Friday, December 16, 2022

திருவள்ளுவர் திரு உருவப்பட வெளியீட்டு விழா சிறப்பு மலர் கட்டுரை - கலைஞர் மு . கருணாநிதி

 திருவள்ளுவர் திரு உருவப்பட வெளியீட்டு விழா சிறப்பு மலர் 5 பிப்ரவரி 1960 ஆண்டு வெளியானது.

அதில் முதமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் அப்போது எழுதிய கட்டுரை :

 

அன்புள்ள நண்பர்களே ! இன்று காலையில் என்னை வந்து அழைத்த நண்பர்கள் திரு வேணுகோபாலர் அவர்களுடைய இல்லத்திற்கு செல்லலாம் என்று தான் அழைத்தார்கள். ஆனால் என்னை அவர்கள் அழைத்து வந்த இடமோ வேணுகோபாலர் அவர்களுடைய இல்லம் அல்ல. வள்ளுவருடைய இல்லம். நான் வள்ளுவருடைய வீட்டிற்கு வந்ததாகவே உணர்கிறேன்.

 

இனி மீண்டும் சந்திக்க இயலுமா என்று கருதி நாளெல்லாம் ஏங்கி ஏங்கி நாம் நம்முடைய கண்களை மூடுவதற்கு முன்பு ஒரு முறை வள்ளுவரை கண்டு விட்டு கண்களை மூட மாட்டோமா என்கின்ற தமிழக பெருமக்களுடைய ஏக்கத்தை எல்லாம் துடைத்திடும் வகையில்  நம்முடைய அருமை நண்பரும் ஓவியப் பெருந்தகையாருமாகிய  திரு வேணுகோபாலர் அவர்கள் திருவள்ளுவர் பெருமானுடைய ஓவியத்தை தமிழகத்திற்கு - இல்லை உலகத்திற்கு தந்திருக்கிறார்கள்.

 

அத்தகைய ஒரு பெரும் முயற்சியை பாராட்டுகிற பட்டியலிலே நானும் ஒருவன் என்று எண்ணி இறும்பூதெய்கிறேன்.  பெருமை அடைகிறேன்.  ஏன் இறுமாப்புக் கொள்கிறேன் என்று கூட சொல்லுவேன்.

 

வள்ளுவருடைய உருவம் எத்தகையது என்கின்ற குழப்பம் தமிழகத்தில் பல நாட்களாக இருந்து வருகிறது.  சொல்லப் போனால் பல்லாண்டு காலமாக இருந்து வருகின்ற பெரும் போராட்டமாகவும் இருந்து வருகிறது தமிழகத்தில் புலவர்களுடைய உருவம் மட்டும் அல்ல தமிழகத்தினுடைய வரலாறு தமிழகத்துப் பெருமக்களுடைய சரித்திரம் தமிழகத்து முடி வேந்தர்களுடைய வரலாறு இவைகள்  குழப்பத்திற்கு ஆளாகியுள்ள வரலாறு தான், சரித்திரம் தான்,  ஓவியம் தான் என்பதை நாம் அறியாத ஒன்று அல்ல.  

சேரன் செங்குட்டுவனுடைய காலம் எது? பாண்டிய நெடுஞ்செழியினுடைய காலத்திலே வாழ்ந்த வேறு நாட்டு மன்னர்கள் யார்?  என்கின்ற பல்வகையிலே பல பல குழப்பங்கள் நாட்டிலே உண்டு.  அத்தகைய சரித்திரங்கள் இன்று நாட்டிலே குழப்பமிக்க நிலைமையிலே தான் இருந்த வருகின்றன.  

 

இந்த சரித்திரங்களிலே உள்ள குழப்பம் தவிர்க்கப்பட்டு வரலாற்றிலேயே உள்ள சிக்கல்கள் தவிர்க்கப்பட்டு ஒரு நிர்ணயமான வரலாறு அது போலவே ஒரு நிர்ணயமான உருவம் புலவர்களுக்கும் அது போலவே மன்னர்களுக்கும் தரப்பட வேண்டும் என்கின்ற கருத்து உடையவர்களிலேயே நானும் ஒருவன்.  

 

அப்படி தரப்படுகின்ற உருவம் எல்லோராலும் ஒப்புக்கொள்ளக்கூடிய நல்ல உருவமாக நல்ல வரலாறாக அமைய வேண்டும் என்கிற கருத்தை நான் பலமுறை பல மேடைகளிலேயே எடுத்துச் சொல்லி இருக்கிறேன்.  அதுபோலவே பல ஏடுகளிலே எடுத்து எழுதியிருக்கிறேன்.  அந்த நிலைமையிலே தான் இன்றைய தினம் நான் மிக மிக மகிழ்ச்சி அடையக் கூடிய விதத்தில் திருவள்ளுவர் பெருமானுடைய உருவத்தை நமது ஓவிய நண்பர் வேணுகோபால் அவர்கள் தீட்டி இருப்பது கண்டு பெரு மகிழ்வு அடைகின்றேன்.  

 

வள்ளுவருடைய திருக்குறள் தான் அவருடைய ஓவியம், அவர் இயற்றி தந்த 1330 அருங்குறள் பாக்கள்  தான் வள்ளுவருடைய உருவத்தை நமக்கு காட்டக்கூடியவை என்கின்ற எண்ணத்தை தான் இதுவரை நாம் கொண்டிருந்தோம்.  இனி இவர்தான் வள்ளுவர் என்று அகிலத்திற்கு நாம் அறிவிக்கக்கூடிய வகையிலே அழகான ஒரு ஓவியத்தை நமக்கு வேணுகோபால் அவர்கள் தந்திருக்கின்றார்கள்.  

 

நான் வள்ளுவருடைய உருவத்தை காணுகின்றேன்.  நம் எதிரே அமர்ந்திருக்கின்ற அந்த வள்ளுவர் பெருமானுடைய ஓவியத்தை நான் காண்கின்றேன், காணுகின்ற நேரத்திலே அவருடைய கண்கள் உமிழ்கின்ற  அந்த ஒளியை என்னால் காண முடிகிறது.  சுவைக்க முடிகிறது.

“அமிழ்தினு ம் ஆற்ற இனிதே தம்மக்கள்  

சிறுகை அளாவிய கூழ்”

என்கின்ற குழந்தைக்காக அவர் பாடிய குழந்தைக்காக அவர் எழுதிய அந்த அருமையான குறளை  நான் எண்ணிப் பார்க்கிற நேரத்தில் எதிரே தவழ்ந்து வருகிற குழந்தையை வள்ளுவர் பார்த்து ரசித்து அந்த பாடலை எழுதுவது போலவே அவருடைய கண்ணொளி அமைந்திருப்பதை நான் காண முடிகின்றது.  

“கைவேல் காளிற்றோடு  போக்கி வருபவன்

மெய்வேல்  பறியா நாகும்”  

என்ற அந்த வீர உரைகள்  அந்த வீர உரைகளை சிந்திய  அந்த வேல்கள்தான்  வள்ளுவருடைய இதழ்கள்.  அதை ஓவியர் வேணுகோபால் அவர்கள் அழகாக சித்தரித்திருக்கின்றார்கள்.

 

வள்ளுவருடைய கையிலே பிடித்து இருக்கின்ற எழுத்தாணியும் , இன்னொரு கரத்திலே இருக்கின்ற சுவடியையும் காணுகின்ற நேரத்தில், சுவடியை அணைத்து இருக்கிற கரத்திலே புடைத்து இருக்கின்ற நரம்புகளையும்,  அதுபோல எழுத்தாணி வைத்திருக்கின்ற கரத்திலே புடைத்து இருக்கின்ற நரம்புகளையும்  காணுகிற நேரத்தில் ஓவியர் எவ்வளவு சிந்தித்து சிந்தித்து எந்த அளவிற்கு நெஞ்சத்திலே வள்ளுவருக்காக இடம் அமைத்து  அந்த ஓவியத்தை எழுதியிருக்கிறார் என்பதை நான் எண்ணுந்தோறும் எண்ணுந்தோறும்  அவரை பாராட்டுவதற்கு கடமைப்பட்டிருக்கிறோம்.

 

இப்படிப்பட்ட ஒரு நல்ல காரியத்தை தமிழகத்திற்கு செய்கின்ற ஓவியர் வேணுகோபால் அவர்களை அறிஞர்கள் பலரோடும் சேர்ந்து நான் பாராட்டுவதற்கு கடமைப்பட்டிருக்கிறேன்.  

“இனிய உளவாக இன்னாத கூறல்

கனியிருப்ப காய் கவர்ந்தற்று”

 

 

என்கின்ற வள்ளுவருடைய குறளையே  இன்று வள்ளுவருடைய ஓவியத்தை பற்றி யாராவது கூறுவார்களேயானால் அவர்களுக்கு நான் சமர்ப்பிப்பதற்கு கடமை பட்டிருக்கிறேன்.  

“பல்லார் முனியப் பயனில சொல்லுவர்

எல்லாரும் எள்ளப் படும்”

என்கிற கூறலாய்த்தான்  நான் அவர்களுக்கு எடுத்துக் காட்டுவதற்கு விரும்புகிறேன்.

இந்த வள்ளுவருடைய உருவம் தமிழ் நாட்டாரால், அகில உலகத்தாரால் பாராட்டப்பட வேண்டிய போற்றி ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய ஒரு உருவம் என்று நான் எடுத்துச் செல்ல விரும்புகிறேன்.  

 

இனி உலகத்தில் வள்ளுவருடைய பெயரோடு இன்னும் இரண்டு பெயர்கள் இதுவரை நினைத்தது போலவே நிலைக்கும்.  திருவள்ளுவர் திருக்குறள் ஓவியர் வேணுகோபாலர் என்னும் மூன்று பெயர்களும் தமிழகத்து மக்களால் மறக்க முடியாத பெயர்கள்

வாழ்க  வள்ளுவர் வாழ்க வேணுகோபாலர்

 

திராவிடத்தின் தியாகத் திருமகன்

தியாகம்.எனப்படும் ஈகம் தமிழர்களின் வாழ்வில் ஒரு அங்கமாக பாவித்து வாழ்ந்த வரலாறு தமிழ்நாட்டுக்கு உரியது. தியாகத்தையும், தியாகிகளையும் மறவாமல் மதித்துப் போற்றும்.அன்பின் அடையாளமாக நடுகல் வழிபாடு உருவானது. இக்காலத்தில் நினைவுச் சின்னங்கள் வைக்கப்படுகின்றன தங்கள் .உறவின் முறையில்.மதிக்கப்படும் பெரியாரைப் போற்றும் விதமாக அவர்கள் புதைக்கப்பட்ட அல்லது எரியூட்டப்பட்ட மயான வளாகத்தில் அவர்களுடைய குடும்பத்தினர் இக்காலத்திலும் நடுகல் போன்று நினைவுச்சின்னங்கள் வைக்கின்றார்கள்.

 

திராவிட முன்னேற்றக் கழகம் அறிஞர் அண்ணா அவர்களுடைய தலைமையில் ஆட்சி பொறுப்பு ஏற்ற பிறகு முதல் முதலாக இரண்டாவது உலகத் தமிழ் மாநாடு சென்னையில் நடைபெற்றபோது தமிழறிஞர்கள் 10 பேருக்கு.சென்னை கடற்கரை சாலையில் நினைவுச் சின்னங்களாக சிலைகள் வைக்கப்பட்டன. அண்ணாவின் மறைவுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த கலைஞர் அவர்கள், தமிழ்நாட்டில் பல்வேறு தலைவர்களுக்கு தமிழ் அறிஞர்களுக்கு சான்றோர்களுக்கு நினைவுச் சின்னங்கள், மணிமண்டபங்கள், சிலைகள் என்று நிறுவியதை  யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது. ஆனாலும், சிலர்        தி மு கழகத்தின் மீது சேற்றை வாரி வீசும் விதமாக பேசும் தன்மை இருக்கிறது. 

 

மறைந்த தியாகிகளைக் குறிப்பாக இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களை மதிப்பதில்லை என்று உண்மைக்கு மாறான கருத்தை பரப்புவதில் இன்பம் காணும் ஈனப்பிறவிகள் இருக்கிறார்கள். 09-01-1972.அன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற சுதந்திர போராட்ட வீரர்களின் நான்காவது மாநில மாநாட்டில் அன்றைய தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அந்த மாநாட்டில்.கலந்து கொண்டவர்கள்     .தி மு கழகத்தை, அறிஞர் அண்ணாவை, கலைஞரை வெகுவாக பாராட்டி பேசினார்கள். அந்த மாநாட்டில்.கலந்து கொண்ட சுதந்திர போராட்ட வீரர்களில் முக்கியமானவர்கள் திரு நா.சோமையாஜுலு, திரு.கிருஷ்ணசாமி பாரதி, காங்கிரஸ் முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திரு.டி,ஜி. கிருஷ்ணமூர்த்தி. திரு சுத்தானந்த பாரதி போன்றவர்கள் ஆவர். 

 

மாற்றுக் கட்சியாக இருந்தாலும் சுதந்திர போராட்ட வீரர்களைப்  பற்றி அக்கறையோடு கவனப்படுத்தி தம்முடைய ஆட்சிக் காலத்தில் அவர்களுக்கு உதவிகளைச் செய்தவர் அறிஞர் அண்ணா. எதிர்க் கட்சியாக இருந்த போதே சீனப் போரின் போது நிபந்தனையின்றி ஒன்றிய அரசுக்கு ஒத்துழைத்து நிதி சேர்த்துக் கொடுத்தவர் அண்ணா. அவருடைய ஆட்சிக்காலத்தில்தான் வாஞ்சிநாதய்யரின்  மனைவியாருடைய கோரிக்கையை ஏற்று விடுதலை போராட்ட வீரர் என்று அங்கீகரிக்கப்பட்டு அந்த அம்மையாருக்கு தியாகிகள் பென்ஷன் எனப்படும் உதவித்தொகை வழங்கப்பட்டது.. அதுவரை காமராசர் தலைமையிலான காங்கிரசார் ஆட்சி காலத்திலேயும் வாஞ்சிநாத அய்யருடைய  மனைவியின் கோரிக்கை ஏற்கப்படாமல் கிடந்தது. வாஞ்சிநாதன் அவருடைய செயல்பாடுகள் சுதந்திர போராட்ட.த்தின் பங்கு அல்ல என்று காரணம் காட்டி உதவித்தொகை மறுக்கப்பட்டது என்றாலும் கருணையின் அடிப்படையில் காங்கிரஸ் ஆட்சியில் செய்யாததை ஆட்சிக்கு வந்தவுடன் அண்ணா செய்தார்.

 

கலைஞருடைய ஆட்சிக்காலத்தில்.அப்போது 1972 ஆம் ஆண்டிலேயே 7200 க்கு மேற்பட்டவர்களுக்கு  உதவிப் பணம் வழங்கப்பட்டது என்பதை இந்த மாநாட்டில் பேசியவர்கள் குறிப்பிட்டுப் பாராட்டினார்கள். திமுகழக ஆட்சியில்தான் ஆகஸ்ட் 15 விடுதலை நாள் கோட்டை கொத்தளத்தில்.கொடி மரத்தின் கீழே அனைத்து கட்சியினரும் பங்கேற்கும் பொது விழா ஆனது.  காந்தியடிகளின் பிறந்தநாளும்  பண்டிதர் நேருவின் பிறந்த நாளும் பொது விழாவாக கொண்டாட உத்தரவிட்ட அரசு கலைஞர் அரசு. காமராஜர் பிறந்தநாளை கல்விநாள் என்று அறிவித்து எல்லோரும் கொண்டாடும்படி செய்தவர் கலைஞர். ஆனால் சில நன்றி கெட்ட  நயவஞ்சகக் கூட்டம் இன்னும் கலைஞரை ஏதோ காமராசருக்கு எதிரி போன்று சித்தரிக்க முயல்கிறது. காமராஜருக்கு முதல் முதலாக சிலை வைத்தது திமுகழக நிர்வாகத்தில் இருந்த சென்னை மாநகராட்சிதான். பிரதமராக இருந்த நேருவை அழைத்து சிலைத் திறப்பு விழாவை மிகச் சிறப்பாகச் செய்தது திமுக.

