Thursday, June 9, 2016

தீர்க்கதரிசி - விடைபெறுதல்

விடைபெறுதல்
அது ஒரு மலைபொழுது.
அல்மித்ரா என்னும் அந்த சாமியாரிணி சொன்னாள்
உங்கள் உள்ளத்தின் உரையால்
இந்த நாளும்  இந்த இடமும் வாழ்த்தப்பட்டன.

அதற்கு அவர் சொன்னார்.
நானா பேசியது ? நானும் ஒரு கேட்பாளன் இல்லையா?”



பிறகு அவர் கோயிலின் படிக்கட்டுகளில் இறங்கினார்.
எல்லோரும்  அவரைப் பின்தொடர்ந்தனர்.
அவர் கப்பலை அடைந்து தளத்தின்  மீது நின்றார்

மீண்டும் மக்களைப் பார்த்து குரலை உயர்த்தி சொன்னார்:
ஆர்பலேஸ் நகர மக்களே
காற்று கோருகிறது என்னை உங்களை விட்டுப் பிரிய
காற்றினும் குறைந்த அவசரத்தில் நான் இருந்தாலும்
நான் போகத்தான் வேண்டும்

நாடோடிகளான நாம்  எப்போதும்  தனி வழி தேடுபவர்கள்
நம்முடைய  நாளின் தொடக்கம்
முடிந்த நாளில் இருந்தே தொடங்குவதில்லை.
எங்கே சூரியமறைவு நம்மை  விட்டு போனதோ
அங்கே சூரிய உதயம் நம்மை  காண்பதில்லை
உலகமே உறங்கினாலும் நாம்  பயணிப்போம்
நாம்  காற்றில் தெளிக்கப்பட்ட
பழுத்த இதயம் நிறைந்த உறுதியான தாவரத்தின் விதைகள்

உங்களுடன் இருந்த என் நாட்கள் குறைவானது. .
நான் பேசிய வார்த்தைகள் அதைவிட குறைவானது.
ஆனால் என் குரல் உங்களின் காதுகளில் மங்கலாகும்போது
என் அன்பு உங்கள் நினைவுகளில் மறையும்போது
நான் மீண்டும் வருவேன். வளமான இதயத்துடன்
உயிர்மையோடு இதமாக பேசும் உதடுகளுடன்
ஆமாம் நான் அலைகளுடன் திரும்பவேண்டும்
மரணம் என்னை மறைத்தாலும்
பேரமைதி என்னை சூழ்ந்தாலும்
மீண்டும் உங்கள் புரிதலை வேண்டுவேன்

என் வேண்டுதல் வீண் போகாது
நான் சொன்னதெல்லாம் உண்மை என்றால்
உங்கள் எண்ணங்களுக்கு நெருக்கமான சொற்களால்
அந்த உண்மை தெளிவான குரலில் தானே வெளிப்படும்

காற்றோடு நான் போகிறேன் ஆர்பலேஸ் மக்களே
ஆனால் வெற்றிடத்தின் ஆழத்தில் அல்ல.

இந்த நாள் உங்கள் தேவைகளையும் என் அன்பையும்
முழுமையாக்காமல்  போனால்
வேறொரு நாளுக்கு  வாக்குறுதி தரும். 

மனிதரின் தேவைகள் மாறுகின்றன.
ஆனால் அவர் அன்பு மாறாது. - அந்த அன்பு
அவரின் தேவைகளை திருப்தி படுத்த வேண்டும்
என்ற ஆசையும் மாறாது. ஆகவே
தெரிந்து கொள்ளுங்கள்
பேரமைதியிலிருந்தும் நான் திரும்பி வருவேன்.

விடியலில் விழுந்த மூடுபனி
வயல்களில் பனித்துளிகளாய் விட்டுப் பிரிந்து 
பின் மேலழுந்து மேகங்களில் கரைந்து
பிறகு மழையாகப் பொழிகிறது.
அந்த மூடுபனி போன்று இருந்து இருக்கிறேன் நான்.

இரவின் அமைதியில்
உங்கள் வீதிகளில் நடந்து இருக்கிறேன்
என் உயிர் உங்கள் வீடுகளில் நுழைந்தது
உங்கள் இதயம் என் இதயத்தில் துடித்தது
உங்கள் மூச்சுக்காற்று என் முகத்தில் வீசியது
நான் உங்கள் அனைவரையும் அறிவேன்

நான் உங்கள் மகிழ்ச்சியும் வேதனையும் அறிவேன்.
உங்கள் உறக்கத்தின் கனவுகளே என் கனவுகள்
மலைகள் மத்தியில் இருக்கும் ஏரியாக
நான் பெரும்பாலும் இருந்து இருக்கிறேன்

உயரத்தில் வளைந்து சாய்ந்து ஓடும் உங்களின்
எண்ணக் கூட்டத்தையும் ஆசையையும்
கண்ணாடிபோல் காட்டியிருக்கிறேன்.

உங்கள் குழந்தைகளின் சிரிப்பொலி நீரோடையாகவும் 
உங்கள் இளைஞர்கள் விருப்பங்கள் ஆறாகவும்
என் அமைதியில் பாய்ந்து இருக்கிறது.

நீரோடையும் ஆறுகளும் என் ஆழத்தை அடைந்தபோது
பாடுவதை நிறுத்திக் கொண்டன ஆனால்
சிரிப்பொலியைவிட இனிப்பாகவும்
விருப்பங்களைவிட பெரிதாகவும் வந்தடைந்தது.
அது உங்களிடம் எல்லையற்று இருந்தது - ஆனாலும் 
உங்களில் பலரில் சிறைபட்டவர்கள் பலமுள்ளவர்கள்
ஆனாலும் அவர்கள் பாடும் பாடல்கள்
ஆரவாரமற்ற வருத்தங்களாக இருக்கின்றன.
அளவற்ற மனிதரில் அளவற்றவரிடம் இது இருக்கிறது.
அவர்களை நான் தாங்கிப்பிடிப்பது
உங்களைத் தாங்கிப் பிடிப்பதாகும்
உங்களிடம் அன்பு காட்டுவதாகும்

இந்த பரந்த உலக உருண்டையில் இல்லாத
அந்த அன்பு எவ்வளவு தொலைவு போகும்?
எந்த நோக்கம் எந்த எதிர்பார்ப்பு எந்த முன்முடிவுகள்
அந்த அன்பின் விமானத்தை முடுக்கிவிட முடியும்?

உங்களில் பல மனிதர்கள்  பெரிய கருங்காலி மரம்
ஆப்பிள் பழங்களால் பூத்துக் குலுங்குவது போலிருகிறீர்கள்.
அவர்கள் வலிமை பூமியுடன் பிணைந்திருக்கிறது.
அவர்கள் நறுமணம் உங்களை வான்வெளியில் உயர்த்துகிறது.
அவர்கள் உறுதியில் நீங்கள் மரணமற்றவராவீர்.
.
சங்கிலி பலமாக இருந்தாலும்
உங்கள் பலவீனம்
சங்கிலியின் பலவீனமான இணைப்பில் இருப்பதாக  
உங்களுக்கு சொல்லப்பட்டு வந்தது . ஆனால்
அது பாதிதான் உண்மை

சங்கிலியின் மிகச்சக்தி வாய்ந்த இணைப்பில் இருக்கும்
சக்தியைப் போன்றே உங்களின் சக்தியும் இருக்கிறது

உங்களை அளவிடுவது
கடலின் ஆற்றலை கணக்கிட
அதன் நுரையின் குறையால் மதிப்பிடுவது போன்றது.   

உங்களின் தோல்வியால் உங்களை நிறுத்தி பார்ப்பது
காலத்தின் நிலையற்றத் தன்மைக்கு பருவத்தின் மீது
பழிபோடுவதைப் போல்தான்.

ஆமாம் நீங்கள் கடலைப் போன்றவர்கள்.
தரை தட்டிய கப்பல் உங்கள் கரையில்
அலைகளுக்கு காத்திருந்தாலும்
கடலைப்போல் உங்கள் அலைகளை
உங்களால் விரைவு படுத்தமுடியாது.

நீங்கள் பருவகாலங்களையும் போன்றவர்கள்
குளிர்காலத்தில் வசந்தவாசம் மறுதலித்தாலும்
வசந்தம் உங்களுக்குள் ஓய்ந்து கிடக்கிறது.
புண்படுத்தாமல் மயக்கத்தோடு சிரிக்கிறது     

மனதில் வையுங்கள்
அவர் எங்களைப் புகழ்ந்தார்.
அவர் எங்களிடம் நல்லவற்றை பார்த்தார்என்று
ஒருவர் இன்னொருவருக்கு சொல்வீர்கள்  
என்பதற்காக அல்ல நான் இதையெல்லாம் சொல்வது
நான் உங்களிடம் பேசுவது எல்லாமே
உங்கள் எண்ணங்களின் வார்த்தைகள்தான்.

சொல் தரும் அறிவு என்பது என்ன - அது
சொல்லில்லா அறிவின் நிழல் அல்லவா

பூமித்தாய்
தன்னையும் நம்மையும்  இரவுகளையும்  தெரிந்திராமல்
குழம்பி இருந்த தொன்மத்தில் மூடி வைத்த
கடந்தகால நினைவு அலைகள்தான்
உங்கள் எண்ணங்களும் என் வார்த்தைகளும்

மெய்யறிஞர்  தங்களின்  மெய்யறிவை உங்களுக்கு கொடுத்தனர்.
நான் உங்களிடம் அந்த ஞானத்தைப்  பெற வந்தேன்
நான் இப்போது கண்டுகொண்டேன்
எது ஞானத்தைவிடப் பெரிது என்று.

உங்கள் நாட்கள் உதிர்வதில் வருத்தப்பட்டு இருக்கும் போதும்
உங்கள் வளர்ச்சியில்  அக்கறையற்று இருக்கும் போதும்
உங்களுக்குள்  இருக்கும் ஊக்கம் எப்போதுமே
கூடுதலாகவே தீச்சுடராய் கொழுந்துவிட்டு எரிகிறது

வாழ்க்கை என்பது கல்லறைக்கு அச்சப்படும் வாழ்க்கையின் தேடல்
இங்கே கல்லறைகள் இல்லை
இந்த மலைகளும் சமவெளிகளும்
தொட்டிலாகவும் படிக்கற்களாகவும் விளங்குகின்றன.
உங்கள் மூதாதையரை கிடத்திய கல்லறை தோட்டத்தில்  
எப்போதாவது போகும்போது நீங்களே காணலாம்
உங்கள் குழந்தைகள் கைகோர்த்து நடனம் ஆடுவதை.
உண்மையாகவே உங்களுக்குத் தெரியாமல்
உவகையை உண்டாக்குகிறீர்
நீங்கள் நம்பும்படி
பொன்னான வாக்குறுதிகள் கொடுக்க வந்தவர்கள் வேறு பலருண்டு
அவர்கள்
செல்வந்தராகவும் அதிகாரமிக்கவராகவும் புகழ்பட்டவராகவும்தான் 
இருந்து இருக்கின்றனர் ஆனால்
எந்த வாக்குறுதியும் தராமல் இருந்தும்
என்மேல் நீங்கள்  மிக்க அன்பு பாராட்டுகின்றீர்
என்னுள் வாழ்க்கையின் மீதான ஆழ்ந்த வேட்கையை கிளப்பிவிட்டீர்
உறுதியாகச் சொல்கிறேன்  ஒருமனிதனுக்கு
நீரூற்றைப் போன்ற வாழ்க்கையும்
உலர்ந்த உதடுகளைப் போன்ற குறிக்கோளையும்  விட
கிடைத்தற்கரிய பெரிய பரிசு வேறு இல்லை 
அதில்தான் என்னுடைய மதிப்பும் விருதும் கிடக்கின்றன.
எப்போதெல்லாம் ஊற்றில் நீரருந்த வருகின்றேனோ
அப்போது காண்கிறேன் நீரும் தாகத்தால் தவிப்பதை
அது என்னைக் குடிகிறது நான் அதைக் குடிக்கும்போது 
உங்களில் சிலர் என்னை பெருமைப் படுத்தினர்
அவர்களின் பரிசுகளைப் பெறுவதில் மிக்க நாணமடையச் செய்தனர்
உண்மையில்  பரிசு பெறுவதைவிட
கூலி பெறுவதில்தான் எனக்குப் பெருமை

உங்கள் அருகாமையில்  என்னை அமர்த்திக் கொண்டு  
கோயில் வாயில் மண்டபத்தில் உறங்கிய போது
மகிழ்ச்சியுடன் எனக்கு தங்க இடம் தந்தபோது 
மலைகளின் நடுவே நெல்லிக் கனிகளை புசித்தது போல்
எனக்கு இருந்தாலும்
என் வாயில் இனிய உணவை ஊட்டி
கனவுகள் நிறைந்த உறக்கத்தைத் தந்த
என்னுடைய அந்த  இரவும் பகலும்
உங்களின் அன்பான நினைவுகளில் இருக்காது தானே?   
இதற்காக உங்களை மிக்க வாழ்த்துகிறேன்
கொடுப்பது  தெரியாமலே நீங்கள்
கொடுத்துக் கொண்டு இருக்கிறீர்
உண்மையில் கண்ணாடியில் தன்னை
காண்பித்துக் கொள்ளும்  இரக்கம்
கல்லைப் போன்றது
நற்செயல்கள் மேன்மையானவை  என்று
தம்மை அழைத்துக் கொண்டால் அவைகள்   
தீவினையின்  தாய்த்தந்தை ஆகிவிடும்   
உங்களில் சிலர் என்னை
தனிமையை விரும்பும்  ஏகாந்தி என்பர்
நீங்கள் என்னைப்பற்றி சொன்னது
மனிதருடன் பேசாமல்
வனங்களில் உள்ள மரங்களுடன் பேசுபவன்.
மலை உச்சியில் அமர்ந்து
நம் மாநகரை குனிந்து பார்ப்பவன்
உண்மைதான்
மலைகளில் ஏறி
தொலைவெளியில் மனம்போல் திரிந்தவன் நான்
அவ்வளவு  உயரத்திலிருந்தும் தொலைவிலிருந்தும்
எப்படி உங்களை என்னால் காப்பாற்ற முடியும் ?
எப்படி ஒருவன் நிசத்தில் தள்ளிப் போகாமல் அருகில் இருக்க முடியும் ?
உங்களில் வேறு சிலர் என்னை பார்த்து
சொல்லாமல் சொன்னார்கள்
பரதேசியே பரதேசியே
அடையமுடியா உயர விரும்பியே 
ஏன் வல்லூறுகள் கூடு கட்டும் உச்சியில்
உங்கள்  உறையுளை அமைக்கிறீர் ? “
அடைய முடியாததன்  மீது ஏன் நாட்டம்?
சூறாவளி  உங்கள்  வலையில் சிக்குமா என்ன ?
காற்றில் கரையும் பறவைகளையா வானில் வேட்டையாடுகிறீர்
வருக எம்மில் ஒருவராக இறங்கி வருக,
எம் ரொட்டித் துண்டுகளால் உங்கள்  பசி ஆற்றுவீர்
எம் மதுவால் உங்கள் தாகம் தணிப்பீர்
இவை உயிர்மையின் தனிமையில் அவர்கள் சொன்னவை
ஆனால் அவர்களின் தனிமை இன்னும் ஏகாந்தமாக இருப்பின்
அவர்களுக்குத் தெரிந்திருக்கும்
உங்களின் இன்ப துன்ப இரகசியத்தைத் தவிர
நான் வேறு எதை தேடினேன் என்று

வானுலாவும் உங்களின் மாபெரும்
தான்தனை மட்டுமே வேட்டை ஆடினேன்.
ஆனால் வேட்டையனே வேட்டையாடப்பட்டான்.
என் வில்லிலிருந்து விடுபட்ட அம்புகள் பலவும்
என் மார்பைதான்  தேடின நாடின

பறப்பதுதான் படர்வதாகவும் இருக்கிறது
சூரியனில் என் சிறகுகள் விரிக்கையில்
பூமியில் அதன் நிழல் ஆமை போல் ஆகிறது - அதனால்
விசுவாசியாகிய நானே சந்தேகியாகவும் இருக்கிறேன்
உங்களைப் பற்றி அதிகம்  அறிந்தும் 
உங்கள் மீது அதீத நம்பிக்கை இருந்தும்
என் சிக்கல்களை களைய என் விரலைத்தான்
அடிக்கடி  வைக்கிறேன்   

இந்த நம்பிக்கையைதான் இந்த அறிவைதான் 
நான் சொல்கிறேன் நீங்கள்
உங்கள் உடலோடு ஒட்டுவதில்லை
உங்கள் வீட்டோடும் வயலோடும் அடைப்பதில்லை
மலைகளில் வாசம் செய்யவும்
காற்றிலே திரியவும் விட்டுவிடுகிறீர்

உயிர் ஒன்றும் சூரியனில் குளிர்காய ஊர்ந்து செல்வதோ
இருட்டில் பாதுகாப்புக்கு குழி தோண்டிக் கொள்வதோ  அல்ல  
பூமியைச் சூழ்ந்து விண்ணில் சுதந்திரமாக உலவுவது ஆகும்

தெளிவற்ற வார்த்தைகளாக இவை இருப்பின்
விளங்கிக் கொள்ள விருப்பம்  வேண்டாம்
தெளிவும் துல்லியமும் இல்லாதிருப்பது
எல்லாவற்றிற்கும் துவக்கம் 
ஆனால் முடிவல்ல
ஆரம்பம் முதல் உங்களுக்கு என்னை நினைவிருந்தால்
ஆனந்தம் அடைவேன்
வாழ்க்கையும் அதில் வாழ்பவர்களும் 
மூடுபனியில் தான் கருத்தரிக்கின்றனர் 
பனிப்படிகத்தில் அல்ல
யாருக்குத் தெரியும் படிகம்தான் உருசிதைந்து
மூடுபனியாகிறது என்று?
இதுதான் உங்களை நினைவுறுத்த
நான் நினைத்துக் கொண்டிருப்பது.
எது உங்களில் வலிமையற்று குழம்பிக் கிடக்கிறதோ
அதுதான்  வலிமையையும் உறுதியுமாக இருக்கிறது..
உங்களின் மூச்சுதானே
உங்கள் எலும்புக் கூட்டை கடினமாக்கி நிலைநிறுத்துகிறது
உங்கள் நினைவில் இல்லாத நீங்கள் கண்ட கனவில் அல்லவா
மாநகரை எழுப்பி கோட்டைகளை கட்டுகிறீர்?
எல்லாவற்றையும் பார்க்காமல் நிறுத்தினாலும்
சுவாசத்தின் அலைகளைப் பார்க்காமல் இருக்க முடியாது
கனவுகளின் முணுமுணுப்பை கவனிக்க  முடியுமானால்
வேறு சப்தங்கள் எதையும் உங்களால் கேட்க முடியாது.- ஆனால்
நீங்கள் பாராமலோ கேட்காமலோ  இருப்பதே  நல்லது  
உங்கள் கண்களை மேகத்திரையிட்டு மறைத்த
அதே கைகள்தான் அதை  விலக்க வேண்டும்
உங்கள்  காதுகளை களிமண்ணால் அடைத்த
அதே விரல்கள்தான் அதை துளையிட வேண்டும்

நீங்கள்  காணவும் கேட்கவும் முடியும்- இருந்தும்
குருடராவும் செவிடராகவும் இருந்ததாக வருந்தக் கூடாது   
ஒரு நாள் உங்களுக்குத் தெரிய வரும் இவைகளின் மறைபொருள்
ஒளியை வாழ்த்துவது போலவே இருளையும் வாழ்த்துங்கள்

இப்படியாக அவர் சொல்லி முடித்தப் பிறகு
தன்னை ஒருமுறை பார்த்துக் கொண்டார்
அங்கே சுக்கான் அருகில் நின்று கொண்டு
பாய்மரங்க்களைப் பார்வையிடும்
அவருடைய கப்பலின் மாலுமியைப் பார்த்தார்  
பிறகு அவர் சொன்னார்
பொறுமை அளவற்ற பொறுமை என் கப்பல் மாலுமியிடம்.
காற்று வீசுகிறது.. பாய்மரங்கள் அமைதியற்று அலைகிறது
சுக்கானும் கூட திசைகளுக்கு யாசிக்கின்றது இருந்தும்
என் கப்பலின் மாலுமி
என் அமைதிக்கு காத்துக் கொண்டிருக்கிறான்
மாக்கடலின் சேர்ந்திசையைக் கேட்டுக் கொண்டிருந்த 
கப்பல் சிப்பந்திகளும்  கூட பொறுமையுடன்
நான் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்
இனிமேலும் அவர்கள் காத்திருக்க மாட்டார்கள்
நான் ஆயத்தமாகிறேன்

நதி கடலை அடைந்தது
மீண்டும் ஒருமுறை தாய் தன் மகனை
மார்புடன் தழுவிக் கொள்கிறாள்
ஆர்பலேஸ் மக்களே
விடை பெற்றுக் கொள்கிறேன்
இந்த நாள் முடிவுற்றது
மூடி மறைகிறது
மறுநாளைக்காக நீர் ஆம்பல் இதழ் மூடுவதைப் போல    

இங்கு என்ன தரப்பட்டதோ அதை வைத்திருப்போம்.
அது போதவில்லை என்றால்
மீண்டும் சேர்ந்து வருவோம்
கொடுப்பவனிடம் சேர்ந்தே கைகளை நீட்டுவோம்
மறவாதீர் நான் மீண்டும் வருவேன்
கொஞ்ச நேரம் 
இன்னொரு உடலுக்காக என் விருப்பம்
பனியும் நுரையும் சேகரிக்கும்
கொஞ்ச நேரம் 
நான் காற்றில் சற்று ஓய்வெடுத்த பின்
என்னை இன்னொரு தாய்மை சுமக்கும்

நேற்றுதான் கனவில் சந்தித்ததைப் போன்ற
உங்களிடம் இருந்தும்
உங்களுடன் கழித்த என் இளமையிடம் இருந்தும்
பிரியா விடை பெறுகிறேன் 

என் தனிமையில் நீங்கள் பாடல் இசைத்தீர்கள்
நான் உங்கள் விருப்பத்தில் ஆகாசத்தில் மாளிகை எழுப்பினேன்
ஆனால் இப்போது
நம்முடைய உறக்கம் பறந்து விட்டது
நம்முடைய கனவு கடந்து விட்டது
இனியும் விடியல் இல்லை
நண்பகல் அலை நம் மீது வீசுகிறது
நம் அரைவிழிப்பு முழுபகலாகியது 
நாம் பிரியும் தருணம் வந்து விட்டது

நினைவுகளின் சிமிட்டலில் நாம் 
மீண்டும் ஒருமுறை சந்திக்க வேண்டும் அப்போது
மீண்டும் சேர்ந்து பேசுவோம்- நீங்கள்
எனக்காக உணரமுடியா உணர்வுடன் பாட்டிசைபீர்கள்     .
வேறொரு கனவில் நம் கைகள் கலந்தால்
வான்வெளியில் இன்னொரு கோட்டை கட்டுவோம்
இப்படி சொல்லிக் கொண்டே
கப்பலோட்டிகளிடம்  சாடை காட்டினார்
உடனே அவர்கள் கப்பலின்  
 நங்கூரத்தை இழுத்தனர்
கட்டுப்பிணையை விடுவித்தனர்
கடல்வெளியில் கிழக்கு நோக்கி கப்பல் நகர்ந்தது
 
ஒரே இதயத்தில் இருந்து ஓங்கிய ஒலியாக
ஆர்பலேஸ் மக்களின் கதறல்
அந்த சாயுங்காலத்தில் கடலின் ஊடாக
எழுந்து எக்காளமிட்டது                                                                                                          

அல்மித்ரா மட்டும் அமைதியாக
கப்பல் மூடுபனியில் மூழ்கும் வரை
அதை வெறித்துப் பார்த்துக் கொண்டே இருந்தாள்
எல்லோரும் கலைந்து சென்ற பிறகும்
தனியாக கடற்கரை சுவரில் சாய்ந்து கொண்டு
அவர் சொன்னதை மனதிற்குள் நினைவுபடுத்திக் கொண்டாள்:

கொஞ்ச நேரம்  
நான் காற்றில் சற்று ஓய்வெடுத்த பின்
என்னை இன்னொரு தாய்மை சுமக்கும்


No comments: