தன்னறிவு பற்றி
ஒரு மனிதன்
தன்னறிவு பற்றி கேட்கவும்
அவர் சொன்னார்:
இதயத்திற்குத்
தெரியும் இரவு பகல்களின்
அமைதியும்
இரகசியமும்
இதயத்தின்
அறிவுக் குரலுக்கு
செவிகள்
தாகத்தில் தவிகின்றன
எண்ணங்களில்
தெரிந்தவை
எப்போதும்
வார்த்தைகளில் தெரியவரும் - உங்கள்
விரல்களால்
கனவுகளின் அம்மண உடலை தொடுவீர்.
அதுதான் நல்லது
அப்படித் தொட வேண்டும் – அப்போது
உள்ளத்தில்
ஒளிந்திருக்கும் ஊற்றுக்கிணறு
பொங்கிப் பெருகி
சலசலவென்று கடலுக்கு ஓடும் – அங்கே
முடிவிலா
ஆழத்தில் புதையல் கண்களுக்குப் புலப்படும்
புலப்படாத
புதையலை எடைபோட துலாக்கோல் வேண்டாம்
அறிவின் ஆழத்தைக்
காண
அளவுகோலோ
ஆழாய்வுக் கருவியோ தேடாதீர்
தான் என்பது
எல்லையற்ற அளவில்லா கடல்
”நான் கண்டதுதான் உண்மை” என சொல்லாதீர்
“நான் கண்டது உண்மை” என்று சொல்லுங்கள்
”ஆன்மாவின் வழியை கண்டேன்” என சொல்லாதீர்
“என் வழியில் நடக்கையில் ஆன்மாவை சந்தித்தேன்” என்று சொல்லுங்கள்
உயிர்மை எல்லா
வழிகளிலும் நடக்கிறது
உயிர்மை ஒரே
கோட்டில் நடப்பதும் அல்ல
நாணற்புல் போல்
வளர்வதும் அல்ல
உயிர்மை எண்ணற்ற
இதழ்களுடன் மலரும் தாமரை
No comments:
Post a Comment