அவிசொரிந்
தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று
உயிர்பலியிட்டு நெய் போன்ற பொருள்களோடு அதனை
நெருப்பில் இட்டு ஆயிரக் கணக்கில் யாகங்களைகளைச் செய்து அவற்றை அவிர்ப்பாகமாக
உண்பதால் கிடைக்கும் நன்மையைக் காட்டிலும்
ஒரு உயிரையும் கொன்று உண்ணாமல் இருந்தாலே நல்லதாகும்.
யாகம் என்ற பெயரால் உயிர்பலி இட்டவர்களை கண்டிக்கும்
தன்மையில் எழுதப்பட்ட குறள் இது.
தமிழர் மரபில் யாகமும் வேள்வியும் அக்காலத்தில் இல்லை என்பதால் அவ்வித புதுப்
பழக்கம் அயலவர் பண்பாட்டுப் படையெடுப்பால் வந்ததென இக்குறள் உணர்த்துவதாகக் கருதலாம்.
இதைக் குறிப்பிடும் போது சிலர் பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி என்ற
பாண்டிய மன்னன் பற்றியும் அவன் செய்த யாகங்கள் பற்றியும் குறிப்பிடுவர்.
ஆயிரம் வேள்விகளைச் செய்தவனாகக் கருதப்படும் இம்மன்னனைப் பற்றி சின்னமனூர் செப்பேடு "பாண்டியன் ஒருவன் கடல்வற்ற
வேல் எறிந்தான். பிரளயத்தில் உலகம் அழிந்தது. எங்கும் நீர் சூழ்ந்தது. பூமியில்
நிலப்பரப்பு இல்லை. சூரியன் கதிர்கள் பட்டு நிலபரப்பு உருவாகி மனிதவர்க்கம் உருவாக
ஆரம்பித்தது. அது, ஒரு பாண்டிய மன்னரான சத்தியவிரத பாண்டியன்
மற்றும் சப்தரிஷிகள் மூலிகைகள் என காக்கப்பட்டு பகவான் மச்ச அவதாரம் இன்று
இருந்துவரும் இந்து மகா சமுத்திரத்தில் நிகழ்ந்தது. அந்த ஒரு பாண்டியனின் பெயர்
சத்யவிரத பாண்டியன். இவனே,பிரளயம் முடிந்து பின்னாளில்,
7- வது மநுவாக நியமிக்கப்பட்டார்.” என்றும் வேள்விக்குடிச்
“செப்பேட்டில் கொல்யானை பலஓட்டிக் கூடாமன்னர் குழாந்தவிர்த்தபல்யாக முதுகுடுமிப்
பெருவழுதி” என்றும் குறிப்பிட்டு உள்ளதாகச் சொல்வார் உண்டு.
மதுரைக் காஞ்சியைப் பாடிய மாங்குடி
மருதனார் இவனது சிறப்பினைப் பற்றிப் பாடுகையில “பல்சாலை முதுகுடுமித் தொல்ஆணை
நல்லாசிரியர் புணர்கூட்டுண்ட புகழ்சால் சிறப்பின்” — (759,61,62)
என்றும் இன்னும் சிலப் புறநானூற்றுப் பாடல்களில் இப்பெயர்க் குறிப்புகள் உண்டு
என்பதும் கவனிக்கத்தக்கதே.
அதைப் போலவே இராசசூயம் வேட்ட
பெருநற்கிள்ளி என்னும் சோழ மன்னன் ராஜயசூய யாகம் செய்தான் என்றெல்லாம் பாடல்
பதிவுகள் உள்ளன. இவற்றைக் கொண்டு சிலர் யாகம் தமிழரின் சடங்கியல் சார்ந்தது என்று
நம்புகின்றனர். வீரன், தீரன், கேசரி,
பராங்குசன், பராந்தகன் என்றெல்லாம் வீரத்தின் அடையாளங்களைப் பெயருடன் ஒட்டிக்
கொண்டவர்கள் போரில் கிடைத்த வெற்றி அவ்வரசர்கள் செய்த யாகங்களால் என்று
நம்பவைக்கப்பட்டுள்ளது.
யாகத்தை வேள்வி என்றும் வேட்டல்
என்றும் குறிக்கப்படுகிறது. வள்ளுவர் வேட்டல் என்ற சொல்லைக் குறிக்கின்றார்.
வேட்டல் என்றால் வேண்டியதைக் கோரி யாகம் செய்வது. யாகத்தீயில் அவி என்றும்
ஆகுதி என்றும் கூறப்படும் யாகப் பொருள்களை
பொசுக்குவது ஆகும். அப்படிப் பொசுக்கும் பொருள்களில் முக்கியமானது பிராணிகள்
ஆகும். குதிரை, மாடு, ஆடு போன்ற விலங்குகள் மட்டுமின்றி மனிதர்களும் பலியிடப்பட்டு யாகநெருப்பிலிட்டு நெய்யுடன் சேர்த்து வாட்டி வதக்கி உண்டதாகத் தெரிகிறது.
இது ஆரியரின் பழக்கமாக இருந்திருக்கின்றது. அப்பழக்கம் அவர்கள் ஓரிடம் தங்கி வாழா
நாடோடி வாழ்க்கையின் எச்சமாகவும் அடையாளமாகவும் பின்பற்றி வந்திருப்பதாகக்
கொள்ளலாம். நாடோடி வாழ்க்கையில் உணவை சுட்டு சமைத்து தின்பதற்கு தீயை அணையாமல்
ஓம்பும் கட்டாயம் இருந்ததால் அவர்கள் செல்லும் இடமெல்லாம் தீயை சுமந்து அங்கே சென்று
பற்றவைத்து அதில் உணவைப் பொசுக்கி உண்டிருக்கக் கூடும். அது அவர்களுக்கு யாகம்.
இத்தகையப் பழக்கம் பழங்காலத்தில்
எல்லா இனக்குழுக்களிடமும் உலகம் முழுதும் இருந்திருக்கிறது. அதனை ஆங்கிலத்தில் Campfire என்று சொல்வார்கள். இக்காலத்தில் இது நெருப்புக்களியாட்டம் என்று பொருள்படுகிறது. இது
திறந்தவெளியில் இரவில் நெருப்புமூட்டி இறைச்சியை பொசுக்கி உண்பதும் மதுக்குடியுடன்
ஆட்டம்பாட்டம் போடுவதும் முதன்மையாக இருப்பதை அறிகிறோம். வீட்டினுள் உணவை சுட்டுத்
தின்னும் புது முறைக்கு Barbeque என்கிறோம். அதற்கான துணைக்கருவிகள் பலவித தினுசுகளில்
இப்போது காண்கிறோம். இவையெல்லாம் ஆதிமனித வரலாற்று செயல்பாடுகளின் வெளிப்பாடு.
ஸ்வரடிக்கரன்ஸ்
(Swartkrans - fossil-bearing
cave - South African National Heritage Site) என்னும் இடத்தில் நெருப்பில் சுடப்பட்ட
மான்களின் எலும்புகள் கிடைத்தன. அவைகள் 15 இலச்சம் ஆண்டுகளுக்கு முன்னர்
நெருப்புக்களியாட்டத்தில் மானிறைச்சியைச்
சுட்டுத்தின்ற மிச்சஎலும்புகள் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். வரலாற்றில் முதல் நெருப்புக்களியாட்டம் அது என்றும்
குறிப்பிடுகின்றனர்.
தென் அமெரிக்காவில் ஓண்டர்வேற்க் (Wonderwork) என்னும் குகைக்குள் 10 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் சுட்டெரித்த
எலும்புத் துண்டுகள் கிடைத்திருக்கின்றன. இவைகள் அக்காலத்தில் ஆதிமனிதர்கள்
கட்டுப்படுத்தப்பட்ட நெருப்பினைக் கையாளும் திறன் கொண்டவர்களாக இருந்ததற்கு
சான்றுகள் என்று கூறப்படுகிறது.
இந்த முறைதான் நாகரீகமற்ற
நாடோடிவாழ்க்கை நடத்திய இனக்குழுக்களிடம் இருந்தது. அத்தகைய வாழ்க்கை நிலையைக்
கொண்டவர்கள் ஆரியர்கள். அவர்கள் இன்றைக்கு இந்தியா எனப்படும் நிலபாகத்தில்
வந்தபோது இங்கு நாகரீகம் மிக்க இதுபோன்ற தகவல் பழக்கங்களை விட்டொழித்து, நகர
வாழ்க்கை வாழ்ந்த மக்களுடன் வன்மையாகவும் மென்மையாகவும் பழகி கலந்தாலும் தங்களுடைய
சில பழக்கங்களை விடாமல் தொடர்ந்தனர். அவற்றில் முக்கியமானது யாகம். யாகத்தில்
உயிர்வதை செய்யப்படுகிறது. விலங்குகள் பலியிடப்படுகின்றன. அதனை விடாமல் இருப்பதன்
காரணத்தை கூறும்போது யாகம் லோக ஷேமதிற்கு
செய்வது என்று சொல்லி யாகம் செய்வதை பெரிய நற்காரியமாகச் சித்தரிகக்கப்பட்டதை
இன்றளவும் நம்பிக் கொண்டிருக்கிறோம் .
இதிகாசங்களிலும் புராணங்களிலும்
யாகத்தை அழித்தவர்களை அரக்கர்கள் என்று சொல்லப்படுகிறார்கள். தங்களின் பயிர்த்
தொழிலான வேளாண்மைக்கு உற்றவுதவி புரியும் விலங்குகளான மாடுகளையும் ஆடுகளையும்
பெருமளவில் பலியிடுவதால் அவ்வுயிரினங்கள் அழிந்துவிடும் என்ற அச்சத்தில் அவைகளை அழியாமல் காக்க யாகங்களை தடுத்தவர்கள்
அரக்கர்கள் என்று பழிக்கப்பட்டனர்.
இராமாயணத்தில் தாடகை என்ற பெண்மணி இராமனால்
கொல்லப்படுகிறாள். அதற்குக் காரணம் அவள் யாகத்தைத் தடுத்தாள் என்பதால். குதிரையைக்
கொல்லும் அசுவமேத யாகம், மாடுகளைக் கொல்லும் பசுமேத யாகம், ஆடுகளைக் கொல்லும்
அஜமேத யாகம், மனிதர்களைக் கொல்லும் நரமேத யாகம் என்றெல்லாம் யாகங்கள்
இருந்திருப்பதை புராணங்கள் வாயிலாக அறியமுடிகிறது.
இன்றைக்கு உயிர்ப்பலி இல்லாமல் பயிர்வகைகள், பழம், காய், பூக்கள் மற்றும்
துணிமணிகளை நெருப்பிலிட்டு நெய் ஊற்றி தீவளர்ப்பதை யாகம் என்று காண்கிறோம்.
கருதுகிறோம். இந்தமுறையானது இக்காலத்தில் யாகத்திற்கு எதிராக எழுந்த தீவிர
எதிர்ப்புகளினால் உருவானது என்றுதான் சொல்ல வேண்டும்.
கடந்த இருபதாம் நூற்றாண்டில் 1935 ஆம்
ஆண்டிலும் கூட பலியிடப்பட்ட யாகங்கள் நடந்திருக்கின்றன. அப்போது அத்தகைய யாகங்கள்
நடக்கும் இடங்களில் எல்லாம் மகாவீரரைப் பின்பற்றும் சமண மதத்தவர்களும், வள்ளலார்
அன்பார்களான சீவகாருண்யம் பேசியவர்களும், புலால் மறுத்த சைவர்களும் சென்று
எதிர்த்து போராடவும் அன்றைக்கு இருந்த ஆங்கில அரசினரிடம் இத்தகைய யாகங்களைத் தடை
செய்யவும் கோரிக்கை வைத்துள்ளனர்.
தேவக்கோட்டையில் 1935 ஆம் ஆண்டு ஜூன்
மாதம் நடைப்பெற்ற யாகத்திற்கு இத்தகைய எதிர்ப்பு கிளம்பியது என்பது நாம் அறிய
வேண்டிய வரலாற்றுச் செய்தி. இதுபற்றியக் குறிப்பு பகுத்தறிவு 01-07-1935 தேதியிட்ட
மாத இதழில் ‘ராம-ராவண ஆராய்ச்சி’ என்னும்
கட்டுரையில் உள்ளது.
அது மட்டும் அல்லாமல் ‘ஆர்ய
தர்மத்தினின்று தொகுக்கப்பெற்றது’ என்ற குறிப்புடன் தேவக்கோட்டை அட்வகேட் எஸ். சுப்ரமண்ய அய்யர் B.A., B.L., என்பவர் “யாகமும்
வைதிக மாதமும்” என்னும் நூலில் மிகத்தெளிவாக
உயிர் வதை செய்யப்படும் யாகங்களுக்கு ஆதரவாக எழுதி வாதம் செய்வதைப் பார்க்கும்
போது நாம் ராமாயாணக் காலத்திலிருந்து எதிர்த்து வந்த யாகங்கள் ஒரு குறிப்பிட்ட
சமுதாய மக்களால் எப்படியெல்லாம் சமாதானம் கூறி சரிகட்டப்பட்டு மாற்றங்களை அடைந்து
இன்னும் அழியாமல் வேறுவேறு உருவங்களில் நிலைபெற்று வருகின்றது என்பதை உணர முடியும்.
‘ஆனந்தபோதினி’ என்ற இதழில் சித்தூர்
பண்டிதர் திரு பூ. சீநிவாசன் என்பவர் ‘யாகமா ? மாமிச மோகமா ?’ என்ற கட்டுரைக்கு
மறுப்பு சொல்வதற்காக “அஹிம்ஸாவாதிகளின்
துர்வாதத்திற்குப் பதில்” என்று இந்நூல் இயற்றப்பட்டது. அந்நூலில் ‘அவச்ய ஹிம்ஸை’
என்னும் தலைப்பில் கூறப்படுவதைப் பாருங்கள்:
“இப்படி அஹிம்ஸையை வற்புறுத்திய
மதமானது அஹிம்ஸைக்கும் ஓர் வரையறை உண்டு என்பதைக் காட்டி யுத்தாதிகளாகிய அவச்ய
ஹிம்ஸையை அது அனுமதித்திருப்பதையும் நாம் கவனிக்கத் தவறாக கூடாது. கீதையானது மிகக்
குரூரமான ஹிம்ஸையாகிற யுத்தத்தைச் செய்யும்படி அர்ஜுனனைத் தூண்டுகிறது. கீதை
யவதரித்த ஸந்தர்ப்பத்தை யோஜித்தால் இது நான்கு விளங்கும் . அர்ஜுனன்
ஆசாரியர்களையும் பந்துக்களையும் மற்றவரையும் கொல்வது அதர்மம் என்று பயந்து
மனங்கலங்கி யுத்தம் செய்ய மறுக்கவே பகவான்
அவனது கலக்கத்தைத் தெளிய வைக்க விரும்பி யுத்தம் ஸ்வதர்மமென்றும்,
யுத்ததில் கொல்லுவது பாபமாகாதென்றும் உபதேசித்து அவனை யுத்தம் செய்யும்படி
தூண்டுவதற்குத் தானே கீதையைப் பிறப்பித்தார். இதிலிருந்து அஹிம்ஸா தர்மத்தைப் போல்
அவச்ய ஹிம்ஸையும் தர்மமென்று காட்டுவதறக்காகவே கீதை வெளியாகியதென்பது மறுக்க
முடியாதது. ஆகவே கீதையானது அஹிம்ஸையும் ஹிம்ஸையும் போதிப்பது முரண்பட்டதென்று
நினைக்கலாகாது.
நமது வைதிக மதத்தில் அஹிம்ஸா தர்மம்
உயரந்ததென்றாலும் அஹிம்ஸை விதியானது யாகம், யுத்தம் ஆகிய இரண்டு விலக்கு விதியால் பாதிக்கப்பட்டு
விடுகிறதாக நமது மதம் ஒப்புக் கொண்டுவிட்டது. யாகம் யுத்தம் இரண்டிலும் ஹிம்ஸை கட்டாயமாக விதிக்கப்பட்டிருப்பதாலும்
அது தர்மமென்று வேதாதி பிராமணங்கள் கண்டிப்பாகச் சொல்லிவிட்டதாலும் அஹிம்ஸா விதிக்கு
விலக்கு விதியுண்டென்பதை நாம் அறிய வேணும்”
இப்படி அகிம்சைக்கு விலக்கு உண்டு
என்ற வாதத்தை, யுத்தத்தில் கொல்வதையும்
குற்றவாளிகளுக்கு மரணத் தண்டனை விதிப்பதையும் குறிப்பிட்டு, இவையெல்லாம் இம்சையில்
சேராதா என்று கேட்டு, சேராது என்ற பதிலையும் தந்து; அப்படியிருக்க யாகங்களை அதில்
இயற்றப்படும் இம்சைகளை வைத்து மாத்திரம் எதிர்ப்பது நியாயமா என்று இந்த நூலில்
கேட்கப்படுகிறது. ‘அகிம்சாவாதிகள் எவ்வித
வரையில்லாமல் விலக்கு விதியில்லாமல் எவ்விசயத்திலும் ஒரே மாதிரியாக அகிம்சைக் கொள்கையை
அனுஷ்ட்டிக்கிறார்களா’ என்று கேட்கிறது இந்நூல்.
அதுமட்டுமல்ல ‘பூவுலகில் சகல செளகிரியங்களுடன்
வாழ உரிமை பெற்றவனாகவும் மற்ற சராசர பிராணிகள் யாவற்றும் மனிதனுடைய சுகாதிகளை
விருத்தி செய்ய ஏற்பட்டவைகளாகவுமே நினைக்கப்படுகிறது. பசு, பட்சி, செடி, கொடி, எல்லாம்
மனிதனுக்காகவே ஏற்பட்டனவென்று பாத்தியம் கொண்டாடப்படுகிறது. ஆகவே மனிதனுடைய
சுகத்திற்கு இடையூறு விளைவிக்கும் பிராணிகள் இருந்தால் அவைகளைக் கொன்று தீர்க்க
வேண்டும் என்கிற கொள்கையானது நீரோஷேபமாக எங்கும் பரவி இருக்கிறது. இதை மனிதனுடைய
தலையில் இருக்கும் பேன் பூச்சி முதல் காடுகளில் இருக்கும் சிம்மம் முதலிய துஷ்ட
ஜந்துக்கள் வரை உதாரணம் கொண்டு சிந்தித்துப் பார்க்கலாம்’ என்ற வாதங்களையும்
முன்வைத்து வைதிகமதத் தத்வம் வகுத்தவழி என்றும் இந்நூல் விளம்புகிறது.
மேலும் இந்நூல் கூறுவதைக் காண்க:
“இம்மதத்தில் யாக ஹிம்ஸை யுத்த ஹிம்ஸை
ஆகிய இரண்டும் மிகப் புனிதமானதென்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிராமஹணாதிகளுக்குக்
கட்டாயமாக விதிக்கப்பட்ட யாகங்களில் பிராணி ஹிம்ஸை செய்யும்படி சகல வேதங்களும்
விதிப்பதுடன் அந்த ஹிம்ஸையானது அந்த பிராணிக்கு உயர்ந்த கதியைக் கொடுப்பதால் இதை
ஹிம்ஸை என்று நினைக்கவோ சொல்லவோ கூடாதென்று பிரதியஷ வேதங்களில் ஸ்பஷ்டமாகச்
சொல்லப்பட்டிருக்கிறது. இந்த யாக நியாயத்தைக் கொண்டு, யுத்த ஹிம்ஸையும் தர்மமாக
நிர்ணயிக்கப்பட்டது. சாஸ்திரங்களில் ஒரு பிராணியையும் ஹிம்ஸிக்கக் கூடாது என்று
பொதுவாக ஒரு விதியிருந்தாலும் இது, யாகயுத்த
ஹிம்ஸைகளைத் தவிற மற்ற ஹிம்சைகளையே தடுக்குமென்று விலக்கு விதியும் வேதாதி
சாஸ்திரங்களிலேயே விதிக்கப்பட்டுள்ளது. இப்படி ஸித்தாந்தமிருப்பதால் பகவான்
கீதையில் யுத்த ஹிம்ஸையைத் தர்மமாக உபதேசித்தார்”.
இது மட்டுமில்லாமல் கீதையின் கருத்து என்று மேலும் இந்நூலில் “யுத்தத்தில் கொல்லுவது
தர்மமென்றும் அது மோஷாதி ஸாதனமென்றும் ஆகவே அதைச் செய்யாமல் விட்டால்தான்
பாபமென்றும் சொல்லி ஷத்திரியனுக்கு தர்மயுத்தத்தைத் தவிர வேறு சிரேயஸ்கரமான தர்மமே
கிடையாது” என்று கூறப்படுகிறது. அதாவது யாகத்திலும் யுத்ததிலும் கொல்லப்பட்டால்
சொர்கம் கிடைக்கும் என்று நம்ப வைக்கப்படுகிறது.
இதற்கு ஆதரவாக ஸ்ரீராமானுஜ
பாஷியத்திலிருந்தும் பிரம்ஹ சூத்திரத்திலிருந்தும் ஸ்ரீசங்கரபகவத்பாத
பாஷியத்திலிருந்தும் யாகஹிம்சையில் பாபம் இல்லை என்பதற்கு ஆதாரங்களை அடுக்குகிறது
அந்நூல். யாகத்தில் கொல்லப்படுவது ஹிம்ஸையே அல்ல அது ரஷணை என்றும் வாதிடப்படுகிறது.
மேலும் ‘பசுக்கள் பிரம்ஹாவினால்
யாகத்திற்காகவே ஸிரிஷ்டிக்கப்பட்டன. யாகமானது இவ்வுலகிற்கு ஷேமத்தின் பொறுத்தே
யாகும். ஆதலால் யாகத்தில் வதம் செய்வது வதமேயல்ல (5-33)”. என்றும் “வேத தத்துவத்தை
அறிந்த த்விஜன் மேற்கண்ட காரியங்களில் பசு ஹிம்ஸையை செய்து தனையும் மேற்படி
பசுக்களையும் உத்தம கதி அடையச் செய்கிறான். (5-41) என்றும் மனுஸ்மிருதியில்
சொல்லப்பத்திருப்பதையும் இந்நூல் பதிவு செய்கிறது. த்விஜன் என்றால்
இருபிறப்பாளராகிய பிராமணர்கள் என்று பொருள்.
இப்படி யுத்தத்தில் கொல்லுவதும்
யாகத்தில் கொல்லுவதும் ஒன்று எனக் கூறும் வைதிகமதம் எப்படிப்பட்டது என்பதை நாம்
எண்ணிப்பார்க்க வேண்டும். கீதை சத்திரிய தர்மம் என்று சொல்லி அதனை சிலாகித்து
கடைப் பிடிக்கச் சொல்வது, வர்ணாசரம
தர்மத்தை உயர்த்தி அதனை நடைமுறைப் படுத்தும் நோக்கத்தில்தான் என்பதை இங்கு நாம்
புரிந்து கொள்ள வேண்டும். அப்படியென்றால் சூத்திர தர்மம் ஒன்றிருக்குமே!. அது என்ன
என்றெல்லாம் நாம் நோக்கினால் அதிலுள்ள சூட்சமமும் சூழ்ச்சியும் புரியும். இந்த
வைதிக மதம் பெரும்பான்மை மக்களை சூத்திரர்
என்ற அடைப்புக்குள் புகுத்தி அடிமைகளாக ஆக்கிவைத்து அதனையும் அவர்களே பெருமை
பேசும்படியாக வைத்திருப்பதை அறியலாம். அதன் வீரியத்தையும் விபரீதத்தையும் உணர்ந்தவர்கள்
காலந்தோறும் எதிர்த்து வந்ததைக்
காணமுடிகிறது.
இதைத்தான் வள்ளுவர் முன் சொன்ன
குறளில் எதிர்த்திருக்கிறார். தமிழில் வேட்டல் என்ற சொல் யாகத்தையும் யக்ஞத்தையும்
குறிக்க தமிழில் கூறப்படுகிறது. ஒருக்காரியம் நிறைவேற வேண்டிக் கொள்வதற்காக
செய்யப்படும் செய்கை என்றாலும் அதில் உயிரினங்கள் வேட்டையாடுவதைப் போன்று
வெட்டப்பட்டு இறப்பதையும் குறிப்பதாக நாம் கருதலாம். அகராதியில் வேட்டல் என்ற
சொல் விரும்புகை என்னும் பொருளுடைய வேள்
என்னும் சொல்லிலிருந்து பிறந்ததாக சுட்டப்படுகிறது.
அதே போன்று வேள்வி என்னும் தமிழ்ச் சொல்லும்
வேளாண்மை என்னும் சொல்லிண் அடிப்படையில் உருவாயிற்று எனலாம். வேளாண்மை என்பது
உழவுத் தொழிலைக் குறிப்பது என்று அறிவோம். அது மட்டும் அல்லாமல் மற்றவர்களை
விருப்பதுடன் பேணுவதும் அவர்களுக்கு உதவுவதும்
வேளாண்மை என்பதை வள்ளுவர்
இருந்தோம்பி
இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு. (குறள் 81) என்ற குறளில்
தெளிவுறுத்துகிறார்.
அத்தகைய உயர்ந்த பொருளில் வேள்வி எனப்படும் யாகமும்
குறிக்கப்பட வேண்டும் என்ற கபட எண்ணத்தில் உயிர்க் கொலைபுரியும் யாகத்தை வேள்வி
என்னும் தமிழ் சொல்லால் குறிப்பிட்டு மயக்கமடையச் செய்துள்ளனர் என்று கருதுகிறேன்.
உழவுத்தொழிலில் நிலத்தைக் கீறி உழவு செய்யும் போதும் பயிரிட்டு பாதுகாக்கும்
போதும் சில புழு பூச்சிகளைக் கொல்ல நேர்வதைக் காட்டி அது போன்றுதான் உலக நன்மைக்கு
யாகம் செய்யப்படுகிறது அதில் ஆடுமாடு குதிரை இவைகள் மட்டுமல்லாமல் மனிதர்களைக் கூட
கொல்லலாம் என்று சமாதானம் கூறி யாகத்திற்கும் வேள்வி எனப் பெயரிட்டு ஏமாற்றப்பட்டிருக்கிறோம்
என்று கருத இடம் உண்டு.
ஆதலின் எவ்வகையான தீ வளர்த்து யாகம் செய்யும் முறையும்
தமிழர் சடங்கில் இருப்பது சரியல்ல என்ற கருத்தை
வலியுறுத்தி இக்கட்டுரை இத்துடன் நிறைகிறது.