Tuesday, April 25, 2017

காலக்கணக்கு - பாகம் 1

சித்திரை முதல் தேதியன்று தமிழ் புத்தாண்டு வாழ்த்து என்றும் சமசுகிருத புத்தாண்டு வாழ்த்து என்றும் அவரவர் கருத்துக்கும் எண்ணத்திற்கும் ஏற்ப வாழ்த்து சொல்வதைக் காண்கிறோம்.

உண்மையில் புத்தாண்டு என்பது என்ன? ஓர் ஆண்டு காலம் என்பது என்ன? ஒவ்வொரு நாட்டுக்கும் மொழிக்கும் வேறு வேறு ஆண்டுத் துவக்கம் இருக்க முடியுமா? தமிழ் புத்தாண்டு என்றும் சமஸ்கிருத புத்தாண்டு என்றும் சொல்வதில் பொருள் உள்ளதா என்று நாம் சிந்திக்க வேண்டி இருக்கிறது.

காலக்கணக்கில் பல தப்பும் ஒப்பும் விரவிக் கிடக்கின்றன. காலந்தோறும் அவைகள் சரி செய்யப்பட்டு தரப்படுத்தப்பட்டு காலக்கணக்கு முறைகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
இப்போது நடைமுறையில் நாம் கொண்டிருக்கும் கால அளவைகள்.நொடி (second) நிமிடம் (minute) மணி (hour) நாள் (day) வாரம் (week) பக்கம் அல்லது இருவாரம் (fortnight) மாதம் (month) ஆண்டு (year)  என்பனவாகும்.

ஆண்டு என்பது என்ன? சூரியனை பூமி ஒருமுறை சுற்றிவரும் காலம் என்பர். அது 365 ¼  நாள் என்று கணக்கிடப்பட்டுள்ளது

நாள் என்பது என்ன?  பூமி தன்னைத்தானே ஒருமுறை சுற்றிக்கொள்ளும் காலம். அது சூரியன் காலையில் உதித்து பகலில் உச்சிக்கு சென்று மாலையில் மறைந்து இரவில் காணாமல் மீண்டும் காலையில் உதிக்கும் காலம் வரை ஒரு நாள் எனப்படுகிறது.

மாதம் என்றால் சந்திரன் பூமியை ஒருமுறை சுற்ற எடுத்துக் கொள்ளும் 3௦ நாட்கள் கொண்ட காலநேரம்.   அது தேய்பிறை 15 நாட்கள் கொண்ட இருட்பக்கம் (கிருஷ்ண பட்சம்)  வளர்பிறை 15 நாட்கள் கொண்ட ஒளிப்பக்கம் (சுக்லபட்சம்) என்று இரு பிரிவுகளாக கொண்டுள்ளது. மதி என்னும் சந்திரனின் இந்த சுழற்சி முறையில் இந்த கால அளவு கணக்கிடப்பட்டதால் மாதம் என்று தமிழில் வழங்கலாயிற்று என்று தமிழ் அறிஞர்கள் சொல்வர். அதுதான் மற்ற மொழிகளில் மாசம் என்றானதாக தெரிகிறது.

வாரம் . மணி. நிமிடம் , நொடி இவைகளுக்கும் சூரிய சந்திரருக்கும் எந்த தொடர்பும் கிடையாது. இவைகள் பிற்காலத்தில் அவரவர் வசதிகளுக்காக இத்தனை நாட்கள் ஒரு வாரம் என்றும், ஒரு நாளுக்கு இத்தனை மணி என்றும் ஒருமணிக்கு இத்தனை நிமிடங்கள்  என்றும் நிமிடத்திற்கு இத்தனை நொடிகள் என்றும் வகுத்துக் கொண்டனர். அவைகள் காலம் தோறும் நாடுகள் தோறும் வேறுபாடுடையதாக இருந்து இருக்கறது. இப்போது நம் வழக்கத்தில் உள்ள வாரம் மணி நிமிடம் நொடி கணக்குகள் உலகம் முழுதும் பின்பற்றப் படுகிறது. இதற்குக் காரணம் ஆங்கிலேயர்கள் அவர்கள் ஆளுமைக்கு உட்பட்ட நாடுகளில் இந்த கால நேரத்தை தரப்படுத்தியதால் ஆகும். அதன் பயன் கருதி எல்லா நாடுகளும் அந்த முறையை பின் பற்றத் தொடங்கிவிட்டார்கள்.
 
தமிழகத்தில் ஒரு நாளுக்கு இத்தனை  நொடி நாழிகை பொழுது சாமம் என்று ஒரு கணக்கு இருந்தது. இப்போது அது வழக்கற்று போய்விட்டது. இப்படிதான் பல்வேறு நாட்டிலும் வெவ்வேறு வகையிலான காலக் கணித முறை இருந்து இருக்கும். ஆனால் இப்போது உலக முழுதும் ஆங்கிலேயரால் வழங்கப்பட்ட காலமுறையே பின்பற்றப் படுவதாகத் தெரிகிறது. நாள் என்பது இந்திய / தமிழக முறைப்படி சூரிய உதயத்திலிருந்து தொடங்கவேண்டும். ஆனால் நடுநிசி 12 மணிக்கு நாள் துவக்கம் தேதி மாற்றம்  ஆகிற முறைதான் உலகமுழுதும் பின்பற்றப் படுகிறது.

ஆங்கிலேயரின் Greenwich Mean Time (GMT) என்று சொல்லப்படும் இந்த முறை இப்போது  Coordinated Universal Time (UTC) என்று அறியப்படுகிறது. Indian Standard Time (IST) க்கும் GMTக்கும் உள்ள வித்தியாசம் +5.3௦ மணிநேரம் ஆகும். அதாவது IST நேரம் GMT நேரத்திற்கு 5.3௦ மணி நேரம் முந்தியதாக கருதப்படும். 

இந்தியாவில் ஆண்டு காலக்கணக்கு சூரியசுழற்சி சந்திரசுழற்சி இரண்டு  முறைகளிலும் கணக்கிடப்பட்டு இருக்கிறது. முதலில் சந்திர சுழற்சி முறைதான் இருந்திருக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் சந்திரனில் காணப்படும் மாற்றம் தேய்வதும் வளர்வதும் இருள்மயம் ஆவதும் முழுநிலவாவதும் அவைகள் எல்லாம் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் நிகழ்வதும் எந்த ஒரு சாதாரண  மனிதனும் காணக்கிடைக்கும் தகவலாகும். இதை அறிந்துகொள்ள பெரிய ஆராய்சி அறிவு தேவையில்லை. ஆதலால் மனிதகுலம் எப்பகுதியை சார்ந்தவரானாலும் நாளையும் மாதத்தையும் சந்திர சுழற்சி முறையிலேயே கணக்கிட்டு இருப்பார்.

அதற்குப் பிறகுதான் சூரிய சுழற்சி முறையை அறிந்து  ஆண்டு கணக்கு வந்திருக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் சூரியன் எழும் விழும் காலம் இடம் இவைகளில் சிறு சிறு மாற்றங்கள் நிகழ்வதை சாதாரணமாக வெற்றுக் கண் கொண்டு கண்டறிவது அரிதாகும். சூரிய சுழற்சி முறையை  ஆராய்ச்சிக் கண் கொண்டு பார்த்தால்தான் விளங்கும். அப்படிப்பட்ட ஆராய்ச்சி நிலையை மனிதகுலம் அடைவதற்கு பலகாலம் தேவைப்பட்டு இருக்கும். முதலில் சூரியன்தான் பூமியை சுற்றி வருவதாகவும் கருதினர். அதன்படி ஒருகுறிப்பிட்ட கால அளவையில் சுற்றி வருவதையும் அறிந்தனர். அதை ஆண்டு என்றும் வருடம் என்றும் அளவிட்டனர். ஆண்டுக்கு எத்தனை நாட்கள் ஆகிறது என கணக்கிட்டு 365 1/4 நாட்கள் என அறிந்தனர். இந்த சூரிய சுழற்சி முறையைத்தான் உலகநாடுகளில் பெரும்பாலானோர் ஆண்டு கணக்கில் பயன் படுத்துகின்றனர்.

இந்தியாவில் சந்திர சுழற்சி முறை (சந்திரமானம்) பிரகாரம் ஆண்டுக் கணக்கு வைத்துக் கொண்டு புத்தாண்டு கொண்டாடுபவர்கள் இந்தியாவில் தெலுங்கர், கன்னடர், மராட்டியர் ஆவர். தெலுங்கரும் கன்னடரும் புத்தாண்டு துவக்க நாளை யுகாதி என்கின்றனர். மராட்டியர் குடிபடவா என்பர். இந்த துவக்க மாதம்  சைத்ரம் (சித்திரை) ஆகும். 

ஆனால் மலையாளி,  ஒடியா , அசாமி , வங்காளி, பஞ்சாபி ஆகியவர் சூரிய சுழற்சி முறையில் ஆண்டுக் கணக்கு வைத்துக்  கொண்டு உள்ளனர். சித்திரை மாதம்தான் இவர்களுக்கும்  முதல் மாதம். 

குஜராத்தியரும்  சூரிய சுழற்சி முறையையே  ஆண்டு கணக்காக  வைத்து இருந்த போதும் ஆண்டுத் துவக்கமாக கார்த்திகை மாதத்தை கொண்டுள்ளனர். 

தமிழர்கள் இதுகாறும் சூரிய சுழற்சி முறையில் சித்திரை மாதத் துவக்கத்தைக் கொண்டு புத்தாண்டை கொண்டாடி வந்தது தெரிந்ததே. 

அதன் படியாக சித்திரை முதல் தேதி எப்போதும் ஏப்ரல் பாதம் 14 ஆம் நாள் வரும். நான்காண்டுக்கு ஒருமுறை 15 ஆம் தேதி வரும். தை முதல் நாளின் பொங்கல் திருநாள் இப்படிதான் ஜனவரி 14 / 15   தேதிகளில் வருவதை அறியலாம். இங்கு நாம் கவனிக்க வேண்டியது சம்ஸ்கிருத ஆண்டு என்று ஒன்று இல்லை என்பதை ஆகும். 

ஆனால் மாதத்தின் பெயர்கள் சமஸ்கிருதத்தில் இருப்பதை காணலாம். அதனாலேயே சம்ஸ்கிருத புத்தாண்டு என்று சித்திரை முதல் நாளின் போது நம்மவர் சிலர் சொல்வது தவறானது என்பதை அறியவேண்டும்.


யுகாதி என்னும் சந்திர சுழற்சி முறையில் கொண்டாடப்படும் புது வருடப்பிறப்பு இதுபோல் ஒரு குறிப்பிட்ட நாளில் அதாவது 365 நாட்களுக்கு ஒருமுறை வருவது இல்லை. 2013 லிருந்து 2018 வரை யுகாதி எனப்படும் புதுவருடம் 354, 355, 383, 347, 354 நாட்கள் இடைவெளியில் பிறக்கிறது. 

இதைப் போலதான் வடநாட்டில் கொண்டாடப்படும் ஹோலி பண்டிகை 2௦1௦ லிருந்து 2௦18 வரை 383, 354, 384, 355, 354, 383, 354, 354  நாட்கள் இடைவெளியில் கொண்டாடப்படுகிறது. ஆண்டுத் துவக்கமோ அல்லது வசந்தகாலத் துவக்கம் என சொல்லப்படுகிற ஹோலிப் பண்டிகையோ குறிப்பிட்ட நாட்கள் இடைவெளியில் இல்லாததை காணமுடிகிறது. 

ஆண்டுக்கு 12 மாதங்கள் என்ற கணக்கில் மாதத்திற்கு அம்மாவசை முதல் அடுத்த அம்மாவசை வரை 3௦ நாட்கள் வீதம் ஆண்டுக்கு 36௦ நாட்கள் என்றால் ஓரளவு புரிந்து கொண்டு ஏற்க இயலும். சந்திரமான முறைப்படி ஆண்டுகள் இப்படியாக வெவ்வேறு எண்ணிக்கையில் வருவது ஏற்கலாகுமா? ஏன் இவ்விதம் வகுத்துள்ளனர்  என்பதை அறிய வேண்டும்.     

No comments: