Sunday, April 30, 2017

மனமே..! மனமே..!

‘‘இயம நியமமே எண்ணிலா ஆசனம்
நயமுறு பிராணாயாமம் பிரத்தியா காரம்
சயமிகு தாரணை தியானம் சமாதி
அயமுறும் அட்டாங்க மாவது மாமே.
( திருமூலர் – திருமந்திரம்.10 பா.542)
இந்த திருமந்திரப் பாடல் வரிசைப்படுத்தும் எட்டு வகை நிலைகள் தான் யோகா என்பது.
இதில் மூன்று நான்கு ஏழு நிலைகளில் இருக்கும் ஆசனம் பிராணாயாமம் தியானம் என்னும் மூன்று மட்டுமே இக்காலத்தில் பலராலும் முதன்மைப் படுத்தப்பட்டு பயிற்சி கொடுப்பதாகச் சொல்லி கடை விரித்து சிலர் காசு பார்க்கிறார்கள்.
ஒருவர் தன் வாழ்க்கையில் என்ன என்ன செய்யக் கூடாது அல்லது செய்ய வேண்டும் என்பதனை அறிந்து நடப்பதே இயமம் நியமம். முதலில் இதனை அறிந்து அதை கடைப் பிடித்தாலே வாழ்க்கை சிறப்பாக அமையும்.
இயமம் - உடையாமை- தீமை அகற்றல் - தகாதன
நியமம் - உடைமை - நன்று ஆற்றல் - தக்கன
மின்சார மின்னணு சாதனங்கள் வாங்கும் போது அதனுடன் தரப்படும் Instruction Manual-ல் . DONTS என்ற தலைப்பில் சில குறிப்புகளைத் தந்து இவைகளை செய்தால் இந்த சாதனம் வேலை செய்யாது, கெட்டு போகும், ஆபத்தானது என்றெல்லாம் எச்சரிக்கை இருக்கும்.
வாழ்க்கையில் இப்படி செய்யக் கூடாத பல செயல்கள் DONTS உள்ளன. அவைகளைக் கடைப் பிடிக்க வேண்டியது முதன்மையானது. அதுவே இயமம்.
அடுத்தது நியமம் என்னும் DOS. இன்னின்ன செய்தால் நல்லது நன்மை பயக்கும் என்பதாகும்.
திருக்குறளில் இந்த DONTS and DOS பட்டியல் உண்டு. உலகில் உள்ள மானிடர் யாவரும் இவைகளைக் கடைபிடித்து வாழ்வார்களாயின் உலகில் அமைதி தவழும். ஆனந்தம் மேலிடும். எல்லோரும் இன்புற்று வாழ்வர்.
திருக்குறளில் குறிப்பிடப்படும் DOS நியமம் என்னும் உடைமைப் பட்டியல்:
அன்புடைமை
அடக்கமுடைமை
ஒழுக்கமுடைமை
பொறையுடைமை
அருளுடைமை
அறிவுடைமை
ஊக்கமுடைமை
ஆள்வினையுடைமை
பண்புடைமை
நாணுடைமை
திருக்குறளில் குறிக்கப்படும் DONTS இயமம் என்னும் உடையாமைப் பட்டியல்:
பிறனில் விழையாமை
அழுக்காறாமை
வெஃகாமை
புறங்கூறாமை
பயனிலசொல்லாமை
கள்ளாமை
வெகுளாமை
இன்னாசெய்யாமை
கொல்லாமை
கல்லாமை
சிற்றினம் சேராமை
பொச்சாவாமை
வெருவந்த செய்யாமை
இடுக்கணழியாமை
அவையஞ்சாமை
பெரியாரைப் பிழையாமை
கள்ளுண்ணாமை
செயத்தக்கனவை விட செயக்கூடாதன கூடுதலாக இருப்பதைக் காண்க. இவைகளில் சிலவற்றையேனும் நாம் வாழ்வில் கடைபிடிக்க முயல்வது நமக்கும் நம் வீட்டுக்கும் நாட்டுக்கும் நலமாகும்.
யோகா என்பது வெறும் உடல் சார்ந்த ஆசனம் பிராணாயாமம் மட்டும் அல்ல. மனம் சார்ந்த தியானமும் சேர்ந்ததே ஆனாலும் மனம் செம்மை அடைவதற்கு இயம நியமங்களை அறிந்து அதன்படி நடக்காத வரையில் யோகத்தின் பயன் யாதுமிலாமல் போகும்.
”மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம்
மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டாம்
மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டாம்
மனமது செம்மையானால் மற்றதும் செம்மையாமே..”
திருமூலர்தான் திருமந்திரத்தில் இதையும் சொல்லி இருக்கிறார். .. மிக எளிய தமிழில் பாமரருக்கும் விளங்கும் இந்த பாடல் வரிகளுக்கு பெரிய விளக்கம் தேவை இல்லை.
மனதை செம்மையாக்கி மனிதனாவோம்.

No comments: