்பட்ட மான்களின் எலும்புகள் கிடைத்தன. அவைகள் 15 இலச்சம் ஆண்டுகளுக்கு முன்னர் நெருப்புக்களியாட்டத்தில்  மானிறைச்சியைச் சுட்டுத்தின்ற மிச்சஎலும்புகள் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். வரலாற்றில் முதல் நெருப்புக்களியாட்டம் அது என்றும்  குறிப்பிடுகின்றனர்.

தென் அமெரிக்காவில் ஓண்டர்வேற்க்  (Wonderwork) என்னும் குகைக்குள் 10 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் சுட்டெரித்த எலும்புத் துண்டுகள் கிடைத்திருக்கின்றன. இவைகள் அக்காலத்தில் ஆதிமனிதர்கள் கட்டுப்படுத்தப்பட்ட நெருப்பினைக் கையாளும் திறன் கொண்டவர்களாக இருந்ததற்கு சான்றுகள் என்று கூறப்படுகிறது.

இந்த முறைதான் நாகரீகமற்ற நாடோடிவாழ்க்கை நடத்திய இனக்குழுக்களிடம் இருந்தது. அத்தகைய வாழ்க்கை நிலையைக் கொண்டவர்கள் ஆரியர்கள். அவர்கள் இன்றைக்கு இந்தியா எனப்படும் நிலபாகத்தில் வந்தபோது இங்கு நாகரீகம் மிக்க இதுபோன்ற தகவல் பழக்கங்களை விட்டொழித்து, நகர வாழ்க்கை வாழ்ந்த மக்களுடன் வன்மையாகவும் மென்மையாகவும் பழகி கலந்தாலும் தங்களுடைய சில பழக்கங்களை விடாமல் தொடர்ந்தனர். அவற்றில் முக்கியமானது யாகம். யாகத்தில் உயிர்வதை செய்யப்படுகிறது. விலங்குகள் பலியிடப்படுகின்றன. அதனை விடாமல் இருப்பதன் காரணத்தை கூறும்போது  யாகம் லோக ஷேமதிற்கு செய்வது என்று சொல்லி யாகம் செய்வதை பெரிய நற்காரியமாகச் சித்தரிகக்கப்பட்டதை இன்றளவும் நம்பிக் கொண்டிருக்கிறோம் .

இதிகாசங்களிலும் புராணங்களிலும் யாகத்தை அழித்தவர்களை அரக்கர்கள் என்று சொல்லப்படுகிறார்கள். தங்களின் பயிர்த் தொழிலான வேளாண்மைக்கு உற்றவுதவி புரியும் விலங்குகளான மாடுகளையும் ஆடுகளையும் பெருமளவில் பலியிடுவதால் அவ்வுயிரினங்கள் அழிந்துவிடும் என்ற அச்சத்தில் அவைகளை  அழியாமல் காக்க யாகங்களை தடுத்தவர்கள் அரக்கர்கள் என்று பழிக்கப்பட்டனர்.

இராமாயணத்தில் தாடகை என்ற பெண்மணி இராமனால் கொல்லப்படுகிறாள். அதற்குக் காரணம் அவள் யாகத்தைத் தடுத்தாள் என்பதால். குதிரையைக் கொல்லும் அசுவமேத யாகம், மாடுகளைக் கொல்லும் பசுமேத யாகம், ஆடுகளைக் கொல்லும் அஜமேத யாகம், மனிதர்களைக் கொல்லும் நரமேத யாகம் என்றெல்லாம் யாகங்கள் இருந்திருப்பதை புராணங்கள் வாயிலாக அறியமுடிகிறது.

இன்றைக்கு உயிர்ப்பலி இல்லாமல்  பயிர்வகைகள், பழம், காய், பூக்கள் மற்றும் துணிமணிகளை நெருப்பிலிட்டு நெய் ஊற்றி தீவளர்ப்பதை யாகம் என்று காண்கிறோம். கருதுகிறோம். இந்தமுறையானது இக்காலத்தில் யாகத்திற்கு எதிராக எழுந்த தீவிர எதிர்ப்புகளினால் உருவானது என்றுதான் சொல்ல வேண்டும்.

கடந்த இருபதாம் நூற்றாண்டில் 1935 ஆம் ஆண்டிலும் கூட பலியிடப்பட்ட யாகங்கள் நடந்திருக்கின்றன. அப்போது அத்தகைய யாகங்கள் நடக்கும் இடங்களில் எல்லாம் மகாவீரரைப் பின்பற்றும் சமண மதத்தவர்களும், வள்ளலார் அன்பார்களான சீவகாருண்யம் பேசியவர்களும், புலால் மறுத்த சைவர்களும் சென்று எதிர்த்து போராடவும் அன்றைக்கு இருந்த ஆங்கில அரசினரிடம் இத்தகைய யாகங்களைத் தடை செய்யவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

தேவக்கோட்டையில் 1935 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைப்பெற்ற யாகத்திற்கு இத்தகைய எதிர்ப்பு கிளம்பியது என்பது நாம் அறிய வேண்டிய வரலாற்றுச் செய்தி. இதுபற்றியக் குறிப்பு பகுத்தறிவு 01-07-1935 தேதியிட்ட மாத  இதழில் ‘ராம-ராவண ஆராய்ச்சி’ என்னும் கட்டுரையில் உள்ளது. 

அது மட்டும் அல்லாமல் ‘ஆர்ய தர்மத்தினின்று தொகுக்கப்பெற்றது’ என்ற குறிப்புடன்  தேவக்கோட்டை அட்வகேட் எஸ். சுப்ரமண்ய அய்யர் B.A., B.L., என்பவர் “யாகமும் வைதிக மாதமும்” என்னும் நூலில்  மிகத்தெளிவாக உயிர் வதை செய்யப்படும் யாகங்களுக்கு ஆதரவாக எழுதி வாதம் செய்வதைப் பார்க்கும் போது நாம் ராமாயாணக் காலத்திலிருந்து எதிர்த்து வந்த யாகங்கள் ஒரு குறிப்பிட்ட சமுதாய மக்களால் எப்படியெல்லாம் சமாதானம் கூறி சரிகட்டப்பட்டு மாற்றங்களை அடைந்து இன்னும் அழியாமல் வேறுவேறு உருவங்களில் நிலைபெற்று வருகின்றது என்பதை உணர முடியும். 

‘ஆனந்தபோதினி’ என்ற இதழில் சித்தூர் பண்டிதர் திரு பூ. சீநிவாசன் என்பவர் ‘யாகமா ? மாமிச மோகமா ?’ என்ற கட்டுரைக்கு மறுப்பு சொல்வதற்காக    “அஹிம்ஸாவாதிகளின் துர்வாதத்திற்குப் பதில்” என்று இந்நூல் இயற்றப்பட்டது. அந்நூலில் ‘அவச்ய ஹிம்ஸை’ என்னும் தலைப்பில் கூறப்படுவதைப் பாருங்கள்:

“இப்படி அஹிம்ஸையை வற்புறுத்திய மதமானது அஹிம்ஸைக்கும் ஓர் வரையறை உண்டு என்பதைக் காட்டி யுத்தாதிகளாகிய அவச்ய ஹிம்ஸையை அது அனுமதித்திருப்பதையும் நாம் கவனிக்கத் தவறாக கூடாது. கீதையானது மிகக் குரூரமான ஹிம்ஸையாகிற யுத்தத்தைச் செய்யும்படி அர்ஜுனனைத் தூண்டுகிறது. கீதை யவதரித்த ஸந்தர்ப்பத்தை யோஜித்தால் இது நான்கு விளங்கும் . அர்ஜுனன் ஆசாரியர்களையும் பந்துக்களையும் மற்றவரையும் கொல்வது அதர்மம் என்று பயந்து மனங்கலங்கி  யுத்தம் செய்ய மறுக்கவே பகவான் அவனது கலக்கத்தைத் தெளிய வைக்க விரும்பி யுத்தம் ஸ்வதர்மமென்றும், யுத்ததில் கொல்லுவது பாபமாகாதென்றும் உபதேசித்து அவனை யுத்தம் செய்யும்படி தூண்டுவதற்குத் தானே கீதையைப் பிறப்பித்தார். இதிலிருந்து அஹிம்ஸா தர்மத்தைப் போல் அவச்ய ஹிம்ஸையும் தர்மமென்று காட்டுவதறக்காகவே கீதை வெளியாகியதென்பது மறுக்க முடியாதது. ஆகவே கீதையானது அஹிம்ஸையும் ஹிம்ஸையும் போதிப்பது முரண்பட்டதென்று நினைக்கலாகாது.

நமது வைதிக மதத்தில் அஹிம்ஸா தர்மம் உயரந்ததென்றாலும் அஹிம்ஸை விதியானது யாகம், யுத்தம்  ஆகிய இரண்டு விலக்கு விதியால் பாதிக்கப்பட்டு விடுகிறதாக நமது மதம் ஒப்புக் கொண்டுவிட்டது. யாகம் யுத்தம்  இரண்டிலும் ஹிம்ஸை கட்டாயமாக விதிக்கப்பட்டிருப்பதாலும் அது தர்மமென்று வேதாதி பிராமணங்கள் கண்டிப்பாகச் சொல்லிவிட்டதாலும் அஹிம்ஸா விதிக்கு விலக்கு விதியுண்டென்பதை நாம் அறிய வேணும்”

இப்படி அகிம்சைக்கு விலக்கு உண்டு என்ற வாதத்தை, யுத்தத்தில்  கொல்வதையும் குற்றவாளிகளுக்கு மரணத் தண்டனை விதிப்பதையும் குறிப்பிட்டு, இவையெல்லாம் இம்சையில் சேராதா என்று கேட்டு, சேராது என்ற பதிலையும் தந்து; அப்படியிருக்க யாகங்களை அதில் இயற்றப்படும் இம்சைகளை வைத்து மாத்திரம் எதிர்ப்பது நியாயமா என்று இந்த நூலில் கேட்கப்படுகிறது.  ‘அகிம்சாவாதிகள் எவ்வித வரையில்லாமல் விலக்கு விதியில்லாமல் எவ்விசயத்திலும் ஒரே மாதிரியாக அகிம்சைக் கொள்கையை அனுஷ்ட்டிக்கிறார்களா’ என்று கேட்கிறது இந்நூல்.

அதுமட்டுமல்ல ‘பூவுலகில் சகல செளகிரியங்களுடன் வாழ உரிமை பெற்றவனாகவும் மற்ற சராசர பிராணிகள் யாவற்றும் மனிதனுடைய சுகாதிகளை விருத்தி செய்ய ஏற்பட்டவைகளாகவுமே நினைக்கப்படுகிறது. பசு, பட்சி, செடி, கொடி, எல்லாம் மனிதனுக்காகவே ஏற்பட்டனவென்று பாத்தியம் கொண்டாடப்படுகிறது. ஆகவே மனிதனுடைய சுகத்திற்கு இடையூறு விளைவிக்கும் பிராணிகள் இருந்தால் அவைகளைக் கொன்று தீர்க்க வேண்டும் என்கிற கொள்கையானது நீரோஷேபமாக எங்கும் பரவி இருக்கிறது. இதை மனிதனுடைய தலையில் இருக்கும் பேன் பூச்சி முதல் காடுகளில் இருக்கும் சிம்மம் முதலிய துஷ்ட ஜந்துக்கள் வரை உதாரணம் கொண்டு சிந்தித்துப் பார்க்கலாம்’ என்ற வாதங்களையும் முன்வைத்து வைதிகமதத் தத்வம் வகுத்தவழி என்றும் இந்நூல் விளம்புகிறது.  

மேலும் இந்நூல் கூறுவதைக் காண்க:

“இம்மதத்தில் யாக ஹிம்ஸை யுத்த ஹிம்ஸை ஆகிய இரண்டும் மிகப் புனிதமானதென்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிராமஹணாதிகளுக்குக் கட்டாயமாக விதிக்கப்பட்ட யாகங்களில் பிராணி ஹிம்ஸை செய்யும்படி சகல வேதங்களும் விதிப்பதுடன் அந்த ஹிம்ஸையானது அந்த பிராணிக்கு உயர்ந்த கதியைக் கொடுப்பதால் இதை ஹிம்ஸை என்று நினைக்கவோ சொல்லவோ கூடாதென்று பிரதியஷ வேதங்களில் ஸ்பஷ்டமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த யாக நியாயத்தைக் கொண்டு, யுத்த ஹிம்ஸையும் தர்மமாக நிர்ணயிக்கப்பட்டது. சாஸ்திரங்களில் ஒரு பிராணியையும் ஹிம்ஸிக்கக் கூடாது என்று பொதுவாக ஒரு விதியிருந்தாலும் இது, யாகயுத்த  ஹிம்ஸைகளைத் தவிற மற்ற ஹிம்சைகளையே தடுக்குமென்று விலக்கு விதியும் வேதாதி சாஸ்திரங்களிலேயே விதிக்கப்பட்டுள்ளது. இப்படி ஸித்தாந்தமிருப்பதால் பகவான் கீதையில் யுத்த ஹிம்ஸையைத் தர்மமாக உபதேசித்தார்”.

இது மட்டுமில்லாமல் கீதையின் கருத்து என்று  மேலும் இந்நூலில் “யுத்தத்தில் கொல்லுவது தர்மமென்றும் அது மோஷாதி ஸாதனமென்றும் ஆகவே அதைச் செய்யாமல் விட்டால்தான் பாபமென்றும் சொல்லி ஷத்திரியனுக்கு தர்மயுத்தத்தைத் தவிர வேறு சிரேயஸ்கரமான தர்மமே கிடையாது” என்று கூறப்படுகிறது. அதாவது யாகத்திலும் யுத்ததிலும் கொல்லப்பட்டால் சொர்கம் கிடைக்கும் என்று நம்ப வைக்கப்படுகிறது.

இதற்கு ஆதரவாக ஸ்ரீராமானுஜ பாஷியத்திலிருந்தும் பிரம்ஹ சூத்திரத்திலிருந்தும் ஸ்ரீசங்கரபகவத்பாத பாஷியத்திலிருந்தும் யாகஹிம்சையில் பாபம் இல்லை என்பதற்கு ஆதாரங்களை அடுக்குகிறது அந்நூல். யாகத்தில் கொல்லப்படுவது ஹிம்ஸையே அல்ல அது ரஷணை என்றும் வாதிடப்படுகிறது.

மேலும் ‘பசுக்கள் பிரம்ஹாவினால் யாகத்திற்காகவே ஸிரிஷ்டிக்கப்பட்டன. யாகமானது இவ்வுலகிற்கு ஷேமத்தின் பொறுத்தே யாகும். ஆதலால் யாகத்தில் வதம் செய்வது வதமேயல்ல (5-33)”. என்றும் “வேத தத்துவத்தை அறிந்த த்விஜன் மேற்கண்ட காரியங்களில் பசு ஹிம்ஸையை செய்து தனையும் மேற்படி பசுக்களையும் உத்தம கதி அடையச் செய்கிறான். (5-41) என்றும் மனுஸ்மிருதியில் சொல்லப்பத்திருப்பதையும் இந்நூல் பதிவு செய்கிறது. த்விஜன் என்றால் இருபிறப்பாளராகிய பிராமணர்கள் என்று பொருள்.   

இப்படி யுத்தத்தில் கொல்லுவதும் யாகத்தில் கொல்லுவதும் ஒன்று எனக் கூறும் வைதிகமதம் எப்படிப்பட்டது என்பதை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும். கீதை சத்திரிய தர்மம் என்று சொல்லி அதனை சிலாகித்து கடைப் பிடிக்கச் சொல்வது,  வர்ணாசரம தர்மத்தை உயர்த்தி அதனை நடைமுறைப் படுத்தும் நோக்கத்தில்தான் என்பதை இங்கு நாம் புரிந்து கொள்ள வேண்டும். அப்படியென்றால் சூத்திர தர்மம் ஒன்றிருக்குமே!. அது என்ன என்றெல்லாம் நாம் நோக்கினால் அதிலுள்ள சூட்சமமும் சூழ்ச்சியும் புரியும். இந்த வைதிக மதம்  பெரும்பான்மை மக்களை சூத்திரர் என்ற அடைப்புக்குள் புகுத்தி அடிமைகளாக ஆக்கிவைத்து அதனையும் அவர்களே பெருமை பேசும்படியாக வைத்திருப்பதை அறியலாம். அதன் வீரியத்தையும் விபரீதத்தையும் உணர்ந்தவர்கள் காலந்தோறும் எதிர்த்து  வந்ததைக் காணமுடிகிறது.

இதைத்தான் வள்ளுவர் முன் சொன்ன குறளில் எதிர்த்திருக்கிறார். தமிழில் வேட்டல் என்ற சொல் யாகத்தையும் யக்ஞத்தையும் குறிக்க தமிழில் கூறப்படுகிறது. ஒருக்காரியம் நிறைவேற வேண்டிக் கொள்வதற்காக செய்யப்படும் செய்கை என்றாலும் அதில் உயிரினங்கள் வேட்டையாடுவதைப் போன்று வெட்டப்பட்டு இறப்பதையும் குறிப்பதாக நாம் கருதலாம். அகராதியில் வேட்டல் என்ற சொல்  விரும்புகை என்னும் பொருளுடைய வேள் என்னும் சொல்லிலிருந்து பிறந்ததாக சுட்டப்படுகிறது.

அதே போன்று வேள்வி என்னும் தமிழ்ச் சொல்லும் வேளாண்மை என்னும் சொல்லிண் அடிப்படையில் உருவாயிற்று எனலாம். வேளாண்மை என்பது உழவுத் தொழிலைக் குறிப்பது என்று அறிவோம். அது மட்டும் அல்லாமல் மற்றவர்களை விருப்பதுடன் பேணுவதும் அவர்களுக்கு உதவுவதும்  வேளாண்மை என்பதை  வள்ளுவர்     

இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு.
 (குறள் 81) என்ற குறளில் தெளிவுறுத்துகிறார்.

அத்தகைய உயர்ந்த பொருளில் வேள்வி எனப்படும் யாகமும் குறிக்கப்பட வேண்டும் என்ற கபட எண்ணத்தில் உயிர்க் கொலைபுரியும் யாகத்தை வேள்வி என்னும் தமிழ் சொல்லால் குறிப்பிட்டு மயக்கமடையச் செய்துள்ளனர் என்று கருதுகிறேன். உழவுத்தொழிலில் நிலத்தைக் கீறி உழவு செய்யும் போதும் பயிரிட்டு பாதுகாக்கும் போதும் சில புழு பூச்சிகளைக் கொல்ல நேர்வதைக் காட்டி அது போன்றுதான் உலக நன்மைக்கு யாகம் செய்யப்படுகிறது அதில் ஆடுமாடு குதிரை இவைகள் மட்டுமல்லாமல் மனிதர்களைக் கூட கொல்லலாம் என்று சமாதானம் கூறி யாகத்திற்கும் வேள்வி எனப் பெயரிட்டு ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்று கருத இடம் உண்டு.

ஆதலின் எவ்வகையான தீ வளர்த்து யாகம் செய்யும் முறையும்  தமிழர் சடங்கில் இருப்பது சரியல்ல என்ற கருத்தை வலியுறுத்தி இக்கட்டுரை இத்துடன் நிறைகிறது.  

 

Tuesday, November 8, 2022

வள்ளலார் இயற்றிய - குடும்ப கோரம் - வாழ்வியல் தத்துவ விளக்கம்

 

வள்ளலார் இயற்றிய - குடும்ப கோரம் - வாழ்வியல் தத்துவ விளக்கம்

 

திரு அருட்பிரகாச வள்ளலார் வாய்மொழியாம் திருஅருட்பா பதிப்புகளில் பிற்சேர்க்கைப் பகுதியில் உள்ள குடும்ப கோரம் என்னும் தலைப்பிலான செய்யுள் நிலைமண்டில ஆசிரியப்பா என்னும் இலக்கண வரம்பில் புனையப்பட்டது. இது ஒரு கடிதம் ஆகும். வள்ளலார் சென்னையில் வாழ்ந்த காலத்தில் அவருடன் அன்பு கொண்டு பழகிய திருமழிசை வைத்தியலிங்கம் என்னும் அன்பருடைய மகன் முத்துசாமி என்பவர் திருஅருட்பா அச்சில் ஏறும் முன்பே வள்ளலாரின் பாடல்களை மனனம் செய்து பாடி மக்களிடம் பரப்பிய பெருமகன். அவரைப் பாராட்டி வள்ளலார் சாற்றுக் கவி பாடி புகழ்ந்து இருக்கிறார். முத்துசாமி அவர்கள் எழுதிய சிவபெருமான் மீதான தோத்திரப்பாடல்களப் படித்துவிட்டு வள்ளலார் எழுதிய அந்த சாற்றுக்கவி:

ஒருவகைப் பொருள்தெரித் துயவுதீர்
    மறைகள் நான்கொன்றி வாழ்க!
உயரரன் தரும்ஏழு நான்கதாம்
    ஆகமம் உலகின் மல்க!
இருவகைப் பவம்ஒழித் திலகும்வெண்
    ணீற்றினம் எங்கும் ஓங்க!
இணையில்நல் அறமுன்ஆம் பயன்ஒரு
    நான்கும் ஈடேறி வெல்க!
பொருவலற் றரையர்எத் திசையுளும்
    நீதியால் பொலிக!யாரும்
புகழ்சிவாத் துவிதசித் தாந்தமெய்ச்
   சரணர்எண் புல்க! நாளும்
திருவருட் பனுவல்சொற் றிடும்அவர்க்
   கெண்திரு சேர்க! வாதைச்
செப்பு முத்துச்சுவா மிக்கவிக்
   குரிசில்சீர் செழிக மாதோ.

 

பின்னாளில் வள்ளலார் சென்னையைவிட்டு வடலூர் சென்று வாழ்ந்த காலத்தில் சென்னையில் நடைபெற்ற முத்துசாமி அவர்களின் திருமணத்திற்கு செல்லாமல் தவிர்த்தார். அதனால் மனம் வருத்தமுற்ற முத்துசாமி அவர்களுக்கு தாம் வர இயலாதக்  காரணத்தை விளக்கி எழுதியதே குடும்ப கோரம் என்னும் நீண்ட செய்யுள் வடிவிலான கடிதம்.

 

இக் கடிதத்தை முத்துசாமி அவர்களிடம்  கொண்டு சென்றவர் கொந்தமூர் வரதாசாரியார் என்பவர். முத்துசாமி இவ்வகவலை மனப்பாடஞ் செய்து வைத்திருந்தார். மனப்பாடமாக அவர் சொல்லக் கேட்டு அதனை மோசூர் கந்தசாமி அவர்கள் எழுதி வைத்தார். அது அட்டாவதானம் பூவை. கலியாணசுந்தரனார்  பார்வையிடப் பெற்று, காஞ்சி நாகலிங்கனார் நடத்தி வந்த தொழிற்கல்வி இதழில் 1914 ஜூலை(ஆனந்த, ஆடி தொகுதி 1, பகுதி 4) ஒரு பாதியும். ஆகஸ்டு (ஆவணி, தொகுதி 1, பகுதி 5) இதழில் மறுபாதியுமாக வெளிவந்திருக்கிறது. அதன் பிறகு ஆனந்தவிகடன் 20-02-1929 நாளிட்ட வருட அனுபந்தம் என்னும் ஆண்டு மலரில் வெளியானது. (இணைப்பில் காண்க)


குடும்பகோரத்தில் வள்ளலார் தத்துவக் குடும்பத்தின் சேட்டை செயல்பாடுகளை  அழகாக ஒவ்வொன்றையும் உருவாக்கப்படுத்தி விளக்குகிறார்.

 

ஒரு குடும்பத்தலைவன் ஆணவம் மாயை கன்மம்  என்னும் மூன்று மனைவிகள் கட்டி,  முதல் மனைவியான ஆணவத்திற்கு அஞ்ஞானம் என்ற மகனும், இரண்டாம் மனைவியாகிய மாயைக்கு  மனம்,  புத்தி, சித்தம், அகங்காரம் என்னும் நான்கு பிள்ளைகளைப் பெற்று;
மூன்றாம் மனைவியாகிய கன்மத்திற்கு சத்துவம், இராசசம், தாமசம் என்ற மூன்று பிள்ளைகளை ஈன்று; மூன்று மனைவியரோடும், எட்டுப்பிள்ளைகளோடும் ஏழ்மைநிலையில்  அவன் வாழ்வதோ வாடகை வீட்டில். வாடகை வீடோ, வாதம், பித்தம்,  சிலேத்துமம் என்னும் மூவர்க்குச் சொந்தமானது .

வீட்டு வாடகையும் மாதவாடகையன்று, நாள் வாடகை. வீட்டுக்காரர்கள் மூவரும் அன்றைக்கன்றே வாடகையை வசூலிக்கின்றனர். (வீடு - உடம்பு, வாடகை - உணவு).

இவ்வாறு துன்புறும் குடும்பத்தலைவனுக்கு எத்தனையோ வெளி விவகாரம்; உள்விவகாரம்.

வேதாந்தம் பேச வருவோர்,சித்தாந்தம் பேச வருவோர், இதிகாசம் கூற வருவோர், இலக்கணம் இயம்ப வருவோர், மத தூஷணம் செய்ய வருவோர், விவகாரம் பேச வருவோர், வீண் கதை பேச வருவோர், இப்படி எத்தனையோ வெளிவிவகாரங்கள்.

மலங்கழித்தல், பல்துலக்குதல், ஆடை துவைத்தல், நீராடல், சிவசின்னமணிதல், பூசனை, யோகம் என எத்தனையோ உள்விவகாரங்கள்.

இத்தனை விவகாரங்களுக்கும் பகற் பொழுது சரியாய்ப் போகிறது. இரவு வந்ததும்  பரத்தை வீட்டுக்குச் செல்ல வேண்டும், பரத்தை யார்? நித்திரை. "நித்திரைப் பரத்தையை நேர்ந்து கூடவும் பொழுதுஞ் சரியாய்ப் போகின்றதுவே" என்று வள்ளலார் விவரிக்கும்  குடும்ப கோரம் படிக்கப்படிக்க சிந்தனையைக் கிளரும் சீரியாக கருத்துப் பெட்டகம் ஆகும்.

 

குடும்பகோரத்திற்கு மாறான குடும்ப குதூகலம் எப்படி இருக்கும் என்பதையும் வேறு ஒரு பாடலில் வள்ளலார் தெரிவித்து இருப்பார், அப்பாடல்:

 

நிலைஉறும் நிராசையாம் உயர்குலப் பெண்டிரொடு
       நிகழ்சாந்த மாம்புதல்வனும்
நெறிபெறும் உதாரகுணம் என்னும்நற் பொருளும்மருள்
       நீக்கும்அறி வாம்துணைவனும்
மலைவறு நிராங்கார நண்பனும் சுத்தமுறு
       மனம்என்னும் நல்ஏவலும்
வருசகல கேவலம்இ லாதஇட மும்பெற்று
       வாழ்கின்ற வாழ்வருளுவாய்
அலைஇலாச் சிவஞான வாரியே ஆனந்த
       அமுதமே குமுதமலர்வாய்
அணிகொள்பொற் கொடிபசுங் கொடிஇரு புறம்படர்ந்
       தழகுபெற வருபொன்மலையே
தலைவர்புகழ் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
      தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
      சண்முகத் தெய்வமணியே.

 

கவிநயத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழும் குடும்பகோரம் என்னும் செய்யுள் வடிவ கடிதம் தத்துவ விளக்கத்தை



மிக எளிதாகவும் நகைச்சுவையாகவும் எடுத்துக் காட்டுகிறது.

 

உலகியற் குடும்பத்தின் கோரங்களைத் தன்மீது சுமத்திக் கூறி இத்தடைகளால் திருமணத்திற்கு வரவில்லை என முத்துசாமி அவர்களுக்கு இக்குடும்ப கோரத்தை வரைந்து அனுப்பியிருக்கிறார். இனிய இலக்கிய விருந்து. அள்ளிப்பருகுவோம் வாரீர்.

 

குடும்ப கோரம்


திருவளர் கமலக் குருமலர் தவிசினன்
முதற்பெருந் தேவர் மூவரும் பணியப்
பொதுவிடைத் திருநடம் புரியுநம் பெருமான்
அடிமலர்க் கன்புசெய் அன்பர்கட் கன்பன்
சீர்விளை தூய்மை நீர்விளை யாடிச்
சொற்றரு வாய்மைப் பொற்றுகில் உடுத்துக்
கரிசில்வெண் ணீற்றுக் கவசந் தரித்துத்
தத்துவ சிற்பர சற்குண அகண்ட
அற்புத சிற்குண அங்கலிங் கேசனை

அகத்தும் புறத்தும் அருச்சனை புரிந்து
சிவந்தரு சுகமெனும் திருவமு துண்டு
சீலம் எனும்தாம் பூலந் தரித்தே
அளவில் இன்பம் அனுபவிக் கின்றவன்
மூதறி வாளன் முத்து சாமிஎன் றியற்பெய
ருடையஇத் திருவா ளனுக்கு
இராம லிங்கம் எழுதி விடுத்த
மயலுறு சோபன வாசகம் ஆவது
ஐயநின் புடைஇப் பொய்யனேன் போதர
தடைபல உளஅவை சாற்றிட என்றால்

ஆயிரங் கோடிநா வாயினும் முடியா
இருந்து மற்றவை எண்ணிட என்றால்
உள்ளம் உடம்பெலாம் கொள்ளினும் போதா
எழுதஎன் றாலும் ஏட்டுக் கடங்கா
என்னினும் சிறிதே எழுதத் துணிந்தனன்
என்னெனில் யான்ஓர் ஏழை என்பதும்
தெளிவிலாச் சிறியரில் சிறியனேன் என்பதும்

(முதல் மனைவி : ஆணவம்)

இன்புடை அறிவே இல்லை என்பதும்
அன்புடை யாய்நீ அறியாத தன்றே
செம்பொடு களிம்பு செறிந்தது போன்றோர்

 


ஆணவக் கிழத்தி”
 அநாதியில் இறுகப்
பிரமரா க்ஷசிபோற் பிடித்துக் கொண்டனள்
சிவபூ ரணத்தைச் சிறிதும் காட்டாள்
ஜெகமெனும் ஏக தேசமும் தெரிக்காள்
எவ்விடத் திருளும் என்அகச் சுவரெனக்
கனஇருள் வடிவம் காட்டும் கொடியாள்
இரவிது பகல்இது இன்பிது துன்பிது
ஒளிவெளி இதுவென ஒன்றும் தெரிக்காள்
இறுக்கும் அரக்கி இவளொடும் இருந்தே
எளியேன் முயங்கிடல் என்தவம் என்கோ

 

(ஆணவம் பெற்ற பிள்ளை: அஞ்ஞானம்  )

முற்றும்
 அஞ்ஞான மூடப் பிள்ளை
ஒருவன் பிறந்தனன் ஒடிவான் அவன்தனால்
பானுவின் ஒளியைப் படரிருள் மூடல்போல்
என்அகக் கண்ணையும் என்புறக் கண்ணையும்
அங்கையால் மூடி அலக்கழிப் பான்எனைத்
தன்னைஇன் னான்எனத் தானும் காட்டான்
என்னைஇன் னான்என எண்ணவும் ஒட்டான்
ஏடுறும் எண்ணும் எழுத்தும் உணரான்
தாயினும் கொடியன் ஆயினும் என்தன்
விதியை நொந்து விருப்பின் வளர்த்தேன்

இவன்தன் வாழ்க்கையும் வாழ்க்கையோ என்ன
மதிப்பவர் ஆரெனை வையகம் மகிழ்ந்தே
வையக மகிழ்ச்சி வையகம் நெருப்பாம்
மருளுறு சிறுவன் வளர்நாள் தொடுத்தே
உறவகன் றார்யான் அறிவகன் றிட்டேன்

 

(இரண்டாம் மணவினைக் கர்த்தாவாக்கிய பசுபதி)

செப்புறும் தெய்வச் செயலென் கேனோ
இருதொ டக்குகள் இயலா தென்றே
தொடக்குப் பற்பல அடுக்கடுக் காயின
ஆரோ பசுபதி அவன்வடி வழலாம்
அங்கண் மூன்றாம் அருட்சத்தி மானாம்

மண்ணும் விண்ணும் மாலய னோரால்
நேடியுங் காணா நீள்பத முடியனாம்
எழுமலை எழுகடல் எழுபுவி எழுகார்
ஆன எவையும் அளித்துநோக் குவனாம்
ஊர்தரும் மாருதம் உயிர்ப்பாய் உளனாம்
உயிரெழு வகுப்பையும் ஊட்டியுறக் குவனாம்
ஊழிகள் தோறும் உள்ள ஒருவனாம்
உரைகொண் டோ தரும் உயர்வே தாகமம்
உற்ற கலைகள் உயரிய நிலைகள்
அண்ட பிண்டம் அவற்றின் துறைகள்

சாரும் இறைகள் சராச ரங்கள்
வளமுறு வர்ணா சிரம வகைகள்
வகுக்குறு வகுப்பினும் வதிவாழ்க் கையனாம்
சதிர்மா மாயை சத்திகள் கோடி
மன்னிய அரங்கிடை வதிபெற் றியனாம்
அவன்றான் யாரோ அறியேன் யானே
அறிதர வேண்டும் அப்பரு வத்தே

 

(இரண்டாம் மனைவி: மாயை)

மாயை என்னும் மாதினைக் கொணர்ந்தே
சிறுகருங் காக்கைக் குறுகுறுங் கழுத்தில்
கனம்பெறு பனங்காய் கட்டிய வாறெனக் 80
கட்டிப் புண்ணியங் கட்டிக் கொண்டனன்
விடுத்தெனைப் புண்ணியன் விலகலும் அவள்தான்
விண்ணவர் மண்ணவர் வியக்கும் உருக்கொடு
கொள்ளிவாய்ப் பேய்களோர் கோடி நின்றே
தடித்த குழவியைப் பிடித்தது போல
மற்றவள் என்னை மணந்து கொண்டனள்
பெண்ணடை அனைத்தும் பெருங்கதை யாகும்
அடுத்தவர் என்னை அந்தோ கொடிய
அருந்தளை ஏனென அறைந்தெனை அகன்றனர்
அகமெலாம் பகீரென அனந்த உருவாய்

அவ்வவ் வுருகொண் டணைத்துக் கெடுப்பள்
காற்றினை ஒருசிறு கரகத் தடைப்பள்
கடல்ஏ ழினையும் கடுகிடை முகப்பள்
வகைவகை யாயுடல் வனைந்து வகுப்பள்
வையக முற்றும் வாயில் மடுப்பள்
பகலிடை நள்ளிருள் இருக்கப் பண்ணுவள்
இருளில் பானுவை எவர்க்குங் காட்டுவள்
அண்டம் எல்லாம் அணுவிற் செறிப்பள்
அணுவை அண்டமாய் ஆக்கி நகைப்பள்
பொய்யை மெய்யாப் பொருந்தி மகிழ்வள்

பொருந்தும் மெய்யைப் பொய்யாச் செய்வள்
அடர்வஞ் சகக்கழங் காடற் பிரியாள்
காணாப் பன்னிலை கலையுடன் காட்டுவள்
இருளை இரிக்கும் இந்து ரவிகளைப்
படைத்திங் கியற்றுவள் பற்பல ஜாலம்
பிரமனை வலக்கைப் பிடிக்குள் அடக்குவள்
இடக்கையில் மால்பதி ஏந்தித் தரிப்பள்
தலையிடை உருத்திரன் தன்பதி தெரிப்பள்
குளிரெழு கடல்இவள் குளிக்குந் தடமே
அண்ட மெல்லாம் கொண்டையில் முடிப்பள்

ஜெகமெலாம் கலைக்குள் சேர்த்துக் கட்டுவள்
உடம்பிடை உரோமம் ஒவ்வொன் றிடையே
புவனமொன் றாகப் பொருந்தச் சமைப்பள்
எவரையும் கணத்தில் எய்தி மயக்குவள்
இக்கொடும் பாவி என்மனை யானது
பிடாரியைப் பெண்டாய்ப் பெற்றது போலும்
அனுகூ லச்சொலை அகத்திடை மதியாள்
அடிமடி பிடிப்பள் அரியவம் பிசைப்பள்
உறங்க விடாளவள் உறங்குபாய் சுருட்டாள்
மடிமாங் காயிடுங் கொடுமைக் கிளையாள்

சாகவும் விடாளவள் சார்பழி தளராள்
தவத்தில் இசையாள் பவத்தின் நசையால்
மருட்பேய் என்ன மதித்திட வாட்டிப்
படைத்தென் மானம் பறக்கச் செய்வள்
மான மகற்றியும் மனைவிட் டேகாள்
இரவும் பகலும் எனையிழுத் தணைப்பள்
இவளாற் படுமிடர் இம்மட் டிலவே
புகலப் படுமோ புகலின் இருசெவி
பொருந்துளங் கைத்திடும் போதும் போதும்
மல்லாந் துமிழின் மார்பின் மேலெனச்

சொல்லுவர் அதனால் சொல்வது மரபல

(மாயை பெற்ற பிள்ளைகளில் முதல் பிள்ளை: மனம் )

கொடுந்தவம் புரிந்தொரு குரங்குபெற் றாற்போல்
மலைக்கப் பெற்றிட
 மனம்எனும் இளைஞன்
உலக்கைக் கொழுந்தென ஒருவன் பிறந்தனன்
வருமிவன் சேட்டை வகுக்கவாய் கூசும்
விதிவிலக் கறியா மிகச்சிறிய னாயினும்
விண்மண் நடுங்க வினைகள் இயற்றிக்
காமக் குழியில் கடுகிப் படுகுழி
விழுமதக் களிறென விழுந்து திகைப்பன்
பதியை இழந்த பாவையின் செயல்போல்

கோபவெங் கனலில் குதித்து வெதும்புவன்
நிதிகவர் கள்வர் நேரும் சிறையென
உலோபச் சிறையில் உழன்று வாழ்வன்
வெற்பெனும் யானையை விழுங்கும் முதலை
முழுகிக் கடலில் முளைத்திடல் போல
மோகக் கடலில் மூழ்கி மயங்குவன்
மதுகுடித் தேங்கி மயக்குறு வார்போல்
மதத்தால் வீறி மதங்களில் வியப்பன்
பட்டினி இருக்கும் வெட்டுணி போல
மச்சரங் கொண்டு மகிழ்கூர்ந் தலைவன்

காசில் ஆசை கலங்குறா வேசை
எனினும் விழிமுனம் எதிர்ப்படில் அக்கணம்
அரிய தெய்வமென் றாடுவன் பாடுவன்
அணிகள் அணிவன் அடியும் பணிவன்
எலும்பைச் சுரண்டும் எரிநாய் போலச்
சுற்றுவன் பற்றுவன் தொழுவன் எழுவன்
கணத்தில் உலகெலாம் கண்டே இமைப்பில்
உற்ற இடத்தில் உறுவன் அம்மா
சேய்மை எல்லாம் செல்லற் கிளையான்
பித்தோங் கியஉன் மத்தனாய்த் திரிவான்

சொல்வழி நில்லான் நல்வழி செல்லான்
சேர அழைக்கில் சிரத்தே ஏறுவன்
வெட்டிலும் துணியான் கட்டிலும் குறுகான்
மலக்கி ஈன்ற மாதினும் பாவி
கள்ளது குடித்துத் துள்ளுவான் போல
மதத்தாற் பொங்கி வழிந்து துள்ளுவன்
முத்தந் தரல்போல் மூக்கைக் கடிப்பன்
மறைசொல் வான்போல் வளர்செவி கிள்ளுவன்
சற்றும் இரங்கான் தனித்துயில் கொள்ளான்
கூவிளிச் செய்வன் கூடுவன் பலரை

கூவி அதட்டினும் கோபங் கொள்வான்
இங்கு முள்ளான் அங்கு முள்ளான்
படைக்கு முன்னே பங்கு கொள்வான்
மடியில் நிறுத்தி வாய்மை வழங்கினும்
வண்ணான் கல்லிடை வறிஞர் சீலையை
ஒலித்திடல் போல உரத்திக் கத்துவன்
என்னைத் தாதையென் றெண்ணான் சொல்லும்
வாய்மை எல்லாம் வண்புனல் ஓவியம்
ஆகக் கொள்வான் அவன்பரி சுரைக்கேன்
பிறந்தஇப் பாவி இறந்தான் இலையே 180

சென்றநாள் எலாமிச் சிறுவனால் அன்றோ
வருசுகங் காணா வைச்சுமை நேர்ந்தேன்
திறந்திவன் செயலைத் தினைத்துணை விடாது
செப்பின் கற்கள் சிதைந்து கசியும்
கனத்த மரங்கள் கண்ணீர் பொழியும்
கடவுளர் இவன்செயல் காணு வாரேல்
இமையாக் கண்களை இமைத்திடு வாரால்


(மாயை பெற்ற பிள்ளைகளில் இரண்டாவது பிள்ளை: புத்தி)


காசிபன் மனைவிமுன் கடுந்தவம் புரிந்து
பையுடைப் பாம்பைப் பயந்தது போன்று
புத்தி என்னும் புத்திரன் தன்னை
 

ஈன்றனள் அவனோ எளியரில் எளியன்
வாய்மையும் தூய்மையும் வதிதரு வாழ்க்கையன்
தாயொடும் பழகான் தமையனோ டணையான்
தறுக ணாளரிற் குறுகியுற வாடான்
பாவம் என்னில் பதறி அயர்வான்
பாடு படற்குக் கூடான் உலகர்
கயங்கு நெறியில் உயங்கி மயங்குவன்
பாழ்நிகர் புந்தியர் பாலிற் பொருந்தான்
எப்பா டும்படான் எவரையும் கூடான்
கபடரைக் காணில் காதம் போவான்

கங்குலும் பகலும் கருதுவிவ காரத்
தடத்திடை வீழ்ந்து தயங்குறு நயங்கள்
சாருவன் கூறுவன் தருக்குவன் எவைக்கும்
அடங்குவன் வறிதே அமைதல் இல்லான்
இவனை மடியில் இருத்தித் திடமொழி
செப்பிடச் சோர்வு செறிவ தெனக்கே
இவன்பால் செய்வ தேதும் அறியேன்


(மாயை பெற்ற பிள்ளைகளில் மூன்றாவது பிள்ளை: சித்தம்)


செறிதரு கோளுள சேயிழை யாள்பினும்
நையப் புணர்ந்து நாள்பட வருந்தி
நாடி நாடி நாயைஈன் றதுபோல்

உணர்விலி என்றே உலகர் ஓதும்
சித்தம் என்னும் சிறிய குழவியைப்
பயந்து கரத்தில் பதற எடுத்தனள்
கரைதரு விண்ணீர்க் கடிதடம் ஆகக்
கதிர்விடும் உடுக்கள் கறங்குமீ னாக
மதியைத் தாமரை மலராய் மதித்ததில்
மூழ்கப் பிடிக்க முன்னங் கொய்திட
எண்ணுவன் எழுவன் எட்டுவன் சிறிதும்
நேரா திளைத்தே நிலைகள் பற்பல
வான்கண் டவன்போல் வாயாற் கொஞ்சுவன்

எனையும் கூவுவன் இவனிடர் பலவே
இடர்பல இயற்றி இழுக்கும் கொடியன்

(மாயை பெற்ற பிள்ளைகளில் நான்காவது பிள்ளை: அகங்காரம்)

இவன்செயல் நிற்க இவன்தாய் வயிற்றில்
தாருகன் என்னும் தறுகண் களிற்றைத்
தந்தமா யைக்குத் தனிமூத் தவளாய்
அகங்கா ரம்எனும் அடங்காக் காளை
அவனி மூன்றும் அதிர்ந்து கவிழக்
கடைமுறை பெற்றுக் களித்தனள் அவன்செயல்
கருதவும் பேசவும் கனிவாய் கூசுமே
கூற்றுவர் கோடி கொண்டுதித் தால்என

முளைத்து வளர்ந்தனன்
 மூத்தவன் மூழை
இளையவன் காளை எனும்இலக் கியமாய்
முன்னுள மூவரை முடுகி ஈர்த்தே
எண்ணில் விளையாட் டெழுப்புந் திறத்தன்
எல்லா ஆற்றலும் என்பால் உளதெனத்
தருக்குவன் இவன்தன் சங்கடம் பலவே
தன்னைத் தானே தகைமையில் மதிப்பன்
தரணியில் பெரியார் தாம்இலை என்பான்
மாதின் வயிற்றில் வந்தவன் எனாது
தானே பிறந்த தன்மைபோல் பேசுவன்

விடியும் அளவும் வீண்வா திடுவன்
வாயால் வண்மை வகைபல புரிவன்
ஓதவன் பெருமை ஈதவன் இயல்பே
சொல்லினும் கேளாத் துரியோ தனன்என
வானவர் தமக்கும் வணங்கா முடியன்
முன்வினை யாவும் முற்றும் திரண்டே
உருக்கொடிங் கியம்பொணா ஊறுகள் இயற்றுவன்
பிள்ளையும் அல்லன் கொள்ளியும் அல்லன்
இன்னும் இவன்செயும் இடர்பல வற்றை
எவர்பால் சொல்லி என்துயர் ஆற்றுவேன்

 

பாதகி துன்பம் பவக்கடல் ஏழும்
மக்கள் துன்பம் மலையோர் எட்டும்
நீளல்போ தாதென நெஞ்சில் நினைத்தோ
அவளது சூழ்ச்சி அற்புதம் அற்புதம்


(மூன்றாம் மனைவி: காமியம் என்னும் கன்மம்)

 

தொல்லை மரபில் தொழில்பல கற்ற
உலவுறு காமிய ஒண்டொடி என்னும்
கபடவஞ் சகியாம் களத்தினைக் கொணர்ந்து
பேய்பிடித் தவன்பால் பெரும்பூதம் கூட்டித்
தான்மணந் ததுபோ தாதிங் கென்றுபின்
மாற்றுகா லுக்கு மறுகால் ஆக

மாட்டி மிகமன மகிழ்ந்தாள் கூர்வேல்
கண்ணிணை யாள்நெடுங் கடல்சூழ் உலகில்
நிறைந்துள யாரையும் நெருங்குவள் கணத்தில்
இவள்செயும் வீரம் எண்ணி விளம்ப
உடலெலாம் நாவாய் உறினும் ஒண்ணா
ஒருத்தியே இரண்டங் குருகொடவ் வவற்றில்
பலவாய்ப் பலவுளும் பற்பல வாய்உரு
பொருத்த முறவே புரிவள்அவ் வவற்றில்
பலகால் புணர்ந்து பயன்வலி போக்கி
ஓருருக் கரும்பும் ஓருருக் காஞ்சியும்

ஓருரு அமுதமும் உண்ண அளிப்பாள்
விட்டிவை எல்லாம் பட்டினி யாக்குவள்
ஓருரு வடிவால் உயர்பஞ் சணைமேல்
அகமகிழ் சுரதம் அளித்துக் களிப்பள்
ஓருருத் தன்னால் உறுநிலப் பாய்மேல்
என்பு நோவ இழுத்தே அணைவள்
இங்ஙனம் பற்பல ஏழைக் குறும்புகள்
இயற்றி எவருமே ஏக்கங் கொளவே
இவள்முன் நம்செபம் என்றும் சாயா
அரகர என்றே அரற்றி மெலிவேன்

 

(காமியம் பெற்ற மூன்று பிள்ளைகள்: சத்துவம், இராசசம், தாமசம்)


இவ்வா றென்னை இழைத்திடுங் கொடியாள்
முக்குணம் மூன்றும் மூவுரு எடுத்தே
வயிறு கிழிய வந்த சிறார்கள்
மூவர் தமையுமம் மூவரும் அறியார்
வெலவரும் இவரால் மேலொடு கீழ்நடு
ஆய உலகும் அவ்வுல குயிரும்
பற்பல நெறியில் பாடுபட் டாரெனில்
எளியேன் பாடிங் கியம்பவும் படுமோ
இவர்கள்தம் இயல்பை எண்ணவும் பயமாம்
பாரெலாம் தாமாய்ப் பரவும் இவர்தாம்

ஏற்றுவர் இறக்குவர் எங்கு நடத்துவர்
இயற்றுவர் கீழ்மேல் எங்கு மாக
உவகை ஊட்டுவர் உறுசெவி மூடத்
திட்டுவர் பலவாய்த் திரண்டு திரண்டே
ஆற்றுறு மாற்றலை ஆற்றல் அரிதாம்
இவ்வுல கதனில் என்கண் காண
ஆயிழை யாளை ஆய்ந்து மணந்த
நாளில் தொடங்கிஇந் நாள்பரி யந்தம்
மனஞ்சலித் திடவே வலிய விலங்கினைத்
தாளில் இட்டுத் தயங்கி அலைந்தேன்

வீண்சஞ் சலமென விளம்பும் துகளை
முடிமூழ்க வாரி முடித்திட் டேனால்
ஈட்டிய பொருளால் இற்பசு ஈந்தே
எருமை தன்னை அருமையா யடைந்தனோ
ஆற்ற முடியா தலைவேன் எனவும்
குறித்தங் கெடுத்திடும் கூவல் நீரை
விழற்கு முத்துலை வேண்டிட் டிறைத்துத்
துணைக்கரம் சலித்தே துயருற் றேனோ
காற்றினும் விரைந்தே காரான் பாலைக்
கமரிடை ஏனோ கவிழ்த்தும் கலங்குவேன்

கலநீர் தன்னைக் கண்ணிற் சிந்திக்
கழறிக் குழறிக் கனிஉடல் களைக்கச்
சிலைநேர் நுதலில் சிறுவியர் வரும்ப
அருந்தொழில் செய்திங் கடைந்த பொருளைச்
சிவபுண் ணியத்தில் செலவிற் கலவாது
பெண்சிலு குக்குப் பெரிதும் ஒத்தேன்
பகலும் இரவும் பாவிகள் அலைத்தனர்
இவர்கள் சல்லியம் ஏற்பவர் ஆரெனக்
கூக்குரல் கொண்டு குழறுவன் எழுவன்
கிணற்றில் மண்ணைக் கெல்லப் பூதம்

தோன்றிய தென்னும் சொல்லை ஒத்தது
இவரூ டாட என்னால் முடியுமோ
அவளுக் கிவள்தான் அறியவந் தாளெனும்
மூன்று மாதரும் முழுப்பாய் சுருட்டிகள்
இவர்களில் ஒருவரும் இசையவந் தாரலர்
இச்சை வழியே இணங்கி வலிவில்
மணமது கொண்டு வாழ்ந்து வருகையில்
சண்டன் மிண்டன் தலைவர் என்ன
புவிமிசைப் பாதகர் போந்திங் குதித்தனர்
இவரால் நேர்ந்த எண்ணிலாத் துயரைப்

பொறுப்ப தரிதாம் வெறுப்பது விதியே
பாவ மின்னும் பற்பல உளவே


(குடிகூலி வீடு: உடல்)


குடும்பத் துடனே குடித்தனஞ் செய்யக்
குடிக் கூலிக்குக் கொண்ட மனையில்
கண்ட காட்சிகள் கனவிரோ தங்கள்
இராமா யணத்தும் பாரதத் தும்இலை
இழிவினும் இழிவது எண்சாண் உள்ளது
மலமும் சலமும் மாறா ஒழுக்கது
சுற்றினும் ஒன்பது பொத்தல் உடையது
சீழும் கிருமியும் சேர்ந்து கிடப்பது

என்புதோல் இறைச்சி எங்கும் செந்நீர்
ஆய்ந்து செய்த ஆகர முற்றது
அகலல் அணுகல் புகலல் இகலல்
அணிகள் துணிகள் அணிவ தாய
சால வித்தைகள் சதுரில் கொண்டது
கிடந்தும் இருந்தும் நடந்தும் பற்பல
பகரிம் மனையால் படும்பா டதிகம்


(மனைத் தலைவர்: வாதம் பித்தம் சிலேட்டமம்  )


இம்மனைத் தலைவராய் எழுந்த மூவர்
தறுகட் கடையர் தயவே இல்லார்
பணிசிர முதலாய்ப் பாதம் வரையில்

வாது செய்திடும் வண்கால வாதி
பெருகுறு கள்ளினும் பெரிதுறு மயக்கம்
பேதைமை காட்டும் பெருந்தீப் பித்தன்
கொடுவிடம் ஏறிடுங் கொள்கைபோல் இரக்கங்
கொள்ளா திடர்செய் குளிர்ந்த கொள்ளி இவர்கள்
என்னோ டிகல்வர் இரங்கார்
எனக்கு நேரும் ஏழ்மையும் பாரார்

 

(குடிகூலி: உணவு)


பிண்ட மென்னும் பெருங்குடிக் கூலி
அன்றைக் கன்றே நின்று வாங்குவர்
தெரியா தொருநாள் செலுத்தா விட்டால்
உதரத் துள்ளே உறுங்கனல் எழுப்பி
உள்ளும் புறத்தும் எண்ணெரி ஊட்டி
அருநோய் பற்பல அடிக்கடி செய்வர்
இவர்கொடுஞ் செய்கை எண்ணுந் தோறும்
பகீரென உள்ளம் பதைத்துக் கொதித்து
வெதும்பும் என்னில் விளம்புவ தென்னே

(மனைத் தலைவனின் வெளி விவகாரம்: மதமாச்சரியங்கள்)

சினமிகும் இவர்தம் செய்கைகள் கனவிலும்
நினைந்து விழித்து நேர்வதன் முன்னர்
மற்போர் கருதி வந்தவர் போல
ஓதும்வே தாந்தம் உரைப்பர் சிலபேர்

வாட்போ ரினுக்கு வந்தவர் போல
வயங்குசித் தாந்தம் வழங்குவர் சிலபேர்
தண்டா யுதப்போர் தாங்குவார் போல
இதிகா சத்தை இசைப்பவர் சிலபேர்
உலக்கைப் போரை உற்றார் போல
இலக்கண நூலை இயம்புவர் சிலபேர்
கற்போர் விளைக்கக் காட்டுவார் போலச்
சமய நூல்களைச் சாற்றுவர் சிலபேர்
விவகா ரங்கள் விளம்புவர் சிலபேர்

மடிபிடி போர்க்கு வாய்ந்தவர் போல
மததூ ஷணைகள் வழங்குவர் சிலபேர்
கட்குடியர் வந்து கலக்குதல் போலக்
காம நூலைக் கழறுவர் சிலபேர்
விழற்கு நீரை விடுவார் போல
வீண்கதை பேச விழைவார் சிலபேர்
இவர்கள் முன்னே இவருக் கேற்ப
குரல்கம் மிடவும் குறுநா உலரவும்
அழலை எழவும் அவரவர் தம்பால்
சமயோ சிதமாய்ச் சந்ததம் பேசி

இயன்ற மட்டில் ஈடுதந் தயர்வேன்

(மனைத் தலைவனின் உள் விவகாரம்: அன்றாடச் செயல்பாடு )

பின்னர் மனையின் பின்புறத் தேகிக்
கலக்கு மலத்தைக் கடிதே கழித்துக்
கல்லில் அழுக்கைக் கழற்றுதல் போன்று
பல்லின் அழுக்கைப் பண்பின் மாற்றிச்
சோமனைப் போலவெண் சோமனைத் துவைத்து
நன்னீர் ஆடி நறுமலர் கொய்து
தேவருக் கேற்ற திரவியங் கூட்டிப்
பாவையை வைத்துப் பாடி ஆடும்
சிறாரைப் போலச் செய்பணி யாற்றி

மண்ணின் சுவர்க்கு வண்சுதை தீட்டல்போல்
வெண்ணீ றதனை விளங்கப் பூசிப்
புகழ்ருத் ராக்கப் பூனை என்ன
உற்ற செபவடம் உருட்டி உருட்டிக்
குரண்டகம் போன்று குறித்த யோகம்
செய்த பின்னர் சிறிது நேரம்
அருத்தியிற் பூசனை அமர்ந்தங் காற்றி
ஊன்பிண் டத்திற் குறுபிண்ட மீந்து
குடிக்கூ லிக்கடன் குறையறத் தீர்த்துப்
பகல்வே டத்தால் பலரை விரட்டி
 

நித்திரைப் பரத்தையை நேர்ந்து கூடவும்
பொழுதும் சரியாய்ப் போகின் றதுவே.

//வள்ளலார் அருளிய குடும்ப கோரம் முற்றிற்று//