 

வீரபாண்டிய கட்டபொம்மன் வாரிசுகளுக்கு வழங்கப்பட்ட.உதவித்தொகை 1952 ஆம் ஆண்டு முதல் நிறுத்தப்பட்டு கிடந்தது. ஆனால் அது கலைஞர் முதலமைச்சர் ஆன  பிறகு அறிவிக்கப்பட்டு 18-2-1969 முதல் உதவித்தொகை கொடுக்கப்பட்டது. 

 

‘முன்பு நடந்த சுதந்திர போராட்டத்தில் நீ கலந்து கொண்டாயா?’  என்று கேட்பவர்களுக்கு கலைஞர் சுதந்திர போராட்ட.வீரர்களின் மாநாட்டில் அப்போது பதில் சொன்னார். 

 

சமுதாய ஆதிக்கக்காரர்களை, பொருளாதார ஆதிக்க சக்திகளை, வறுமையை கல்லாமையை  இல்லாமையை எதிர்த்துப்  போராடும் விடுதலைப் போராட்டத்தில் நாங்கள் பங்குப் பெற்று வருகிறோம்என்று பதில் சொல்லி மேலும்கூறுகிறார்எங்கள் பாரம்பரியம் கூட விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட.பாரம்பரியம்தான்.  சுதந்திர போராட்டத்தின் அங்கமான வைக்கம் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டவர் எங்கள் பெரியார். அந்த பெரியார் கூட ஆகஸ்ட் 15 ல் வெள்ளையன் வெளியேறியபோது அது துக்க நாள் என்று அறிவித்தார். அது தூக்க நாள் அல்ல இன்ப நாள் என்று எழுதி பெரியாருடன் கருத்து மாறுபாடு கொண்டு.வெளியே வந்த பேரறிஞர் அண்ணாவின் தம்பிகள் நாங்கள். ஆகவே எங்கள் பரம்பரையில் பழுது இல்லை பாவம் இல்லைஎன்று முத்தாய்ப்பாக அந்த மாநாட்டில் முழங்கியவர் கலைஞர். 

 

தியாகத்தை மறவாத திராவிடத் திருமகன் கலைஞர் என்பது வரலாறு காட்டும் உண்மை என்பதை உள்ளத்தில் நல்ல உள்ளங்கள் உணர்ந்தே இருக்கும். 

 


Thursday, December 1, 2022

இந்தி படித்தால் தமிழ் அழியுமா ?

 இந்தி படித்தால் தமிழ் அழியுமா என்ற கேள்வியுடன் தமிழ் ஒன்றும் வலிவு குன்றியதில்லை அதனை அழிக்க முடியாது. வட மொழி வந்ததே அதனால் என்ன கெட்டுப் போயிற்று என்றும் கூட கேட்கிறார்கள். வடமொழி சமசுகிருதத்தால் வாடாத தமிழ், பின்னர் உருது தெலுங்கு என்று மாறி ஆங்கிலம் வந்தும் தமிழ் அழியவில்லையே ! இந்தியால்  அழிந்துவிடும் அளவு  ஆற்றல் குன்றிய மொழியா தமிழ் என்று கேட்பவர்களும் உண்டு.

தொல்காப்பியம் தொடங்கி திருக்குறள் தொடர்ந்து ஐம்பெரும் காப்பியங்கள் சங்க இலக்கியங்கள் எல்லாம் அழிந்து விடவில்லையே என்பவர்களும் உண்டு. சமாசுகிருதத்தால் தமிழ் அழியவில்லை என்போர் எண்ணிப் பார்க்கட்டும். ஆட்சியாளர் செல்வாக்கால் வடமொழி வளர்ந்து வடமொழியாளர் ஏற்றம் பெற்றனரா  இல்லையா ?  தமிழில் வளர வேண்டிய மெய்யியல் கோட்பாடுகள்  தத்துவங்கள் ஆட்சியாளர் செல்வாக்கால்  வடமொழியில் இயற்றப்பட்டதா இல்லையா?  இதை தமிழ்நாட்டில் வாழ்ந்தவர்களே செய்தார்களா இல்லையா ?  தமிழர்களின் அறிவு வேற்றார் மொழியில் எழுதப்பட்டக் காரணத்தால் தமிழின் பெருமை குன்றியதா இல்லையா ?

இந்நாளில் இந்திக்கு வால் பிடிக்கும் இழிக்குணத்தார் இருப்பது போல் அன்றைக்கும் இருந்துள்ளனரே.  . குயக்கோடனார் என்னும் குணக்கேடன் கதை ஒன்று உண்டு. நக்கீரர் காலத்து புலவர்.  அவர் நக்கீரர் முன்பு “ஆரியம் நன்று தமிழ் தீது “ என்று உரைத்தாராம். நக்கீரர் கோபமடைந்து குயக்கோடனாரை மந்திரச் செய்யுளால் உயிரிழக்கச் செய்து பின்னர் மன்னித்து உயிர்ப்பித்தார் என்ற கதையின் கருத்து சிந்திக்கத் தக்கது .

தமிழில் எழுதி தமிழால் பிழைத்தவர்கள்  பிழைப்பவர்கள் கூட இந்தித் திணிப்பை ஆதரிக்கும் போக்கு இன்றைக்குப் புதிதல்ல. அவர்களை அறம்பாடி அழிக்கவல்ல நக்கீரர்கள் இல்லாமல் இருப்பது நம் நாட்டுக்கு கேடாக விளைந்தது.  அன்றைக்கு  நக்கீரர் தமிழைப் பழித்தவனை தண்டித்து,  பின் மன்னித்து விட்டது மாபெரும் தவறாகி விட்டதோ என எண்ணத் தோன்றுகிறதா இல்லையா ?

இறை வாழ்த்தும் வணக்கமும் வழிபாடும் அர்ச்சனையும் தமிழில் இல்லாமல் போனதே ஏன்? ஆட்சியாளர் சமாசுகிருதத்திற்கு சாமரம் வீசியதால்தானே ? தமிழ் - ஆரிய மொழித் துறைப் போராட்டம் புதிதல்ல. அது இந்தியின் மூலமாகத் தொடர்கிறது

முகமதியர் ஆட்சிக் காலத்தில் உருது மொழி வந்த போது ஆட்சி முறைகளும் அவற்றுக்கான சொற்களும் உருது மொழியில் வழங்கப்பட்டது. தமிழில் போதிய அளவு ஆட்சி சொற்கள் இல்லாமல் போனது. தமிழால் முடியாதா? தமிழால் முடியும் என்று தான் தமிழ் ஆட்சிச் சொற்களஞ்சியம் ஒன்றை தனியாக உருவாக்க வேண்டிய நிலை இப்போது வந்தது.

அதேபோன்று விஜயநகர தெலுங்கர்களின்  ஆட்சி காலத்தில் தமிழில் வளர்ந்திருக்க வேண்டிய இசை தெலுங்கில் வளர்ந்தது. அது மட்டும்அல்ல.  தமிழ் சங்கீதத்திற்கு ஏற்ற பாஷை அன்று என தமிழர்களே சொல்லும் நிலை உருவானதே எங்ஙனம்? தமிழிலே  பாடச் சொல்லி தமிழர்களையே வேண்டிக் கொள்வதற்கு தமிழிசை இயக்கமே உருவாகும் நிலை எப்படி வந்தது?

ஆங்கிலேயர் ஆட்சியில் ஆங்கிலம் என்ன செய்தது? அறிவியல், வரலாறு, ஆட்சித்துறை கல்வித்துறை அனைத்திலும் செழித்து வளர்ந்தது. தமிழுக்கு இத்துறைகளில் ஆளுமை  இல்லை என்று பேசும்படி  நேர்ந்தது. சிலர் கருதுகிறார்கள் தமிழில் கதையும் கவிதையும் ஏராளம் இருப்பதால் தமிழ் அழியாவில்லை என்று. தமிழ் ஆட்சி மொழியாக இல்லாததால் தமிழின் வளர்ச்சி தடையுற்றது. நல்ல வேளையாக ஆங்கிலம் உலக அறிவை நமக்கு உணர்த்தியது. கொஞ்சம் விழிப்படைந்தோம் ஆட்சி அரசு அதிகாரத்தின் மூலமாக தமிழர்கள் மீது ஆதிக்கம் செலுத்தப்பட்டு வந்ததை சிறிது உணர்ந்தோம்.

தமிழின் வளர்ச்சித் தடைபட காரணம் என்ன என்பதை சிந்திக்கும் வேளையில் ஆங்கிலேயரிடம் இருந்து அரசியல் விடுதலைப் பெற்றால் நமக்கான மொழி நாகரீக உலகில் நயம்பட வளரும் என்று எண்ணிய நேரத்தில் இந்திய தேசியம் 1937-38 ஆண்டில்  இந்தி மொழியை திணித்தது. இந்தித் திணிப்புக்கு எதிரான முதல் போராட்டம் வெடித்தது. அப்போது அடங்கி பதுங்கி பின்பு அடிக்கடி வெளிவரும்  அந்த நச்சு அரவத்தை ஒரேயடியாக அடித்து வீழ்த்த முடியவில்லை. இந்திய அரசு ஏதோ ஒரு வகையில் திட்டமிட்டு இந்தியைத் திணித்து வருகிறது. அவர்களின்  ஓரவஞ்சனை செயல்களால் அந்த பாம்பு ஒளிந்து கொண்டுவிடும்.  அப்போதைக்கு அப்போது தலைக்காட்டும் போதெல்லாம் தமிழர்களின் எதிர்ப்பு என்னும் தடியடிபட்டு ஓடிவிடும்.

இருபதாம் நூற்றாண்டு தொடக்கத்தில் தமிழின் பெருமையும் திராவிடத்தின் அருமையும் உணர தொடங்கியதால் தமிழ் மொழி மற்றும் இன உணர்ச்சியை ஓரளவு பெற்றோம். அதனால் இந்தித் திணிப்பை  எதிர்த்தோம் எதிர்க்கிறோம்  எதிர்த்துக் கொண்டேயிருப்போம்.

தமிழர் மட்டுமே எதிர்க்கிறார்கள் என்று ஒரு வாதம் உண்டு. அந்த நிலை மாறிவிட்டது. தமிழுக்கும் வடமொழிக்குமானப் போராட்டம் பலநூறு ஆண்டுகளாக நடைபெறுவது. அந்த போராட்டத்தில் தோற்றபோது விளைந்தவை மற்ற மொழிகள். அம்மொழிகள் சமசுகிருத மறுபதிப்பான இந்தியை ஏற்பதில் ஒருகாலத்தில் தயக்கம் இல்லை. ஆனால் இப்போது அவர்களும் மொழிவழி தேசியஇனமாகத் தங்களைக் கருதத் தொடங்கிவிட்டார்கள். சோறுமட்டும் பெரிதல்ல  தன்மானமும் தேவை என்பதைத் தெரிந்து கொண்டார்கள். இப்படியேவிட்டால் இந்தி தாய்மொழி அல்லாதவர்கள் இரண்டாம்தர  மக்களாகிவிடுவார்கள் என்பதை அறிந்து இந்திக்கு எதிராக கொடிபிடிக்க தயாராகி வருகிறார்கள்.

இதுதான் இன்றைய நிலை. இந்தி எவ்வளவுக்கு எவ்வளவு தீவிரமாக திணிக்கப்படுமோ அவ்வளவுக்கு அவ்வளவு இந்திய தேசியத்திற்கு எதிரான கருத்து வலு பெறும் என்பதை ஒன்றிய அரசு உணரவேண்டும்.