Wednesday, June 8, 2016

தீர்க்கதரிசி - வலியைப் பற்றி

வலியைப் பற்றி
ஒரு பெண் வலியைப் பற்றி சொல்லுங்கள் என்றதும்
அவர் சொன்னார்:

உங்களின் வலி என்பது
உங்களுடைய  புரிதலை   
மூடியிருக்கும் கொட்டையை
உடைப்பது போன்றது

கல்லாலான பழத்தின்  கடின கொட்டையானாலும் அதை 
வெய்யிலில் உலர்த்தி அதன் 
இதயத்தை உடைப்பதுதான்
வலி என்பதென்று உங்களுக்குத் தெரிய வேண்டும்
 
நாளும் நடக்கும் அதிசயத்தில் - உங்கள்
உள்ளம்  ஆச்சரியம் அடைய முடியும்

மகிழ்ச்சியைவிட குறைவான ஆச்சரியமாக  
உங்கள் வலி இருக்காது என்று தெரிகிறது

உங்கள் இதயத்தின் பருவகாலங்களை சம்மதிப்பீர்
குளிர்கால இன்னலையும் அமைதியுடன் கண்டு
வயல்வெளியில் கடந்துபோகும் எல்லா காலங்களையும்
எப்போதும் சம்மதிப்பது போல் சம்மதிப்பீர்

உங்கள் வலிகளில் கூடுதலானவை
நீங்கள் தேர்வு செய்தவைதான்  

வலி ஒரு கசப்பு மருந்து
உங்களுக்குள் உள்ள மருத்துவன்
உங்கள் நோயை குணப்படுத்தக் கொடுப்பது

ஆகவே மருத்துவனை நம்புங்கள்
அவன் தரும் மருந்தை குடியுங்கள்
அமைதியுடன் ஆனந்தத்துடன்

மருத்துவன் கைகள் பார்ப்பதற்கு
வன்மையாகவும்  முரடாகவும் இருந்தாலும்
மருத்துவம் கண்ணுக்குத் தெரியாத மென்மையான 
கைக்கொண்டே செய்யப்படும்

மருத்துவன் மருந்தூட்டக் கொண்டுவரும் குவளை
உங்கள் உதடுகளைச் சுட்டாலும் அவைகள்
மாயக்குயவனின் புனிதக் கண்ணீரில் நனைத்து

பிசைந்தெடுத்த களிமண்ணில் வடித்தது என்பதறிவீர். 

No comments: