Tuesday, October 18, 2016

அண்ணன் சொன்னது அதில் அர்த்தம் உள்ளது - பல்லடம் உழவர் மாநாட்டில்

அண்ணன் சொன்னது அதில் அர்த்தம் உள்ளது
குலக்கல்வி திட்டத்தினால் குலைந்து போன ராஜாஜி அவர்களின் ஆட்சிக்குப் பிறகு காமராஜர் முதல்வராக பொறுபேற்ற சமயம். குடியாத்தம் தேர்தலில் குணாளா குலக்கொழுந்தே என்று போற்றப்பட்டு பச்சைத்தமிழன் காமராஜரை திகவும் திமுகவும் சேர்ந்தே ஆதரித்த காலகட்டம். 1 9 5 4 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் தேதி கோவை மாவட்ட உழவர் மாநாடு பல்லடத்தில் நடந்தது.. அந்த மாநாட்டிற்கு அப்போதைய முதல்வர் திரு காமராஜர் அழைக்கப்பட்டு வருவதாகவும் இருந்தது.
ஆனால் முதல்வர் கடைசி நேரத்தில் வராமல் வாழ்த்து தந்தி அனுப்பினார்.
அந்த தந்தியில் “மாநாடு வெற்றிகரமாக நடைபெற வேண்டும். உழவர்கள் நாட்டு முன்னேற்திற்கு உழைக்க மாநாடு பயன்பட வேண்டும் என்று விரும்புகிறேன்” என்று வாழ்த்துச் செய்தி தெரிவிக்கிறது.
அந்த மாநாட்டில் பேரறிஞர் அண்ணா அவர்களும் அழைக்கப்பட்டிருந்தார். அவர் கலந்துகொண்டு உரை ஆற்றுகையில்
“இன்று உழவுத் தொழில் நம் நாட்டைப் பொறுத்தவரையில், இலாபகரமானதாக இல்லை. இதற்குக் காரணம் என்ன? உழவுத் தொழில் இன்னமும் மெருகேறாத ஒரு தொழிலாக இங்கு இருப்பானேன்?
இந்த நாட்டில் ஒரு ஏக்கர் நிலத்தில் கிடைக்கும் உற்பத்திப் பொருள், வேறு பல நாடுகளில் இதே அளவு நிலத்தில் கிடைக்கும் உற்பத்திப் பொருள்களைக் காட்டிலும் பல மடங்கு குறைவாக இருக்கிறது – இதற்குக் காரணம் என்ன?"
"இந்த நாட்டு உழவர் பெருமக்கள் சரியாக உழைப்பதில்லையா? என்றால், அப்படி அல்ல, வேற்று நாட்டவர்களைக் காட்டிலும், இந்த நாட்டவர்தான் கடுமையாக உழைக்கிறார்கள், அதிலும், கோவை மாவட்டம் போன்ற இடங்களில் நிலத்தை உழுது பயிரிட்டுப் பலனடைவது என்பது, கல்லிலிருந்து நார் உரிப்பதைப் போன்றதாகும்! பருக்கைக் கற்களும், முற்புதர்களும், கரம்புக் காடுகளும் நிறைந்த இந்த மாவட்டத்தில், உழவரின் உழைப்பு அளவிட முடியாதது! அப்படியெல்லாம் உழைத்தும் நல்ல வருமானமும் வளமும், பலனும் இல்லாமற் போவானேன்?
வேறு பல மேலை நாடுகளில், உழவுத் தொழிலுடன் அவர்கள் விஞ்ஞானத்தையும் கலந்துகொண்டு வேலை செய்கிறார்கள், அதனால் அவர்கள் குறைவாக உழைத்தாலும், நம்மைக் காட்டிலும் அதிகமாகப் பலன் பெறுகிறார்கள்".
"நாம் விஞ்ஞான அறிவைப் பெருக்கிக் கொண்டு, உழவுத் தொழிலையும் அந்த விஞ்ஞானத்துடன் செய்தால்தான் குறைந்த உழைப்பில் நிறையப் பலன்பெற முடியும்" என்று தெளிவாகக் குறிப்பிடுகிறார் ..
இன்றல்ல 62 ஆண்டுகளுக்கு முன்னர் அவர் கண்ட திமுக என்னும் அரசியல் இயக்கம் தேர்தல் அரங்கில் இறங்குவதற்கு முன்பே இந்த நாட்டு மக்களின் உண்மை நிலை உணர்ந்து ஆற்றிய உரை இது..
மேலும் அவர் அந்த மாநாட்டில் பேசும் போது
“உழவுத் தொழில் முன்னேறி, நல்ல பலன் தரும் – இலாபம் தரும் தொழிலாக மாற முதலாவதாக, அந்தத் தொழில் தற்கால விஞ்ஞான அறிவுடன் செய்யப்பட வேண்டும், இரண்டாவதாக, இன்று, உழவர் பெருமக்களுக்கு உழவுத் தொழிலில் அக்கறை இல்லை, இந்த அக்கறை அவர்களுக்கு வருமாறு செய்ய வேண்டும். இந்த இரண்டும் செய்தால்தான் உழவுத் தொழில் ஈடேற முடியும், நாடு முன்னேற்றத்தைக் காண முடியும்.
உழவர்களுக்கு அக்கறை இல்லை என்பதை இனியும் மூடி மறைத்துப் பயனில்லை. உழவுத் தொழிலிலிருந்த அக்கறை இப்போது குறைந்து விட்டது. நான் இப்படிச் சொல்லும்போது, உழவர்கள் எல்லோரும் ஏதோ உழைக்காத சோம்பேறிகளாக மாறிவிட்டார்கள் என நான் கூறுவதாக எண்ணிவிட வேண்டாம். எப்படி அவர்களுக்கு அக்கறை குறையாமலிருக்க முடியும்?"
"ஒரு சிறு வெற்றிலைப் பாக்குக் கடை வைத்திருப்பவர் கூட, தங்களிலும் சற்று உயர்ந்த வாழ்வு பெற்றிருப்பதைப் பார்க்கிறார்கள், தங்களைக் காட்டிலும் குறைந்த அளவு உழைக்கும் பலர், பல வழியிலும் சற்று வசதியான வாழ்வு பெற்றிருப்பதைக் கண்டு புழுங்குகிறார்கள், அதாவது, உழவுத் தொழில், வாழ்வுக்குப் பாதுகாப்புடைய தொழிலாக இல்லை, உழவுத் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களுக்குப் போதுமான வாழ்க்கை வசதிகள் தரப்படவில்லை – இதை எண்ணும்போது, உழவர்களுக்கு, தங்கள் தொழில்மீது வெறுப்பேற்படுவது இயற்கைதானே!"
"இரண்டாவதாக, உழவர்கள் ஆண்டு முழுவதும் உழைக்கிறார்கள், உழுது பண்படுத்தி, பரம்படித்து, விதைத்து, நீர் பாய்ச்சி, களை எடுத்து, காவல் புரிந்து, பயிர் வளர்க்கிறார்கள் இவர்கள் உழைப்பால் உயர்கிறது நெற்கதிர், பார்க்கிறார்கள் – பெருமூச்சு விடாமலா இருக்க முடியும்?"
"இனி அவர்களுக்குத் தொழிலில் அக்கறை வளர இரண்டு நல்ல காரியங்களைச் செய்தாக வேண்டும் – ஒன்று, வேறு பல தொழில்களில் கிடைக்கும் பாதுகாப்பு இந்தத் தொழிலுக்கும் கிடைக்கத் திட்டம் தீட்டியாக வேண்டும், இரண்டாவதாக, உழுகிறவர்களுக்கு நிலம் தரப்பட வேண்டும்”
கேட்டீர்களா அண்ணாவின் அறிவுமிக்க அறவுரையை. இதுவரை இந்த இந்தியத் திருநாட்டில் உழவுத் தொழிலுக்கு பாதுகாப்பு இல்லை. விவசாயப் பொருள்கள் விலை நிர்ணயம் விவசாயிகளிடம் இல்லை. அன்றைக்கு தொடங்கிய அக்கறையின்மை உச்சத்திற்கு போய்விட்டது..
உழுபவனுக்கு நிலம் சொந்தமாக வேண்டும் என்றார். சோசிலிசம் பேசிய காமராஜரின் காங்கிரசு ஆட்சி நிலசீர்திருத்தத்தை எப்படி செயல் படுத்தியது.? நிலப்பிரபுக்கள் பாதிக்காமல் உழுபவனும் உவகை கொள்ளும்படியான இரண்டும் கெட்டான் நிலைக்கு தள்ளியது மட்டுமல்லாமல் இருசாரருக்கம் – நிலப்பிரபுவிற்கும் உழவர்க்ளுக்கும் – மோதல் ஏற்படுகிற வகையில் பிரச்சனைகளை ஒத்திப் போட்டு இருவரையும் மோதவிட்டு ஓட்டு வேட்டையாடுவதிலேதான் அன்றைய காங்கிரஸ் அரசு கவனமாயிருந்தது என்பதெல்லாம் வரலாறு...
அண்ணா அவர்கள் அந்த மாநாட்டில் மேலும் பேசும்போது
“நிலங்களை விவசாயிகளுக்குப் பிரித்துத் தந்தால் மட்டும் போதாது, பிரித்துத் தரப்படுகிற நிலங்களைக் கூட்டுப் பண்ணை முறையில் பயிரிட்டால்தான் எல்லா விவசாயிகளும் நல்ல பலன் காண முடியும், அந்த வகையில், சிறு சிறு நிலப்பரப்பைச் சொந்தமாக உடைய விவசாயிகளைக் கூட்டுப் பண்ணை முறையில் ஒன்று கூட்டி அந்தப் பண்ணை நிர்வாகத்தை வேண்டுமானால் அனுபவம் பெற்றவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட சம்பளம் கொடுத்துப் பார்க்கச் சொல்லலாம். அதன்மூலம், இந்த விவசாயத் தொழிலில் அவர் பெற்றிருக்கிற நிபுணத்துவத்தையும் நாம் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
நிலங்களை உழவர்களுக்குப் பிரித்துத் தந்துவிடுவதாலேயே வறுமை போயிவிடுமென்பதல்ல, நிலம் பிரித்துத் தரப்படும் மென்பதின் மூலம் உழவர்களுக்கு, தொழிலில் அக்கரை வளரும்.
அந்த அக்கரையுடன், விஞ்ஞான அறிவும் தரப்பட்டால் தொழிலில் நல்ல பலன் கிடைக்கும், அப்போதுதான் வறுமை ஒழியும்!
இவற்றைச் செய்ய, ஒரு நல்ல அக்கறை கொண்ட சர்க்கார் வேண்டும், இங்குள்ள காமராசர் சர்க்காருக்கு, அக்கறை கூட இந்த விஷயத்தில் இருக்கலாம், ஆனால், அதிகாரமில்லாத சர்க்காராக இருக்கிறது.
நேருவின் தலைமையில் உள்ள சர்க்காரோ, அதிகாரமிருந்தாலும், தென்னாட்டவர் மீது அக்கறை இல்லாத சர்க்காராக இருக்கிறது” என்று குறிப்பிட்டுவிட்டு சொல்கிறார்
“நம் பிரச்சனைகளை நாமே கவனித்துக் கொள்ள நமக்கு எல்லா அதிகாரங்களும் உள்ள ஒரு நல்ல அக்கறை கொண்ட சர்க்கார் வேண்டும்” என்பதைத் தெளிவாக விளக்கி, “அந்த அதிகாரம் படைத்த – அக்கறை கொண்ட சர்க்காரை அமைப்பதே தி.மு.கழகத்தின் இலட்சியம்” என்பதையும் தெளிவுபடுத்தினார்.
அப்படி அவர் அப்போது பேசியதின் மெய்பொருள் என்ன என்பது அன்றைய திமுகழகத்தின் கொள்கை என்னவாக இருந்தது என்பது தெரிந்தவர்களுக்கு புரியும். 1 9 6 3 க்கு பிறகு தனிநாடு கோரிக்கை விட்ட பிறகும் அண்ணா குறிப்பிட்டதைப் போல மத்தியில் அக்கறை கொண்ட ஆட்சி அமைப்பதில் திமுகழகம் தன்னாலான மட்டும் பாடுபட்டு தமிழர் நலனுக்கு செயல் ஆற்றியதை யாரும் மறுக்கமுடியாது..
.
(ஆதாரம்: நம்நாடு - 8-9-1954)

அண்ணன் சொன்னது அதில் அர்த்தம் உள்ளது - "எங்கிருந்தாலும் வாழ்க"

அண்ணன் சொன்னது அதில் அர்த்தம் உள்ளது
”சிவாஜி கணேசனின் நடிப்பு எனக்குப் புதிதல்ல. அவருடைய திறமையை நான் நன்கு அறிந்திருக்கிறேன். பெரிய அளவில் கணேசன் புகழ் பெறுவார் என்ற நம்பிக்கை பல ஆண்டுகளுக்கு முன்னாலேயே எனக்கு எற்பட்டு விட்டது . தம்பி கணேசா ! எங்கிருந்தாலும் வாழ்க !”
பேரறிஞர் அண்ணா அவர்கள் ஒருமுறை மேற்கண்டவாறு பேசியதை கேட்டவர்கள் அதன் உள்ளர்த்தத்தைப் புரிந்து கொண்டு அண்ணாவின் பெருந்தன்மையை உயர்பண்பை பாராட்டினார்கள்.
இன்றைய தலைமுறை இளைஞர்கள் அறிய வேண்டிய வரலாற்று நிகழ்வு இது.
திராவிட முன்னேற்ற கழகத்துடனும் அதன் முன்னனித் தலைவர்களுடனும் தொடர்பில் இருந்து கழகப் பணியும் கலைப்பணியும் செய்து வந்த (சிவாஜி) கணேசன் சந்தர்ப்ப வசத்தால் திமுகவிலிருந்து பிரிந்து காங்கிரஸ் கட்சியுடன் தொடர்பில் இருந்த சமயம். வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகம் நடித்து பெரும் புகழ் பெற்ற காலகட்டம். அந்த நாடகத்தை தமிழ் நாடெங்கும் நடத்தி எல்லா அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டு பாராட்டு தெரிவித்து விட்டார்கள். அண்ணா அவர்களைத் தவிர.. சென்னையில் அண்ணாமலை மன்றத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகம் கடைசியாக நடக்க இருக்கிறது சிவாஜிக்கு அண்ணாவின் பாராட்டை பெற ஆசை. அரசியல் நிலைபாடு அதற்கு தடையாகுமோ என்று அச்ச உணர்வுடன் அண்ணா அவர்களிடம் எப்படியாவது சம்மதம் பெற தன்னுடைய சகோதரர் தங்கவேலுவையும் கரந்தை சண்முக வடிவேலுவையும் அனுப்பி வைக்கிறார்.
அண்ணா அப்போது திருவண்ணாமலையில் தங்கி இருந்து வடஆற்காடு மாவட்ட சுற்றுப்பயணத்தில் இருக்கிறார். அங்கு சென்று அண்ணாவிடம் அவர்கள் நாடகத்திற்கு தலைமை ஏற்க அழைப்பு விடுகிறார்கள். அன்றைய தேதியில் காஞ்சிபுரத்தில் பொதுக் கூட்டம் இருப்பதால் அண்ணா வர இயலாது என்று சொல்லி விடுகிறார். அவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் கலைஞரிடம் சென்று எப்படியாவது அண்ணாவை சம்மதிக்க வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறார்கள். கலைஞருக்கும் நடிகர்திலகத்திற்கும் அப்போதும் நல்ல இணக்கம் ஈடுபாடு இருந்து வந்தது. கலைஞர் திருவண்ணாமலைக்கு சென்று ப.உ.சண்முகம் இல்லத்தில் அண்ணாவை சந்தித்து சிவாஜியின் வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகத்திற்கு அழைப்பு விடுக்கிறார்..
“அண்ணா, இதற்கு முன் பல தடவை சிவாஜி கணேசன் தங்களை நாடகம் பார்க்க விரும்பி அழைத்ததாக அவர்கள் தெரிவிக்கிறார்கள். நாளைதான் அந்த நாடகம் கடைசியாக நடக்குமாம். தாங்கள் தலைமை ஏற்று கவுரவிக்க வேண்டுமென மிகவும் தயவாகக் கேட்டுக்கொள்கிறார்கள். போய்வந்து விடுங்களேன் “ என்கிறார் கலைஞர்
அண்ணாவோ ”தம்பி காஞ்சிபுரத்தில் பொதுக் கூட்டம இருக்கிறதே. போகவில்லை என்றால உள்ளூர் காரர்கள் என்ன நினைப்பார்கள் “ என்கிறார்.
கலைஞர் ”தாங்கள் விரும்பினால் தங்களுக்கு பதிலாக நான் காஞ்சிபுரம் கூட்டத்திற்கு போகிறேன். நீங்கள் வரமுடியாத நிலையை அவர்களுக்கு விளக்குகிறேன்.. நீங்கள் கட்டபொம்மன் நாடகம் காண சென்னைக்கு செல்லுங்கள்” என்று சொல்கிறார்.
கலைஞரின் வேண்டுகோளை ஏற்று அண்ணா சம்மதம் தருகிறார். மறு நாள் மாலை ஐந்து மணிக்கு அறிவகத்தில் வந்து பாருங்கள் என்று வந்தவர்களிடம் சொல்லி அனுப்புகிறார். எல்லொருக்கும் மகிழ்ச்சி.
அண்ணா வேதாசலம் என்றழைக்கும் லிங்கம் அவர்களுடைய ஸ்டாண்டர்டு காரில்தான் பயணம் செய்வார். அன்று இரவு “ வேதாசலம் காஞ்சிபுரம் போகலாம்” என்கிறார். லிங்கம் அவர்கள் அண்ணா காஞ்சிபுரம் போனால் சென்னையில் நாடகம் பார்க்க போகமுடியாமல் போகலாம் என எண்ணி “அண்ணா, காஞ்சிபுரம் சாலை சரியில்லை நாம் நேராகவே சென்னை சென்றுவிடுவோம்” என்று சென்னைக்கு அழைத்து வந்து விடுகிறார்.
அறிவகத்தில் அண்ணா அன்று மாலை இருக்கிறார். நாடகத்திற்கு அண்ணாவை அழைத்துபோக சிவாஜி தன்னுடைய கார்களை அனுப்பி வைக்கிறார். பிளைமத், டிஸோட்டா, பியட் என மூன்று கார்கள் அறிவகத்தில் அண்ணாவுக்காக. அண்ணாவோ லிங்கத்தின் சாதாரண ஸ்டாண்டர்டு காரில் ஏறிக் கொண்டு நண்பர்களை சிவாஜி அனுப்பிய கார்களில் ஏறிக் கொள்ளச் செய்கிறார். அண்ணாவின் எளிமை எல்லோரையும் வியக்கச் செய்தது.
அன்று அண்ணாமலை மன்றத்தில் அண்ணா வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகம் பார்த்துவிட்டு பேசும் போதுதான் ”தம்பி கணேசா ! எங்கிருந்தாலும் வாழ்க” என்று சிவாஜி கணேசனை வாழ்த்தினார்.
கட்டபொம்மனாக நடித்து வீர வசனம் பேசி முழக்கமிட்ட சிவாஜி கணேசன் கண்ணில் நீர் தளும்ப நின்று கொண்டிருந்தார். அன்று இரவு ராயப்பேட்டை சண்முக முதலித் தெருவில் இருந்த தன் வீட்டுக்கு அண்ணாவையும் அவர் நண்பர்களையும் வரவழைத்து விருந்து படைத்து மகிழ்ந்தார் சிவாஜி கணேசன். அந்த வீடு முன்பு கலைவாணருக்கு சொந்தமாக இருந்த போதும் அண்ணா அந்த வீட்டுக்கு கலைவாணரை பல முறை சந்திக்க வந்ததையும் அவருடன் உரையாடியதையும் நினைவு கூர்ந்து நண்பர்களுடன் மகிழ்ச்சியுடன் இருந்தார் அண்ணா.
அண்ணாவின் சொல்லும் செயலும் பல்வேறு அர்த்தம் கொண்டவை என்றும் அவை காலகாலமும் பொருத்தமுள்ளவை என்பதனால் நான் அண்ணன் சொன்னது அதில் அர்த்தம் உள்ளது என்று அண்ணாவின் உரைகளை எழுத்துகளை தேர்ந்தெடுத்து பதிவிட்டு வருவது நண்பர்கள் அறிந்தது.
அவற்றில் இந்த பதிவு சிறப்பானதாக அமையும் என்று கருதுகிறேன். அண்ணா - கலைஞர் – நடிகர்திலகம் இம்மூவரின் உள்ளார்ந்த உறவை இந்த நிகழ்ச்சி மூலம் அறியலாம்.

நங்கவரம் போராட்டம்

இன்று கலைஞர் செய்திகளில் திமுகவினர் காவிரி மேலாண்மை அமைக்காத மைய அரசுக்கு எதிராக நடத்திய விவசாயிகளின் போராட்டத்தைப் பற்றிய செய்தித் தொகுப்பில் குளித்தலை இரயில் நிலையக் காட்சிகளைக்  கண்டதும் திமுகழக வரலாற்றில் குளித்தலையின் பங்கு எத்தகையதாக இருந்தது என்பதெல்லாம்  நெஞ்சில் நிழலாடியது.
திராவிட முன்னேறக் கழகம் விவசாயிகளின் மீதான அக்கறை இன்று நேற்று அல்ல துவக்க காலம்  தொட்டே இருந்து அதற்காக  போராடிய  வரலாற்றுக்கு சொந்தமானது. அதிலும் தலைவர் கலைஞர் தான் திமுகழகத்தின் முதல் விவசாயிகளுக்கான போராட்டத்தை நடத்தியவர் என்பதும் சிறப்புக்கு உரியது..
1957ல் நடந்த நங்கவரம் போராட்டம் குளித்தலை வரலாற்றில் முக்கியமானது.விவசாயத் தொழிலாளர்களைப் பண்ணை ஆண்டைகள் அடிமைகளாக வைத்திருந்த காலம் அது. இதைக் கேள்விப்பட்ட கலைஞர், விவசாயிகளுக்காகப் பண்ணையார்களிடம் கூலி உயர்வு கேட்டார். அவர்கள் தர முடியாது என மக்கள் மீது வன்முறையை ஏவ,  தி.மு.க. அந்த முதலாளிகள் மீது மிளகாய்ப் பொடியைத் தண்ணீரில் கலந்து ஊற்றும் போராட்டத்தைத் தொடங்கியது. இந்த கலகத்துக்குப் பிறகே விவசாயிகள் பிரச்னை தீர்ந்தது. அவர்களின் உழைப்புக்கேற்ற கூலி கிடைக்க ஆரம்பித்தது.
கலைஞர் நடத்திய அந்த விவசாயிகள் போராட்டம் குளித்தலையில் அவர் 1957-ல் முதல் முதல்  வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனதும்.அந்த பகுதி  நங்கவரம் ஜமீன்தார் விவசாய தொழிலாளர்களை நியாயமாக நடத்தாததால் அவர் நடத்திய  போராட்டம் ஆகும். போராட்டத்தின் விளைவாக  ஜமீன்தார் பணிந்தார்.  
நங்கவரம்பண்ணை விவசாயிகளின் கையேரு வாரம்-மாட்டேரு வாரம்என்ற பிரச்சினைக்காகப் பேரவையில் பேசியதுதான் அவரது முதல் கன்னிப் பேச்சு. அந்த பிரச்சினை குறித்து அவர்  வேகமாகப் பேசி அமர்ந்தவுடன், ஒரு துண்டுத் தாளில் பேரவைத் தலைவராக அப்போதிருந்த மேதகு யு.கிருஷ்ணாராவ் அவர்கள், “Very Good Speech” என்று எழுதி செயலாளர் மூலமாக கலைஞரிடம்  கொடுத்தனுப்பினார். அதுதான்  சட்டமன்றத்தில் அவருக்குக்  கிடைத்த முதல் பாராட்டு என்று கலைஞர் அடிக்கடி குறிப்பிடுவார். .
அந்த போராட்ட காலத்தில் திரு காமராஜர் முதல்வராக இருந்த அமைச்சரவையில்  அங்கம் வகித்த திரு பக்தவத்சலம் அவர்கள் கல்லணையில் வந்து தங்கி இருந்த போது கலைஞர் அவரை அங்கே சென்று சந்திக்கிறார் . நிலைமைகளை எடுத்து சொல்லி போராட்டத்தின் நியாயங்களை விளக்கி பண்ணையார்களை பணியவைக்கும் பணியை செய்தார்.
இது குறித்து அறிஞர் அண்ணா அவர்கள் தன்னுடைய தம்பிக்கு மடலில்
"நாடு பாதி நங்கவரம் பாதி!'' என்றோர் பேச்சு, திருச்சி மாவட்டத்திலே உண்டு. நங்கவரம் பண்ணையின் அளவினையும் அந்தஸ்தினையும் விளக்கிட எழுந்தது அப் பழமொழி, அந்தப் பண்ணையும் பிறவும் உள்ள குளித்தலை வட்டத்திலே, இன்று உழவர்களிடையே ஒரு பெரும் கொந்தளிப்பு. பட்டது போதும் இனிப் பயமில்லை - நமக்குப் பாதுகாப்பு தரச் சட்டம் வந்துள்ளது என்று அந்தச் சூதுவாதறியாத உழைப்பாளி மக்கள் உளம் பூரித்து இருந்த வேளையில், "சட்டமா? வார்த்தைகளின் கோர்வைதானே? இதோ என் திறமையால், அதனைச் சல்லடைக் கண்ணாக்கி விடுகிறேன், பாருங்கள்'' - என்று சீறிக்கூறி, பண்ணையின் பணப்பெட்டிக்குப் பாதுகாவலராகிவிட்டனர் சிலர். அவர்களால் விளைந்துள்ள வேதனையைத் தாங்கிக்கொள்ள முடியாமல், உழவர் பெருமக்கள் கிளர்ச்சியில் ஈடுபடவும் பக்குவமாகிவிட்டனர். வயலோரங்களிலே, இரும்புத் தொப்பி அணிந்த போலீசார்! உழவர் வாழ் பகுதிகளில், உருட்டல் மிரட்டல் ஏராளம்! இந்த நிலைமையை எடுத்துக் காட்டி, உழவர்களுக்கு நீதி வழங்கும்படி, அமைச்சரைக் கேட்டுக் கொள்ளும் பணியிலே கருணாநிதி ஈடுபட்டது, எனக்குப் பூரிப்பும் பெருமையும் தருவதாக இருக்கிறது; உனக்கும் உவகை கொஞ்சமாகவா இருக்கும்!” என்று குறிப்பிடுகிறார்.
அன்றைக்கு அண்ணா அவர்கள் பூரிப்பும் பெருமையும் உவகையும் கொண்ட அதே மனப்பக்குவத்தில் நம்மை தளபதி ஸ்டாலின்  அவர்களும் இன்றைக்கு நம்மை ஆழ்த்துகிறார். ஒருபக்கம் போராட்ட களம் காண்கிறார். மறுபக்கம் பொறுப்பு முதலமைச்சர் திரு ஒ.பி.எஸ் அவர்களை சந்திக்கிறார்.
கலைஞரின் வாரிசு கழகத்தின் அடுத்தத் தலைமுறை தமிழகத்தின் எதிர்காலம் தளபதி அவர்களும் இப்போது இந்த விவசாயிகளின் துயர் துடைக்க போராட்ட களத்தில் முதல் வரிசையில் அணிவகுத்து செல்வதைக் காணும் போது உள்ளமெல்லாம் உவகையில் மிதக்கிறது.