Wednesday, June 8, 2016

தீர்க்கதரிசி - குற்றமும் தண்டனையும் பற்றி

தீர்க்கதரிசி

கலீல் ஜிப்ரன் 
தமிழில் 
அருள்பேரொளி 

குற்றமும் தண்டனையும் பற்றி
நகரத்தின் நீதிபதிகளில் ஒருவர்
முன்வந்து கேட்டார்;
குற்றமும் தண்டனையும் பற்றி
அதற்கு அவர் பதில் சொன்னார்:

உங்களுடைய உயிர்மை என்னும் ஆத்மா
தனிமையில் கட்டுபாடின்றி திரியும் போது
மற்றவர்களுக்கு தப்பு இழைக்கிறது - ஆகையால்
அதுவே உங்களுக்கும் தப்பு செய்ததாகிறது .
தப்பிதத்திலிருந்து தப்பிக்க
பேரருளாளரின் திறவா கதவைத்
தட்டிவிட்டு காத்திருங்கள்.

உங்களின் கடவுள் தன்மை கடல் போல் எப்போதும் தூயது.
அது சிறகடித்து விசும்பில் உயருகிறது.
சூரியன் போல் பிரகாசிக்கிறது. - அதற்கு
உளவாளியின் வழியும் தெரியாது
பாம்பின் பொந்தும் தெரியாது - ஆனாலும்
உங்களின் கடவுள் தன்மை உங்களுக்குள்ளே
தனிமையாக வாசம் செய்வதில்லை.

உங்களில் உள்ள மனிதத்திடம் நான் இப்போது சொல்கிறேன்.
உங்களிடம் மனிதம் நிறையவே இருக்கிறது
நிறைய இல்லாமலும் இருக்கிறது - ஆனாலும்
அருவுருவான குறுகிய உள்ளங்கொண்ட குள்ளச்சாமி
பனிப்பொழிவில் தன் விழிப்பைத் தேடி
தூக்கத்தில் உலவுவது போல் இருக்கிறது.

குற்றத்தையும் தண்டனையையும் பற்றி
ஒருவனைத் தவிர
உங்கள் கடவுள் தன்மைக்கோ
பனிப்பொழிவில் உலாவும் குள்ளச்சாமிக்கோ தெரியாது.

குற்றம் இழைத்தவர்
உங்களில் ஒருவராக இல்லாத மாதிரியும்
அன்னியரை போலவும்
வேற்றுலகவாசியைப் போலவும் பேசுவதைப்
பலமுறை நான் கேள்விபட்டு இருக்கிறேன்.

ஆனால் நான் சொல்கிறேன்,
உங்கள் ஒவ்வொருவரிடமும் இருக்கும்
நன்னடத்தையும் அறச்சிந்தனையும் போல உயர்ந்ததும்,
கெட்டகுணமும் உறுதியில்லா மனமும் போல கீழானதும்
வேறு எதுவும் கிடையாது.

மரத்தின் அமைதியான அறிவுக்கு ஆட்படாமல்
ஒரு இலைகூட பழுப்பு நிறமடையாது - ஆகையால்
உங்களில் தவறு செய்பவர் யாரும்
அவர்களின் ஒளிவான ஒத்திசைவு இல்லாமல்
அந்தத் தவறைச் செய்ய முடியாது.

இறைத்தன்மையை நோக்கி
ஊர்வலம் போவது போல் போவீர்.
நீங்களே வழியும் வழிப் போக்கனும் ஆவீர்.
ஒருவர் கல் இடறி கீழே விழுவது
பின்னால் வருபவருக்கு எச்சரிக்கை என்பதை அறிவீர்.
விழுந்தவருக்கு முன் சென்றவர்
வேகமாகவும் நிச்சயமாகவும் தடைக்கல்லை விலக்காமல்
கடந்து சென்றதால்தான் இவர் விழலானார்.

மேலும் இப்படி நான் சொல்வது
உங்கள் இதயத்தை அழுத்தும் பளுவான சொல்லாக இருக்கலாம் 
கொல்லப்பட்டவர் கொலைக்குப் பொறுப்பில்லாதவர் என்பது இல்லை.
திருடப்பட்டவர் மீதே திருட்டுப்பழி சுமத்த முடியாது என்பதும் இல்லை.
தீயவரின் செயலுக்கு தர்மவான்கள் அப்பாவி என்று தப்பிக்க முடியாது.
கைகள் வெள்ளையாக இருப்பதாலேயே
குற்றச் செயலின் கறைகள் இல்லை என்பதில்லை.

ஆம்,  பெரும்பாலும் குற்றம் அடிபட்டதின் பாதிப்பு .

குற்றமற்றவரும் பழிக்கஞ்சியவருமே தண்டனையைச் சுமக்கிறார். 
அநீதியிலிருந்து நீதியையும் தீமையிலிருந்து நன்மையும்
உங்களால் பிரிக்க முடியாது.

நல்லதும் கெட்டதும் 
கறுப்பு வெள்ளை இழைகள் கலந்து நெய்தது போல்
கதிரவன் முகத்துக்கு எதிரில் நிற்கின்றன.
கருப்பு இழை தெற்றும் போதுதான்
முழுத்துணியையும் அன்றி தறியையும் கூட தேட வேண்டி இருக்கும்.

நடத்தைக்கெட்டவள் என்று
மனைவியை நீதியின் முன்னிறுத்தும் கணவர்
தன் இதயத்தில் தகுதி எனும் எடைக்கற்களால்
தன்னை நிறுத்திப் பார்க்கட்டும்.

குற்றவாளியைக் கசையால் அடிப்பவர்
அடிப்பட்டவரின் உயிர்மையை பார்க்கட்டும்.
அறத்தின் பெயரால் தண்டிக்கின்றோம் என்று 
நச்சுமரத்தை கோடலியால் வெட்டும் போது 
வெட்டுண்ட மரத்தின் வேர்களைப் பாருங்கள்.
பூமியின் சலனமற்ற இதயத்தில்
நல்லதும் கெட்டதும் பயன்மிக்கதும் பயனற்றதுமான வேர்கள்
பின்னிப் பிணைந்திருப்பதைக் காணலாம்.   

நீதிபதிகளில் நீதிமான் யார்?
வெளியில் உத்தமனாகவும் உள்ளத்தால் கள்ளனாகவும்
இருப்பவருக்கு என்ன தீர்ப்பு வழங்குவீர்?
உடலைக் கொல்பவனுக்கும் உள்ளத்தைக் கொல்பவனுக்கும்
என்ன தண்டம் விதிப்பீர்?

ஏமாற்றுபவனும் அடக்குபவனுமே
பாதிக்கப்பட்டவனாகவும் எரிச்சலடைந்தவனாகவும் இருக்கையில்
அவர்களை எப்படி குற்றஞ்சாட்டுவீர்?  

தவறுகளுக்கும் அதிகமாகவே வருத்தமடைபவர்களை
எப்படி தண்டிப்பீர்
நீங்கள் அடிமைச் சேவகம் செய்யும் சட்டத்தாலான
நீதிபரிபாலனம் கேவலமானது அல்லவா?

உங்களால் இதுவரை
அபராதியை தண்டிக்க  முடியவில்லை
நிரபராதியின் இதயத்தை துன்புறுத்தாமல் இருக்கவும் முடியவில்லை. 

இதை நீக்க முயற்சிக்காமல்
இருளில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு
சும்மா கிடக்கும் மனிதர்கள் நீங்கள் 
.
முழுமையான வெளிச்சத்தில்
எல்லா செயலையும் பார்க்காமல்
எப்படி யாரால் நீதியை புரிந்து கொள்ள முடியும்?

அப்போதுதான்
இழிதன்மை இரவுக்கும் இறைத்தன்மை பகலுக்கும் இடையே
அந்தியில் ஒருவன் எழுவதும் விழுவதுமமாக இருப்பது
உங்களுக்குத் தெரியும்.

கோயில் கடக்கால் அடியில் கிடக்கும் கல்லைவிட

கோபுரஉச்சியில் இருக்கும் கல் உயர்ந்ததில்லை.

No comments: