Thursday, April 27, 2017

அண்ணன் சொன்னது அதில் அர்த்தம் உள்ளது

திருவள்ளுவருக்கும் திமுகழகத்துக்கும் உள்ள நெஞ்சார்ந்த நெருக்கம் பலருக்கு நெருடலாக இருந்து இருக்கிறது. பாடபுத்தகத்தின் அட்டையில் இருந்த  திருவள்ளுவர் படத்தை “ஸ்டிக்கர்” ஒட்டி மறைத்த வரலாற்று நிகழ்வை  எல்லாம் மறக்க முடியுமா?. 

திருவள்ளுவரையும் திருக்குறளையும் பாமரமக்களிடம் கொண்டு சேர்த்த பெருமை திராவிட இயக்கத்துக்கு உண்டு. பண்டிதர்களிடம் மட்டும் பழக்கத்தில் இருந்த குறளை பட்டிதொட்டி எங்கும் பரவச் செய்ததில் பெரும்பங்கு வகிப்பது திராவிட இயக்கமே திமுகழகமே என்றால் மிகை அல்ல.

அறிஞர் அண்ணா அவர்கள் முதல்வராக ஆனபிறகுதான் தலைமைச் செயலகத்தில் திருவள்ளுவர் படம் இடம் பெறுகிறது. சென்னை - கோட்டை தலைமைச் செயலகத்தில் சூன் 9, 1967 நிகழ்ந்த அந்த திருவள்ளுவர் படத் திறப்பு விழாவில் பேரறிஞர் அண்ணா ஆற்றிய உரை. நம் நாடு நாளிதழில் 10.06.1967 அன்று வெளியானது 
  
“திருவள்ளுவர் - நமக்கு அளித்துள்ள திருக்குறள் இப்போது ஒவ்வொருவருடைய நாவிலும் - நெஞ்சிலும் - நினைவிலும் - இடம் பெற்றிருக்கிறது. எல்லாரும் குறளை ஆதரிக்கிறார்கள்; போற்றுகிறார்கள்.
திருவள்ளுவர் தமிழகத்திற்கு மட்டும் அல்லாமல், வையகம் முழுமைக்கும் வாழ்க்கைக்கு உரிய நெறியைத் தந்திருக்கிறார். அதனை நாம் உலகத்தின் பொதுச்சொத்து என்று எண்ணத் தக்க விதத்தில் பொதுக் கருத்தைப் பரப்பவேண்டும்.

தமிழ் மக்கள் திருக்குறளைப் பொதுமறை என்றும், இன்றைய தமிழர்கள் பெற்ற புதுமறை என்றும் போற்றுகிறார்கள். இந்த நல்ல கருத்துக் கருவூலத்தை உலகத்தின் கவனத்திற்கு எடுத்துவைக்க நல்ல சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.

அடுத்த ஆண்டு (1968) உலகத் தமிழ் மாநாடு சென்னை நகரத்திலே நடைபெறவிருக்கிறது. தமிழ் ஆய்ந்த - தமிழ் அறிந்த - நல்லறிஞர்கள், பல நாடுகளிலிருந்தும் மாநாட்டுக்கு எனத் தமிழகத்துக்கு வர இருக்கிறார்கள்.
அப்போது திருக்குறளின் அருமை பெருமைகளை, ஏற்கெனவே தமிழறிஞர்கள் அறிந்திருந்தாலும், பத்து நாட்களோ எட்டு நாட்களோ மாநாடு நடைபெறும் நாட்களில், அவர்கள் எல்லாரும் கண்டுகளிக்கத்தக்க விதத்தில் திருக்குறளின் பெருமையை உலகு அறியச் செய்ய வேண்டும்.
திருக்குறளின் - தமிழ் இலக்கியங்களின் கருத்துக்களை, ஓவியங்களாக - வரி வடிவங்களாக - பாடல்களாக - கூத்தாக உருவாக்கி வெளிப்படுத்தும் முயற்சியில் ஈடுபடவேண்டும்.

எனக்குள்ள நீண்ட நாளைய ஆசை - சென்னை கடற்கரை ஓரத்தில் சிலப்பதிகாரத்தில் சித்தரிக்கப்பட்டுள்ள காவிரிப்பூம்பட்டினக் கடற்கரையைப்போல் சித்திரித்துக் காட்டவேண்டும் - உருவாக்கிக் காட்டவேண்டும் என்பது!”

அண்ணாவின் ஆசையை அவரின் எண்ணங்களை அப்படியே ஏற்று அவருக்குப் பிறகு முதல்வராக பொறுப்பேற்ற கலைஞர் திருக்குறளின் பெருமையை உலகறியச் செய்யும் வகையில் சென்னையில் வள்ளுவர் கோட்டம் குமரியில் வானுயர் சிலை என பல திட்டங்களை நிறைவேற்றினார், அண்ணாவின் உரையில் குறிப்பிட்ட சிலப்பதிகார சித்திரங்களையும் பூம்புகாரில் அமைத்தார்.
அண்ணா முதல்வராக இருந்தபோது சென்னையில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டின் போது சென்னைக் கடற்கரையில் வள்ளுவருக்கு சிலை வைக்கப்பட்டது. அப்போது பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்த கலைஞர் அரசு போக்குவரத்து பேருந்துகளில் திருவள்ளுவர் படமும்  திருக்குறளும் இடம் பெறச் செய்தார்.

அப்போது அதுவும் சர்ச்சைக்கு உள்ளாக்கப்பட்டது. அந்த காலத்தில் இருந்தே திருவள்ளுவரை திமுகழகத்தவராகவே கருதும்படியாக நேரிட்டுவிட்டது பலருக்கு. கலைவாணர்  “தினா முனா கனா  திருக்குறள் முன்னணி கழகம்“ என்ற பாடலை  5௦ களிலேயே பாடிவிட்டார்.    

திருவள்ளுவர் படமும், திருக்குறளும் பேருந்தில் இடம்பெற்றதைக் கேலி செய்து எதிர்க்கட்சியினர் பேசினார்.
ஒரு முறை சட்டமன்றத்திலேயே எதிர்க் கட்சி உறுப்பினர் ஒருவர் புத்திசாலித்தனமாக ஒரு கேள்வியைக் கேட்டார்.
பேருந்தில் “யாகாவாராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப்பட்டு” என்று குறிக்கப்பட்டுள்ள குறள் யாருக்காக? டிரைவருக்காகவா? கண்டக்டருக்காகவா? பிரயாணம் செய்கின்ற பொதுமக்களுக்காகவாஇதற்கு என்ன பதில் சொல்லமுடியும். அண்ணாவுக்கு இக்கட்டான நிலை உருவாக்க இட்டுக் கட்டப்பட்ட எடக்கான கேள்வி இது.

டிரைவர் கண்டக்டருக்காக என்றால் தொழிளாளர்களின் கோபத்திற்கு ஆளாக வேண்டும். பொதுமக்களுக்காக என்றால் மக்களின் கண்டனத்துக்கு உள்ளாக வேண்டும்.

இந்த கேள்விக்கு அண்ணா கொடுத்த பதில் என்ன தெரியுமா?
“நாக்கு உள்ளவர்கள் எல்லோருக்காகவும் எழுதி வைக்கப்பட்டுள்ளது” இதுதான் பதில்.

அண்ணாவின் சாதுர்யம் அவர் சொன்னதில் இருந்த நுணுக்கமான பொருள் யாவும் கேள்வி கேட்டவரை மட்டுமல்ல, அனைவரையுமே அதிர வைத்தது. அதிசயிக்க வைத்தது.


அண்ணன் சொன்னது அதில் அர்த்தம் உள்ளது 

2 comments:

ராஜா ஜி said...

அருமை அருமை

Muthukumar said...

அருமை அண்ணா உங்கள் பதிவுகள் அனைத்தும் எங்களுக்கு திராவிடம், திமுக பற்றி தெரிந்து கொள்ள உதவியாக உள்ளது அண்ணா🖤❤️