மதம் என்றால் என்ன?
மதம் என்பது நம்பிக்கை , கலாச்சார அமைப்பு, மற்றும் ஒழுக்க மதிப்புகளின் தொகுப்பு எனவும் சில நேரங்களில், மனிதநேயம் ஆன்மீகம் எனவும் உலகம் கருதுகிறது. அண்டவெளி பற்றியும் உயிர்த்தோற்றம் குறித்தும் விளக்குவதற்காக பல மதங்கள் பல்வேறு வியாக்கியானங்களையும் குறியீடுகளையும் புனித வரலாறுகளையும் புராணங்களையும் வேதங்களாக மறைநூல்களாக கொண்டுள்ளன. அண்டவெளி (பிரபஞ்சம்) பற்றியும் மனித இயல்பு பற்றியும் அவரவர் கண்ணோட்டத்திலும் கருத்துக்களிலும் இருந்து நன்னடத்தை நெறிமுறைகள் எனும் பேரால் தாங்கள் விரும்பிய வாழ்க்கை பெற முடியும் என்னும் நம்பிக்கையின் அடிப்படையில் இறுக்கும் சட்டங்களை மதங்கள் உருவாக்கி இருக்கின்றன. உலகில் சுமார் 4.200 மதங்கள் உள்ளன.
ஒழுங்கமைக்கப்பட்ட நடத்தை முறைகள், மத குருமார்கள், அவர்களை பின்பற்றுவர், மதஉறுப்பினர் என்பதற்கான வரையறை, புனித இடங்களையும் வேதவசனங்களையும் கொண்டுதான் பல மதங்கள் கட்டமைக்கப்பட்டு இருக்கின்றன. ஒரு மதத்தின் நடைமுறையில் பிரார்த்தனை, பிரச்சாரம், சொற்பொழிவுகள், கடவுளரின் நினைவு தினம், பூஜை, கொண்டாட்டங்கள், நோன்புகள், பண்டிகைகள், விழாக்கள், கனவுகள், ஏக்கங்கள், முயற்சிகள், இறுதி ஊர்வல சேவைகள், திருமண சேவைகள், தியானம், பிரார்த்தனை, இசை, கலை, நடனம், பொதுச்சேவை, மனித கலாச்சாரம் மற்ற பல வாழ்வியல் அம்சங்களை உள்ளடக்கியதாக இருக்கிறது. இத்தகைய செயல்களை பொதுவாக சடங்குகள் என்றோ மதஒழுக்கம் என்றோ சொல்லலாம். இவற்றிற்கு புராணங்கள் மதநூல்கள் பலப்பல கதைகளை பெருமிதத்துடன் சொல்லி மனித மனங்களை ஆட்கொண்டு அடக்கி வைக்க பயன் படுகின்றன.
மதம் என்னும் மரத்தின் கிளைகள் சாதி
இந்திய சூழலில் குறிப்பாக தமிழகச் சூழலில் பன்னெடுங்காலம் மதம் என்பது ஒருமுகத் தன்மையுடனான ஒழுங்குபடுத்தப்பட்ட அமைப்பாக இருந்ததில்லை. தனிமனிதர்களின் தத்துவத் தேடல்களாகவும் அதில் தேர்ந்தவர்கள் தம் அனுபவ பதிவுகளாகவுமே இருந்து இருக்கிறது. பொதுமக்கள் அவரவர் நம்பிக்கையின் பாற்பட்டு பல்வேறு சடங்குகளை தாமே செய்து கொண்டாலும் ஏதோவொரு வகையில் அவை சமூகமயமாகி எல்லோரும் ஒரேவகையான சடங்குகளை பின்பற்றும் நிலையும் உருவாகிவிடுகிறது. அப்படிப்பட்ட நிலை உருவாகி அதனைக்கட்டி காப்பாற்றவும் பரப்பவும் சிலர் முற்படும் போது அவை நிறுவனம் ஆகின்றது. நிறுவனம் வளர்ந்ததும் ஊழல் நுழைகின்றது. தன்னலம் கொண்ட நிறுவனத் தலைமை மக்களை மேலும் சிந்திக்க ஒட்டாமல் மேற்படி எந்த மாறுதலையும் ஏற்காமல் நம்பிக்கை என்னும் ஒரேசிந்தனை ஓட்டத்தில் மக்களை அடக்கி ஆள முற்படுகிறது. மதமயக்கத்தில் மக்களும் தாம் அடிமைகளாக்கப்பட்டோம் என்பதை உணராமல் அவதிகளைப் பொறுத்துக் கொண்டும் அநீதிகளைத் தட்டிக் கேட்கும் திறம் இன்றியும் கிடக்கின்றார்கள்.
இதுவரை உலக வரலாற்றில் மதச்சண்டைகளில் மரணித்தவர் எண்ணிக்கை அளவிடல் அரிது. மதம் மனித சமூகத்திற்கு நன்மை செய்வதாக வந்து செய்த தீமைகளே கூடுதலானது. மதம் மனங்களை வேறுபடுத்தியது. மனிதர்களை பிரித்தது. ஒருவரோடு ஒருவரை மோதவிட்டது. இவற்றிலிருந்து மனிதம் விடுதலை அடைவது எப்படி? மதமற்ற சமுதாயம் சாத்தியமா? மதங்கள் பெயரால் பெரும் குழுக்களாகவும் சாதியின் பெயரால் சிறுசிறு குழுக்களாகவும் இந்திய சமூகம் பிரிந்துபட்டு ஒருவரை ஒருவர் அடக்கி ஆளவும் ஆதிக்கம் செலுத்தவுமான சூழல் நிலவுகிறது. மதங்களைப் போலவே சாதிகளுக்கும் அதனதன் சுய கட்டுதிட்டங்களும் சடங்குகளும் வாழ்வியலில் கடைபிடிக்கப்படுகின்றன.
சாதி என்பது தொழில் சார்ந்த பெயராகவும் ஒரு குறிப்பிட்ட தொழில் முனைவர்களின் குறியீட்டுச் சொல்லாகவும் இருந்த தமிழக மரபு பிறப்பின் அடிப்படையிலான வர்ணாச்சரமம் என்னும் ஆரியதர்மத்தை ஏற்றுக் கொண்ட பின்னர் சாதியும் பிறப்பின் அடிப்படையிலானது. மதமெனும் பெரும் நிறுவனத்தின் கிளை நிறுவனமாக சாதி மாற்றம் அடைந்தது. மதம் என்னும் நச்சு மரத்தின் கிளைகள்தான் சாதி எனலாம்.
தமிழகத்தில் சாதி
ஜாதி என்னும்சொல் தமிழ் அல்ல. அதற்கு நேர் தமிழ்ச்சொல் இல்லை. ஆதலால் சாதி என்று தமிழ்படுத்தி பேசுகிறோம். தமிழகத்தில் நிலவிய தொழில் அடிப்படையான பெயர்களும் பிரிவுகளும் குலங்கள்
என்று அழைக்கப்பட்டன. அதுவே ஆரியரின் வர்ணாச்சரம தர்மம் தமிழகத்தில் வேரூன்றிய பிறகு
பிறப்பின் அடிப்படையாக மாறியது. அது சாதி எனப்பட்டது. சாதி
நமக்கு அன்னியம் ஆனாலும் சாதி நம் வாழ்வில் விலக்க முடியாத அங்கம்மாகிப் போனது. சாதிய ஒடுக்குமுறைகள் தமிழகத்தில் மிக கடுமையாக இருந்து இருக்கிறது. சாதி வேறுபாட்டால் அமைந்த நியாய தர்மங்கள் மனுநீதி என்ற பெயரில் உன்னிப்பாக பின்பற்றப் பட்டன. மனித உரிமையும் சமூக நீதியும் மறுக்கப்பட்டு பிறப்பின் அடிப்படையில் ஏற்றத் தாழ்வு கடைபிடிக்கப் பட்டு வந்தன.
பத்தொன்பதாம் நூற்றாண்டு இறுதியிலும் இருபதாம் நூற்றாண்டின்
துவக்கத்திலும் பழந்தமிழர் பெருமையும் திராவிட இன வரலாறும் தமிழரிடையே புரிய ஆரம்பித்தன.
இன எழுச்சியும் மொழிப்பற்றும் புது உருவு கண்டன.
திராவிட இயக்கத்தின் சமூக அரசியல் பங்களிப்பின் பயனாக மற்ற எல்லா மாநிலங்களையும் விட தமிழகம் இடஒதிக்கீட்டு முறையின் பயனாக சமூகநீதியில் முதன்மை வகித்தும் எல்லா சமூகத்தினரும் ஓரளவு கல்வி வேலைவாய்ப்புகளில் முன்னேறி வருவதும் யாராலும் மறுக்க முடியாது. இருந்தாலும் இன்னும் அடைய வேண்டிய இலக்கு வெகுதொலைவு இருப்பதையும் காணமுடிகிறது.
இத்தனைக்குப் பிறகும் மதமும் சாதியும் மக்களின் மனதை விட்டு அகன்றதா? தமிழர் உணர்வு பெருகிற்றா ? ஒற்றுமை ஓங்கியதா? என்பதனைப் பார்த்தால் கவலை அளிக்கிறது. சாதி மோதல்கள், சாதியஒடுக்குமுறை, தீண்டாமைக் கொடுமைகள் தமிழகத்தில் அறவே ஒழிந்தது என்னும் நிலை இல்லை. ஒடுக்கப்பட்ட சாதியனராகவும் ஆரிய வர்ணாச்சர படிகட்டில் நான்காம் நிலை சூத்திரராகவும் அரசியல் சட்டப்படி மிகவும் பிந்தங்கிய வகுப்பினராகவும் இருப்பவர்கள் இடையிலேயே இத்தகு மோதல்கள் உருவாக்கப்டுவதும் கவனிக்கத்தக்கது
இக்கால போட்டி உலகில் சமூக மதிப்பும் பொருளாதார முன்னேற்றமும் அடைவதில் ஒருவருக்கு ஒருவர் போடும் அதிகார சண்டைகளாகவும் ஒருவர் அடைந்த முன்னேற்றத்தைக் கண்டு மனம் ஒப்பாத பொறாமைச் சண்டைகளாகவும் இவைகளைப் பார்க்க முடிகிறது. இன்னும் ஆழ்மனதில் சாதிய எண்ணம் படிந்து இருக்கிறது என்பதும் மறுக்க முடியாது.
சாதிய அடக்குமுறையின் விளைவுகள்
சாதிய அடக்குமுறை இந்தியத் துணை கண்டம் முழுதுமே பரந்துபட்டு இருக்கிறது. இந்தியாவில் இந்துத்துவ ஆதிக்கச் சக்திகள் இதற்கு தூபம் போட்டு வளர்க்கிறது. இந்திய சாதிய அமைப்பு சமூக மதிப்பு என்ற அடிப்படையில் அடுக்குமுறையில் கட்டமைக்கப் பட்டிருக்கிறது. மதம் இந்த அடுக்குமுறையை கட்டு குலையாமல் காப்பாற்றுவதில் அக்கறைக் காட்டுகின்றது. இந்நிலை இந்தியாவில் ஆரியர் நுழைவுக்குப்பிறகு அவர்களால் ஏற்படுத்தப்பட்டு பலநூறு ஆண்டு காலமாகத் தொடர்ந்து வருகிறது. தூய்மை-மாசு அடிப்படையில் தீண்டதக்கவர் – தாகாதவர் என்பதான வேற்றுமை சிக்கல், பாகுபாடு, பாரபட்சம், சமனிலை இன்மை போன்ற சூழலை மதம் மக்களின் தினசரி வாழ்க்கையிலும் நம்பிக்கையிலும் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கி பேணிப் பாதுகாத்து வருகிறது.
இவைகளுக்கு எதிராக புத்தரும் மகாவீரரும் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே குரல் கொடுத்து இருக்கிறார்கள். அவர்களுடைய அறிவுரைகளும் கொள்கைகளும் சிலகாலம் இந்தியாமுழுதும் கடைபிடிக்கப் பட்டாலும் மீண்டும் பழைய நிலைக்கு போனது ஆரியதர்மத்தின் ஆதிக்கச்சக்திகளின் சூழ்ச்சியால் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். அத்தகையச் சூழ்ச்சியே இன்றும் தமிழகத்தில் தொடர்கிறது என்பதனை பாமரர் உணர வேண்டும்.
மத சாதி அமைப்புகளின் அநீதிகளுக்கு எதிராக மனிதநேயம் மிக்க சான்றோர் தமிழகத்தில் சித்தர் பரம்பரையில் வள்ளுவரிலிருந்து திருமூலர் ஊடாக வள்லலார் வரை தொடர்ந்தது. சாதியிலே மதங்களிலே சாத்திரக் குப்பையிலே அபிமானிக்க வேண்டாம் என்ற குரல் பன்னெடுங்காலமாக தமிழகத்தில் ஒலித்தது. அந்த வரிசையில் தந்தை பெரியார் சுயமரியாதை இயக்கத்தை முன்னெடுத்து தமிழர்களின் தன்மானத்தைத் தட்டி எழுப்பினார். தமிழக முன்னோர் முனைந்து வலியுறுத்தாத கடவுள் மறுப்பை கையிலெடுத்தார். கடவுள் மறுப்பே மனிதன் கடதேற வழி என்று கண்டார். நாத்திகர் என்று தூற்றினர். அவரோ நாத்திகம் நன்னெறி என்று பரப்புரை ஆற்றினார். கடவுளை மற, மதங்களை மற, மனிதனை நினை என்று வலிவுறுத்தினார்.
”யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்றும் ’பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்றும் உயரிய உன்னத கொள்கைகளையும் சிந்தனைக் கோட்பாடுகளையும் உலகிற்களித்த தமிழகம் தாழ்ந்த நிலைக்கு தள்ளப் பட காரணம் என்ன? ஏ தாழ்ந்த தமிழகமே.! தலை நிமிர், தன்மானம் கொள் என்றும் ஆரிய மாயையிலிருந்து விலகுதலே தமிழர் விடுதலைக்கு வழிவகுக்கும்” என்றும் தந்தை பெரியார் வழியில் அறிஞர் அண்ணாவும் தமிழர் ஒற்றுமைக்கும் முன்னேற்றத்திற்கும் பாடுபட்டார்.
ஒருவேளை திராவிட இயக்கத்தின் கோரிக்கையாக இருந்த திராவிடமோ தமிழகமோ தனி நாடாக ஆகி இருந்தால் இன்று உள்ள இழிநிலை என்றோ சீர்செய்யப்பட்டிருக்கும் எனவும் எண்ணத் தோன்றுகிறது. இன்றும் இந்நிலை மாறுவதற்கான பண்பட்ட நிலமாகவே தமிழகம் இருக்கிறது. இருந்தாலும் இந்துத்துவ சக்திகளின் சூழ்ச்சி வலையில் சிக்கியவர்கள் அதனை அறுத்து எரிந்தால் மட்டுமே பெரும் மாற்றங்கள் நிகழ வாய்ப்பு உண்டு. அதற்கு சிறந்த வழி பெரியார் வழியே ஆகும். பெரியாரின் கொள்கைகளை மக்கள் சரிவர புரிந்து கொள்ள வேண்டும். பெரியாரின் திராவிட இயக்கம் தான் இன்றைக்கு தமிழர் உணர்வு பற்றி நாம் பேசுதற்கும் தமிழராய் நடமாடுதற்கும் வழி வகுத்தன என்பதை மறக்கக்கூடாது.
1 comment:
காலத்திற்கு' தகுந்த' கட்டுரை..வாழ்த்துகள்..
Post a Comment